Tuesday, June 19, 2012

கோவையில் தண்ணீர் பஞ்சமா?? - சும்மா விளையாடாதீங்க..

இடம் : சரவணம்பட்டி அம்மன் கோயில் அருகில்.

வீட்டில் இருந்து ஹோட்டலை நோக்கி நடந்து கொண்டு இருந்தேன். ஒரு பணக்கார பங்களா அருகே வந்தவுடன், அதன் வாசலில் வீட்டின் உள்ளிருந்து ஆற்றைப் போலப் பெருக்கெடுத்து ஓடி சாக்கடையில் குடிநீர் கலப்பதைப் பார்த்தேன். உள்ளே எட்டிப் பார்த்தேன். பாதாளத் தொட்டி நிரம்பி நீர் வெளியே வழிந்து கொண்டு இருந்தது. வீட்டின் கேட்டிற்கும் வீட்டுக் கதவுக்கும் இடையில் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கும் போல .. கத்தினால் கூட கேட்காது. உரக்கக் கத்தினேன்.

 "அண்ணா .. யாராவது இருக்கீங்களா...??? "

தொலைகாட்சி சப்தம் குறைய ஆரம்பித்து ஒரு வயதான அம்மா மெல்ல வெளியே வந்தார்.

"தண்ணி வழிஞ்சு போகுதுங்க..."

"சரிங்க தம்பி.."

அவர் மெல்ல நடந்து பைப்பை போட்டு வேறொரு சின்டெக்ஸ் டாங்குக்கு தண்ணியை மாற்றும்வரை நின்று பார்த்து விட்டு நகர்ந்தேன்.. அதற்குள் எப்படியும் மூன்று குடம் தண்ணீராவது வீணாகி இருக்கும். (நான் வாராததற்கு முன்பு எவ்வளவு போய் இருக்குமோ..) .

அதையடுத்து ஒரு இரண்டு வீடு தாண்டி இருப்பேன்.. இதே போன்று இன்னொரு வீடு.. அங்கேயும் கூப்பிட்டு சொன்னேன். அடுத்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. வெளிவாசலில் இருந்து நீண்டு கொண்டு போனது ஒரு ரப்பர் குழாய். அந்தக் குழாயில் போகும் நீரை விட விரயமாயிருந்த தண்ணீர் அதிகமாக இருந்தது. மழை பெய்த இடம் போலக் காட்சி அளித்தது.
 

அதைத் தாண்டி கொஞ்ச தூரம் தள்ளி நடக்கையில் அருவி கொட்டுவது போன்று சட சடவென்று சத்தம்.. மோட்டார் போட்டு தண்ணீரை மேலே ஏற்றிக் கொண்டு இருந்தனர் போலும்.. மேல்நிலைத் தொட்டி நிரம்பியதைக் கூட அந்த வீட்டார் கவனிக்கவில்லை. அமைதி இழந்து நான் கேட்டைத் திறந்து உள்ளேயே போய் விட்டேன். கதவை இரண்டு முறை பலமாகத் தட்டினேன்.. திறப்பார் இல்லை. வெளியில் இருந்த நாலைந்து சுவிட்ச் களைத்தட்டி விட்டேன்.. ஏதோ ஒன்றின் மூலம் மோட்டார் நின்றது .

ஒரு வழியாக ஹோட்டலில் சாப்பிட்டு விட்டுத் திரும்புகையில் பார்த்தால் வழி நெடுக புதிது புதிதாக நீரோட்டங்கள்.. அவ்வளவும் குடிநீர்... வீட்டில் இருந்து வெளியேறும் பைப்புகளில் இருந்து தண்ணீர் சாக்கடைகளில் கொட்டும் சத்தம் காதைக் கிழித்தது.



இப்ப சொல்லுங்க சார்.. கோவையில் தண்ணீர் பஞ்சமா... விளையாடாதீங்க..

 கீழே காண்பவற்றை யோசிப்போம்.

 1 . தேவைக்கு அதிகமாக மாநகராட்சி தண்ணீரைத் திறந்து விடுவதால் தான் சேமிப்பு அளவைத் தாண்டியதும் மீதி நீர் விரையமாவாதை மக்கள் கண்டு கொள்வதில்லையா..??

2 . குடிசையில் மற்றும் சிறு வீடுகளில் வாழ்பவர்கள் கூடக் குடங்கள் வைத்து தண்ணீரை அழகாக வீடுகளுக்குள் கொண்டு செல்கின்றனர். பணக்கார வீடுகளில் பைப் போட்டு அழகாக வீட்டின் பாதாளத் தொட்டிக்கே தண்ணீர் கிடைக்கும் வழிவகைகள் இருந்தும் கூட ஒரு நிமிடம் நின்று தண்ணீர் வீணாவதைக் கவனிக்ககூட நேரம் கிட்டாதா...??

3 . தண்ணீர் திறந்து விட்ட பிறகு ஒரு அரைமணிநேரமோ அல்லது ஒரு மணி நேரமோ கழித்து மாநகர குடிநீர் வழங்கல் துறை ஒரு சிறிய ரோந்து செய்து, தண்ணீர் வீணாக்குவோரைக் கண்டு பிடித்து உடனடி அபராதம் விதிக்க முடியாதா..?? (என்னைக் கேட்டால் இவர்களை எல்லாம் முட்டிக்கு முட்டி தட்டலாம் ).

நாம் படிப்பது வெறும் ஏட்டளவில் தானா...?? அவரவர் வீடுகளில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் பொதுப்பணி பேசி என்ன பயன்..? இதனைப் படிப்பவர் அனைவரும் முதலில் அவரவர் வீடுகளில் தண்ணீர் முறையாகச் சேமித்து வைத்துப் பயன் படுத்தப் படுகிறதா என்பதை உறுதிப் படுத்துவோம்.

மாநகராட்சியையோ, அரசையோ இதில் கடிந்து பயன் இல்லை. புற்றீசல் போலப் பல்கிப் பெருகி விட்ட மாநகரங்களில் ஒவ்வொரு வீட்டையும் வந்து ஒழுங்கு செய்வது சாத்தியமற்றது. இதை எல்லாம் பார்க்கும்போது மக்களுக்கு ஏற்ற அரசு தான் இருக்கிறதோ என்றே தோன்றுகிறது.

நான் நடந்து இரண்டே தெருக்களில்.. அப்போது கோவையில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீடுகளிலும் எத்தனை தண்ணீர் இதே போன்று வீணாகிறதோ..??? அங்கே மட்டும் ஒழுங்காகவா இருக்கப் போகின்றது.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

இன்னும் கொஞ்ச நாளில் சிறுவாணியிலும் கட்டி விடுவார்கள் அணையை. அப்புறம் பார்க்கிறேன்.. எப்படி இவர்கள் இந்த வீணாக்கும் விளையாட்டை விளையாடுகிறார்கள் என்று.

நன்றி..
சாமக்கோடங்கி 

Tuesday, May 1, 2012

அரசாமை

அன்பு நண்பர்களே.. வணக்கம்.

என்னுடைய ஒரு சிறு போர் அடிக்கும் அனுபவத்தை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.

எனது இன்டர்நெட் மோடம் பழுதாகி விட்டதால் புதியதாக ஒரு மோடம் வாங்கி இருந்தேன். அதை கான்பிகர் செய்ய மேட்டுப்பாளையம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு சனிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் கொண்டு சென்றேன்.

