Wednesday, June 16, 2010
என் வழி...?
நான் என்னுடைய பள்ளிப் படிப்பை முடிக்கும்போது என் முன்னே இரண்டு பாதைகள் தெரிந்தன.. எல்லோரையும் போன்று "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது..." என்று பாட எனக்கும் ஆசை.. என் முன் தெரிந்த இரண்டு பாதைகளை நான் கூற விழைகிறேன்.. கொஞ்சம் எனக்காகப் பொறுமையாக படியுங்கள்..
பாதை 1: கண்டிப்பாக சொந்தமாக ஒரு நிலம் வேண்டும்.. தண்ணீர்..? எப்படியாவது கொண்டு வந்தே ஆக வேண்டும்.. உழைப்பு..? கிடைக்கும் வருவாய்க்கு மீறியதாகத்தான் இருக்கும்..
பாதை 2: நிலம் கிலம் எல்லாம் தேவை இல்லை. நீங்கள் வெறும் கையோடு வாருங்கள் வேலை தருகிறேன் என்றார்கள்.. பேச்சுத் திறமை, மூளையை நெளிவு சுளிவுடன் உபயோகிக்க வேண்டும்...
பாதை 1: வெயில், மழை என்றெல்லாம் பார்க்கக் கூடாது, வேலை செய்வதற்கிடையில் ஓய்வை எதிர்பார்க்கக் கூடாது. கொஞ்சம் இடைவேளை கிடைக்கும்போது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். களத்தில் தான் வேலை.
பாதை 2: வெளியில் மழை பெய்தாலும், கத்திரி வெயில் தாளித்து எடுத்தாலும் ஒன்றும் தெரியாத ஒரு செயற்கைக் குளிர்விக்கப்பட்ட அறையில் தான் பணி. அதுவும் பகலிலேயும் கூட விளக்கு வெளிச்சத்தில் தான் பணி செய்ய வேண்டுமாம்.
பாதை 1: யோசிப்பதற்கு அதிக நேரம் இல்லை. களத்தில் இறங்கியவுடன் வேலை.. உடல் உழைப்பு அதிகம் தேவை.
பாதை 2: ஒரு நாள் வேலைக்கு இரண்டு நாள் கூட ரூம் போட்டு யோசிக்கலாம்.
பாதை 1: பருவ கால மாற்றங்களால் விளையும் நஷ்டங்களுக்கு நானே பொறுப்பு, அரசு மானியம் என்ற ஒன்றைத் தரும். ஆனால் அதைக்கொண்டு ஒரு வாரம் காலம் தாட்டுவதே பெரிய விஷயம்.
பாதை 2: பருவ மாற்றங்கள்..? அப்படி என்றால் என்ன...?
பாதை 1: வாரம் ஏழு நாளும் வேலை தான்.. எட்டாவது நாள் கிட்டாதா...?
பாதை 2: வெறும் ஐந்து நாள் தான் இங்கு வேலை..
பாதை 1: இரவு நேரங்களில் கூட கண்காணிப்பு செய்ய வேண்டும். வெள்ளம் வந்தால் உடனே போய்ப் பார்க்க வேண்டும். சில சமயம் தூக்கமே வராது.
பாதை 2: ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு யார் சொன்னாலும் நான் வேலை செய்யத் தேவை இல்லை.
பாதை 1: சேமிப்பு என்று ஒன்றும் செய்ய முடியாது. நானும் என் குடும்பமும் கடைசி வரை அன்னாடங்காச்சியாகத் தான் இருக்க வேண்டும்.
பாதை 2: நான்கு அல்லது ஐந்து வருடங்கள் போதும்.. கார், வீடு என்று செட்டிலாகி விட முடியும்.
பாதை 1: என்னுடைய உழைப்பின் பலனை கண் முன்னே காணும்போது கண்கள் குளிரும், குளமாகும்.. அனால் வயிறு மட்டும் எரிந்து கொண்டே தான் இருக்கும்.
பாதை 2: உழைப்பின் பலனை கண்முன் காண முடியாது.. ஆனால் என்ன..? மாசா மாசம் சம்பளம் வரும்.
பாதை 1: சொந்தத் தாய் மாமன் கூட பெண் கொடுக்க முன் வர மாட்டான்..
பாதை 2: கொளுத்து வேலை பார்ப்பவன் முதல் கோடீசுவரன் வரையில் எனக்குப் பெண் கொடுக்க வருவார்கள்.. எங்கே போனாலும் மரியாதை தான். பார்டி அது இதென்று வாழ்க்கை நன்றாகப் போகும்..
