எங்க வீட்டைச் சுற்றிலும் எங்கம்மா வளர்க்கும் நாய்கள்.. நல்லது தான்.. வீட்டின் முன் பக்கம், பின் பக்கம் என எல்லாப் பக்கங்களிலும் நாய்கள் தான்.வீட்டுக்கு அருகில் ராத்திரியில ஒரு பய நெருங்க முடியாது. அட இவ்வளவு ஏன்.. ஒரு பதினொரு மணிக்கு மேல வீட்டுப் பக்கம் போகனுமுன்னா நானே தூரத்தில் நின்னுகிட்டே சத்தம் போட்டுகிட்டே தான் வரணும்.. அப்பத்தான் அடையாளம் கண்டு பிடிப்பார்கள் எங்கள் வீட்டு காவல்காரர்கள்.ஆனா அவங்களுக்கு உணவு கொடுப்பது ஒண்ணும் பெரிய செலவில்லை. விலைகுறைவான அரிசியில், சட்டி நிறைய ஆக்கி வைத்து விடுவார் என் அம்மா.. அப்புறம் ஞாயிற்றுக் கிழமையோ அல்லது எப்போது மாமிசம் சமைத்தாலும் அவர்களுக்குக் கொஞ்சம் எலும்புத்துண்டு.. அதுவே அவர்களுக்கு ஏதோ பெரிய விஷயம் கிடைத்த மாதிரி..

அழுக்கு பட வாய்ப்பே இல்லை, வியர்வைச் சுரப்பிகளுக்கு வேலை இல்லை, சனிக்கிழமைகளில் வேலையே இல்லை.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மக்கள் தொகை மிகவும் குறைவு(உலகப் போர்களில் கொல்லப்பட்டவர்களையும் சேர்த்து). வெகு சில மக்கள்,ஆனால் நிறைந்த வளங்கள்.. அதனால் நிறுவனங்களுக்கு ஆட்கள் நிறைய தேவை. அதனால், மனித வளத்திற்கு மதிப்பு கூடுகிறது(demand).அதுவும் அவர்களை மிக முக்கிய பணிகளில் அமர்த்த வேண்டிய நிலைமை. அவர்களுக்கும் சிறிய சிறிய எடுபிடி வேலைகள் செய்ய விருப்பம் இல்லை. நல்ல வேலைகளில் அமர்ந்து கொண்டு அளவான வேலை செய்து, நிறைய சம்பாதித்து, நிறைய செலவு செய்து, நிறைய நாட்கள் விடுப்பு எடுப்பதுடன், வருடத்திற்கு, மூன்று அல்லது நான்கு நீண்ட விடுப்புகள் எடுத்து, வேலை-வாழ்க்கை சமநிலையை சரியாக அனுபவிக்கும் அதிர்ஷ்டசாலிகள் இவர்கள்..(வெளிநாட்டு கஸ்டமர்களிடம் வேலை செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்). மக்கள் செறிவு குறைவாக உள்ள நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும், அந்த நாட்டின் முன்னேற்றத்திற்குரிய வேலைகளில் இருந்தால் தான் அந்த நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல முடியும்.
என்னடா இவன்,. ஒவ்வொரு பத்தியிலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளரீட்டு இருக்கான்னு நீங்க கேக்குறது புரியுது. ஆனா சம்பந்தம் இருக்கு. ஒரு நாட்டின் மிக முக்கிய பணிகளில் அனைத்திலும், அந்த நாட்டுக் குடிமக்கள் இருக்கிறார்கள். ஆனால் நிறுவனம் என்று ஒன்று இருந்தால், மிக முக்கிய பணிகளும் இருக்கும்,அப்புறம் அதை விட நிறைய எடுபிடி வேலைகளும் இருக்கும்.

அதாவது டாக்குமண்டேஷன்,அப்புறம், 24 x 7 வாடிக்கையாளர் சேவை,அப்புறம்,விற்பனைக்குப்பின் வரும் பிரச்சினைகளைச் சேகரித்தல், தொகுத்தல்,அப்புறம், முதல்தரப் பணியாளர்களுக்கு உதவுதல் இதுமாதிரி கண்ணுக்குத் தெரியாத நிறைய பணிகள் இருக்கு. இதையெல்லாம் யார் செய்யுறதாம்...? அதற்குத் தான் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் வந்திருக்கின்றன.. முதலில் நமது நாட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தன.. இப்போது அந்நாட்டு நிறுவனங்களே நேரிடையாக இங்கே இறங்கி விட்டனர்.கோர் பிசினஸ் என்று சொல்லப்படும், முதல்தர பணிகள் (அராய்ச்சி,திட்டமிடுதல்,வடிவமைத்தல்(design),மற்றும் வளர்ச்சிப்பணிகள்)யாவும் அவரவர்கள் நாட்டில் தான் இயங்கும்(மக்கா வெவரமாத்தேன் இருக்காக பயபுள்ளைக..). அனால் இந்த மிச்ச மீதி விஷயங்க இத்யாதி இத்யாதி எல்லாத்தையும் இங்க கொண்டுவந்து இறக்கீடுறாங்க.. அட ISRO வே அதிகமா புதுமையா எதுவும் கண்டுபிடிப்பதில்லையாம்.. வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைத் தான் இன்னும் தூசு தட்டிக்கிட்டு இருக்காங்களாம்..
படிக்கும்போதோ, அல்லது படிச்சு முடிச்ச உடனேயோ வலையைப் போட்டுடறானுக.. நேர்காணல்ல கேக்குற கேள்வியைப் பாத்தா எண்ணமோ அணு விஞ்ஞானத்துக்கு ஆள் எடுக்குற ரேஞ்சுக்கு இருக்கும்(ஆறேழு ரவுண்டுகள் வேற). குழு உரையாடலில்(குரூப் டிஸ்கஷன்) போட்டி போடும் அனைவரையும் பார்க்கும்போது அடேங்கப்பா.. இந்தியாவைக் காப்பாத்தப் போகும் தூண்கள் இவிங்கதான் போல ன்னு இருக்கும்.எதுக்குப்பா...? இந்த எடுபிடி வேலைகள் செய்யத்தான்..

