Friday, May 7, 2010

முதுகெலும்பு....


அனைவருக்கு வணக்கம்..

சுற்றுச்சூழல் பற்றிய விஷயங்களை மட்டும் தான் பொதுவாகப் பதிந்து வந்தேன்...அதன் மூலம் கிடைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்..(எனக்குத் தெரியாமலேயே என்னைப் பின் தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டி விட்டது..)

இந்தப் பரந்து விரிந்த பதிவுலகில் பிரகாஷ்(எ)சாமக்கோடங்கி என்பவன் இப்படித்தான் எழுதுவான் என்ற எனக்கான முகவரியைத் தந்த என் வலை நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்..

அரசியலுக்குள் நுழையாமலேயே எழுதுகிறேன் என்ற நினைப்பில் இருந்து விட்டேன். சுற்றுச் சூழல் என்கிற விஷயம் மனிதர்களையும் உள்ளடக்கியது.. மனிதன் என்று வந்தாலே அங்கு அரசியலும் வந்து விடுகிறதல்லவா...இப்போது தான் உணர்கிறேன்...

நேற்று முடி வெட்ட சவரக் கடைக்குச் சென்றிருந்தேன். போதையில் இருந்த இரண்டு பேர் அங்கே பேசிக்(உளறிக்)கொண்டிருந்தார்கள்..

"ரொம்ப நாளா கட்சிக்காகப் பாடு பட்டுக்கிட்டு இருக்கேன்.. தலைவர் கண்டுக்கவே மாட்டேங்கறார்... தமிழ் மாநாடு முடியட்டும்.. செயலாளர் பதவி கேட்டிருக்கேன்.. நாமளும் கொஞ்சம் காசு பாக்கணுமில்ல...."

"என்னப்பா நீயும் ரொம்ப காலமா இதத்தான் சொல்லிக்கிட்டு இருக்கே...இன்னும் கீழே தான் இருக்கே...."

அதற்கு மேற்கொண்டு அவர்கள் எங்கெங்கோ போய், அவர்கள் வைத்திருக்கும் கீப்புகளின் எண்ணிக்கை வரை பேச ஆரம்பித்து விட்டார்கள்... வாடிக்கையாளர்கள் என்பதால் முடி வெட்டுபவருக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.. சிலர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தனர்..

முடியோடு சேர்த்து அவர்கள் பேசியதையும் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டேன்..

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்பவை.. கட்சி என்பது எப்படி உருவாகிறது,அதில் அங்கத்தினர்கள் யார், அவர்களின் சிந்தனைகள் என்ன.. என்பதுதான்..

இன்றைய சூழ்நிலையில் கட்சியில் சேருபவன் கண்டிப்பாக அந்தக் கட்சியின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டவனாக இருக்க மாட்டான்.. ஒன்று அவனுக்குத் தனிப்பட்ட முறையில் பயன் தரும் வகையில் அந்தக் கட்சி ஏதேனும் செய்திருக்க வேண்டும் அல்லது கூடியிருப்பவர்களால் கொண்டு சேர்க்கப் பட்டிருக்க வேண்டும்.


ஒருவனைத் தலைவன் என ஏற்றுக் கொண்டால் பின்னர் அவன் செய்வது அனைத்தும் நல்லதாகவே தோன்றும். அவன் எதிரிகள் யாவரும் தனக்கும் எதிரிகள் ஆவர்.இது தொன்று தொட்டு நடப்பது தான்.(நடிகர்கள்- ரசிகர்கள் விஷயத்திலும் இதையே நாம் பார்க்கிறோம்) பின்னர் கட்சிக்காக மாங்குமாங்கென்று உழைக்க ஆரம்பிக்கிறான்.. தான் செய்யும் தொழிலை விடுத்து கட்சி, பொதுக்கூட்டம் என் அலைகிறான். கட்சி இதனை நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. ஏனெனில் ஆறாம் அறிவைப் பயன்படுத்துபவன் கட்சிக்கு உபயோகப் படமாட்டான்..(கவனிக்கவும் நான் படித்தவன் என்று சொல்லவில்லை). அவனுக்கு மேலும் மேலும் பிரியாணி, தண்ணி, போகும் இடம் எல்லாம் கைச்செலவு என்று வாரி இரைக்கிறார்கள்.(நா##$@க்கு எலும்புத்துண்டு ஒண்ணும் பெரிய செலவில்லையே..)

