Saturday, July 31, 2010

சுற்றுலா... பகுதி 1 - நெல்லியம்பதி

சுற்றுலா என்றாலே சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், அமேரிக்கா போன்ற கனவுப் பிரதேசங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதில் பெரும்பங்கு நம் திரைத்துறையினருக்கு உண்டு. ஆனா நமக்கு அவ்வளவு தூரம் போக எல்லாம் வசதிப் படாது. பள்ளி, கல்லூரிகளில் படித்த காலத்தில் சுற்றுலா என்பதை வெறும் வார்த்தையளவிலேயே கேள்விப்பட்டு இருக்கிறேன். உண்மையைச் சொன்னா இப்ப ஒரு ரெண்டு வருஷ காலமாத்தான் வெளிய சுத்த ஆரம்பிச்சிருக்கேன். சும்மா ஒரு நாள் அல்லது ரெண்டு நாள் தான் எங்கேயாவது போவோம்.

அப்போது தான் தெரிய வந்துச்சு நம்ம ஊரைச் சுற்றி எத்தனை நல்ல அருமையான இடங்கள் இருக்குன்னு. இது ஒண்ணும் பெரிய பயணக் கட்டுரை இல்லை. நான் பார்த்த (அனேகமா எல்லாரும் பாத்து இருப்பாங்க..)இடங்களைப் பற்றியும் சில நல்ல அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இதன் மூலமா இந்தப் பகுதிக்கு ஏற்கனவே யாராவது போய் இருந்தால் அவங்களுடைய அன்பவங்களையும் எல்லாரும் கேக்கலாம்..

சிறுவயதில் இதுபோன்ற பகுதிகளுக்கு செல்லாததனால் தான் என்னவோ இங்கே எல்லாம் செல்வதற்கு எனக்கு கொள்ளை இஷ்டம். கம்பெனியில் அவுட்டிங் செல்ல உத்தேசிக்கும் போதெல்லாம் இடத்தேர்வுக் குழுவில் நான் ஒட்டிக் கொள்வேன். இதன் மூலம் இரண்டு நன்மைகள். ஒன்று அந்த இடத்தை கூட்டம் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு பேருடன் ரசிக்கலாம். இரண்டு அந்த இடத்தை இரு முறை பார்க்கும் போது மற்றவர்களை விட நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்.(முதல்ல போகும்போது ஆகும் என்னுடைய செலவு, என்னுடைய கையிலிருந்துதான்..)

ஊட்டி எனக்கு மிக அருகில் இருப்பதால் தானோ என்னவோ அங்கே நான் அதிகம் சென்றதே இல்லை. ஆனால் சுற்றுலா பற்றிய நல்ல பிளாகுகளைப் படித்த பின்னர் தான் அதன் பெருமையை புரிந்து கொண்டேன். அது மட்டும் அல்ல மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய பல நல்ல விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பெருவாரியான சுற்றுலாத் தளங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தான் அமைந்துள்ளன என்பது எனக்கு ஆச்சரியமான செய்தி..

அலுவலக சுற்றுலாவுக்காக நாங்கள் பார்த்த இடங்களில் முக்கியமானது "நெல்லியம்பதி". எங்கள் மாமா வீட்டிலிருந்து வெறும் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவுதான்.. அனாலும் இந்தப் பெயர் ஒரு இரண்டு மாதங்களாகத் தான் எனக்குத் தெரியும். கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள் என்று தேடியபோது எனக்குச் சிக்கியது இந்தப் பெயர். மற்றபடி அந்தப் பகுதியைப் பற்றி கூகிளில் எனக்குச் சரியான தகவல்க கிடைக்கவில்லை.

