பார்வையாளர்கள் பகுதியில் நின்றிருந்த ஒரு பெண்மணி, சோதனை வரிசையில் நின்று கொண்டிருந்த தன் மகனை அழைக்க விரும்பினார்.. அவரால் முடியாமல் போகவும் என் அருகில் இருந்த பெண்மணி "என்னம்மா, அவர் உங்க பையனா..?? கூப்பிடணுமா..? இருங்க.. (என்னிடம் திரும்பி) தம்பி இந்த பெட்டிய ஒரு நிமிஷம் பாத்துக்கங்க.. என்று சொல்லி எழுந்து போய், அந்தப் பையனைக் கூப்பிட்டு விட்டு வந்து மீண்டும் அருகில் அமர்ந்தார்..
"இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்க.."
"ஆமா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் தான் படிச்சேன்"
"அப்ப இந்த ஊரா...??"
"இல்லை.. இலங்கை.. ஆனா இங்கலாந்தில் தஞ்சம் புகுந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது..அங்க நிறைய பேர் தமிழ் பேசுறவங்க இருக்காங்க.."
"ஜெர்மனியில் கூட நிறைய இலங்கை மக்கள் இருக்காங்க.. அமெரிக்காவில் கூட அனேகம் பேர் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்.. ஒரு வருஷம் வேறொரு நாடு போய் சமாளிக்கறதே பெரும்பாடாக இருக்கு.. எப்படி ஒரு நாட்டுல போய் வியாபாரம் பண்ணி, அங்கேயே நிரந்தரமாகி விடறது கஷ்டம் தானே.. ஆனால் இலங்கை மக்கள் எங்கு சென்றாலும் சூழ்நிலைக்கேற்றவாறு மாறி விடுகிறீர்கள்.."
"ஆமாம்..எங்களால் எங்கும் வாழ முடிகிறது.. இலங்கையைத் தவிர..."
சட்டென்று ஒரு நிமிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன்..
உள்ளிருந்து வந்த வார்த்தைகள்..புரையோடிப் போன ஆறா ரணங்களின் வார்த்தை வடிவம்..
இந்த வார்த்தையைச் சொல்லும்போது ஒரு புன்சிரிப்பு.. ஆனால் கண்ணில் கலக்கம் தெரிந்தது.. ஆயிரம் ஆயிரம் சோகக் கதையை ஒரு நொடியில் பரிமாறியது..
"வெளிநாடு போய் கஷ்டப் பட்டாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க திரும்பி உங்க ஊர் போகலாம்.. சொந்தம்னு சொல்லிக்க அங்க கொஞ்சம் பேர் இருப்பார்கள் தானே..?? அந்த நிம்மதி உங்களுக்கு எப்போதும் இருக்கும் தானே..??"
மேலும் மேலும் அவர் கேட்கின்ற கேள்விக்கு என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை..
"எங்க போய் உழைச்சாலும் தாய் நாட்டை மறந்திடாதீங்க.. துன்பம் வரும்போதும், ஆபத்துக் காலத்திலும் கை கொடுங்க..."
சொல்லி விட்டு அவரது விமான அறிவிப்பு வந்தவுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.. அவர் மட்டுமே நகர்ந்து சென்றார்.. அவரது வார்த்தைகள் மண்டையைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன..
பல கேள்விகள் உள்ளிருந்து..
தமிழ் தெரிந்திருந்தும், முதலில் என்னிடத்தில் தமிழில் பேசாதது ஏன்..?? கடைசியாக அவர் சொன்ன தாய்நாடு நம்முடையதா..?? இல்லை அவருடைய தாய் நாட்டைச் சொன்னாரா..?? துன்ப காலத்தில் நாம் கை கொடுக்கவில்லை என்ற கசப்பு தான் அவரைத் தமிழ் பேச விடாமல் தடுத்ததா...?? தமிழ் பேசும் மக்கள் வாழும்பகுதியும் நமது தாய்நாடு என்ற ஒருங்கிணைந்த நோக்கோடு அவர் அதைச் சொன்னாரா..?? நாம் தான் பிரித்துப் பார்க்கிறோமா...??? வேரோடு ஒரு இனம் அழிக்கப் படும்போதும் கூட வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த அந்தக் கையாலாகத தனத்தை தான் அவர் சொன்னாரா..??
இப்ப எங்க இருந்தாலும், எப்பவாவது திரும்பி இந்தியா வந்து விடலாம் என்ற நம்பிக்கை, அங்கே நம் சொந்தங்கள் நம்மை வரவேற்க காத்திருப்பார்கள் என்ற மன நிம்மதி, வீடு நிலம், கார் இன்னும் பிற உள்ளன என்ற ஒரு பாதுகாப்பு உணர்வு நமக்கு இருக்கவே செய்கிறது..
அதனால் தான் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் பட்ட ஒரு இனத்தின் வலி..?? அதை நம்மால் உணர முடியாமலே போய் விட்டதோ...?
தற்போது தேர்தல் அறிக்கையில், தமிழ் ஈழ மக்கள் சுதந்திரத்துக்காக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று இடம் பெற்றிருப்பதைப் பார்த்ததும் மறுபடியும், தமிழனின் இன மான உணர்ச்சியை வெறும் தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல் இழிநிலையை எண்ணி மனம் கொதிக்கிறது....
நாளை தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்கு இதே கதி நேர்ந்தாலும் நேர்ந்தாலும், மற்ற பகுதித் தமிழர்கள் இப்படி தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்போமோ...? ஏனென்றால், மறத்தமிழனின் சூடு, சொரணை என்ற எதுவுமே தற்போதைய தமிழனிடம் இல்லை..