முதல் அறையில் யாரும் இல்லை. நிறைய நோட்டுக்கட்டுகள் மேசை மீது விரவி இருந்தன. மற்றும் பல பொருட்கள் மேலேயே போடப்பட்டு இருந்தன. இளநிலைப் பொறியாளர்(JTO-Junior Telecom Officer)அறையிலும் ஈ காக்கை இல்லை. கணினி லாக் செய்யப் படாமல் இயங்கிக் கொண்டு இருந்தது. ஏகப்பட்ட லான்ட்லைன் தொலைபேசிகள், மோடம்கள் கைக்கு எட்டும் தொலைவில் அனாதைகளாகக் கிடந்தன. அடுத்து ஒரு மிகப்பெரிய ஹால். அதிலே பழைய காகிதக் கட்டுகள் அலமாரியில் அடுக்கப் பட்டு இருந்தன. அங்கே நாலைந்து பழைய மேசைகள் போடப்பட்டு அதிலே நான்கைந்து கிழம் கட்டைகள் படுத்துக் கொண்டு இருந்தனர் (மதிய ஓய்வாம்)அறைகள் முழுக்க மின்விசிறிகள் மிக வேகமாக சுழன்று கொண்டு இருந்தன.

JTO வைப் பாக்க வேண்டும் என்று சொன்னேன். இப்போதான் அவர் வெளியே போனார், அவர் அறையில் காத்து இருங்கள் என்றும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்றும் ஒருவர் சொல்லி விட்டு மறுபடியும் அனந்த சயனத்தில் ஆழ்ந்தார்.

அவர் அறையில் காத்துக்கொண்டு இருந்தேன். கால்மணி நேரம், அரை மணி நேரம் கழிந்தது. பக்கத்து அறையில் படுத்துக் கொண்டு இருந்தவரில் ஒருவர் மெதுவாக ஜேடிஒ அறையைக் கடந்து இன்னொரு அறைக்குப் போனார். ஆமை கூட அவ்வளவு வேகமாக நடந்து இருக்காது.(அந்த அறைக்குப் போனவர், அங்கேயும் மேசையில் படுத்துக் கொண்டார் என்பது அப்புறம் தான் தெரிந்தது). அடுத்து நான் இருந்த அறைக்கு தூங்கிக் கொண்டு இருந்தவர்களில் இன்னொருவர் வந்து அமர்ந்தார். மின்விசிறியை மிக வேகமாக ஓட விட்டார். ஒன்றிரண்டு நோட்டுகள்,ஒரு தொலைபேசி தவிர அந்த மேசையில் ஒன்றுமே இல்லை. வெகுநேரம் சும்மாவே உக்காந்து கொண்டு இருந்தார். நானாவது மொபைலில் இன்றைய செய்திகளைப் புரட்டிக் கொண்டு இருந்தேன். பிறகு தொலைபேசியை எடுத்து ஒவ்வொருவராக அழைக்க ஆரம்பித்தார். தான் இந்த மாதம் பணி-ஒய்வு பெறப்போவதாகவும் அதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப் பட்டு இருப்பதாகவும் கட்டாயம் வந்து விடுமாறும் கூறினார். கிட்டத்தட்ட அரைமணிநேரம் இதே போல பலருக்கும் போன் செய்து இதையே அளந்து கொண்டு இருந்தார். பிறகு பத்து நிமிடம் மறுபடியும் சுவரையும், மேசையையும் என்னையும் திரும்பித் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார் (சும்மா இருப்பவர்களுக்கு மூளை டீபால்டாக இதைச் செய்யச் சொல்லும் போல.. ). பிறகு மெதுவாக எழுந்து அந்தத் 'தூங்கும்' அறைக்கே சென்று விட்டார். அங்கு ஆல்ரெடி இருந்தவர்கள் இன்னும் வெளியே வரவே இல்லை.

--
கொஞ்ச நேரம் கழித்து,
JTO சரசரவென உள்ளே வந்தார். முப்பதிலிருந்து முப்பைந்து வயது மதிக்கத் தக்க இளைஞர். அவருக்கு வலது கை கொஞ்சம் சிறியது. சமீபத்தில் தான் ஒரு பழைய JTO பணி ஓய்வு பெற, இவர் அந்தப் பதவிக்கு வந்திருந்தார். கொஞ்சம் சுறுப்பான இளைஞர். இதற்கு முன்பு நான் கொடுத்த கம்ப்ளைண்டுகளை சரியாகப் பார்த்துச் சரி செய்து கொடுத்திருக்கிறார்.(இந்த ஒரு முகத்துக்காகத் தான் இவ்வளவு நேரம் அங்கே பொறுத்து இருந்தேன்... ம்ம்ம்). உள்ளே வந்ததும் முதல் வேலையாக "வாங்க சார்.. மன்னிச்சிகுங்க.. வெளிவேலைய முடிச்சுக் கொடுக்க கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு.. பாதியில விட்டுட்டு வர முடியல. என்ன பிரச்சினை..?"

"சார்.. புது மோடம்.. கண்பிகர் பண்ணனும்.."

"ரெண்டு நிமிஷம்.. இப்படி உக்காருங்க.."

ரெண்டே நிமிஷம்.. கான்பிகரேஷன் முடித்துக் கொடுத்தார்.. வலது கை சற்று ஊனமாக இருப்பினும், கீ போர்டை லாவமாக கையாண்டார்.வீட்டிற்குப் போய் கனெக்ட் செய்தால் இணையம் உடனே கிடைக்கும் என்று சொன்னார். நான் கேட்டதற்காக மொபைல் நம்பரும் கொடுத்தார். இன்முகத்துடன் விடை கொடுத்து அனுப்பினார். வெளியே வரும்போது பார்த்தேன்.. அந்த 'தூங்கும்' அறையிலும், மற்றும் இன்னொரு அறையிலும் இருந்த யாரையும் இப்போது காண வில்லை.

இது போன்ற அனுபவங்கள் நம்மில் பல பேருக்கு இருக்கலாம். நிற்க நேரம் இல்லாமல் காலில் இறக்கை கட்டிக் கொண்டு ஓடி ஆடி வேலை செய்யும் மக்கள் ஒரு புறம். அது போன்ற பொதுமக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அலுவலர்கள் ஒரு புறம். இப்படி இருந்தால் அரசு நிறுவனங்கள் எப்படி லாபம் ஈட்ட முடியும்..? எப்படி தனியார் நிறுவனங்களுடன் போட்டி இட முடியும்..?? (எதற்காக போட்டி இட வேண்டும் என்ற கேள்வியும் இருக்கலாம்). அரசு நிறுவனங்கள் பல ஏன் நஷ்டக் கணக்கைக் காட்டிக் கொண்டு இருக்கின்றன என்று இப்போது புரிகிறது.

புதிதாக வந்துள்ள அந்த அதிகாரியைப் போல நிறைய இளரத்தங்கள் இன்னும் நிறைய தேவைப் படுகின்றன. கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் பார்த்த எஸ்பிஐ வங்கிக்கும் இப்போது நான் பார்க்கும் வங்கிக்கும் நிறைய வித்தியாசங்கள்.. அத்தனைக்கும் காரணம் சில இளரத்தங்கள்.
இந்த முதியவர்கள் இளமைக்காலங்களில் இங்கே பணிக்கு வந்திருக்கலாம். அரசு நிறுவனம் என்பதால் அனைத்துச் சலுகைகளும் மற்றும் பணி நிரந்தரமும் இவர்களுக்கு அந்த மதப்பைக் கொடுத்திருக்கலாம். வேலை குறைவாக இடங்களில் அதிகப் பணியிடங்கள் நிரப்பப் பட்டு இருக்கலாம். இந்த முதிய வயதில் அவர்களை உடனே வெளியே அனுப்பச் சொல்லவில்லை. ஆனால் இதற்கு மாற்று என்ன என்று ஆராய வேண்டும். இப்படி மேசை மீது தினமும் தூங்குபவர்களுக்குச் சம்பளம் கொடுத்துக் கொண்டு இருக்கிற வரையில் நாடும் தூங்கிக் கொண்டு இருக்கும்.

