Saturday, March 26, 2011

பறவைக்கும் ஒரு கூடு..

துபாய் விமானத்தைப் பிடிக்க சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கையில் அருகில் ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி இருந்தார். ஒருமணி நேரம் ஒன்றும் பேசாமல் அங்கும் இங்கும் பார்த்தவாறு இருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு நுனி நாக்கு ஆங்கிலத்தில் என்னிடத்தில் பேச்சுக் கொடுத்தார்.. நல்ல சரளமான நடை.. நாங்கள் எங்கிருந்து வருகிறோம், எங்கே போகப் போகிறோம் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.. தான் இங்கிலாந்திலிருந்து ஒரு வாரம் சென்னை வந்ததாகவும் இப்போது திரும்பி செல்வதாகவும் சொன்னார். இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தாலும் முகத்தில் தமிழ்க்கலை தெரிந்தது..

பார்வையாளர்கள் பகுதியில் நின்றிருந்த ஒரு பெண்மணி, சோதனை வரிசையில் நின்று கொண்டிருந்த தன் மகனை அழைக்க விரும்பினார்.. அவரால் முடியாமல் போகவும் என் அருகில் இருந்த பெண்மணி "என்னம்மா, அவர் உங்க பையனா..?? கூப்பிடணுமா..? இருங்க.. (என்னிடம் திரும்பி) தம்பி இந்த பெட்டிய ஒரு நிமிஷம் பாத்துக்கங்க.. என்று சொல்லி எழுந்து போய், அந்தப் பையனைக் கூப்பிட்டு விட்டு வந்து மீண்டும் அருகில் அமர்ந்தார்..

"இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்க.."

"ஆமா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் தான் படிச்சேன்"

"அப்ப இந்த ஊரா...??"

"இல்லை.. இலங்கை.. ஆனா இங்கலாந்தில் தஞ்சம் புகுந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது..அங்க நிறைய பேர் தமிழ் பேசுறவங்க இருக்காங்க.."

"ஜெர்மனியில் கூட நிறைய இலங்கை மக்கள் இருக்காங்க.. அமெரிக்காவில் கூட அனேகம் பேர் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்.. ஒரு வருஷம் வேறொரு நாடு போய் சமாளிக்கறதே பெரும்பாடாக இருக்கு.. எப்படி ஒரு நாட்டுல போய் வியாபாரம் பண்ணி, அங்கேயே நிரந்தரமாகி விடறது கஷ்டம் தானே.. ஆனால் இலங்கை மக்கள் எங்கு சென்றாலும் சூழ்நிலைக்கேற்றவாறு மாறி விடுகிறீர்கள்.."

"ஆமாம்..எங்களால் எங்கும் வாழ முடிகிறது.. இலங்கையைத் தவிர..."


சட்டென்று ஒரு நிமிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன்..

உள்ளிருந்து வந்த வார்த்தைகள்..புரையோடிப் போன ஆறா ரணங்களின் வார்த்தை வடிவம்..

இந்த வார்த்தையைச் சொல்லும்போது ஒரு புன்சிரிப்பு.. ஆனால் கண்ணில் கலக்கம் தெரிந்தது.. ஆயிரம் ஆயிரம் சோகக் கதையை ஒரு நொடியில் பரிமாறியது..

"வெளிநாடு போய் கஷ்டப் பட்டாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க திரும்பி உங்க ஊர் போகலாம்.. சொந்தம்னு சொல்லிக்க அங்க கொஞ்சம் பேர் இருப்பார்கள் தானே..?? அந்த நிம்மதி உங்களுக்கு எப்போதும் இருக்கும் தானே..??"

மேலும் மேலும் அவர் கேட்கின்ற கேள்விக்கு என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை..

"எங்க போய் உழைச்சாலும் தாய் நாட்டை மறந்திடாதீங்க.. துன்பம் வரும்போதும், ஆபத்துக் காலத்திலும் கை கொடுங்க..."

சொல்லி விட்டு அவரது விமான அறிவிப்பு வந்தவுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.. அவர் மட்டுமே நகர்ந்து சென்றார்.. அவரது வார்த்தைகள் மண்டையைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன..
பல கேள்விகள் உள்ளிருந்து..

தமிழ் தெரிந்திருந்தும், முதலில் என்னிடத்தில் தமிழில் பேசாதது ஏன்..?? கடைசியாக அவர் சொன்ன தாய்நாடு நம்முடையதா..?? இல்லை அவருடைய தாய் நாட்டைச் சொன்னாரா..?? துன்ப காலத்தில் நாம் கை கொடுக்கவில்லை என்ற கசப்பு தான் அவரைத் தமிழ் பேச விடாமல் தடுத்ததா...?? தமிழ் பேசும் மக்கள் வாழும்பகுதியும் நமது தாய்நாடு என்ற ஒருங்கிணைந்த நோக்கோடு அவர் அதைச் சொன்னாரா..?? நாம் தான் பிரித்துப் பார்க்கிறோமா...??? வேரோடு ஒரு இனம் அழிக்கப் படும்போதும் கூட வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த அந்தக் கையாலாகத தனத்தை தான் அவர் சொன்னாரா..??

இப்ப எங்க இருந்தாலும், எப்பவாவது திரும்பி இந்தியா வந்து விடலாம் என்ற நம்பிக்கை, அங்கே நம் சொந்தங்கள் நம்மை வரவேற்க காத்திருப்பார்கள் என்ற மன நிம்மதி, வீடு நிலம், கார் இன்னும் பிற உள்ளன என்ற ஒரு பாதுகாப்பு உணர்வு நமக்கு இருக்கவே செய்கிறது..

