Wednesday, June 16, 2010

என் வழி...?


நான் என்னுடைய பள்ளிப் படிப்பை முடிக்கும்போது என் முன்னே இரண்டு பாதைகள் தெரிந்தன.. எல்லோரையும் போன்று "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது..." என்று பாட எனக்கும் ஆசை.. என் முன் தெரிந்த இரண்டு பாதைகளை நான் கூற விழைகிறேன்.. கொஞ்சம் எனக்காகப் பொறுமையாக படியுங்கள்..

பாதை 1: கண்டிப்பாக சொந்தமாக ஒரு நிலம் வேண்டும்.. தண்ணீர்..? எப்படியாவது கொண்டு வந்தே ஆக வேண்டும்.. உழைப்பு..? கிடைக்கும் வருவாய்க்கு மீறியதாகத்தான் இருக்கும்..

பாதை 2: நிலம் கிலம் எல்லாம் தேவை இல்லை. நீங்கள் வெறும் கையோடு வாருங்கள் வேலை தருகிறேன் என்றார்கள்.. பேச்சுத் திறமை, மூளையை நெளிவு சுளிவுடன் உபயோகிக்க வேண்டும்...

பாதை 1: வெயில், மழை என்றெல்லாம் பார்க்கக் கூடாது, வேலை செய்வதற்கிடையில் ஓய்வை எதிர்பார்க்கக் கூடாது. கொஞ்சம் இடைவேளை கிடைக்கும்போது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். களத்தில் தான் வேலை.

பாதை 2: வெளியில் மழை பெய்தாலும், கத்திரி வெயில் தாளித்து எடுத்தாலும் ஒன்றும் தெரியாத ஒரு செயற்கைக் குளிர்விக்கப்பட்ட அறையில் தான் பணி. அதுவும் பகலிலேயும் கூட விளக்கு வெளிச்சத்தில் தான் பணி செய்ய வேண்டுமாம்.

பாதை 1: யோசிப்பதற்கு அதிக நேரம் இல்லை. களத்தில் இறங்கியவுடன் வேலை.. உடல் உழைப்பு அதிகம் தேவை.

பாதை 2: ஒரு நாள் வேலைக்கு இரண்டு நாள் கூட ரூம் போட்டு யோசிக்கலாம்.

பாதை 1: பருவ கால மாற்றங்களால் விளையும் நஷ்டங்களுக்கு நானே பொறுப்பு, அரசு மானியம் என்ற ஒன்றைத் தரும். ஆனால் அதைக்கொண்டு ஒரு வாரம் காலம் தாட்டுவதே பெரிய விஷயம்.

பாதை 2: பருவ மாற்றங்கள்..? அப்படி என்றால் என்ன...?

பாதை 1: வாரம் ஏழு நாளும் வேலை தான்.. எட்டாவது நாள் கிட்டாதா...?

பாதை 2: வெறும் ஐந்து நாள் தான் இங்கு வேலை..

பாதை 1: இரவு நேரங்களில் கூட கண்காணிப்பு செய்ய வேண்டும். வெள்ளம் வந்தால் உடனே போய்ப் பார்க்க வேண்டும். சில சமயம் தூக்கமே வராது.

பாதை 2: ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு யார் சொன்னாலும் நான் வேலை செய்யத் தேவை இல்லை.

பாதை 1: சேமிப்பு என்று ஒன்றும் செய்ய முடியாது. நானும் என் குடும்பமும் கடைசி வரை அன்னாடங்காச்சியாகத் தான் இருக்க வேண்டும்.

பாதை 2: நான்கு அல்லது ஐந்து வருடங்கள் போதும்.. கார், வீடு என்று செட்டிலாகி விட முடியும்.

பாதை 1: என்னுடைய உழைப்பின் பலனை கண் முன்னே காணும்போது கண்கள் குளிரும், குளமாகும்.. அனால் வயிறு மட்டும் எரிந்து கொண்டே தான் இருக்கும்.