கடைசியில் தமிழ் வலைப்பக்கங்களில் தேடியபோது, வண்ணப் படங்களுடன் பலர் அவர்களின் நெல்லியம்பதி அனுபவங்களைப் பகிர்ந்து இருந்தனர்.(தமிழ் வலை நண்பர்களுக்கு நன்றி..). தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொண்டு நானும் என் நண்பர் முல்லைவாணன் என்பவரும் சேர்ந்து ஒரே பைக்கில் புறப்பட்டோம்...[படங்களில் கருப்பு பனியனில் இருப்பவர் என் நண்பர் முல்லை.. நீல நிற உடையில் நான்]

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. அன்று நான் வண்டி ஒட்டிய மொத்த தூரம் முன்னூறு கிலோ மீட்டர் (மேட்டுப்பாளையம் டு நெல்லியம்பதி போக வர).நான் அறுபத்தைந்து கிலோ, என் நண்பர் குறைந்த பட்சம் எழுபத்தைந்து கிலோ இருப்பார். அவருக்கு வண்டி ஓட்டத் தெரியாததினால் நானே மொத்த தூரத்தையும் ஓட்டினேன். வண்டி என்ன தெரியுமா..? ஸ்டார் சிட்டி 100CC.(?!?!)

[ஊட்டி சென்றிருந்த போது என் வண்டி இரண்டு பேரை மலை மேல் இழுக்காது என்று என் நண்பர்கள் கிண்டல் செய்தனர்.. நெல்லியம்பதி மலை ஏறிவிட்டு வந்து எல்லோரிடமும் காலரைத் தூக்கி விட்டுக் காட்டியது ஒரு இனிய அனுபவம்]

மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு போகும் வழியில் துடியலூரில் முல்லைவாணனைக் கூட்டிக் கொண்டு எட்டு மணிக்குள் ஆத்துப் பாலத்தைக் கடந்து விட வேண்டும் என்பது தான் திட்டம். அனால் சாப்பாடு முடிந்து சாவகாசமாக வாளையார் பகுதியைக் கடக்கும் போது மணி ஒன்பது. கேரளாவிற்குள் நுழைந்து விட்டோம் என்பதை காற்றும் காட்சிகளும் கண் கூடாக உணர்த்தின. முதலில் எங்களை வரவேற்றவர் ஏர்டெல் என்ற நண்பர். பாலக்காட்டிலிருந்து கொஞ்ச தூரப் பயணத்திற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து நெம்மாரா செல்லும் சாலைக்குள் புகுந்தோம். வண்டி ஓட்டும் களைப்பே தெரியாதவாறு இயற்கைக் காட்சிகள், இரண்டு புறங்களிலும் நெல் வயல்கள், வளைந்து வளைந்து செல்லும் நேர்த்தியான சாலைகள் என கண்களுக்கு ஒரே விருந்து தான்.

சத்தியமாகச் சொல்கிறேன்.. ஒரு சில விஷயங்களில் பைக்கு தான் பெஸ்ட்டு.!!! மத்ததெல்லாம் வேஸ்டு.!!!

குறைந்தது ஒரு பத்து இடங்களிலாவது நிறுத்தி விலாசம் விசாரித்திருப்போம்.நெம்மாரா அருகே ஒரு கடையில் ஏதாவது குடிக்கலாம் என்று நிறுத்தினோம். கடையில் பெப்சி, கோக்,மிரிண்டா,பாண்டா எதுவும் இல்லை. வெகு தூரம் சாயாக் கடையைத் தேடி அலுத்து விட்டதனால் எது கிடைத்தாலும் குடிக்கலாம் என்ற முடிவில் தான் அங்கு நிறுத்தினோம். என்ன அதிசயம்.!!?! கோல்டுஸ்பாட், காளிமார்க் போன்ற பிராண்டு குளிர்பான பாட்டில்கள் அங்கே இருந்தன.!!