அதனால் தான் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் பட்ட ஒரு இனத்தின் வலி..?? அதை நம்மால் உணர முடியாமலே போய் விட்டதோ...?

தற்போது தேர்தல் அறிக்கையில், தமிழ் ஈழ மக்கள் சுதந்திரத்துக்காக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று இடம் பெற்றிருப்பதைப் பார்த்ததும் மறுபடியும், தமிழனின் இன மான உணர்ச்சியை வெறும் தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல் இழிநிலையை எண்ணி மனம் கொதிக்கிறது....

நாளை தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்கு இதே கதி நேர்ந்தாலும் நேர்ந்தாலும், மற்ற பகுதித் தமிழர்கள் இப்படி தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்போமோ...? ஏனென்றால், மறத்தமிழனின் சூடு, சொரணை என்ற எதுவுமே தற்போதைய தமிழனிடம் இல்லை..

தற்போதைய நமது வாழ்க்கை முறை என்ன..?? தனக்காக சுயநலமாக உழைத்தல், குடும்பத்துக்காக சொத்து சேர்த்தல், டிவி சீரியல்களில் லயித்தல், கேளிக்கைகளில் காலம் தள்ளுதல், இடையிடையே, பண்டைய தமிழ் மூதாதையர்களின் பெருமைகளை மார்தட்டிப் பேசித் திரிதல், அரசியல் ஒரு சாக்கடை என்று தூர நின்று முகம் காட்டாமல் திட்டுதல், கடைசியில் ஏதோ வாழ்ந்தோம் மறைந்தோம் என்று போய்ச் சேருதல்(இதைச் செய்வதே பலரின் வாழ்நாள் சாதனையாக இருக்கிறது)..

ஒருவேளை இயற்கைப் பேரழிவு ஏதாவது ஒன்று நிகழ்ந்தாலாவது நமது இனம் ஒன்று கூடுமோ..??

நன்றி..
சாமக்கோடங்கி

Saturday, March 19, 2011

கொதி நிலை - பாகம் 4

கடந்த பாகங்களில் மற்ற நாடுகள் பற்றியும், நம் நாட்டின் அவல நிலை பற்றியும் பார்த்தோம். நமது நாடு எப்படி கொஞ்சம் கொஞ்சமாக செல்லரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மேலும் பார்ப்போம்.

எந்த ஒரு அரசாங்கமும் தங்கள் நாட்டின் மீதும், குடிமக்களின் மீதும் முழுக்கட்டுப் பாட்டைக் கொண்டிருக்காதவரையில் அந்த நாட்டின் வளர்ச்சி கேள்விக்குரியதே..

பத்து பதினைந்து வருடத்திற்கு முன்னமே நமது நாட்டின் ஜனத்தொகை இவ்வளவு கோடியை எட்டும் என்று அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்குத் தெரிந்திருக்காதா..?? இவ்வளவு மக்கள் பெருகினால், அவர்களுக்கு மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவை அதிகரிக்கும், அதை முன்வைத்து தொலை நோக்குத் திட்டங்களைத் தீட்டா விட்டால், பற்றாக் குறை ஏற்படும் என்று தெரியாதா..? தீட்டினார்கள்.. நாட்டுக்கு அல்ல, அவரவர்களுக்கு.. இன்று பல அம்பானிகளும், டாட்டாக்களும், மாறன்களும், மிட்டல்களும் மிகப் பெரும் 'தனி நபர்' கோடீஸ்வரர்களாகவும், அதன் மூலம் கிடைக்கும் லஞ்சப் பணத்தில் தாங்கள் குளிர் காயவும் திட்டம் தீட்டினார்கள்.. புள்ளி விவரங்களைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டனர்.. எதிர்காலம் கேள்விக் குறி.. இதுல என்னடான்னா, இந்தியாவில் தான் எதிர்காலம் இருக்கிறது என்று தம்பட்டம் வேறு.. வெளங்கிடும்...

இதோ இன்றைய நிலைமை.. எங்கு பார்த்தாலும் பரவலாக குறைந்து மூன்று மணி நேரம் "அறிவிக்கப் பட்ட" மின்வெட்டு, கிராமப் புறங்களில் இந்த மின்வெட்டு ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கிறது. அதனால் இப்ப என்ன குடியா முழுகிப் போய்விட்டது..?? ஆம் என்று நாம் சொன்னாலும் குளிர்விக்கப் பட்ட பளிங்கு பங்களாக்களில் வசிக்கும் நமது தலைவர்களுக்கு அது தெரியப் போவது இல்லை.

யாராவது ஒரு தலைவர், 2020ல் நமது நாட்டுக்கு இவ்வளவு தேவை, நாம் இவ்வளவு பின் தங்கி இருக்கிறோம், இதனை நோக்கி நாம் உழைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களா..??(கலாம் அவர்களை தவிர்த்து..)

இங்கே ஜெர்மனியில் பாருங்கள்..