ஆமை வேகத்தில் போய்க்கொண்டு இருக்கும் அரசு நிறுவனங்களைக் காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரிப்பணம் பொதுவாக வருவதால் எப்படி வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் சம்பளம் கொடுக்கலாம். அனால் ஒவ்வொரு அரசு நிறுவனங்களிலும் பணிசுமையைக் கணக்கிட்டு சில மறுசீரமைப்பு பணிகளை உடனே முடுக்கி விட வேண்டும்.இதெல்லாம் நடக்கிற காரியமா..?? ஏதோ எனது ஆதங்கம். அரசு ஆமையை உடனே முயலாக மாற்ற முடியாது. ஆனால் இன்னும் கொஞ்சம் வேகமாக நகரலாம்.

நன்றி.
சாமக்கோடங்கி

Saturday, February 25, 2012

மின்சாரம் - ஒரு கண்ணோட்டம்

அன்பு நண்பர்களே..

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின் தட்டுப்பாடு. பெரும்பாலானோர் கூறும் கருத்துக்கள்:

"போன ஜெயலலிதா ஆட்சியில மின் தட்டுப்பாடு கம்மியா இருந்துச்சு.. ஏன், உபரி மின்சாரம் கூட இருந்ததாம்.. ஆனால்,அடுத்து வந்த கலைஞர் ஆட்சியில, இயங்கிக் கொண்டிருந்த எந்த மின் தயாரிப்பு நிலையங்களும் சரி வர பராமரிப்பு செய்யாததால்தான் தற்போது இந்த நிலைமை".

"கூடங்குளம் பிரச்னையை திசை திருப்பி, மக்களுக்கு மின்தட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கவே அரசு இப்படி செய்கிறது.."

"ஜெயாவின் நிர்வாகத் திறமை சரியில்லை"

நான் சூரிய ஒளி மின்சாரத் துறையில் பணிபுரிகிறேன். இந்தத் துறையில் பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்து இருக்கிறேன்..

நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.. என்னைப் பொருத்தவரை கடந்த இருபது ஆண்டுகள் ஆட்சியில் மாறி மாறி இருந்த இரண்டு அரசுகளும் இதற்குப் பொறுப்பாகும். இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் மக்கள் தொகை பெருகும் விகிதம் தெரியும், நாட்டின் முன்னேற்ற விகிதம் எவ்வளவு இருக்கும் என்று ஊகித்து இருப்பார்கள். வருடத்திற்கு எவ்வளவு மின் தேவை அதிகரிக்கும் என்று தெரிந்திருக்கும். பராமரிக்காவிட்டால் எவ்வளவு இழப்பு என்றும் தெரிந்திருக்கும்.. இவ்வளவு தெரிந்திருந்தும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டாதது ஏன்..?? தொலைநோக்குத் திட்டத்தில் பணத்தை முடக்கினாலும், இந்த சனங்களுக்கு அது புரியாது. குறுகிய கால இடைவெளியில் கிடைக்கும் நன்மைகளையே நாம் விரும்புகிறோம், அதையும் இந்த அரசியல் வாதிகள் நன்கு அறிந்து வைத்து உள்ளனர். தேர்தல் அன்பளிப்புகள், இலவசங்கள், தேர்தலுக்கு முன்னால் போடப்படும் சாலைகள், இவை எல்லாம் நான் சொன்ன கருத்தையே ஆணித்தரமாய் பிரதிபலிக்கின்றன.

மற்றுமொரு முக்கிய விஷயம். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்குப் போதுமானதே. ஆனால் எப்படி இந்தப் பற்றாக்குறை..??

௧. ஓரிடத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், வெகு தூரத்தில் இருக்கும் மற்றொரு இடத்திற்குக் கம்பிகள் மூலம் கடத்தப் படுகின்றன. இதனால் ஏற்படும் மின் இழப்பு மட்டும் முப்பது சதவிகிதத்திற்கும் மேல் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஓட்டைப் பானையில் மோர் சுமந்து செல்வதைப் போலத்தான். இது போக மின்னழுத்த மாற்றிகளில் (Step down and step up transformer stations)ஏற்படும் மின்னிழப்புகள், மற்றும் சரி வர பராமரிக்கப் படாத மின்னாலைகளில் ஏற்படும் இழப்புகள் மற்றும் இதர கசமுசா இழப்புகளையும் கருத்தில் கொண்டால், நாம் (உண்மையாக)தயாரிக்கும் மின்சாரத்தில் பாதி கூட பயனாளர்களைச் சென்றடைவதில்லை.

௨. இந்தியாவில் மின் திருட்டு என்பது பல இடங்களில் அரசாங்கத்தின் துணையோடும், மற்றும் பல இடங்களில் கண்டு கொள்ளப் படாமலும் அரசியல்வாதிகளின் தலையீட்டோடும் அமோகமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட, பல அரசியல் வாதிகள் மற்றும் பெரும்புள்ளிகளின் ஆலைகள் திருட்டு மின்சாரத்திலேயே ஓடுகின்றனவாம்.

௩. இந்தியாவில் மட்டும் மாதத்திற்கு மூவாயிரம் தொலைத்தொடர்புக் கோபுரங்கள் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு தொலைதொடர்பு நிறுவனங்களால் நிறுவப் படுகின்றன. நாட்டில் டெலிகம்யூனிகேஷன் எனப்படும் தொலைதொடர்புப் பயனாளர்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அவர்கள் அனைவருக்கும் சேவை அளிக்க வேண்டியது கட்டாயமாகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், இதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதும் இதற்குக் காரணம். ஒவ்வொரு தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் மூன்றிலிருந்து நான்கு கிலோவாட் மின் இணைப்பு தேவைப்படுகிறது. கொஞ்சம் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். வெறும் மின் கோபுரத்திற்கு மட்டும் இவ்வளவு மின் தேவை என்றால், தமிழகத்தில் நாள் தோறும் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், தனி வீடுகள் கட்டப் படுகின்றன.. அனைத்திற்கும் மின் இணைப்புத் தர வேண்டுமே கொஞ்சம் யோசியுங்கள்.. தலை சுற்றுகிறதா...???

௪. நம்மிடம் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு அந்த அளவுக்கு இல்லை.

௫. மின்சாரம் என்றால் அது வெகு தொலைவில் இருந்து தயாரிக்கப்பட்டு எங்கிருந்தோ நமக்கு வந்து விடுகிறது. இதில் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் உள்ளது.

சரி.. மேற்கூறிய புகார்களுக்கு இனி நாம் என்னென்ன செய்யலாம்..

நாம் எப்போதும் கூறுவது போல, மாற்றங்கள் நம்முள் இருந்து தொடங்க வேண்டும்.
வீட்டில் இருக்கும்போதும், அலுவலகத்தில் பணிபுரியும்போதும் தேவையில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சாதனங்களை நிறுத்தும் பழக்கத்தை நமக்குள் ஏற்படுத்த வேண்டும். என் உடன் பணி புரியும் நண்பன், அலுவலக வளாகத்தில் என்னுடன் பேசிக்கொண்டே நடந்து வருவான்.. சட்டென்று உபயோகப்படாத அறைகளை எட்டிப் பார்த்து மின்விளக்குகளை அணைத்து விடுவான். வளாகத்திலும், தேவைக்கு அதிகமாக இயங்கும் மின் விளக்குகளை அணைத்துக் கொண்டே நடப்பான். நிறுவனம் தானே பணம் கட்டுகிறது நமக்கென்ன என்று அவன் போகவில்லை. மின்சாரம் நமது சொத்து. பல்லாயிரக்கான ரூபாய்கள் பணம், பலரது உழைப்பினால் அது உங்கள் கைக்கு வருகிறது என்ற எண்ணம் நமக்குள் வளர வேண்டும், அடுத்த சந்ததிகளுக்கும், இதன் தேவையைச் சொல்லிப் புரிய வைத்து வளர்த்த வேண்டும்.