அப்படி தன்னை முழுமையாக இந்தத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன் பின்னர் எதிர்பார்ப்பது என்ன..? கட்சியில் தான் உழைத்ததற்கான பலன்.. கோஷம் போட்டதற்கான கூலி.. கட்சிக் கொடி கட்டியதற்கான கைமாறு.. எத்தனை நாள் தான் கோஷம் போட்டுக் கொண்டே இருப்பது.. அடுத்தடுத்த பதவி வேண்டாமா..(எல்லாத் தொழிலிலும் நாம் எதிர்பார்ப்பது தானே...?)தனக்கு மேல் உள்ளவர்கள் சம்பாரித்து கொழுத்ததைப் பார்த்து தான் மட்டும் சும்மா இருக்க முடியுமா என்ன...?

இதில் ஒரு விஷயம் என்னவென்றால் தமிழக அரசியலில், ஏன் இந்திய அரசியலில் உள்ள அனைத்துக் கட்சிகளின் மொத்தத் தொண்டர்களில் 98 சதவிகிதம் இப்படிப் பட்டவர்களாகத் தான் இருப்பர்.உண்மையான தொண்டர்களைக் கணக்கெடுக்க வேண்டும் என்றால் "இனிமேல் நம் கட்சிக் கூட்டத்திற்காகப் பணியாற்றும் எந்தத் தொண்டருக்கும் கைச் செலவுக்குக்குக் காசோ, குடிக்க சாராயமோ,பிரியாணியோ தரப்பட மாட்டாது..."என்று அறிவித்தால் போதும்.

இப்படி உருவாகும் கட்சியில் "மக்கள்" என்பவர்கள் எங்கே வருகிறார்கள்.. "கட்சி", "கூட்டம்","பிரியாணி","பதவி", "பணம்"... இவைகள் தான் வருகின்றன..

அடிபட்டு உதைபட்டு மேலே வருகின்ற ஒருவன் அந்தப் பகுதி மக்களுக்கு நல்லது செய்வானா..?இல்லை அவன் மேலே வரப் பாடுபட்ட அவனுடைய கட்சித் தொண்டர்களுக்கு நல்லது செய்வானா..? இதில் ஜாதி சொந்தங்கள், சிபாரிசு என பல வேலைகள் வேறு..அவன் சொந்த பந்தங்கள் அனைவரும் அவன் பதவியை உபயோகப் படுத்திக் கொள்வர்..

படித்தவன், ஆறாம் அறிவு வேலை செய்பவன் எவன் கொளுத்தும் வெயிலில் இறங்கி வேலை பார்ப்பான்..?கை கட்டிக் கொண்டு போய் விடுவான்.. அவனைப் போன்றவர்களால் கட்சி எப்படி வளரும்..? முதுகெலும்பு இருப்பவன் கட்சிக்கு எதற்கு....?

சரியாகப் படிக்காமல், கெட்ட வழிகளில் சென்று, சம்பாரிக்க வக்கில்லாமல், சக நண்பர்களால் கட்சியில் சேர்க்கப் பட்டு, மாநாடு நடக்கும் ஊர்களுக்கெல்லாம் கூட்டி செல்லப்பட்டு, பதவி கிடைத்து, காசு பார்த்து, இன்று நம் முன்னேயே பந்தாவாக ஏ சி கார்களில் பயணிக்கிறார்கள்.. என்ன ஒரு அருமையான தொழில்..

இப்படிப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் தான்.. தமிழை வளர்க்கிறோம், நாட்டு நலனுக்காகப் பாடுபடுகிறோம்.. இலவசங்கள் தருகிறோம், உங்கள் தொகுதிக்கு நல்லது செய்கிறோம், உங்களுக்காக அல்லும் பகலும் போராடுகிறோம் என்று தங்கள் தந்திரங்களை நம்மிடம் அவிழ்த்து விடுகிறார்கள்.. அவன் சம்பாரிக்கும் காசை அவனுக்குக் கீழ் இருப்பவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய நிலைமை. அடுத்த தேர்தல் செலவுகளுக்கும் சேர்த்து வைக்க வேண்டிய நிலைமை. அவனாக மனமுவந்து நல்லது செய்ய நினைத்தாலும், அவனாக அவனைச் சுற்றி கட்டிக் கொண்ட இந்த வளையம் அவனை விடாது.. கட்சியில் இருப்பவன் மக்கள் நலனை நினைப்பது உண்மையில் சாத்தியமா என்று இப்போது சொல்லுங்கள்..