ஃபுகுஷிமாவில் ஏற்பட்டிருக்கும் அணு உலை விபத்தை அடுத்து தங்களின் அணு உலைகளை உடனடியாக, அவசரமாகப் பரிசீலனை செய்துள்ளது. மறுமலர்ச்சி செய்யப் பட இருந்த கொஞ்சம் பழைய அணு உலையை மூட ஆணைகள் உடனடியாகப் பிறப்பிக்கப் பட்டு விட்டன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்களின் அணு உலைகளை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எனப்படும் பரிசோதனைக்கு உட்படுத்த தயாராகி விட்டன. அணு உலைகளைத் தவிர்த்து எதிர்காலத்தில் கிரீன் எனேர்ஜி எனப்படும் சுற்றுப் புறச் சூழலை மாசு படுத்தாத ஆற்றல் உற்பத்தியை பெருக்க முனைப்போடு செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது..


நமது நாட்டில்..?? புதிதாக மட்டுமே பல இடங்களில் கிட்டத்தட்ட 30000 MW மின் உற்பத்தி அணு மின் உலைகள் கட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன.. அணு உலைகள் என்றாலே ஆபத்து என்று சொல்லவில்லை.. ஆனால் தற்போது கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் அணு உலைகளால், நமது நாட்டின் பாதி மின்தேவையைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாது என்கிற பட்சத்தில், இவ்வளவு கோடிகளைக் கொட்டி அணு உலைகளே தான் வேண்டும் என்று அரசு ஒற்றைக் காலில் நிற்பதில் இருந்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் போய்ச் சேரும் வருமானம் மற்றும் அதில் இந்தியாவில் இருக்கும் அரசியல் தரகர்களுக்குக் கிடைக்கும் "லம்ப் அமௌன்ட்" இதையெல்லாம் நாமே சராசரியாக ஊகித்து விடலாம். ஆம் நண்பர்களே.. வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் வியாபாரம் செய்யும் ஒருத்தர் கூட அரசியல் பெருச்சாளிகளைத் திருப்திப் படுத்தாமல், 'ஒரு பிடி மண்ணைக் கூட தாய் நாட்டில் இருந்து கொண்டு போக முடியாது'.

எனது நெருங்கிய நண்பர் கூறுகிறார், அவரது கிராமத்தில் தினமும் அதிக மின்வெட்டு இருந்த வேளையில் கூட மின் திருட்டு வெளிப்படையாகவே நடந்ததாம். நமது ஏ வா வேலு (திமுக)வுக்குச் சொந்தமான ஒரு ஆலையில் தான் இந்த மின்திருட்டு நடந்ததாம். எனது நண்பர் இதனைத் தெரிந்து கொண்டு, சில ஊர் இளைஞர்களுடன் காவல் நிலையத்தில் தகுந்த சாட்சியத்தோடு புகார் அளித்ததோடு அல்லாமல், கூடவே சென்று ஆலைக்கு சீல் வைத்து விட்டுத் திரும்பி இருக்கின்றனர்.அப்புறம் என்ன நடந்தது..? தெரிந்த கதை தானே..?? இரண்டே நாளில் பூட்டப் பட்ட கதவுகள் திறக்கப் பட்டு, மறுபடியும் அதே வேலை பழைய வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அவசர அவசரமாக நாட்டின்(?!?!) நிலை கருதி, இந்த பூட்டு திறக்கும் ஆணையைப் பிறப்பித்தவர், மாண்புமிகு மின்வெட்டு வீராசாமி என்று சொல்கிறார் நண்பர். நாடே சுடுகாடாய் மாறினாலும் இவர்களுக்குக் கவலை இல்லை.. எவனாவது "இந்தியா ஒளிர்கிறது"ன்னு சொன்னா, மக்கா வாயிலேயே அடிக்கத் தோணுது.. எங்க ஒளிர உடுராணுக... இருக்கறதே ஒரே குண்டு பல்பு.. அதோட டங்ஸ்டனில் எட்டுகாலி கூடு கட்டுகிறது... அவ்வளவு நம்பிக்கை நமது மின்வாரியத்தின் மீது..!!!!

கடந்த இருபது வருடங்களில் மின்சார உற்பத்தி எவ்வளவு பெருக்கப் பட்டிருக்கிறது என்று பார்த்தால் புரியும்.. நமது பாராளுமன்றத்தில் வழுக்குமண்டைகள் உக்காந்து என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று..

இந்தியாவின் தற்பொழுதைய மின்தேவைக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் தேவை அணு உலைகள் அல்ல. தெரியுமா உங்களுக்கு..? நாட்டில் தயாரிக்கப் படும் மின்சாரத்தில் 35%ற்கும் மேலான மின்சாரம் தொலைக் கம்பிகளின் மூலம் இழக்கப் படுகிறது. அதாவது மின்சார உற்பத்தி செய்யப் படும் இடம் ஒரு எல்லையில், பயனாளி மற்றொரு எல்லையில். இதனைக் கடத்தப் பயன்படும் கம்பிகளின் கசிவுகளினால் ஏற்படும் மின்னிழப்பு, மற்றும் ஸ்டெப்-அப், மற்றும் ஸ்டெப் டவுன் எனப்படும் மின்னழுத்த மாற்ற முறைகளின் போது ஏற்படும் மின்னிழப்பு இவை எல்லாம் சேர்த்தால், அது நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் பாதியைக் குடித்து விடுகிறது. யாருக்கும் பயன்படாமல் காற்றில் கலக்கப் பட்டு விடுகிறது நண்பர்களே..