இவை எல்லாம் என்னுடைய பள்ளிக் காலங்களோடு வழக்கொழிந்து விட்டன என்று நினைத்திருந்தேன். ஆனால் கடைசியில் தான் புரிந்தது உள்ளே இருந்த பானம் உள்ளூர்த்தயாரிப்பு என்பது. நண்பர் வேக வேகமாகக் குடிக்க ஆரம்பித்து விட்டார். சீரகத் தண்ணீர் தான்.. உடம்புக்கு நல்லது என்றார். எனக்கு என்னவோ அதில் சீரகத்தோடு கள் வாடை கொஞ்சம் வீசுவது போல் ஒரு சந்தேகம். கேட்டேன்.. இல்லை என்றார்கள்..இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஒரு மடக்கு குடித்து விட்டு வைத்து விட்டேன்.

முதலில் எங்களை வரவேற்றது போத்தூண்டி டேம்(படம் 2 மற்றும் 3).. ஆள் அரவமே இல்லாத ஒரு டேம். தண்ணீர் பச்சை கலந்த நீல நிறத்துடன் அழகாகக் காட்சி அளித்தது. சிறு பூங்கா அமைத்திருந்தனர். உக்கார்ந்து இளைப்பாற நேரம் இல்லாத காரணத்தால் அங்கே விண் முட்டிக் காட்சி அளித்த நெல்லியம்பதி மலை மீது வண்டியை விட்டோம்..

சும்மா சொல்லக் கூடாது.. தண்ணீர்க் குடத்தில் துளை போட்ட மாதிரி அங்கங்கே பொத்துக் கொண்டு ஓடும் சிறு சிறு அருவிகள் நீர்வீழ்ச்சிகள் வழியெங்கும் வரவேற்றன. முதல் அருவியைப் பார்த்தவுடனேயே வண்டியை நிறுத்தி விட்டு புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டோம். [சில புகைப்படங்களை அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும்].அங்கே எங்களைப் போன்றே பைக்கில் வந்தவர்கள் சொன்னார்கள், இங்கே நிறைய நேரம் செலவிடாதீர்கள்.. இன்னும் நிறைய அருவிகள் மேலே செல்லச் செல்ல உள்ளன என்று.உண்மைதான்.

குளுகுளுவென சுத்தமான அருவி நீர் கடவுளின் வரம்.. இந்த மலைகளில் தான் எத்தனை அதிசயங்கள் ஒளிந்து உள்ளன என்று வியப்பிற்கு உள்ளானோம்..

பதிவு நீளமாகி விட்டதால் நெல்லியம்பதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றி மேலும் சில தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

==============================
வீட்டில் நகைச்சுவை:
"அம்மா சோறு... அம்மா சோறு..!!" என்று சொல்லிக் கொண்டே கம்ப்யுட்டரைத் தட்டிக் கொண்டு இருந்தேன். அதைக் கவனிக்காததால் என் அம்மா தட்டில் சொறோடு வந்து அருகில் உக்காந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். டிவியில் "என் தாய் எனும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே.." ராஜ்கிரண் பாடல் பாடிக் கொண்டு இருந்தது. "அம்மா சோறு கேட்டேனே எங்கே...?" என்று நான் சொல்லிக் கொண்டு திரும்பிப் பார்க்க என் அம்மா வாய் நிறைய சொற்றோடு திருதிருவென விழித்தார்... "தன் வயிறைப் பட்டினி போட்டு என்னுயிரை வளர்த்தவளே.." என்ற வரிகள் சரியாக ஒலிக்க வீட்டில் ஒரே சிரிப்பு..
==============================

37 comments:

  1. பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. வாங்க ராம்ஜி.. தொடர்ந்து அடுத்த பகுதிக்கும் மறக்காம வந்துருங்க..

    ReplyDelete
  3. ரொம்ப அழகான இடங்கள்..

    பச்சைப்பசேல் இடங்கள் என்றால் கொள்ளை இன்பம்..

    எங்க ஊர் பாபனாசம் , மணிமுத்தாறு போல..

    ReplyDelete
  4. அழகான படங்கள்.. நல்ல பகிர்வு.