இல்லுமி தன்னுடைய பதிவில் கேட்டிருந்தார்.. "என்ன இழவுயா நடக்குது தமிழ்நாட்டுல?"

இதுதானுங்க நடக்குது..

தமிழ்நாட்டோட எதிர்காலமே இந்தத் தொண்டர்களை நம்பித்தான்..

நன்றி..
பிரகாஷ்(எ)சாமக்கோடங்கி

31 பின்னூட்டம்:

Chitra said...

தமிழ்நாட்டோட எதிர்காலமே இந்தத் தொண்டர்களை நம்பித்தான்..


.......ஒளி மாயமான எதிர்காலம் தெரிகிறது.....

எல் கே said...

வாழ்த்துக்கள் பிரகாஷ்

ரொம்ப தெளிவா அருமையா சொல்லி இருக்கீங்க

மரா said...

நம்மால இப்புடி புலம்பத்தான் முடியும்.படிச்சவங்க ஓட்டு போடறதில்ல.படிக்காதவன் கிடைக்கிறத வாங்கிட்டு போடறான்.பாக்கியை கட்சிக்காரனே போட்டுடுறான்.என்னவோ போங்க :)

ILLUMINATI said...

//அரசியலுக்குள் நுழையாமலேயே எழுதுகிறேன் என்ற நினைப்பில் இருந்து விட்டேன்.//

நாம தள்ளியே இருக்கணும்னு நெனச்சாலும் இவனுங்க எங்க சாமு விட்ரானுங்க?

//இப்படி உருவாகும் கட்சியில் "மக்கள்" என்பவர்கள் எங்கே வருகிறார்கள்.. "கட்சி", "கூட்டம்","பிரியாணி","பதவி", "பணம்"... இவைகள் தான் வருகின்றன//

இதுல நீங்க சொன்ன கடைசி ரெண்டு தான் இவனுங்களுக்கு முக்கியமே...

//சரியாகப் படிக்காமல், கெட்ட வழிகளில் சென்று, சம்பாரிக்க வக்கில்லாமல், சக நண்பர்களால் கட்சியில் சேர்க்கப் பட்டு, மாநாடு நடக்கும் ஊர்களுக்கெல்லாம் கூட்டி செல்லப்பட்டு, பதவி கிடைத்து, காசு பார்த்து, இன்று நம் முன்னேயே பந்தாவாக ஏ சி கார்களில் பயணிக்கிறார்கள்.. என்ன ஒரு அருமையான தொழில்..//

அதான் நம்ம சட்ட அமைச்சர் பேச்சுலையே தெரியுதே.....அது ஒண்ணு போதாது...இவனுங்க யோக்கியதை தெரிய?

ILLUMINATI said...

ஆனா சாமு,இதுல ஆகக் கேவலமான விஷயம் என்ன தெரியுமா?
அந்த ஆளோட பேச்சு கிடையாது.இந்த விசயத்த யார்கிட்டயாவது சொல்றப்போ,அவங்க சொல்லுவாங்களே,
"அது அப்படித் தாங்க.ஒண்ணும் பண்ண முடியாது.சகிச்சுக்க வேண்டியது தான்."

அது தான்.
குனிஞ்சு குனிஞ்சு நம்ம ஆளுங்களுக்கு முதுகெலும்பே வளைஞ்சு போச்சு....

நாடோடி said...

ந‌ல்லா தெளிவா எழுதியிருக்கீங்க‌ பிர‌காஷ்..

Paleo God said...

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்காமல் பிரியாணி சாராயபோதையிலேயே சமூகத்தை சீரழித்து இனமானம் பேசி, இலவசங்கள் பிச்சைபோடும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை விடிவுகள் ஏது?

தமிழ் உதயம் said...