இதற்குத் தீர்வு Decentralisation எனப்படும் மையப் படுத்தப் படாத மின் தயாரிப்பு முறைகள். அதாவது ஒரு பகுதிக்குத் தேவையான மின்சாரத்தை அந்தப் பகுதியிலேயே தயாரிப்பது. இது சாத்தியமே.. நான் சோலார் துறையில் இருப்பதால் இதை என்னால் புள்ளி விவரங்களுடன் சொல்ல இயலும். என்ன கெரகமோ அந்தத் துறையிலும் நமது அரசியல் ஊதாரிகள் கைவைக்க ஆரம்பித்தாயிற்று.

சரி நண்பர்களே நமது நாட்டில் இந்தத் துறைகளின் தற்போதைய நிலை என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

நமது நாட்டின் பிரச்சினைகளை முதலில் விளக்கிப் பிறகு ஒவ்வொன்றாக எப்படிச் சரி செய்யலாம் என்று எழுதலாம் என்று நினைத்தால், பிரச்சினைகளே இன்னும் நிறைய பதிவுகள் போகும் போல..

பின்குறிப்பு: இந்தியாவில் 2020ற்குள் 20000MW மின்னுற்பத்தி செய்ய திட்டங்கள் தீட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்று நாங்கள் சொல்கையில், ஜெர்மன் நண்பர்கள் சொன்ன பதில், இங்கே உள்ள பல நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அந்த நிறுவனம் மட்டுமே கடந்த ஒரே வருடத்தில் 7 GW மின் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்களைக் கட்டிக் கொடுத்து உள்ளனர். ஒரே வருடம் நண்பர்களே.. மறுபடியும் சொல்கிறேன் ஜெர்மனி தமிழ்நாட்டைப் போல இரண்டரை மடங்கு தான். எல்லாம் ஆட்சித் திறன் தான் காரணம்.. ஆட்சித் திறனா..?? அப்டீன்னா..??

சாமக்கோடங்கி

Thursday, March 10, 2011

கொதி நிலை - பாகம் 3

தினகரனில் வெளிவந்த செய்தி:
-----------------------------

இது எனக்கு தமிழமுதம் குழுமத்தில் வந்தது.. கொதிக்கும் கலனில் இதையும் போடலாம்.. இதற்கு என்னுடைய பதிலும் பின்பகுதியில் உள்ளது..


வெளிநாட்டு மோகம் போயே போச்சு...நாடு திரும்பும் இந்தியர்கள்
------------------------------------------------------------
http://www.dinakaran.com/specialdetail.aspx?id=30760&id1=22

அதென்ன இந்திய அமெரிக்கர், அமெரிக்க இந்தியர்? இரண்டு வகை இந்தியர்கள் உள்ளனர் அங்கே. ஒன்று, அமெரிக்காவில் பல தலைமுறையாகவே வாழ்ந்து வருவோரின் வாரிசுகள்; அவர்கள் முகத்தில், தோற்றத்தில் வேண்டுமானால் இந்திய களை கட்டும்; ஆனால், அவர்கள் முழுக்க முழுக்க அமெரிக்கர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பே செட்டில் ஆனவர்கள். சில ஆண்டுக்கு முன்பு குடியேறியவர்கள் இந்திய அமெரிக்கர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த இரண்டாமவரே இப்போது 25 லட்சம் பேர் வரை உள்ளனர்.

இதுபோல பிரிட்டனிலும் பல தலைமுறைகளுக்கு முன் சென்று செட்டில் ஆனவர்கள் பிரிட்டிஷ் இண்டியன்; சமீப ஆண்டுகளில் போய் செட்டில் ஆனவர்கள் இண்டியன் பிரிட்டிஷ். இவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும் என்று தகவல் சொல்கிறது.

இந்தியாவுக்கு போயிடலாம்!

சமீபகாலமாக வெளிநாட்டு மக்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். வரலாற்று, கலாசார, பாரம்பரிய இடங்கள், கோவா போன்ற பீச்
பகுதிகள், மகாபலிபுரம் போன்ற மகத்தான இடங்களைப் பார்க்கிறவர்கள், நமது வாழ்க்கை முறையையும் பார்த்து வியந்து போகின்றனர். காலை எழுந்ததும் காபி, டீ குடிப்பது முதல் இரவு படுப்பது வரை இந்தியர்களின் பழக்க வழக்கங்கள், விழாக்கள், சடங்குகள், சமுதாய அமைப்புகள் எல்லாம் வெளிநாட்டவரை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்று விடுகிறது. இந்தியா என்றாலே முகத்தை சுளித்தவர்கள், இப்போது மலைத்துப்போய் நிற்கின்றனர். செயற்கையான மேற்கத்திய வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை அவர்கள் உணர்கின்றனர். இப்போது பல தலைமுறைகளுக்கு முன் போய் செட்டில் ஆன அமெரிக்க இந்தியர், பிரிட்டிஷ் இந்தியர்களுக்கும் அதே நினைப்பு வந்து விட்டது. கடந்த இரண்டாண்டுகளில் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் வீடு வாங்கிக் குடியேறியவர்களில் இவர்களின் எண்ணிக்கையும் அடங்கும் என்றால் வியப்பில்லை.

வேலைக்கு இங்கே வர்றாங்க!