தற்போதைய நமது வாழ்க்கை முறை என்ன..?? தனக்காக சுயநலமாக உழைத்தல், குடும்பத்துக்காக சொத்து சேர்த்தல், டிவி சீரியல்களில் லயித்தல், கேளிக்கைகளில் காலம் தள்ளுதல், இடையிடையே, பண்டைய தமிழ் மூதாதையர்களின் பெருமைகளை மார்தட்டிப் பேசித் திரிதல், அரசியல் ஒரு சாக்கடை என்று தூர நின்று முகம் காட்டாமல் திட்டுதல், கடைசியில் ஏதோ வாழ்ந்தோம் மறைந்தோம் என்று போய்ச் சேருதல்(இதைச் செய்வதே பலரின் வாழ்நாள் சாதனையாக இருக்கிறது)..
ஒருவேளை இயற்கைப் பேரழிவு ஏதாவது ஒன்று நிகழ்ந்தாலாவது நமது இனம் ஒன்று கூடுமோ..??
நன்றி..
சாமக்கோடங்கி |
10 பின்னூட்டம்:
//தற்போது தேர்தல் அறிக்கையில், தமிழ் ஈழ மக்கள் சுதந்திரத்துக்காக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று இடம் பெற்றிருப்பதைப் பார்த்ததும் மறுபடியும், தமிழனின் இன மான உணர்ச்சியை வெறும் தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல் இழிநிலையை எண்ணி மனம் கொதிக்கிறது....//
ரத்தம் கொதிக்கிறது.....மானங்கெட்ட இவர்களை நினைத்தால்....ஒரு சட்டி இட்லியை தின்னுட்டு போயி அரை நாள் உண்ணாவிரதம் இருந்த நடிப்பை பார்த்து...
இவனுகளுக்கு ஆப்பு வெக்கணும்.. ஆனா கிரைண்டர் இப்பவே பல இடங்களில் மாவாட்ட ஆரம்பித்து விட்டது... மறுபடியும் ஆட்சிக்கு வந்துடுவாணுக போலிருக்கே...
"ஆமாம்..எங்களால் எங்கும் வாழ முடிகிறது.. இலங்கையைத் தவிர..."
சட்டென்று ஒரு நிமிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன்..
உள்ளிருந்து வந்த வார்த்தைகள்..புரையோடிப் போன ஆறா ரணங்களின் வார்த்தை வடிவம்..
இந்த வார்த்தையைச் சொல்லும்போது ஒரு புன்சிரிப்பு.. ஆனால் கண்ணில் கலக்கம் தெரிந்தது.. ஆயிரம் ஆயிரம் சோகக் கதையை ஒரு நொடியில் பரிமாறியது..
.......இந்த வரிகளின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.
//ஒருவேளை இயற்கைப் பேரழிவு ஏதாவது ஒன்று நிகழ்ந்தாலாவது நமது இனம் ஒன்று கூடுமோ..??//
சில நேரங்களில் இதை நானும் நினைத்துண்டு,
ஆயுட்காலத்தில் இலங்கைக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆசை உண்டு.பார்க்கலாம்.
ராஜபக்சேயின் சாவு எப்படி இருக்கும் என அடிக்கடி நினைத்துப்பார்க்கும் கோடனு கோடி தமிழர்களில் நானும் ஒருவன்
//Chitra said...
.......இந்த வரிகளின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.//
மீளாத்துயர் என்பது இதுதான்...
//jothi said...
//ஒருவேளை இயற்கைப் பேரழிவு ஏதாவது ஒன்று நிகழ்ந்தாலாவது நமது இனம் ஒன்று கூடுமோ..??//
சில நேரங்களில் இதை நானும் நினைத்துண்டு,
ஆயுட்காலத்தில் இலங்கைக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆசை உண்டு.பார்க்கலாம்.
ராஜபக்சேயின் சாவு எப்படி இருக்கும் என அடிக்கடி நினைத்துப்பார்க்கும் கோடனு கோடி தமிழர்களில் நானும் ஒருவன்
//
வாங்க ஜோதி... தப்பித்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுபவர்களாவது பரவா இல்லை.. சொந்த மண்ணில் அடிமைகளாக அடைத்து வைக்கப் பட்டிருப்பவர்களின் கதியை நினைத்துப் பாருங்கள்..
சாபம் விடத் தேவை இல்லை.. சாவு எல்லோருக்கும் உண்டு.. ஆனால் இந்தப் பழிபாவம் அவர்கள் நாட்டை சும்மா விடாது பாருங்கள்..
ஈழத் தமிழர்களின் வலியை புரிந்து கொள்ள முடியாதவர்கள் கூட பரவாயில்லை.அறியாமையில் இருக்கிறார்கள் என்று மன்னிக்கலாம்.அவர்களுக்கு உண்மை தெரிய வந்தாலே அவர்களது நிலை மாறும்.ஆனால்,ஈழத் தமிழர்களின் நிலையை தெரிந்து கொண்டும் தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும், மக்களை வேண்டுமென்றே அறியாமையில் வைத்திருக்கும் தலைவர்களை நினைத்தால் தான் குமட்டுகிறது.
பதிவும்,படமும் மிகவும் அருமை,
பகிர்வுக்கு நன்றி நண்பா
மனசை தொட்ட நிகழ்ச்சி......
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
நாம் அடிமைகளாகி பல வருடம் ஆகிவிட்டது பாஸ்...
விடுங்க.. காங்கிரஸ்காரங்களை.. வேரோடு அறுக்கும் நாள் வெகு தொலைவில இல்லை...
Post a Comment