கால்ல செருப்பு இல்லாதவன், காலே இல்லாதவனை பார்த்து ஆறுதல் அடையணும்னு சொல்வாங்க. நாம நம் தேச அரசியல்வாதிகள விட மோசமா இருக்கிற தேசத்து அரசியல்வாதிகள பார்த்து ஆறுதல் அடைவோம்.

ஜெய்லானி said...

ஆறாவது அறிவை நம் மக்கள் உபயோக படுத்தும் வரை இந்த இம்சை தொடரும் வேற வழி இல்லை.

தெளிவா விளக்கிட்டீங்க புரியுமா ?. பார்போம் .

ஸ்ரீராம். said...

அரசியலில் இறங்கி ஆரம்பகட்டத்தில் இருப்பவன் யோக்கியனாகவே இருப்பான். போகப் போக அரசியல் சர்வைவலுக்கு அயோக்யத்தனம் முக்கியமாகி விடுகிறது...

இளங்கோ said...

நல்ல தலைவன் இல்லாமல் எங்கிருந்து நல்ல தொண்டர்கள் கிடைப்பார்கள் ?
தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி...
அவன் கோடியில் அடித்தால் இவன் ஆயிரத்தில் அடிக்கறான் அவ்வளவுதான் வித்தியாசம்....
பகிர்தலுக்கு நன்றி பிரகாஷ்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முடியோடு சேர்த்து அவர்கள் பேசியதையும் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டேன்..

..

இது சூப்பர் டயலாக்..கலக்குங்க பிரகாஷ்...

கலைஞர் & குடும்பம் பிரைவேட் லிமிடெட்
ஜெயா & சிஸ்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்
விஜயகாந்த் & குடும்பம் பிரைவேட் லிமிடெட்
சரத் & குடும்பம் பிரைவேட் லிமிடெட்
அய்யா & சன்ஸ் பிரைவேட் லிமிடெட்
காந்தி & சன்ஸ் பிரைவேட் லிமிடெட்
( வேற ஏதாவது விட்டு இருந்தால் சொல்லவும்..)

இவர்கள்..மற்றும் அவர்களின் கட்சித் தொண்டர்கள்
பாடுபடுவது நாட்டு நலனுக்காக..

ஆனா எந்த நாடுன்னுதான் தெரியல அப்பு.. ஒருவேளை இந்தாலியா இருக்குமோ?

அம்பிகா said...

\\தமிழ்நாட்டோட எதிர்காலமே இந்தத் தொண்டர்களை நம்பித்தான்..

நன்றி..\\
\\முடியோடு சேர்த்து அவர்கள் பேசியதையும் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டேன்..\\
Nice..

Unknown said...

//இப்படி உருவாகும் கட்சியில் "மக்கள்" என்பவர்கள் எங்கே வருகிறார்கள்.. "கட்சி", "கூட்டம்","பிரியாணி","பதவி", "பணம்"... இவைகள் தான் வருகின்றன..//

மக்களுக்கு ஓட்டுக்கு துட்டு ....

சாமக்கோடங்கி said...

//
.......ஒளி மாயமான எதிர்காலம் தெரிகிறது.....//

வாங்க சித்ரா.. எதை மக்கள் உருவாக்கினார்களோ, அதை மாற்றும் சக்தி மக்களிடமே உள்ளது... மக்கள் சக்திக்கு இணை இல்லை.. என்ன... நாம் அனைவரும் ஒன்று கூடி ஒன்றாகச் சிந்தித்து மாற்றம் கொண்டு வந்தால் தான்.. பகுத்தரிவுள்ளவர்களாகிய நாமாவது கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும்.. மாற்றத்தை விரைவில் எதிர்பார்ப்போம்...

சாமக்கோடங்கி said...

ரொம்ப நன்றி LK,

வாங்க மயில்ராவணன்.. படிக்கறவன் யோசிச்சு ஓட்டு போட்டா போதும்.. ஒதுங்கி இருத்தல் தவறு.. நன்றி..

இல்லுமி.. இத்தனைக்கும் இந்த சட்ட அமைச்சர் எல்லாம் நல்லா படிச்சவங்க.. எங்க போய் முட்டிக்க....?

நன்றி நாடோடி...

சாமக்கோடங்கி said...