பாதை 2: உழைப்பின் பலனை கண்முன் காண முடியாது.. ஆனால் என்ன..? மாசா மாசம் சம்பளம் வரும்.

பாதை 1: சொந்தத் தாய் மாமன் கூட பெண் கொடுக்க முன் வர மாட்டான்..

பாதை 2: கொளுத்து வேலை பார்ப்பவன் முதல் கோடீசுவரன் வரையில் எனக்குப் பெண் கொடுக்க வருவார்கள்.. எங்கே போனாலும் மரியாதை தான். பார்டி அது இதென்று வாழ்க்கை நன்றாகப் போகும்..

பாதை 1: உழைத்துக் கொடுக்கும் எனக்கு கொஞ்சம் தான் மிச்சம். அனால் என்னிடம் பொருளை வாங்கி, பாலீஷ் போட்டு பெக்குகளில் அடைத்து விற்பனை செய்து(நடிகைகளை வைத்து கோடி கோடி செலவு செய்து விளம்பரம் வேறு..) உழைத்தவனை விட லாபம் பார்ப்பவர்கள் பண முதலைகள். கண்ணீர்க்கதை என்னவென்றால், அந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகைக்குக் கொடுக்கப்படும் ஒருநாள் சம்பளம், எனக்குக் கிடைக்கும் ஆறுமாதகால வருமானத்தை விட பத்து மடங்கு அதிகம்.

பாதை 2: எந்த முதலாளி எந்த விலைக்கு விற்றாலும் என்னுடைய உழைப்புக்கு(?!)மேல் எனக்குப் பலன் கொடுப்பார்கள்..(மற்ற தொழில்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது)

இப்போது சொல்லுங்கள்..! நான் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று..! பாதை 1ஐ தேர்ந்தெடுத்தால் இந்த உலகமே முட்டாள் என்று என்னைச் சொல்லும் என்று எனக்கும் தெரியும்..

அனால், இந்த முட்டாள் உலகத்துக்குப் படியளப்பவனே நான் தான்.. ஆம் நான் பாதை 1 ஐத் தேர்ந்தெடுத்தேன்..
நான்... விவசாயி...மக்களே.. எனக்காவது இரண்டு பாதை காண்பிக்கப் பட்டது.. ஆனால், நம் நாட்டில் ஏறக்குறைய அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு பாதை மட்டுமே காண்பிக்கப் படுகிறது.. அதுவும், ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஊட்டப் படுகிறது.. பத்தாம் வகுப்பில் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் வகுப்பெடுத்த மாணவர்கள் பேட்டியளிப்பதைப் பாருங்கள்..

நாங்கள் தெரியாமல் தான் ஏமாளியாக இருப்பதாய் நீங்கள் நினைக்கிறீர்களா...? இல்லை இவர்கள் ஏமாளியாக இருக்கும் வரை தான் நமக்கு நல்லது என்று நீங்கள் சொல்கிறீரா...? உங்கள் எதிர்காலம் எங்கள் கையில் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.. நீங்கள் முன்னேறுங்கள், கோடி கோடியாய்ச் சம்பாரியுங்கள்.. நாங்கள் உங்களைத் தடுக்கவில்லை.. உங்கள் வயிற்றுக்குப் படியளக்கும் நான் என்றும் உங்களைக் கண்டு பொறாமைப் பட மாட்டேன்.. ஆனால், எங்கள் வயிற்றுக்குக் கிடைப்பதைத் தயவு செய்து தட்டிப் பறிக்காதீர்கள், அடிவயிற்றில் அடிக்காதீர்...

நன்றி..

விவசாயி..

Saturday, June 12, 2010

சொர்க்கம் எங்கே...?