பாதை 1: உழைத்துக் கொடுக்கும் எனக்கு கொஞ்சம் தான் மிச்சம். அனால் என்னிடம் பொருளை வாங்கி, பாலீஷ் போட்டு பெக்குகளில் அடைத்து விற்பனை செய்து(நடிகைகளை வைத்து கோடி கோடி செலவு செய்து விளம்பரம் வேறு..) உழைத்தவனை விட லாபம் பார்ப்பவர்கள் பண முதலைகள். கண்ணீர்க்கதை என்னவென்றால், அந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகைக்குக் கொடுக்கப்படும் ஒருநாள் சம்பளம், எனக்குக் கிடைக்கும் ஆறுமாதகால வருமானத்தை விட பத்து மடங்கு அதிகம்.
பாதை 2: எந்த முதலாளி எந்த விலைக்கு விற்றாலும் என்னுடைய உழைப்புக்கு(?!)மேல் எனக்குப் பலன் கொடுப்பார்கள்..(மற்ற தொழில்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது)
இப்போது சொல்லுங்கள்..! நான் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று..! பாதை 1ஐ தேர்ந்தெடுத்தால் இந்த உலகமே முட்டாள் என்று என்னைச் சொல்லும் என்று எனக்கும் தெரியும்..
அனால், இந்த முட்டாள் உலகத்துக்குப் படியளப்பவனே நான் தான்.. ஆம் நான் பாதை 1 ஐத் தேர்ந்தெடுத்தேன்..
நான்... விவசாயி...
மக்களே.. எனக்காவது இரண்டு பாதை காண்பிக்கப் பட்டது.. ஆனால், நம் நாட்டில் ஏறக்குறைய அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு பாதை மட்டுமே காண்பிக்கப் படுகிறது.. அதுவும், ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஊட்டப் படுகிறது.. பத்தாம் வகுப்பில் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் வகுப்பெடுத்த மாணவர்கள் பேட்டியளிப்பதைப் பாருங்கள்..
நாங்கள் தெரியாமல் தான் ஏமாளியாக இருப்பதாய் நீங்கள் நினைக்கிறீர்களா...? இல்லை இவர்கள் ஏமாளியாக இருக்கும் வரை தான் நமக்கு நல்லது என்று நீங்கள் சொல்கிறீரா...? உங்கள் எதிர்காலம் எங்கள் கையில் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.. நீங்கள் முன்னேறுங்கள், கோடி கோடியாய்ச் சம்பாரியுங்கள்.. நாங்கள் உங்களைத் தடுக்கவில்லை.. உங்கள் வயிற்றுக்குப் படியளக்கும் நான் என்றும் உங்களைக் கண்டு பொறாமைப் பட மாட்டேன்.. ஆனால், எங்கள் வயிற்றுக்குக் கிடைப்பதைத் தயவு செய்து தட்டிப் பறிக்காதீர்கள், அடிவயிற்றில் அடிக்காதீர்...
நன்றி..
விவசாயி..
Subscribe to:
Post Comments (Atom)
37 பின்னூட்டம்:
முதல் பின்னூட்டம் எனதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இதை ஒரு விவசாயியின் குரலாகப் பதிவு செய்து இருக்கிறேன்.
பாதை 2 என்னவென்று நான் சொல்லவில்லையே...? அதைப் பற்றிக் குறை கூறக் கூடாது.. ஏனென்றால் அதைத்தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன்.. தவறு இருந்தால் மன்னிக்கவும்..
இவ்வளவு உண்மையாக, இவ்வளவு அழகாக ஒரு உண்மையை சொல்ல முடியுமா. சொல்லிவிட்டீர்கள். நெஞ்சை தொட்ட பதிவு.
வாங்க தமிழமுதம்.. நான் எழுதி ஐந்து நிமிடத்திற்குள் வந்து விட்டீர்கள், பின்னூட்டமும் இட்டு விட்டீர்கள், உங்கள் அன்பிற்கு என் நன்றிகள்.. வருங்காலத்தை மாற்றும் சக்தி நம்மிடம் உள்ளது.. நான் கொஞ்சம் செட்டிலாகிய பிறகு, நிச்சயம் அதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று என் உள்மனது எப்போதும் சொல்கிறது..