கேப்டிவ் பவர் பிளாண்ட் என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது ஓரிடத்தில் தயாரிக்கப் படும் மின்சாரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உபயோகப்படும் விதத்தில் மின் நிலையங்களை வடிவமைத்தல். அதாவது பெரிதாக ஒன்றை ஓரிடத்தில் கட்டி, மின்சாரத்தைக் கம்பிகள் மூலம் கடத்துவதற்குப் பதிலாக, சிறு சிறு மின் உற்பத்தி நிலையங்களை ஆங்காங்கே தேவைக்கேற்ப அமைத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுதல். இதன் மூலம் ட்ரான்ஸ்மிஷன் லோசெஸ் என்றழைக்கப்படும் நீண்டதூர கம்பிக்கடத்திகளினால் ஏற்படும் இழப்பைக் கணிசமாகக் குறைக்கலாம்.

மின் திருட்டை ஒழிக்க அரசு தான் ஏதேனும் செய்ய வேண்டும்.

தொலைதொடர்பு கோபுரங்கள் அனைத்தும் டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப் பட்டு உள்ளன. மின் இணைப்பு இல்லாத நேரத்திலும் அது இயங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வடிவமைப்பு உருவாக்கப் பட்டது. மின் இணைப்பே இல்லாத பல ஊர்களிலும், தொலைத்தொடர்பு கோபுரங்கள் முழு நேர டீசல் ஜெனரேட்டர்களால் மின் உற்பத்தி செய்து இயக்கப் படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால் பலகோடிகளில் புழங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த டீசலுக்கு அரசிடம் இருந்து மானியம் பெறுவது தான். இவர்களுக்கு எதற்கு மானியம்..?? (ஏண்டா நாட்டுல எவ்வளவு பிரச்சினை இருக்கு.. இவங்க என்ன பொழைக்க வழியில்லாம நடுத்தெருவுல நிக்கிறாங்களா...??? ) இன்னும் கொடுமை என்னவென்றால் இவ்வாறு மானியத்துடன் வழங்கப்படும் டீசலை முறைகேடாக (தெரிந்த விஷயம் தானே..) பலர் உபயோகிக்கிறார்கள்.. பகல் கொள்ளை போல.. எப்படி ரேஷனில் ஊற்றப் படும் மானிய மண்ணெண்ணெய் வெளியில் விற்கப் படுகிறதோ, அதே போலத்தான். இது சின்ன விஷயம் இல்ல.. இந்த முறைகேடுகளால் பலகோடிகள்(கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் மேல்) வருடத்திற்கு இழப்பு ஏற்படுகிறதாம்.. நம்ப முடிகிறதா..?? தொலைத்தொடர்பு கொபுரங்களுக்குத் தேவையான மின்சாரத்தில் பாதியை ஹைப்ரிட் (சோலார் மற்றும் காற்றாலை) முறையில் தானே தயாரித்துக் கொள்ள வேண்டும் , என்பது போன்ற சட்டங்கள் இயற்றப் பட்டும் சரிவர நடைமுறையில் இல்லை.இவை சரிவர நடைமுறைப் படுத்தப் பட வேண்டும்.

மின்சாரம் என்பது வெறும் நிலக்கரியிலும், நீரிலும், கதிரியக்க முறையிலும் மட்டும் பெறக்கூடிய விஷயமல்ல. நாம் தினந்தோறும் வெளியேற்றும் வீட்டுக் கழிவுகளில் இருந்து கொஓது மின்சாரம் தயாரிக்க முடியும். ஆதிஷா வினோ அவர்கள் சமீபத்தில் கழிவுகள் பற்றிய ஒரு அருமையான கட்டுரை எழுதி இருந்தார். இது போன்ற கழிவுகளைச் சரியான முறையில் உபயோகித்தால் அதன் மூலம், நமக்குத் தேவையான அளவு மின்சாரத்தை நாமே தயாரிக்க முடியும். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், கழிவுகள் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரித்து, அதன் மூலம் பல கிராமங்களின் மின் தேவையை தன்னிறைவு அடையச் செய்து காட்டி இருக்கிறார்கள். பல்வேறு கிராமங்களில் இவை செயல்படுத்தப் படுகின்றன. கிராமங்களை விட அதிகமான பொருளை உபயோகிப்பவர்கள் நகர மக்கள்.. நம்மால் செய்ய முடியாதா....???

அளவுக்கு அதிகமாக உபயோகித்தல், ஆடம்பரத்திற்காக உபயோகித்தல், வீணாக்குதல் போன்றவற்றைக் குறைக்க விழிப்புணர்வு தேவை.

இப்போதைய தேவைக்கு புதிதாக மின்னாலைகள் தேவை இல்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மக்களுக்குப் பாதுகாப்பு தரும் மின்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நல்ல குடிமக்களாகத் திகழ வேண்டும்.

நன்றி..
சாமக்கோடங்கி

Saturday, November 12, 2011

காஞ்சனாவில் பிடித்த பாடல்..

வணக்கம் நண்பர்களே..

சமீப காலமாக வருகின்ற பல படங்களின் பாடல் வரிகள் முக்கியத்துவம் பெறுவதும் இல்லை, அவற்றைப் பெரும்பாலானோர் கவனிப்பதும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் சமீபத்தில் காஞ்சனா (முனி-2) படத்தில் வந்துள்ள "வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா" என்கின்ற பாடல் வரிகளும் இசையும், அதன் காட்சி அமைப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. ஸ்ரீராம், MLR.கார்த்திகேயன் மற்றும் மாலதி ஆகியோர் குரல் கொடுக்க, கவிஞர் விவேகா, வெறி கொண்டு பழிவாங்க அலையும் ஒரு பேய்க்காக எழுதிய பாடல் இதோ..

------------------------------
கொடியவனின் கதையை முடிக்க
கொறவளையை தேடி கடிக்க
நாறு நாறா ஒடம்ப கிழிக்க
நடுத்தெருவில் செதற அடிக்க
புழுவப் போல நசுக்கி எறிய
புழிஞ்ச ரத்தம் தெளிச்சி நடக்க
துண்டு துண்டா நறுக்கி எறிய
துள்ள வெச்சு உசுர எடுக்க
சந்ததிக்கே அதிர்ச்சி கொடுக்க
சகல வித வதைகள் புரியவே....

வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா..
(கோவ பழத்த போல கண்ணு கோபத்துல செவக்கும் செவக்கும்)
யே வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வரா காஞ்சனா..
(உதடு துடிக்க உடம்பு துடிக்க கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்)
கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன கிழிச்செறிய போறா..
கதற கதற கதற உந்தன் கத முடிக்க போறா..
யே வந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா
வந்துட்டா வந்துட்டா டா.....

சூற காத்தப் போல வராடா..
யே சொடுக்குப் போட்டு அழிக்க வராடா...
ஆணும் பொண்ணும் கலந்து வராடா..
ஒன்ன பிரிச்சு மேய எழுந்து வராடா.. டேய் டேய் டே..ய்ய்ய்..

வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா..
(கோவ பழத்த போல கண்ணு கோபத்துல செவக்கும் செவக்கும்)
யே வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வரா காஞ்சனா..
(உதடு துடிக்க உடம்பு துடிக்க கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்)

கபால மாலைகள் கழுத்தில் உருள
கண்களைப் பார்த்தாலே எவனும் மெரள
அகால வேளையில் வேட்டைக்கு வராளே
அதிரி புதிரி ஆச்சு..
அப்பளம் போலவே எதிரி நொறுங்க
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற
எப்பவும் எங்கவும் காணாத ராட்சஷி
எதிரினில் வந்தாச்சே..
கொம்பேறி மூக்கணும் கோதுமை நாகனும்
கண்ணாடி விரிய(ன்) குட்டியும்
சாரைப்பாம்பும் சுருட்டை பாம்பும்
வெள்ளிக்கோல் வரைய நாகமும்
பவள பாம்பும் மண்ணுளி பாம்பும்
பசும் சாம்பல் தண்ணி பாம்பும்
குழி விரியனும் கட்டு விரியனும்
கூடி சீருதே..

சூற காத்தப் போல வராடா..
யே சொடுக்குப் போட்டு அழிக்க வராடா...
ஆணும் பொண்ணும் கலந்து வராடா..
ஒன்ன பிரிச்சு மேய எழுந்து வராடா.. டேய் டேய் டே..ய்ய்ய்..

உயிரேடுப்பேன்.. கத முடிப்பேன்..
உயிரேடுப்பேன்.. கத முடிப்பேன்..
கருவறுப்பேன் நான்...

ஹவ்வ ஹவ்வ ஹவ்வ ஹவ்வ..
ஹோ ஹோ ஹோ ஹோ...

கண்ணுல நெருப்பு பொறி பறக்குது
கைகளும் கால்களும் துடி துடிக்குது
பற்களும் பசியில் நற நறங்குது
குதர்ற நேரம் வந்தாச்சே..
வானமும் பூமியும் நடு நடுங்குது
வங்கக்கடல் போல காத்து உருமுது
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்
செதச்சிட வந்தாச்சே...
சித்திரை வெய்யிலும் கலங்கி போகும்
செவப்போ இவ கண்ண பாத்து
அத்தனை திசையும் அதிர்ந்து போகும்
அடடா இவ வேகம் பாத்து
குதிர நதிகள் ஓட ஓட
உடலை இவ கிழிக்கப்போறா..
உதவ வேணாம் பயங்கரத்த காட்டப் போறா...

சூற காத்தப் போல வராடா..
யே சொடுக்குப் போட்டு அழிக்க வராடா...
ஆணும் பொண்ணும் கலந்து வராடா..
ஒன்ன பிரிச்சு மேய எழுந்து வராடா.. டேய் டேய் டே..ய்ய்ய்..

வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா..
(கோவ பழத்த போல கண்ணு கோபத்துல செவக்கும் செவக்கும்)
யே வெட்டியா மரம் போல உன்ன சாய்க்க வரா காஞ்சனா..
(உதடு துடிக்க உடம்பு துடிக்க கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்)

எடுத்த சபதம் முடிக்கும் வரையில் இமையில் ஏது உறக்கம் உறக்கம்
அடிக்கும் அடியில் மழையும் பறக்கும் குருதி நதியில் பூமி சிவக்கும்
அத்தனை எலும்பும் நொறுங்கும் நொறுங்கும்
பதறும் ஓசை அகிலம் விரும்பும்
மோதிய கோடரி முனைகள் உடையும்
ஒட்டிய உடல்கள் முழுதும் சிதறும்
கட்டிய கயிறு அறுந்து உதிரும்
கனவும் காணா வதைகள் நடக்கும்....
-------------------------------------------
இந்தப் பாடலின் காணொளி:
www.youtube.com/watch?v=bb4_uvZVc04

சாமக்கோடங்கி

Sunday, October 30, 2011

இராமாம்பாளையம் துவக்கப்பள்ளி - புகைப்படங்கள்

இது இராமாம்பாளையம் பள்ளியைப் பற்றிய முந்தைய பதிவின் தொடர்ச்சி.


காலை வழிபாட்டு நேரத்தில் நிற்கும் மாணவர்கள்.

அவரவர் தனக்கென உள்ள இடத்தில் நிற்கிறார்கள். வராத குழந்தைகளின் இடம் காலியாக இருப்பதைக் கவனியுங்கள்.


கடவுள் வாழ்த்தை அடுத்து செய்தித் தாளை வாசிக்கும் மாணவன்


காலை வழிபாட்டிற்கான தனியான கையேடு


அவளுக்காக அன்று ஒதுக்கப்பட்டுள்ள வேலையைத் தானாகச் செய்யும் ரேவதி


கற்றுக் கொடுக்கும் திரு.ஃபிராங்க்ளின்


அடையாள அட்டையைப் பெருமையுடன் காண்பிக்கும் மாணவன்.
அவன் கண்ணில் தெரியும் சந்தோஷம் அவர்கள் பள்ளி எப்படிப் பட்டது என்பதைக் காட்டுகிறது.


குழந்தைகளின் கை வண்ணங்கள்


செய்முறை விளக்கக் கையேடு வைக்கப் பயன்படும் அலமாரி

நன்றி
சாமக்கோடங்கி

Saturday, October 29, 2011

திரு.ஃபிராங்க்ளின் - புதிய தலைமுறையின் நம்பிக்கை

இவரைப் பற்றிப் பல்வேறு பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஈரோடு கதிரின் கசியும் மௌனம் வலைப்பூவில் பிரசுரிக்கப்பட்ட ஒரு பதிவு எனக்கு ஒரு மின் மடலாக வந்திருந்தது. முதலில் மேலோட்டமாகப் படித்த நான் 'மேட்டுப்பாளையம்', 'அன்னூர் சாலை' போன்றவற்றைப் பார்த்ததும் சற்று உன்னிப்பாகப் படிக்க ஆரம்பித்தேன். அட இந்தப் பள்ளி என் வீட்டிலிருந்து இருபது நிமிட தொலைவில் தான் உள்ளது என்பதை அப்போது தான் அறிந்தேன். பதிவைப் படித்து முடித்ததும் திரு.ஃபிராங்க்ளின் அவர்களைப் பார்த்தே தீர்வது என்று முடிவெடுத்தேன்.

உடன் பணிபுரியும் சமூக உணர்வுள்ள இரு நண்பர்களையும் மற்றும் புளியம்பட்டி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன் அவர்களையும் அழைத்துக் கொண்டு அந்தப் பள்ளிக்குச் சென்றோம். வேறு வேலை காரணமாக இப்படிக்கு இளங்கோ இளங்கோவால் எங்களுடன் இணைய முடியவில்லை. வெளியே சாதாரண அரசுப்பள்ளிகளைப் போலத் தோற்றமளித்த அக்கடிதத்தின் உட்பகுதியின் ஒவ்வொரு அங்குலத்திலும் திரு.ஃபிராங்க்ளின் அவர்களின் உழைப்பு தெரிந்தது. மேற்படி அந்தப் பள்ளியின் பெருமைகளை ஈரோடு கதிர் மிகவும் விரிவாக எழுதி விட்டார். எனவே நான் கவனித்த சில விஷயங்களை மட்டும் இங்கே பகிர்கிறேன். எங்கு சென்றாலும் கேமராக் கண்களுடன் அலையும் என்னை, கேமராவைக் கொண்டு சென்ற போதும், எடுக்க மனமில்லாமல் கடைசி வரை வாய்பிளந்து வேடிக்கை பார்க்க வைத்த பெருமை திரு.ஃப்ராங்க்ளின் அவர்களையே சேரும்.