மாநகராட்சி பள்ளியில் படித்து, அரசு கல்லூரியில் பட்டம் முடித்து, வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்று பலரும் அலையும் நிலையில், அமெரிக்க இந்தியர்கள் பலரும் இப்போது தங்கள் பிள்ளைகளுக்கு இந்தியாவில் வேலை கிடைத்தால் போதும்; இங்கே அளவு அதிக சம்பளம் அங்கும் கிடைக்கிறதே என்று நினைக்கின்றனர். இந்தியாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களில் இவர்கள் கணிசமாக உள்ளனர். மும்பை, டெல்லி, பெங்களூரு தெருக்களில் இவர்களை பார்க்கலாம். இந்தியோ, தமிழோ சரிவர வராவிட்டாலும், பல தலைமுறைக்கு முன் இவர்கள் மூதாதையர் இந்த மொழி பேசியவர்கள்தான். தடுக்கியாவது பேசி பழகி வருகின்றனர்.

அமெரிக்காவில், அமெரிக்கனாக பிறந்த அமெரிக்க இந்தியர் நிலை மட்டுமல்ல... பத்து, இருபது ஆண்டுக்கு முன் போய் செட்டில் ஆன இந்திய குடும்பத்தினருக்கும்கூட இதே நினைப்புதான்! சம்பாதித்தது போதும் என்று அவர்களில் பலரும் சென்னை, பெங்களூரு என்று நகரங்களிலும், மதுரையை தாண்டிய கிராமங்களிலும் வீடு, நிலங்களை வாங்க ஆரம்பித்து விட்டனர். இவர்கள் திரும்பி வர காரணம் வேறு; இனியும் தங்கள் பிள்ளைகள் அமெரிக்காவில், பிரிட்டனில் வளர்ந்தால், அவர்களின் பழக்கவழக்கம்தான் வரும்; அப்புறம் சந்ததியே மாறி விடும் என்ற பயம்தான் காரணம்.

ஐயோடா, இங்கேயுமா பர்கர்

கிழக்கு கடற்கரை சாலையில் போய்ப் பார்த்தால் சில அமெரிக்க, பிரிட்டிஷ் முகங்களை பார்க்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் இந்தியர்கள். இங்கே வீடு வாங்கி குடியேறி இருப்பர். இவர்கள் தேடித் தேடி கீரை, காய்கறி என்று வாங்கி சாப்பிடுகின்றனர். பீட்ஸா, பர்கர் பக்கமே போக மாட்டார்கள். ‘‘அங்கேதான் பர்கர், பீட்ஸா என்று பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் சமாசாரங்களை சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது. இங்கே பார்த்தால் இவற்றை நம்மாட்கள் கொண்டாடுகின்றனர்; ஒரு தமாஷ் தெரியுமா? அமெரிக்கர்கள் கூட, காலையில் கேரட் போன்ற காய்கறிகளைத்தான் பச்சையாக சாப்பிடுகின்றனர்’’ என்கிறார் அவர்களில் ஒருவர்.

ஃபாரின் கனவு தேவைதான்; ஆனால் நாம் பலவற்றை இழப்போம் என்பது மட்டும் உறுதி என்று இவர்கள் சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டியிருக்கிறது.
-----------------------

சாமக்கோடங்கியின் பதில்:


//இந்தியா என்றாலே முகத்தை சுளித்தவர்கள், இப்போது மலைத்துப்போய் நிற்கின்றனர். செயற்கையான மேற்கத்திய வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை அவர்கள் உணர்கின்றனர்.//

சத்தியமாக செம காமெடியாக இருக்கிறது..

மலைத்துப் போகும் அளவுக்கு இங்கே ஒன்றும் இல்லை..எழுதியவர் நல்லா பூ சுத்தி இருக்கிறார்.. இந்தியா முன்னேற வேண்டும் என்றால் இந்த சுய தம்பட்டம் அடிப்பதை முதலில் நிறுத்தி விட்டு இந்தியா உண்மையாக ஒரு உன்னத நிலையை எட்ட சிறு உழைப்பையாவது செலுத்த வேண்டும்..

மலைத்துப் போக ஒன்று இருக்கிறது.. சமீபத்தில் நடந்த பலகோடிகோடி ஊழல்.. உலகமே திரும்பிப் பார்க்கும் ஊழல்.

மேற்கத்திய வாழ்க்கை செயற்கையான வாழ்க்கை என்று யார் சொன்னது..? ஒரு கலாச்சாரத்தில் பிறந்து வளரும் யாரும் செயற்கையாக வளர வாய்ப்பில்லை.. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தாவுபவன் தான், அங்கே இருக்கும் விஷயங்களைப் படிக்க முடியாமல் செயற்கைத் தனமாக வாழ நேரிடும். வெளிநாட்டுக் காரன் ஸ்பூனில் சாப்பிடுவதைப் பார்த்து இது செயற்கை வாழ்க்கை என்று நீங்கள் சொன்னால், அவன் கையில் உணவருந்த கஷ்டப் படுவதைப் பார்த்து நான் என்ன சொல்வது..? கையில் உணவருந்தும் நம்மைப் பார்த்து இது செயற்கை வாழ்க்கை என்று அவன் சொன்னால் ஒத்துக் கொள்வீரா..?? அவரவரது சுற்றுப் புற சூழ்நிலையைப் பொறுத்தே அவனது வாழ்க்கை முறை அமையும். இதில் செயற்கை எங்கே வந்தது..

மேற்கத்திய பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் எதிர்கால சந்ததிக்குப் பாதுகாப்பானதாக இல்லையா..?? சுத்த பேத்தல்..