கண்ணீர்க்கதை என்னவென்றால், அந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகைக்குக் கொடுக்கப்படும் ஒருநாள் சம்பளம், எனக்குக் கிடைக்கும் ஆறுமாதகால வருமானத்தை விட பத்து மடங்கு அதிகம். //
உண்மைகள் இடுகையில் உயிரோட்டமாய் உள்ளது. வாழ்த்துக்கள்
ஆஹா ஒரு விவசாயியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் எழுத்துக்கள் . பகிர்வுக்கு நன்றி
பாஸ் கலக்கிட்டீங்க....!!!
அருமையான பதிவு.
மக்களே.. எனக்காவது இரண்டு பாதை காண்பிக்கப் பட்டது.. ஆனால், நம் நாட்டில் ஏறக்குறைய அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு பாதை மட்டுமே காண்பிக்கப் படுகிறது.. அதுவும், ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஊட்டப் படுகிறது..
...... உண்மைதான்...... பாதைகள் இரண்டும் வெவ்வேறு ஊர்களுக்கு வழியை சொல்கின்றன..... ஒன்றில் மனித நேயம், வறுமையிலும் வாழ்கிறது..... ஒன்றில் மனித நேயம், வளமையில் தேய்கிறது....
உங்கள் வயிற்றுக்குப் படியளக்கும் நான் என்றும் உங்களைக் கண்டு பொறாமைப் பட மாட்டேன்.. ஆனால், எங்கள் வயிற்றுக்குக் கிடைப்பதைத் தயவு செய்து தட்டிப் பறிக்காதீர்கள், அடிவயிற்றில் அடிக்காதீர்... ]
அருமையா சொன்னீங்க.. மனதில் பதிவோம்.,.
அருமையான பதிவு
நச்
வணக்கம் பிரகாஷ்.. உங்கள் எழுத்து... கருத்து அருமை...
நடைமுறையில் என்ன செய்ய முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்....
//நான்கு அல்லது ஐந்து வருடங்கள் போதும்.. கார், வீடு என்று செட்டிலாகி விட முடியும்.///
இதன் பிறகாவது விவசாயத்தை முதல் வழியை தேர்ந்தெடுக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து..
அருமையான எழுத்து! உணர்வுகளை கவிநயத்துடன் எழுதியிருக்கிறீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!!
நண்பரே, என்னுடைய குலத்தொழில் கூட விவசாயம் தான். தற்பொழுது 1.5 ஏக்கரில் மஞ்சள், 1 ஏக்கரில் குச்சி கிழங்கு, 1.5 ஏக்கரில் பருத்தி பயிர் செய்து உள்ளோம். ஆனால் மழையே இல்லை. இரண்டு முறை ஆழ்துளை கிணறு (Borewell) அமைத்தும் தண்ணீர் இல்லை. என்ன பண்ணுவது என்று தெரியாமல் விளித்து கொண்டு இருக்கிறோம்.
உண்மைதான் பிரகாஷ்..
இப்பொழுது இவ்வளவு விலைக்கு விற்றும் அதன் லாபம் அதை பயிரிட்டவனுக்கு போவதில்லை. வெங்காயம், தக்காளி, நெல் என எல்லாமே இடை தரகர்கள் கையில். விளைவிப்பவன் எப்படி தனது வாரிசுகளுக்கு விவசாயத்தை சொல்லி கொடுப்பான்.
விவசாயத்தை அறியாத ஒரு தலை முறையை வளர்த்தி வருகிறோம். எங்கள் ஊரில் மழை பெய்யும்பொழுது நிலகடலை போடுவார்கள். நேற்று முன்தினம் அந்த பக்கம் போயிருந்த பொழுது, காடுகளில் கலர் கலராக கொடிகள் கட்டி வெள்ளை கற்கள் நட்டி பிளாட் பிரித்திருந்தார்கள். என்ன செய்ய முடியும் நம்மால்?.
எங்கள் ஊர் பக்கம், திருப்பூர் பனியன் கம்பனிக்கு எட்டு மணிக்கு போயிட்டு, எட்டு மணிக்கு வந்துடலாம். குறைந்த பட்சம் நூறு ரூபாய்க்கு உத்திரவாதம். விதை விதைத்து, களை எடுத்து, அறுவடை செய்யும் அளவுக்கு யாருக்கும் இப்போது பொறுமையில்லை. வேலை செய்ய ஆட்களும் கிடைப்பதில்லை.