கடலின் சில துளிகள்:

-அழகழகாக ஒழுங்காய் வெளியே விடப்பட்டிருந்த குழந்தைகளின் காலணிகளை வருணித்தாலே அது ஒரு தனிக்கவிதை. குழந்தைகளின் ஒழுங்கு உள்ளே நுழையும்போதே தெரிந்தது.

-திரு.ஃபிராங்க்ளின் மற்றும் திருமதி.சரஸ்வதி, எளிமையின் உச்சங்கள்.

-திரு.ஃபிராங்க்ளின் அவர்கள் எங்கள் பள்ளியில் எனக்கு சீனியர் என்று தெரிந்தபோது பெருமிதத்தின் உச்சிக்கே சென்றேன்.

-வகுப்பறை உலகத்தரம். வருணிக்க வார்த்தைகள் இல்லை. எழுந்து வர மனமே இல்லை.
இவ்வளவு அழகான படிக்கும் சூழ்நிலை பெற்ற குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.

-பிரார்த்தனை நேரம் ஆரம்பித்ததும் நாங்களும் அவர்களுடன் பங்கெடுத்துக் கொண்டோம். குழந்தைகள் அழகாகவும் வரிசையாகவும் நின்றிருந்தனர். வலமிருந்து இடமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் நின்றிருந்தனர். சில குழந்தைகளுக்கு இடையே மற்றும் இடைவெளிகள் காணப்பட்டன. அப்போது தாமதமாக ஒரு சிறுமியை அதன் தாய் வந்து விட்டுச் சென்றார். அந்தச் சிறுமி, சரியாக இந்த இடைவெளிகளில் ஒன்றில் வந்து நின்று கொண்டார். அப்போது தான் புரிந்தது, யார் வந்தாலும் வரா விட்டாலும் ஒரு குழந்தையின் பிரார்த்தனைக்கு நிற்கும் இடம் முன்னமே முடிவு செய்யப் பட்டு, பின்பற்றப் படுகிறது என்று. கடவுள் வாழ்த்து முடிந்ததும், ஒரு சிறுமி வந்து ஒரு குரளை ஒப்பித்தார். பின்பு அடுத்தடுத்து ஒவ்வொரு வகுப்பிலிருந்தும், தலா ஒவ்வொரு குழந்தை வந்து தங்களுக்கான குறளை ஒப்பித்தனர். அவர்கள் ஒப்பிக்கத் திணறுகையில், நண்பர்கள் எடுத்துக் கொடுத்த விதம் அவர்களின் குழு முயற்ச்சிக்கு ஒரு சான்று.

-'குறள்' பேச்சு முடிந்ததும், "சார் அடுத்து நீங்க கதை சொல்லணும்" என்று திரு.ஃபிராங்க்ளினை பார்த்து அனைவரும் சொன்னதும், "பிறர்க்கின்னா முற்பகல்" குறளை ஒரு அழகான சிறு கதையில் மழலைச் செல்வங்களுக்குப் புரியும் வகையில் சொல்லி எங்களை எல்லாம் புல்லரிக்க வைத்தார், அவ்வப்போது குழந்தைகளையும் கதையுடன் ஒன்றிப் பேச வைத்தார்.

"அதனால் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது" என்று முடித்தவுடனே, ஒரு மாணவன் தானாக வந்து அங்கிருந்த செய்தித் தாளை எடுத்துத் தலைப்புச் செய்திகளை வாசிக்க ஆரம்பித்தான். இடையில் அவன் பிழையாகப் படித்த போது திருமதி.சரஸ்வதி கனிவாக அதைத் திருத்தினார்.மாணவர்களிடம் எதுவும் சொல்லாமலேயே மாணவர்கள்,அவர்களாகவே ஒன்றன் பின் ஒன்றாகச் செயல்படுத்திய விதம், இந்த ஆசிரியர் நல்ல தலைவர்களை, செயல்வீரர்களை உருவாக்குவார் என்ற நம்பிக்கையை அளித்தது.

-உலகத்தரம் வாய்ந்த அந்தப் படிக்கும் அறை எப்படிச் சாத்தியமானது? எவ்வளவு செலவானது?எப்படிக் கிடைத்தது? என்ற எனது நேரடிக் கேள்விகளுக்கு, திரு.ஃபிராங்க்ளின் அவர்கள் கூறிய பதில் அப்படியே இங்கே: "இதைச் செய்ய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. முதல் படியை நான் எடுத்து வைத்தேன். பிறகு ஊர்ப்பொது மக்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுக்கு நம்பிக்கை வந்ததும், அவர்களிடம் இருந்து பணம் திரட்டி (சுமார் இரண்டரை இலட்சம் செலவில்) இந்த உள்கட்டமைப்பை உருவாக்கினோம். மொத்தப் பணத்தையும் நன்கொடையாகப் பெற்றோ அல்லது நம் கையில் இருந்து கொடுத்தோ செய்தல் சரியாகாது. ஏனெனில் ஊர்ப்போதுமக்களின் பங்களிப்பு இருந்தால் தான் இந்தப் பள்ளியையும், இந்த கட்டமைப்பையும் நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க முடியும். நான் சிறிது காலத்தில் மாற்றல் ஆகிச் சென்று விடும் பட்சத்தில், அடுத்து வருபவருக்கு, இந்தப் பள்ளி இவ்வாறாக உருவாக்கப் பட்டதற்கான நோக்கமும், இதனைப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் புரியாமல் போகலாம், அந்நிலையில் ஊர்ப்போதுமக்கள் கட்டாயம் இதனைப் பாதுகாப்பார்கள். எனவே தான் ஊர்ப்பங்களிப்பு எங்களுக்கு முக்கியமாகப் பட்டது".

-சர்வ சிக்ஸ அபியான் (SSA)திட்டத்தின் கீழ் பாடநூல்களும், செயல்முறை அட்டைகளும் வழங்கப்பட்டு இருந்தன. அந்த அட்டைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து குழந்தைகள் அவர்களுக்கான அட்டைகளை எடுத்த விதம் அழகு. "குழந்தைகள் அட்டைகளை அப்படியே போட்டு விடும் பட்சத்தில், அவற்றை பராமரிப்பது மிகவும் கடினம், அதைக் குழந்தைகளே ஒழுங்காகச் செய்கையில் அது மிக எளிதாகிறது, நீங்களே கவனியுங்கள் அவர்கள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்று" என்று திருமதி.சரஸ்வதி சொல்ல, நான் ஒரு சிறுவனை அழைத்து, அவன் கையில் இருந்த அட்டையை அதன் அலமாரியில் வைக்கச் சொன்னேன்.

அவன் அலமாரி அருகே சென்று,முதலில் அந்த அட்டை இருந்த அடுக்கை சரிபார்த்தான். பிறகு அங்கு இருந்த ஒரு அட்டைக்கட்டை எடுத்து வந்து மேசையில் வைத்து, கட்டை அவிழ்த்தான். எங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தான் 1,2,....6,_,8. அங்கே நிறுத்தினான். அவனது 7ஆம் எண் அட்டையை அங்கே செருகி, மீண்டும் அழகாக அதைக் கட்டி எடுத்த இடத்திலேயே வைத்தான். அந்த மாணவன் இரண்டாம் வகுப்பே படிக்கிறான். இதற்கு மேல் என்ன சொல்ல.