இந்தியாவில் தான் இப்போது பாதுகாப்பு குறைந்து வருகிறது.. நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும், கவலைப் படாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கொள்ளைக் கூட்டங்கள், கோடிகளுக்காக எதனையும் விற்கும் அரசியலாளர்கள், அதிகார வர்க்கங்கள், மாபியா கும்பல்கள் இவர்களை நம்பி நாம் எப்படி பாதுகாப்பாக இருப்பது..?? எவனோ தூக்கிப் போடும் எலும்புத் துண்டுகளுக்காக நமது ராணுவ ரகசியங்கள்(?!?!?!) வெளியில் விற்கப் பட்டிருக்காது என்று என்ன நிச்சயம்..?? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. நாம் உபயோகிக்கும் ராணுவ உபகரணங்கள் பாதுகாப்பானவை தானா அல்லது அதனை வாங்குவதிலும் ஊழல் நடந்து தரக்குறைவான பழைய ஆயுதங்களைத் தான் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.. எப்படி பாதுகாப்பு உள்ளது என்று தெரியவில்லை..

ஜெர்மனி வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பனியிலேயே அலைகிறேன்..கூட இருக்கும் நண்பர் ஆறு வருடங்களாய் இருக்கிறார்.. சளி காய்ச்சல் என்று ஒன்றும் அவருக்கு வரவில்லை.. எங்கும் சுத்தமான காற்று, சாலை விதிகளை மதிக்கும் மக்கள், சுத்தம் சுகாதாரத்தை தினம் பேணும் அரசு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் தனது கைக்குள் வைத்துக் கண்காணிக்கும் அதிகாரிகள், எதிர்காலத்திற்கான தொழில்நுட்பங்களை வளர்க்கும் கல்விக் கூடங்கள்.. இவ்வளவு ஏன் ...நீங்கள் கடையில் வாங்கும் ஒவ்வொரு சிறு பொருளிலும் கூட அரசின் தரக்கட்டுப்பாடு சரிபார்க்கப் பட்டு உறுதி செய்யப் பட்டுள்ளது.. நமது நாட்டில் அரசின் ரேசன் கடைகளில் தான் தரக்குறைவே.. பிறகு அரசு எந்த லட்சணத்தில் இருக்கும் என்று சொல்ல வேண்டுமா..??

வீடு காட்டும்போதே, அதனுடைய வரைபடமானது அந்தப் பகுதி அரசு அலுவலகத்திற்குக் கொடுக்கப் படுவது மட்டுமல்லாமல், தீயனைப்ப்பு மற்றும் காவல் துறைக்கும் அது பதிவு செய்யப் படுகிறது, மற்றும் உங்கள் வீடானது எப்போதும் அவர்களின் தொடர்பிலேயே இருக்கிறது. அவசர விபத்து அது இது என்று ஏதாவது நேர்ந்து விட்டால், உடனுக்குடன் வந்து காப்பாற்றுகிறார்கள்.. இது நகரம் கிராமம், மூலை முடுக்கில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும்..

நமது நாட்டில் கும்பகோணத்தில் பிஞ்சுக் குழந்தைகள் படித்த ஒரு பள்ளிக் கூடம் எறிந்ததே நியாபகம் இருக்கிறதா..?? அந்த அலை அடித்து உடனே ஓய்ந்து விட்டது.. இன்னும் முழுப் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது என்று நினைக்கிறீர்களா..??

வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு ஒரு காரணம் இருக்கலாம்.. இது பணக்காரர்களுக்கான சொர்க்க பூமியாக மாறுகிறது..

எத்தனை லட்சங்களானாலும், அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல், சமாளிக்கலாம். மாட்டிக் கொண்டால், எவனையும் பணத்தைக் கொண்டே அடித்து வீழ்த்தலாம். இன்றே முதலீடு செய்து நாளை லாபம் சம்பாரிக்கும் எந்தத் தொழிலையும், தாராளமாகச் செய்யலாம். அமேரிக்கா மாறி நாட்டுலையே இருந்தா வரி கட்டியே சாகணும்.. சொத்து முழுக்க அழிஞ்சிடும்.,. காப்பாத்தனுமே..

நீங்கள் சொல்லும் அந்த வெளிநாட்டில் இருந்து திரும்பும் மக்களில் மிகக் குறைவான பேர்களே கிராமங்களை நோக்கிச் செல்கின்றனர்..(உறவுக்காரர்கள யாராவது இருக்கலாம் ).. மீதி எல்லாம், ஈசிஆர், கோவா, ஊட்டி போன்ற இடங்களில் ஈஸ்டேட்டுகளுடன் செட்டில் ஆகி விடுகின்றனர்..

மறுபடியும் சொல்கிறேன்.. இந்தியா பணக்காரர்களுக்கான நாடாக என்றோ மாறி விட்டது. ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாக்கி, எங்கே அவர்கள் வளர்ந்து படிப்பறிவு முழுமையாகப் பெற்று விட்டால், ஒட்டு வங்கிக்குப் பாதகம் வந்து விடுமோ என்ற உன்னத நோக்கோடு, 'நிம்மதியான' பாதுகாப்பான வாழ்க்கையை ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எட்டாக் கனியாகவே வைத்திருக்கும் அரசியில்வாதிகள் இருக்கும்வரை இந்தியா முகம் சுளித்துப் பார்க்கக் கூடிய நாடாகவே இருக்கும்.நேற்று ஆயிரம் ரூபாய் சம்பாரிப்பவன் இன்று பத்தாயிரம் ரூபாய் சம்பாரிக்கிரார்ன். ஆனால் அன்று ஐநூறு ரூபாய்க்கு மாத பட்ஜெட் போட்டு விடலாம், இன்று ஏழாயிரம் தேவைப் படுகிறது.. ஆக அவன் முன்னேற வில்லை, இன்னும் அந்த கோட்டைத் தாண்டாமலேயே நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கிறான் என்பது விளங்குகிறது.