ஷங்கர் அண்ணா... நல்ல தலைவர்கள் இருக்காங்களா..? தேர்ந்தெடுப்பதற்கு.. ? இல்லை கண்டு பிடிக்க வேண்டுமா...? இல்லை புதிதாக உருவாக்க வேண்டுமா...?

சாமக்கோடங்கி said...

தமிழ் உதயம் அவர்களே... நம்மை விட மோசமான அரசியல் இருக்கா என்ன..? அப்படி இருந்தாலும் நாம எப்படி ஆறுதல் அடையலாம்.. இதை மாத்த படித்தவங்க அனைவரும் ஒண்ணா சிந்திக்கணும்.. நன்றி உங்கள் கருத்துக்கு...

சாமக்கோடங்கி said...

ஜெய்லானி ... யாருக்கும் இங்கே புரியவைக்க அவசியம் இல்லை.. உணர வைக்க வேண்டும்... ஏனென்றால் இன்றைய அரசியல் நிலவரம் எல்லோருக்கும் தெரியும்.. தெரிந்தே போய் அவனுக்கே ஓட்டு குத்துவது தான் மிகப்பெரிய குற்றம்.. வருகைக்கு நன்றி..

வாங்க ஸ்ரீராம்.. ஆரம்பகட்ட யோக்கியன் மாறுவதற்கு சூழ்நிலை தான் காரணம்..ஆனால் உள்ளே வரும்போதே கயமைத் தனத்தோடு வருபவர்கள் தான் அதிகம்.. அந்த சலூன் கடையில் பேசியவர்களும் அவ்வகைச் சேர்ந்தவர்களே...வருகைக்கு நன்றி..

சாமக்கோடங்கி said...

வாங்க இளங்கோ..

தலைவன் வழியே தொண்டன் வழி.. சரி..

ஆனால் தொண்டன் வழியே தானே தலைவன் உருவாகிறான்.. மொத்தத்தில் அனைவரும் கூட்டுக் களவாணிகள்.. கூண்டோடு திருந்தினால் உண்டு.. மாற்றத்தைத் தலைவன் சொன்னால் சத்தியமாக உண்மையான தொண்டன் மறுக்க மாட்டான்.. அனால் முன் வர வேண்டும்.. நடக்கற கதையை பேசுவோமே..

சாமக்கோடங்கி said...

பட்டாபட்டி.. இந்த ப்ரைவேட் லிமிடெட் தொல்ல தாங்க முடியல... எல்லாரும் மண்ணுக்குள்ள போறவனுக தானே.. கொஞ்சம் நல்லது பண்ணினா என்ன கொறஞ்சா போய்டுவாங்க...?

சாமக்கோடங்கி said...

வாங்க அம்பிகா... உங்கள் கருத்துக்கு என் நன்றிகள்..

வருக செந்தில் அவர்களே..//மக்களுக்கு ஓட்டுக்கு துட்டு ....// சரி தான்.. மக்களைத் தான் முதலில் மாத்தணும்... அப்புறம் அரசியல் வாதிகள் அவர்களாகவே மாறி விடுவார்கள்.. மானங்கெட்ட மக்களை என்ன சொல்ல...

சாமக்கோடங்கி said...

உலக அன்னை அனைவருக்கும் உங்களின் சார்பாக அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.. வாழும் தெய்வங்களைப் போற்றுவோம்...நன்றி..

Menaga Sathia said...

நல்லா தெளிவா சொல்லிருக்கிங்க....

சாமக்கோடங்கி said...

நன்றி மேனகாசத்தியா அவர்களே..

சுசி said...

அய்யய்யோஓ.. அரசியலாஆ..

ஆவ்வ்..

Thenammai Lakshmanan said...

முதுகலும்பு எல்லாம் வீக் ஆகிருச்சு ப்ரகாஷ்

சாமக்கோடங்கி said...

வாங்க சுசி... எல்லாரும் இப்படித்தான் ஓடறாங்க.. அவ்வ்...

சாமக்கோடங்கி said...

வாங்க தேனக்கா.... வைத்தியமே கிடையாதா..?

Anonymous said...

அரசியல் வாதிகளே பற்றி சரியாய் சொன்னிங்க பிரகாஷ்

சாமக்கோடங்கி said...

வாங்க சந்தியா... உங்கள் பகிர்விற்கு நன்றிகள்..

Post a Comment