-"சார், பாத்ரூம் எங்க இருக்கு?" நான் கேட்க, ஒரு சிறுவனை ஆசிரியர் என்னுடன் அனுப்பினார். முதலில் அந்த சிறுவன் கழிப்பறை செல்வதற்காக தனியே வைக்கப்பட்டு இருந்த ஒரு காலணியை அணிந்து கொண்டான். பிறகு கழிப்பறையின் முகப்புக் கதவைத் திறந்து விட்டான். கழிப்பறையின் தூய்மையைப் பார்வையிட்டு திரும்பி வெளியே வந்ததும், வெளியில் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுவன், சரியாக வந்து அதன் கதவை மூடித் தாழிட்டான்.

-ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தை அழகாகப் படித்துக் கொண்டிருக்கையில், Hi, what is your name, what is your father's name, how are you..போன்ற கேள்விகளுக்கு அழகாக சிரித்த முகத்துடன் பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு நண்பர் "How did you celebrate deepavali?" என்று கேட்க, குழந்தைகள் விழிக்க, உடனே நான் "ஏம்ப்பா இவ்வளவு கஷ்டமான கேள்விகளுக்கு எப்படி அவர்கள் பதில் சொல்வார்கள் என்று சொல்ல உடனே ஆசிரியர் வந்தார்.

இல்லை இல்லை அவர்கள் சொல்வார்கள், கேள்வியைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள் என்றார். பின்னர், மாணவர்களிடம் திரும்பி,

ஆசிரியர்:how நா என்ன..
மாணவர்கள்: எப்படி
ஆ: celebrate நா
மா: கொண்டாடறது..
ஆ: அப்ப மொத்தமா சொன்னா..
மா: தீபாவளியை எப்படி கொண்டாடினோம்.
ஆ: ஆ... இப்ப பதில் சொல்லுங்க..
மா: "சந்தோஷமா." "நல்லா"...
ஆ: அவங்க இங்கிலீஷ் ல கேட்டாங்க இல்ல, அப்ப இங்க்லீஷ்ல பதில் சொல்லுங்க பாப்போம்..
மாணவர்கள் விழிக்க..அடுத்த மேசையில் உக்காந்திருந்த ஒரு அழகுச் சிறுமி "ஹேப்பியா" என்று சொல்ல எங்களிடம் இருந்து பலத்த கைத்தட்டல்.

யப்பா தமிழக அரசு கனவான்களே.. அந்த நல்லாசிரியர் விருத தயவு செஞ்சு இவருக்குக் குடுங்கப்பா....

சார், கோவையின் தற்போதைய கலெக்டர் யாரு சார்..?
நான்: தெரியலப்பா..
எம்.கருணாகரன் சார்...
சரிப்பா, தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் சொல்லுங்க.
டாக்டர், செல்வி, ஜே.ஜெயலலிதா.
அப்படியா, இந்தியாவின் பிரதம மந்திரி பெயர் சொல்லுங்க.
பிரதீபா பாட்டில்.. டேய்.. இல்லடா தப்பு தப்பு.. சார் டாக்டர்.மன்மோகன் சிங்.
சரிப்பா, கோவையின் தற்போதைய மேயர் பெயர் சொல்லுங்கப்பா..(எனக்கும் தெரியல).
தெரியல சார்.
ஏம்ப்பா கொஞ்ச நேரம் முன்னாடி பேப்பர்ல வாசிச்சிங்க இல்ல.. போய் பாத்துட்டு வாங்க.
இரண்டே நிமிடத்தில், ஓடிப்போய் திரும்பி வந்த சிறுவன் சொன்னான், "திரு.எஸ்.எம்.வேலுசாமி". நாங்கள் மாணவர்களிடம் இருந்த சமயம் முழுக்க கேள்விகளாலும் பதில்களாலும் வெளுத்துக் கட்டினார்கள். உண்மையைச் சொன்னாள் அவர்களிடம் கேளிவிகள் கேட்கவே பயமாக இருந்தது.

-வகுப்பறையில் அடிக்கும் குச்சிகள் இல்லை. மாணவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்து கொண்டே இருந்தனர். யார் யார் அந்த நாள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது முன்பே திட்டமிட்டு வகுக்கப் பட்டிருந்தது. Everything is systematic..!!! காலைப் பிரார்தனைக்குக் கூட யார் யார் என்ன என்ன செய்தார்கள் என்பதற்குத் தனியாக ஒரு கையேடு வைத்து பராமரிக்கப் பட்டு இருந்தது, அதையும் அந்த மழலைச் செல்வங்களே அவர்களின் அழகுக் கையெழுத்தில் எழுதி இருந்தது மிக அருமை. ஆசிரியருக்கு இதற்காக ஒரு தனி "பலே".

-குழுவாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னது, மதிய உணவு செய்யும் ஒரு அம்மாவையும் அழைத்து வந்து குழந்தைகளுடன் நிற்க வைத்து "நாங்கள் ஒரு குடும்பம்" என்பதைச் சொல்லாமல் சொன்ன திரு.ஃபிராங்க்ளினின் கண்களில் பெருமிதமும், இளைய சமுதாயத்திற்கான எதிர்காலக் கனவுகளும் மின்னியது. பிரிய மனமில்லாமல் அங்கிருந்து விடை பெறுகையில் "Rejoice Always" என்று சொல்லி மாணவர்கள் எங்களை வாழ்த்தி வழியனுப்பினர்.


இரண்டரை லட்சம் மிக எளிது, ஆனால் திரு.ஃபிராங்க்ளின் அவர்களைப் போன்றவர்களை உருவாக்குவதே இப்போதைய கடமை. இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை வலுவாக்கும் இவரது முயற்சிக்கு உரிய உதவிகளைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தோம். அதில் முதல் பணி இவரது பணிகளைச் சரியாக விளம்பரப்படுத்தி மற்றவர்களையும் சென்றடையச் செய்வதே. சமூக உணர்வாளர்கள் இதனால் ஒன்று கூடிச் செயல்பட முடியும்.

உடன் வந்த நண்பர் நிறைய புகைப்படங்கள் எடுத்தார். தன்னுடைய வலைப்பூவில் அவற்றைப் பகிர்வார் என்று நினைக்கிறேன். அவை முழுக்க நான் கண்டவை, அந்தக் குழந்தைகளின் சந்தோஷமும் எதிர்காலமும்.

திரு. ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com 99424 72672

இவரை அறிய உதவிய திரு.ஈரோடு கதிருக்கு மறுபடியும் என் நன்றிகள்.

கொஞ்சம் புகைப்படங்களை இதற்கு அடுத்த பதிவில் இணைத்துள்ளேன். பதிவின் நீளம் கருதி இங்கே அவற்றை இணைக்கவில்லை.

நன்றி
சாமக்கோடங்கி

Thursday, October 27, 2011

ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு

"இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்டானாம்" என்று நம்ம ஊரில் பழமொழி சொல்லுவார்கள். அந்நியர்களின் ஆக்கிரமிப்பால் நமது நாட்டின் வளங்கள் பல அழிந்து போயின. ஆனால் இன்று நான் பேச வந்தது மனிதர்களைப் பற்றி அல்ல. நமது நாட்டில் பரவி, பல்வேறு விதமான தீங்குகளை இழைக்கும் ஒரு தாவரத்தைப் பற்றி. இதனை லாண்டனா கமரா (Lantana Camara) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். படத்தைப் பார்த்துத் தமிழில் இதற்கு ஏதாவது பெயருள்ளதா என்று யாராவது சொல்லுங்கள்.