    வீட்டு நகைச்சுவை சூப்பர் :))

    ReplyDelete
  5. மணிமுத்தாறு எனக்கும் மிகவும் பிடித்த இடம்.. திருநெல்வேலி வந்த பொது நானும் என் நண்பனும் மட்டுமே அந்த அணையின் மேல் நடந்தோம்.. இன்னும் ஒரு இனிய நினைவு.. அதைப் பற்றியும் இந்தத் தொடர் இடுகையில் எழுதுவேன்..

    நன்றி..

    ReplyDelete
  6. அருமையான காட்சிகள் மற்றும் விவரிப்பு .சீக்கிரம் அடுத்ததையும் போடுங்க பிரகாஷ்

    ReplyDelete
  7. வாங்க சுசி.

    இது மாதிரி எல்லா வீடுகளிலும் நகைச்சுவை சுழலும்.. அனால அப்படியே மறந்து விட்டுப் பொய் விடுவோம்.. இந்த முறை பதித்து விட்டேன்..

    இன்னும் நிறைய அழகான படங்கள் இருக்கின்றன.. அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

    நன்றி..

    ReplyDelete
  8. வாங்க ஜெய்லானி.. கண்டிப்பா சீக்கிரம் அடுத்த பதிவைப் போட்டுடுவேன்.. ஏன்னா இந்த முறை சரக்கு இருக்கு..

    நன்றி..

    ReplyDelete
  9. நெல்லியம்பதி சுற்றுலா நல்ல பட பிடிப்பு. கோவை அருகில் கேரளா என்றாலே, மலம்புழா வும் ,புன்னகை மன்னன் அருவிக்கும் தான் செல்வார்கள்.நீங்கள் சென்ற இடம் நெல்லியம்பதி உண்மையில்சுற்றுச்சூழல் பாதிப்படையா பகுதிகள். அடுத்து பைக்கை நீலகிரி பக்கம் விட்டு பாருங்கள். அவலாஞ்சி, பார்ஸன்ஸ் வேலி ,வெஸ்டர்ன் கேட்ச்மண்ட் ....அற்புதமாக இருக்கும்.

    ( இந்த டெம்ப்ளேட் அருமை , சென்றதில் கமெண்ட் இடவே முடியவில்லை போஸ்ட் கமெண்ட் பெட்டியே காணாமால் இருந்தது )

    ReplyDelete
  10. நீலகிரியில் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே சென்றிருக்கிறேன். அதுவும் பைக்கில் ஒரு முறை மட்டுமே சென்றேன்.. டால்பின் நோஸ் மட்டுமே பார்த்தேன்.. அவ்வளவு ஒன்றும் இல்லை என்றாலும் அபாயமான ரோட்டில் வண்டியை வளைத்து வளைத்து ஓட்டியது எனக்கு ஒரு த்ரில்லிங் அனுபவம்.. அது என்னுடைய வண்டி ஓட்டும் திறனை சோதனை செய்ய உதவியது.. (என்னுடன் மற்றொரு வண்டியில் வந்த நண்பர் நன்கு வண்டி ஓட்டுவார்.. அவரே ஒரு வளைவில் தவறி விழுந்து விட்டார்..)

    ஆமாங்க.. பழைய டெம்ப்ளேட் எனக்கும் பிடிக்கலை.. அதுதான் மாத்தி விட்டேன்..

    நன்றி..

    ReplyDelete
  11. நண்பா!நல்ல சுற்றுலா பதிவு.பக்கத்துல உக்காந்து ஒருத்தர் சொல்லுற மாதிரி இருக்குது. :)
    என்னைக்காவது கோயம்புத்தூர் பக்கம் வரணும்.சின்ன வயசுல வந்ததோட சரி.பார்ப்போம்.. :)
    போட்டோக்கள் அருமை.பார்த்தாலே தெரியுது.மனிதர்கள் கைவரிசை அதிகமா காட்டப்படாத இடம் இதுனு.கேரளாவின் அழகே அது தான்.