நமக்கு அடுத்து வரும் தலைமுறைக்கு எதை பரிசளிக்க போகிறோம் என தெரியவில்லை....
நன்றி
அருமையான பதிவு பிரகாஷ் ..வாழ்த்துக்கள்.
"நீங்கள் முன்னேறுங்கள், கோடி கோடியாய்ச் சம்பாரியுங்கள்.. நாங்கள் உங்களைத் தடுக்கவில்லை.. உங்கள் வயிற்றுக்குப் படியளக்கும் நான் என்றும் உங்களைக் கண்டு பொறாமைப் பட மாட்டேன்.. ஆனால், எங்கள் வயிற்றுக்குக் கிடைப்பதைத் தயவு செய்து தட்டிப் பறிக்காதீர்கள், அடிவயிற்றில் அடிக்காதீர்..."
சாப்ட்வேர் கம்பெனி கட்டறதுக்கு இப்போதெல்லாம் விளை நிலம் தான் எடுக்க பெடறது என்று கேள்வி பெட்டேன் அதுக்கு தான் இந்த விவசாயி அப்பிடி சொல்லரானோ?
இதே நிலை தொடர்ந்தால் நாளைக்கு சாப்பாடு பொருள்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ள பெடுவோம் ...
//மதுரை சரவணன் said...
{உண்மைகள் இடுகையில் உயிரோட்டமாய் உள்ளது. வாழ்த்துக்கள்}
//
நன்றி மதுரை சரவணன் அவர்களே... நம் தலை முறையினருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் இந்த செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையும் கூட..
//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஆஹா ஒரு விவசாயியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் எழுத்துக்கள் . பகிர்வுக்கு நன்றி
//
நாம் படும் வரை அவர்களின் துயர்களை அறியப் போவதில்லை.. நன்றி சங்கர் அவர்களே..
//ஜெய்லானி said...
பாஸ் கலக்கிட்டீங்க....!!!
//
நன்றி ஜெய்லானி.. தவறாமல் வருகை தந்து என் எழுத்துக்களை ஊக்குவிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல...
//சுசி said...
அருமையான பதிவு.
//
நன்றி சுசி ...
//Chitra said...
...... உண்மைதான்...... பாதைகள் இரண்டும் வெவ்வேறு ஊர்களுக்கு வழியை சொல்கின்றன..... ஒன்றில் மனித நேயம், வறுமையிலும் வாழ்கிறது..... ஒன்றில் மனித நேயம், வளமையில் தேய்கிறது....
//
நாம் படிப்பது வாழ்க்கைக்காக மட்டுமே, சம்பாரிப்பது என்பது அதில் ஒரு அங்கமே, என்று என்றைக்காவது நாம் நம்முடைய சந்ததியினருக்கு சொல்லியிருப்போமா..? நன்கு படிக்கும் மாணவர்கள் கூட, தொழிளுக்காகப் படிக்கவே முனைவது மனவருத்தம் அளிக்கிறது..
நன்றி சித்ரா அவர்களே..
{புன்னகை தேசம். said...
அருமையா சொன்னீங்க.. மனதில் பதிவோம்.,.
}
முடிந்தவரை மற்றவர்களுக்கும் சொல்லுவோம்.. இப்போது நிறைய புதிய தொழில் நுட்பங்கள் வந்து விட்டன.. கூடிய விரைவில், நாமும் தைரியமாக விவசாயத்தில் இறங்கலாம்.. அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை..
{LK said...
அருமையான பதிவு
}
நன்றி LK.. தொடர்ந்து எழுத்துக்கு ஊக்கம் தாருங்கள்...
{யாசவி said...
நச்
}
நச்சென்று அனைவருக்கும் உரைக்கும் காலம் வரும்... நன்றி யாசவி..
{சுந்தர்.. said...
வணக்கம் பிரகாஷ்.. உங்கள் எழுத்து... கருத்து அருமை...
நடைமுறையில் என்ன செய்ய முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்....
}
வணக்கம் சுந்தர் அவர்களே...
இப்படி யோசிப்பது தான், செயலில் இறங்குவதற்கான முதல் படி.. இப்படி எல்லோரையும் முதலில் யோசிக்க வைக்க வேண்டும்.. செய்வோம்...
நன்றிகள் பல...
//நாடோடி said...
இதன் பிறகாவது விவசாயத்தை முதல் வழியை தேர்ந்தெடுக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து..