மத்திய அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த லாண்டனா, உலகிலேயே மிகக் கொடிய தாவரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது.உலகெங்கிலும் பலலட்சம் ஹெக்டேர்களில் பரவிக் காணப்படும் புதர் வகையைச் சேர்ந்த இத்தாவரம் அந்தந்த நாடுகளில் விளையும் தாவரங்களுக்கு மிகப்பெரும் அபாயங்களை விளைவிக்கிறது.
காப்பி,அரிசி,தேயிலை,கரும்பு,பருத்தி மற்றும் தென்னை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் இவை விவசாயத்தில் பெரும்பங்கு வகிப்பவை.

கிபி.1807 ல் கொல்கத்தா தாவரவியல் பூங்காவிற்கு ஆராய்ச்சிக்க்காகக் கொண்டுவரப்பட்ட இத்தாவரம் அங்கிருந்து தப்பித்து மிகக்குறுகிய காலத்தில், இமைய மலையில் இருந்து குமரி வரை தனது ராஜாங்கத்தைத் தானே அமைத்துக் கொண்டது. அழகான கொத்து மலர்கள் மூலமாகவும், சிறுகொத்தாக இருக்கும் கருமை நிறப் பழங்களின் மூலமாகவும், பறவைகள், மற்றும் விளங்கினன்களைக் கவர்ந்து அவற்றின் மூலமாக விதைகளை மற்ற இடங்களுக்கு இவைகள் பரப்புகின்றன.

லாண்டனாவால் பாதிப்பு என்று எப்படிக் கூறுகிறோம்..??

ஒன்று: இது பரவும் விதம் மற்றும் வேகம். மண்வளம் குறைவாக உள்ள பகுதிகளிலும் மிக இலகுவுகாக வேர்களைப் பரப்பும் இவை, அப்பகுதி வாழ் தாவர்களுடன் மிக எளிதாகப் போட்டியிட்டு வீழ்த்தி விடுகின்றன.

இரண்டு: காடுகளின் அமைப்பையே மாற்றும் அபாயம். அதாவது, ஓரிடத்தில் பிறந்து வளரும் பூர்வீகத் தாவரங்களால் அந்த இடத்தின் மண்வளம், நிலத்தடி நீர்வளம், இயற்கை அமைப்பு, பறவைகள், விலங்குகள் போன்றவை மாறாமல் சமநிலையுடன் பாதுகாக்கப் படுகின்றன. இந்த வகை ஊடுருவுத் தாவரங்களால் அந்த சமநிலை பாதிப்படைகிறது.

மூன்று: லாண்டனா வளரும் காட்டுப் பகுதிகளின் நிலமானது மழைக்காலங்களில் நீரை உறிஞ்சி நலத்தடிக்குள் அனுப்பும் பண்பை இழந்து விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள். இதனால் மண்ணின் பசைத்தன்மை போய், மண்சரிவு ஏற்பட ஏதுவாகிறது.

நீலகிரி மலைப்பகுதிகளில் கூட மண்சரிவு அடிக்கடி ஏற்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு மலை ரயிலில் பயணிக்கையில் வழிநெடுகும் லாண்டனாக்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன.என்னுடைய புகைப்படக் கருவியில் அடக்க முடியாத அளவுக்கு. விசாரிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுதும் இதன் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளதாம். நமது சொந்த மண்ணிற்கு இந்தச் செடியினால் ஏற்படும் அபாயம் தெரியாமல் குழந்தைகளும் பெரியவர்களும் கைகளை நீட்டி, அந்த விஷச் செடியினைப் பறித்து விளையாடினர்.

இது எப்படிப் பிழைக்கிறது? மிகக் கடினமான பாறை இடுக்களிலும், தண்ணீர் அதிகமாகக் கிடைக்காத பகுதிகளிலும் கூட எளிதில் வளரக்கூடிய அமைப்பு கொண்ட இத்தாவரத்தின் விதைகள் காட்டுதீயாலும் பாதிக்கப் படுவதில்லை. எனவே, காட்டுத் தீ வந்த பிறகு, மற்ற செடிகளின் விதைகள் அந்தப் பகுதிக்குள் விழுவதற்குள், இவைகள் புதர்களாக வளர்ந்து அந்த இடத்தை ஆக்கிரமித்து விடுகின்றன. தண்ணீர் கிடைக்கையில் அதனை உறிஞ்சி தண்டுப் பகுதியில் சேமித்து வைத்துக் கொண்டு, பாலைவன ஒட்டகம் போல, வெகு நாள் செழிப்போடு இருக்கிறது. இதனால் தான் மற்ற செடிகள் வாடிக் கருகிக் கிடைக்கும்போதும், இந்த லாண்டனாப் புதர்கள் செழிப்போடு இருக்கின்றன.

இவற்றின் வளர்ச்சியை எப்படிக் கட்டுப் படுத்தலாம்..??

மிக எளிய வழி மனித ஆக்கிரமிப்பு. அதாவது மனிதன் இந்த லாண்டனாவைப் பெரிய அளவில் உபயோகப் படுத்தினால் தானாக இவை குறைந்து விடும்.
அழிப்பது ஒன்றும் நமக்குப் பெரிய வேலை இல்லை. தற்போது இந்த லாண்டனா விறகாகவும் கூடை நெய்யவும் மற்றும் சிலவகை மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றன. சிலவகை ரசாயனம் கலந்தால் இதன் தண்டுகளைக் காகிதம் தயாரிக்க உபயோகப் படுத்தலாம். இதனைப் பெரிய அளவில் செய்ய முனைந்தால் இவை அழிக்கப்படவோ, இவற்றின் ஆக்கிரமிப்பு குறைக்கப்படவோ அல்லது மேலும் விரவாமல் கட்டுப்படுத்தபடவோ வாய்ப்புகள் உள்ளன.

மற்றபடி ரசாயனகள் மூலமோ , புல்டோசர் எந்திரங்களின் மூலமோ, கைகளால் வெட்டுவதன் மூலமோ, தீயிட்டுக் கொளுத்துவதன் மூலமோ சிறு சிறு நிலப்பகுதி மக்கள் அங்கே படர்ந்துள்ள லாண்டனாவைக் கட்டுப் படுத்தலாம்.
சிலவகைப் பூச்சிகளைப் பரப்புவதன் மூலம் கூட இச்செடியின் இனவிருத்தியைக் குறைக்க முடியுமாம்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், மக்களிடம் விழிப்புணர்ச்சி வர வேண்டும் என்பதே..!! நான் மேற்கூரியதைப் போல மக்களுக்கு இதனைப் பற்றித் தெரியாததால், ரயில் பாதை நெடுகும் பரவியிருந்த இந்த 'அழகான' தாவரத்தை மட்டுமே ரசித்துக் கொண்டே வந்தனர். இந்தச் செடிகள் வருவதற்கு முன்னர், அங்கே எவ்விதமான தாவரங்கள் இருந்திருக்கக் கூடும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இதை விடக் கொடுமை, இந்தத் தாவரம் செடிகள் விற்கும் நர்சரிகளில் அழகுப் பொருளாக விற்பனைக்கு உள்ளன. மக்களும் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு,சிவப்பு என்று விதம் விதமாகக் கொத்துக் கொத்தாகப் பூக்கும் இச்செடியை ஆவலுடன் வாங்கிச் செல்கின்றனர்.

என் நண்பர் ஒருவர் இதைப் பற்றி ஒரு கடையில் விசாரித்து விட்டுப் பிறகு அவர்களிடம் இதன் தீமைகளைப் பற்றிக் கூறி, இதை விற்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார். ஆனால் கடைக்காரர் எப்படி பதில் கூறியிருப்பார் என்று நமக்கு எல்லோருக்குமே தெரியும்..


நன்றி..
சாமக்கோடங்கி