போலியான மெடிக்கல் பில்லை கூட காட்டி வரிசெமிப்பு செய்து ஏமாற்ற மாட்டேன் என்று உண்மையான வரியைச் செலுத்தி நான் இந்தியன் சொல்லிக் கொண்டு திரியும் என்னைப் போன்றவர்கள் தினம் தினம் நாமம் போடப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று இந்த நாட்டுக்கே தெரியும்.

புகழ் பேசுவதை தயவு செய்து நிறுத்துங்கள். பழம்பெருமை பேசாதீர்கள். அது முதுகெலும்பு இருந்த நம் முன்னோர்களால் உருவாக்கப் பட்டது.

இந்தியாவில் பாதுகாப்பும், வாழ்வாதாரமும் ஏழை எளியவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கு, சத்தியமாக இல்லை. பசி பட்டினியோடும், தீராக் கடன்களோடும், சுற்றும் நமது நாட்டின் பெரும்பான்மைப் பகுதி அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

இந்தியாவின் செயற்கையான பகுதியைப் பார்த்து இயற்கை என்று ஏமாந்து இருக்கிறார்கள்...

--
நன்றி:சாந்தி,செல்வன் மற்றும் தமிழமுதம் குழுமம்.
--
நன்றி
சாமக்கோடங்கி.

Saturday, March 5, 2011

கொதி நிலை - பாகம் 2

வணக்கம் நண்பர்களே..

மாற்றப் பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன, அவற்றில் எவை எவை எல்லாம் நாம் நினைத்தால் முடியும் என்பதை பிற்பகுதிகளில் பார்க்கலாம். இப்போதைக்கு எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுகிறேன். ஏனெனில், கொதிநிலையை நாம் இன்னும் எட்டவில்லை.

நண்பர்களிடம் நடந்த உரையாடல்கள் / சேகரித்த செய்திகள்:

"ஆப்பிரிக்கா தான் ஊழலில் திளைக்கும் நாடு, கை நிறைய காசு கொடுத்தால், நாட்டையே காட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள், கூறு போட்டு விற்று விடுவார்கள். இந்தியர்கள் சாதாரணமாக ஒரு வாரம் செய்யும் வேலையை அவர்கள் மாதக் கணக்கில் இழுத்தடிப்பார்கள்"

"நாமே(இந்தியர்களே ), ஆப்பிரிக்காவைப் பற்றி இவ்வளவு மோசமாக என்னும்போது, ஜப்பான், சீனா, பிரான்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவைப் பற்றி எவ்வளவு கேவலப் பார்வை கொண்டிருக்கும்.."

----

"சீனா வில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கம் அமைக்கப் பட்டதே, அதற்கு டன் கணக்கில் ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டது இந்தியாவில் இருந்து தான்..."

"நல்லது தானே, ஏற்றுமதி மூலம் நல்ல அன்னியச் செலாவணி கிடைக்குமே.. இந்தியக் கருவூலத்தில் கொஞ்சம் பணம் நிறையுமே.."

"மண்ணாங்கட்டி, நாட்டின் தேவையை கணக்கில் கொள்ளாமல், ஏற்றுமதிக்கான அளவை மீறி சீனாவுக்கு ஸ்டீல் ஏற்றுமதி செய்தது தான் உள்நாட்டில் ஸ்டீல் விலை ஏறக் காரணம். ஆனால் சீன அரசோ, இந்திய அரசியல்வாதிகளைக் கையில் போட்டுக் கொண்டு கள கச்சிதமாக இந்தக் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறது. சுரண்டப் பட்டது இந்தியாவின் வளம். நிறைந்ததோ, அரசியல்வாதிகளின் கருவூலம். சோனியாவும், மன்மோகன்சிங்கும், நாட்டை கூறு போட்டு விற்றாயிற்று"

"ஆனால் சீனா ஏன் இப்படி செய்யணும்..? அவர்களிடத்தில் தான் கனிம வளங்கள் இருக்கின்றனவே.."?

"அங்கே தான் நிற்கிறது சீன அரசின் ராசதந்திரமும், நாட்டுப் பற்றும். தங்களிடத்தில் இருக்கும் வளங்கள் ரிசர்வ் எனப்படும் வருங்காலத்தின் சேமிப்புக்கானவை.அதுவுமில்லாமல், மற்றொரு நாட்டில் இருந்து கிடைக்கும் வளங்கள் நாட்டுக்கான இன்னொரு சேமிப்பு, சுரண்டப் பட்ட நாட்டுக்கு இது ஒரு பின்னடைவு. அந்த வளங்களைப் பெற நாம் இப்போது எங்கே போவது..?அமெரிக்காவிலிருந்து ஆயிரம் கம்ப்யூட்டர்களை இந்தியாவுக்கு லக்கேஜ் பேக்கில் கொண்டு வர அனுமதி வழங்கியதைப் போல இனித்திருக்கும் சீனாவிற்கு. நம்ம அரசியல்வாதிகளுக்கு தான் நாடு எப்படிப் போனாலும் கவலை இல்லையே.. சீனா இந்தியாவவை ஆக்கிரமிக்க போர் தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, இது தான் ராசதந்திரத்தின் அடுத்தடுத்த படிகள்.. தெளிவாக இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம்"

-----

"மன்மோகன்சிங் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்..?"