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் எத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் முதன்மைப் பணியை இந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று..? அப்போ இளிச்சவாயன் யார்..? இந்தியாவா..?அரசியல் வாதிகள் இதில் கெட்டிக் காரர்கள், ஒரு கம்பெனி இந்தியாவில் வந்திறங்குவதற்கு முன்னமே, இன்னார் இன்னாருக்கு இவ்வளவு சேர வேண்டுமென்று லஞ்சப் பட்டியல் அவர்களுக்குச் சென்று சேர்ந்து விடும். எங்கே தள்ளினால் எங்கே காரியம் நடக்கும் என்று பன்னாட்டு நிருவனர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
நம்ம ஆளுகளும், சம்பளம் கெடைச்சா போதுமுன்னு படையெடுக்க ஆரம்பிச்சிடறோம். ஆமாம்ப்பா. அதுக்குதான் இந்தப் போராட்டமே.. விவசாயிகளும்,பொண்ணு விளைவிச்சுத் தந்த மண்ண வித்து,பயபுள்ளைகளைப் படிக்க வெச்சு,இந்த வேலைகளுக்கு அனுப்பி வெக்கிறாங்க.விவசாயம் அழிச்சிட்டு வருது.இது போனா எல்லாம் போச்சு.நமது இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான,இந்தியாவின் முதுகெலும்பைத் தாங்கிப் பிடிக்கும் பல தொழில்கள் தினந்தோறும் அழிந்து கொண்டிருக்கின்றன.
அப்படித்தான் சம்பளம் வாங்குறானே சும்மா இருக்குறானா...? புலியைப் பாத்து பூனை சூடு போட்டுகிட்ட கதையா வெளிநாட்டுக் காரன் மாதிரியே தானும் தாம் தூமுன்னு செலவு செய்யுறான். அடுத்தவனுக்கும் ஆசையைக் கிளப்பி விடுறான். அவனால முடியும் அப்படீங்கறதுக்காக ரெண்டு லட்ச ரூவா நிலத்தை இருபது லட்சத்துக்கு வாங்கி நடுத்தர மக்கள் அடிவயித்துல அடிக்கிறான். பின்ன.. ஒரு எடம் அதிக வேல போச்சுன்னா போதுமே.அந்த ஏரியாவே அவுட். ஆக இந்தியா எங்க தான் போய்க்கிட்டு இருக்கு..?
சிறு சிறு நாடுகள் எல்லாம் அடுத்த இருபது முப்பது வருடங்களுக்கான வளர்ச்சிப் பணிகளுக்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும்போது, நண்பர்களே, பன்னாட்டு நிறுவனங்களில் புரியும் யாரும், நான் பந்தாவாக சந்தோஷமாக வாழ்கிறேன் என்று பீற்றிக் கொள்ளாதீர்கள்.. நாமும் அன்றாடங்காட்சிகளே.. இந்தியா முன்னேறுகிறது என்று சொல்வது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. திட்டமிடுதலில் இந்தியா பின்தங்கியே உள்ளது. சுயமாக சிந்தித்து நாட்டை முன்னேற்றும் எண்ணம் இங்கு மக்களுக்கும் இல்லை, அரசியல்வாதிகளுக்கும் இல்லை. அவரவர்கள் கிடைத்தற்கேற்ப பதுக்கிக் கொள்கிறார்கள். நல்ல மூளை கல்லூரி வரை மட்டுமே உபயோகப்படுத்தப் படுகிறது.. அதற்கு மேல்..?
ஜெர்மனைச் சேர்ந்த சமூக சேவையாளர் கேட்டார், "இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நிறைய பொறியியல் கல்லூரிகள் உருவாகியிருக்கிறதே.." என்று. நான் பெருமையாகச் சொன்னேன்.. "ஆம் இந்தியா நிறைய பொறியாளர்களை உருவாக்குகிறது" என்று.. அவர் கேட்டார், "அனால் இந்தியாவில் புது வடிவமைப்புக்கான காப்புரிமை (new design patent)பெறுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதேன்..?" என்று.. அவருக்கு விடை தெரிந்ததால், உடனே சன்னமாக சிரித்தார்.. நம்ம ஆளுகளுக்கு இன்னும் தெரியல.. மூளையை சரியான வழியில் உபயோகித்தால் தானே நம் நாடு வளரும்..? மனித வளத்தை வெளிநாட்டுக்கு அடகுவைக்காமல், மக்களுக்கேற்றவாறு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டிய தலையாய கடமை அரசுக்கு உள்ளது.
ஆக இப்போதைக்கு இந்தியாவைப் பாத்து வெளிநாட்டுக் காரர்கள் யாரும் கவலைப் படத்தேவை இல்லை.. அவர்கள் அவர்களது நாட்டைச் செம்மைப் படுத்தும் வேலையைத் தொடரலாம்.. அவர்களது மிச்ச மீதி வேலையைச் செய்யத்தான் இங்கு நிறைய பேர் இருக்கிறோம்.. அதாவது அவர்கள் போடும் .....(தலைப்பு )..... இந்தியாவில்..

இப்போது முதல் பத்தியை மீண்டும் படியுங்கள்..
நன்றி....