    ReplyDelete
  12. அப்புறம் ஏற்கனவே சொன்னது தான்.திரும்பவும் சொல்றேன்.template சூப்பர்.

    ReplyDelete
  13. கண்டிப்பா கேரளாவைப் பாத்தா பொறாமையா இருக்கும்..

    அப்புறம் இந்த டெம்ப்ளேட் எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு..

    கண்ணை அடிக்காத வண்ணங்கள் கொஞ்சம் இதமா இருக்கு..

    ReplyDelete
  14. அழகான படங்கள் அருமையானாவர்ணனை ...லைப் லே ஒரு தடவையாவது இந்த இடத்துக்கு போக வேண்டும் ..நகைச்சுவை சூப்பர் அடுத்த பதிவுக்கு வெய்டிங் பகிர்வுக்கு நன்றி பிரகாஷ் ..நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  15. அடுத்த தடவை இந்த இடத்தை ட்ரை பண்ணனும்....

    ReplyDelete
  16. கண்டிப்பாக போய்ப் பாருங்க.. மலை மேலே பார்க்க கொஞ்சம் நல்ல இடங்கள் உள்ளன.. எனவே ரெண்டு நாள் பிளான் பண்ணினா சரியா இருக்கும்..

    உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. வாங்க ஜெட்லி அவர்களே..

    கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க..

    ReplyDelete
  18. படங்களும், தொகுத்த விதமும் சூப்பர், பா!!!!! உங்கள் வீட்டு நகைச்சுவை, கலக்கல்! அடிக்கடி எழுதுங்க. :-)

    ReplyDelete
  19. பயணக் கட்டுரை மிக அருமை. படங்களைப் இன்னும் கொஞ்சம் பெருசா போட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  20. 10 வருடங்களுக்கு முன் நெல்லியம்பதி மிக மிக அழகாக இருந்தது.. இப்போதைவிட

    ReplyDelete
  21. கண்டிப்பாக இது போலான இடங்களுக்கு செல்ல வேண்டும். என்ன, இது மாதிரி இடங்களுக்கு செல்லும் பொழுது குப்பைகள் போடாமல் வர வேண்டும். முக்கியமாக இந்த பாலீதின் பைகள், பாட்டில்கள்(அந்த பாட்டில் தானுங்க!!).

    // கடையில் பெப்சி, கோக்,மிரிண்டா,பாண்டா எதுவும் இல்லை.//
    மக்கள் கூட்டம் கூடி விட்டால் அதையும் விற்க ஆரம்பித்து விடுவார்கள். நாமளும் குடித்து விட்டு, அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு வருவோம். நல்லவேளை அங்கு கிடைக்கவில்லை. :)


    நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  22. நல்லா இருக்குங்க. உங்க ஊரு என்ன மேட்டுபாளையமா? நான் அதுக்கு பக்கத்து ஊரு தான்.

    ReplyDelete
  23. //Chitra said...

    படங்களும், தொகுத்த விதமும் சூப்பர், பா!!!!! உங்கள் வீட்டு நகைச்சுவை, கலக்கல்! அடிக்கடி எழுதுங்க. :-)
    //

    நடந்த விஷயங்களை அப்படியே தொகுத்திருக்கிறேன்.. அவ்வளவுதேன்.. வீட்டு நகைச்சுவை நான் எதிர்பார்க்காதது... இன்னும் வரும்..

    நன்றி..

    ReplyDelete
  24. //மதுரைக்காரன் said...

    பயணக் கட்டுரை மிக அருமை. படங்களைப் இன்னும் கொஞ்சம் பெருசா போட்டு இருக்கலாம்.
    //

    நன்றி மதுரைக் காரவுகளே... இதுவே இடத்தை அடைச்சிடிச்சு... நிறைய படங்கள் போடணுங்ககரதால சிறுசு பண்ணீட்டேன்..