//
அந்த எண்ணம் நம்முள் பலரிலும் உள்ளது.. எனக்கும் உள்ளது.. முதலில் சிறிய அளவில் ஆரம்பிக்கலாம்.. தொடர்ந்து அதை நேசித்து செய்ய வேண்டும் என்பதே முதல் விதி..
மிக்க நன்றி நாடோடி அவர்களே..
{மனோ சாமிநாதன் said...
அருமையான எழுத்து! உணர்வுகளை கவிநயத்துடன் எழுதியிருக்கிறீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!!
}
உங்களின் தொடர் வருகையும், ஆதரவுமே இது போன்று எழுத எனக்கு உற்சாகம் அளிக்கிறது.. நன்றி மனோ சாமிநாதன் அவர்களே..
{Kumar said...
நண்பரே, என்னுடைய குலத்தொழில் கூட விவசாயம் தான். தற்பொழுது 1.5 ஏக்கரில் மஞ்சள், 1 ஏக்கரில் குச்சி கிழங்கு, 1.5 ஏக்கரில் பருத்தி பயிர் செய்து உள்ளோம். ஆனால் மழையே இல்லை. இரண்டு முறை ஆழ்துளை கிணறு (Borewell) அமைத்தும் தண்ணீர் இல்லை. என்ன பண்ணுவது என்று தெரியாமல் விளித்து கொண்டு இருக்கிறோம்.
}
வாங்க குமார் அவர்களே.. கேட்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது... என்ன செய்ய வேண்டும் என்று பொறுமையாக யோசித்து முடிவெடுங்கள்.. விட்டு விடாதீர்கள்.. நன்றி..
//இளங்கோ said... //
வாங்க இளங்கோ.. நீங்க சொன்ன கருத்தை தனியாக ஒரு பதிவாகவே போடலாம்.. உங்களைப் போன்றோருக்கு என்னை விட விவசாயம் நன்றாகவே தெரியும்.. நீங்கள் எல்லாம் நினைத்தால் ஒரு பசுமைப் புரட்சியையே கொண்டு வரலாம்.. விரைவில் கூடி யோசிப்போம்..
மிக்க நன்றி....
//sandhya said...
அருமையான பதிவு பிரகாஷ் ..வாழ்த்துக்கள்.
சாப்ட்வேர் கம்பெனி கட்டறதுக்கு இப்போதெல்லாம் விளை நிலம் தான் எடுக்க பெடறது என்று கேள்வி பெட்டேன் அதுக்கு தான் இந்த விவசாயி அப்பிடி சொல்லரானோ?
இதே நிலை தொடர்ந்தால் நாளைக்கு சாப்பாடு பொருள்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ள பெடுவோம் ...
//
நன்றி சந்தியா அவர்களே.. விலை நிலங்கள் அனைத்தும் பிளாட் போடப்படுவது கண்ணில் ரத்தம் வரவைக்கும் விஷயம்..
வெளிநாடுகளில் விவசாயிகளுக்கு மரியாதை அளிக்கப் படுகிறது.. என்றும் முதல் மரியாதை விவசாயிகளுக்கே கிடைக்க வேண்டும்..
தொடர்ந்து வாருங்கள்..
நல்லா அலசியிருக்கீங்க..
விளை நிலத்தை பாழ்படுத்திக்கொண்டுள்ள நமது சமூகம்,
விரைவில..விவசாயியின் கையை எதிர்பார்க்கும் காலம் வரும்...
அருமை நண்பரே
நன்றி பட்டா பட்டி..
நாம் பட்டுத் தான் திருந்துவோம்...
பிரமாதம் - விவசாயியை புறக்கணித்து என்ன சாதனை நிகழ்த்தப்போகிறார்களோ? :(
--
http://solvanam.com/?p=8997 இதப் படிச்சீங்களா பிரகாஷ். (உங்க மெயில் ஐடி என்னிடம் இல்லை - palaapattarai@gmail.com ஒரு டெஸ்ட் மெயில் அனுப்பவும் இது போன்ற சில பகிர்தலுக்காக).
வாங்க ஷங்கர் அண்ணே...என் மெயில் ஐடியை உங்களுக்கு அனுப்பி விட்டேன்...
நன்றி..
விருதுக்கு நன்றி ஜெய்லானி..
என்னுடைய பக்கத்தில் ஜெய்லானியின் இன்னொரு விருதை வைப்பதில் பெருமைப் படுகிறேன்..
Post a Comment