"குடும்ப அரசியலுக்கு கூடி உழைக்கிறார்.. அரும்பாடு படுகிறார்.. நேரு காலத்தில் இருந்தே நடந்திருக்கிறது தவறு. நமது பள்ளிப் புத்தகங்களில் மூடி மறைக்கப் பட்டு, நெஞ்சில் ரோஜாப்பூவோடு சித்தரித்து விட்டார்கள். வல்லபாய்படேல் வளர்ந்திருந்தால், நாடு ஓரளவுக்கு உருப்பட்டிருக்கும். தொழில்மயமாக்கலை(Industrialisation) கையில் எடுத்திருந்தால், அமேரிக்கா போல நாமும் விமானத்தில் பறந்து கொண்டே நெல் விதைத்து இருந்திருக்கலாம். அதை விடுத்து விவசாயத்தை மேம்படுத்துகிறேன் என்று வந்த வாய்ப்பைக் கோட்டை விட்டார் நேரு. இன்னும் ஏழை விவசாயிகள் எங்கோ ஒருபுறம் பட்டினியில் செத்துக் கொண்டு தான் இருக்கிறான்..படேலின் வளர்ச்சியைத் தடுத்ததும் இவரே என்றும் ஒரு செய்தி உண்டு. நாட்டின் பெரும்பாலான பகுதிகளை(சீன எல்லை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) இழக்கக் காரணமும் இவரது வலிமையில்லாத அரசே.
படேல் இருந்திருந்தால் சூட் அட் சைட் போட்டு, விஷயத்தை என்றைக்கோ முடித்திருப்பார், இப்போது நாட்டின் எழுபது சத நிதியை ராணுவத்துக்குச் செலவிட்டிருக்க வேண்டிய அவசியமும் வந்திருக்காது.

அடுத்து இந்திரா காந்தி.. எமெர்ஜென்சியைப் புகழ்ந்து பேசும் நபர்கள் இன்னும் உண்டு. அனால் அதன் பின்புலம் பலருக்கும் தெரியவில்லை. போய் இந்திய வரலாற்றைத் தெளிவாகப் புரட்டிப் பார்க்கச் சொல்லுங்கள். ஊழலில் அடுத்த ட்ரெண்ட் இவர் காலத்தில் தான் உருவாகி இருக்கிறது என்று நன்றாகப் புரியும். ஆட்சிக் கட்டிலில் நீடிக்க அவர் செய்த அட்டூழியங்களும் அம்பலமாகும். வரலாறு என்றால் நமது பள்ளி வரலாற்று புத்தகங்களை அல்ல நண்பா..

அடுத்து சோனியா காந்தி.. மாபியாக் கும்பல்களை வளர விட்டு, அதிகப் படியான அரசுப் பணம் தனியார் கைகளுக்கும், அரசியல்வாதிகள் கஜானாக்களுக்கும் சேர பெரும்பாடு படுபவர். நாட்டின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப் படாமல், ஊழலை வளரவிட்டு வேடிக்கை பார்ப்பவர். பொதுமக்கள் வாழ்வாதாரங்களைக் கெடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற விட்டு, அம்பானி போன்ற பணக்காரர்களைக் கொழுக்கச் செய்து, விலை நிர்ணயத்தையும் அவர்கள் கைக்கே தூக்கிக் கொடுத்து இருப்பவர்."

"பெட்ரோல் விலையையா சொல்றீங்க..?"

"ஆமாம்ப்பா, அரசு நினைத்தால் வரிகளைக் குறைத்து முப்பது ரூபாய்க்குக் குறைவாக பெட்ரோல் விற்பனை செய்ய முடியும். ஆனால் அதனால் பல தனியாருக்கு நஷ்டம். அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் பங்கும் போய் விடும். அவர்களுக்கென்ன, அரசு பணத்தில், அரசு காரில், அரசு பெட்ரோலில் சுற்றுபவர்கள். நம் பாடு தான் திண்டாட்டம்.."

இன்னும் எத்தனையோ அக்கிரமங்கள் நடக்கின்றன. நம் மக்களிடமும் தவறுகள் மண்டிக் கிடக்கின்றன.

சரி நண்பர்களே,.. பதிவு நீளமாகி விட்டதால் பாகம் மூன்றில் அந்நிய முதலீடுகள் பற்றியும், மற்றும் முறைகேடுகள், தமிழ்நாட்டின் அவலங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

ஆனால் ஒன்று எழுதும்போதே எனக்கு இருதயத்துடிப்பு உச்சத்திற்குப் போவதையும், கண்கள் சிவப்பாவதையும் உணர முடிகிறது. பாகம் மூன்றில், கொதிநிலையின் அடுத்த பகுதிக்குச் சென்று நன்றாகக் கொதிக்கலாம்.

உங்கள் பங்குக்கு நீங்களும் கொதிக்க விடுங்கள் பின்னூட்டங்களில். வரலாறு என்றுமே சரியாகப் பதியப் படுவது இல்லை. ஒருவேளை மேற்கூறிய விஷயங்களில் தவறு இருந்தாலும் திருத்துங்கள். எல்லாம் செவி வழிக் கேட்டவையே.."

நன்றி
சாமக்கோடங்கி