    நெல்லியாம்பதியில் நான் எடுத்த புகைப்படங்கள் அனைத்துமே எனக்குப் பிடித்தவை.. அவ்வளவு அழகான இடம்.. நேரம் இருந்தால் http://picasaweb.google.co.in/successprakash/Nelliampathi# இங்கே பார்க்கலாம்..

    நன்றி..

    ReplyDelete
  25. //மயில் said...

    10 வருடங்களுக்கு முன் நெல்லியம்பதி மிக மிக அழகாக இருந்தது.. இப்போதைவிட
    //

    அப்படியா.. இப்போதே இவ்வளவு அழகாக இருக்கிறது என்றால் அப்போது எப்படி இருந்திருக்கும்..? உங்கள் அனுபவத்தையும் பகிருங்களேன்..(அய்யய்யோ.. தொடர் பதிவு இல்லீங்கோ...). சும்மா சின்ன சின்ன அனுபவங்களை பகிரும்போது மனதுக்கு பின்னோக்கிப் போகும் இன்பம் அதீதமானது..

    ReplyDelete
  26. ஆமாங்க இளங்கோ.. நானும் எந்த இடத்திற்குச் சென்றாலும் முடிந்தவரை பிளாஸ்டிக் பொருள்களை வாங்குவதைத் தவிர்க்கிறேன்.. மற்றபடி ஆங்காங்கே குப்பை போடுவது என்பது அறவே கிடையாது.. மக்களும் தங்களின் கடமையைப் புரிந்து கொண்டு இது போன்ற இடங்களைப் பாதுகாத்து வைப்பார்கள் என்று நம்புவோம்..

    நன்றி..

    ReplyDelete
  27. //நிலா முகிலன் said...

    நல்லா இருக்குங்க. உங்க ஊரு என்ன மேட்டுபாளையமா? நான் அதுக்கு பக்கத்து ஊரு தான்.
    //

    அப்படியா.. எந்த ஊருங்க...? இப்ப எங்க இருக்கீங்க..? நீங்களும் ஒரு முறை நெல்லியாம்பதியை முயற்சி பண்ணிப் பாருங்களேன்.. மனித பாதிப்பு குறைவாக இருக்கும் இடம்...

    ReplyDelete
  28. அருமை. செல்லும் ஆர்வம் தூண்டி விட்டீர்கள். பிற இடங்கள் குறித்தும் எழுதுங்கள்

    ReplyDelete
  29. மொத்தமே ரெண்டு பேர்தான் போனிங்களா?...

    ReplyDelete
  30. //இந்த மலைகளில் தான் எத்தனை அதிசயங்கள் ஒளிந்து உள்ளன//... உண்மைதான். நான் கூட பார்க்கும்போதெல்லாம் வியக்கும் ஒன்று மலைகள்.

    நன்றாக தொகுத்து எழுதி இருக்கிங்க.படங்கள் கொள்ளை அழகு.... கொஞ்சம் பெரியதாக போடலாமே!

    ReplyDelete
  31. வாங்க மோகன்....

    கண்டிப்பா போய்ப் பாருங்க...

    ReplyDelete
  32. ஆமா பட்டா... ரெண்டே பேர் தான் போய்ப் பார்த்தோம்.. அதுதான் ரொம்ப நல்லா இஷ்டப்படி ரசிக்க முடிஞ்சுது.. பைக் கொண்டு போனது இன்னும் ரொம்ப வசதியைப் போச்சு...

    ReplyDelete
  33. கண்டிப்பாக ப்ரியா.. அடுத்த பதிவில் படங்களைக் கொஞ்சம் பெரியதாகவே போடுகிறேன்.. பதிவே ரொம்ப நீளமாகி விட்டது.. படங்களையும் பெரியதாகப் போட்டால் படிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டமாகி விடும் என்றதாலேயே சிரியதாகப் போட்டேன்..

    ReplyDelete
  34. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete
  35. http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_06.html


    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. நன்றி பட்டாபட்டி ....

    ReplyDelete
  37. அடுத்த பதிப்பு எங்கே ???

    ReplyDelete