ரயில் நிலையத்தில் போடப்பட்ட மர பெஞ்சில் உக்கார்ந்து திறு திறுவென விழித்துக் கொண்டு இருந்தான்... நேரத்தையும், டிங்-டாங் என்ற சத்தத்திற்குப் பிறகு ஒலிக்கும் அறிவிப்பாளரின் குரலையும் ஒரு வித படபடப்போடு கவனித்துக் கொண்டிருந்தான்.."இன்னும் பத்து நிமிடத்தில் அவர் சொன்ன 'அந்த' ரயில் வந்து விடும்... இரவு கனவில் நடந்ததெல்லாம் உண்மையா...?கடவுள் வந்தது உண்மைதானா..? எனக்கு மட்டும் காட்சி தந்தது ஏன்...? நமக்கு மாற்றம் பிறக்குமா...? இன்னும் பத்து நிமிடத்தில் தெரிந்து விடும்.. என்று நினைத்துக் கொண்டே அதிகாலையில் வந்த கனவினை அசை போட்டான்...

தினம் பத்து ருபாய் சம்பாரித்த பொது கூட அதை முழு சந்தோஷத்துடன் அனுபவித்தேன், இப்போது நல்ல வேலை, கை நிறைய பணம், வாழ்க்கையின் அடுத்த அந்தஸ்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன்.. பர்ஸ் முழுக்க டெபிட் கார்டுகளும், கிரெடிட் கார்டுகளும் பிதுங்கிக் கொண்டு நிற்கின்றன.. ஆனால் முன்பிருந்த சந்தோஷம்...? வெளிநாட்டுக் காரர்கள் போல், ஒரு வயதுக்கு மேல், தனியாக வாழ்ந்தால் எப்படி இருக்கும்..? எதற்காகவும் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டியதில்லை.. யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை.. சம்பாதித்த காசை "நிம்மதியாக" அனுபவிக்கலாம்.. ஆனால், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்ததே நான் செய்த பாவம்..

பத்தாயிரம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் சுலபத் தவணையில் பைக் வாங்கினேன்... தேவையான ஒன்று தான்... வீடு கட்டலாம் என்று வீட்டில் யாரோ பேச்சு ஆரம்பிக்க ஆரம்பித்தது வினை.. செலவு மேல் செலவு.. சம்பள உயர்வு வந்தது கடன் கொடுத்தவர்களுக்கு மட்டுமே சந்தோஷம் அளிக்கிறது.. லோன் கிடைப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள், டெலிபோன் பில், கரண்ட் பில், இன்டர்நெட் பில், கிரெடிட் கார்டு பில், லோன் மாதச் செலவு, ஆக நான் சம்பாதித்ததில் என் வாய்க்குக் கிடைப்பது சொற்பமே..

நம் நாட்டு மக்கள் கவுரவத்திர்காகவே கடைசி வரை வாழ்ந்து அழிபவர்கள்.. வறட்டுக் கவுரவம்.. ஐயாயிரம் ரூபாய் கம்பெனியில் வேலை பார்த்தபோது, கல்யாணம் காது குத்துகளுக்கு ஐம்பது ருபாய் மட்டுமே செலவு.. ஆனால் இந்தக் கம்பெனியில் எல்லோரும் நிறைய சம்பாதிக்கிறார்கள்.. அனால் ஒவ்வொருவரின் பிறந்த நாளுக்கும் குறைந்தது நூறு ருபாய் பணம் செலவு செய்ய வேண்டும், மாதம் இரண்டு அல்லது மூன்று முறை வெளியில் பெரிய உணவு விடுதியில் மதிய உணவிற்குச் செல்ல வேண்டும்.. இப்போதெல்லாம், சாதாரண ரோட்டுக் கடைகளிலேயே ஐம்பது ருபாய் இல்லாமல் எதுவும் சாப்பிட முடியாது.. ரெஸ்டாரன்ட்டுகள் என்றால் சொல்ல வேண்டுமா...?ஒரு ஆறு அல்லது ஏழு பேர் போனால், ஆயிரம் ரூபாய் இல்லாமல் திரும்ப வர முடியுமா....? ஆக வாரம் இருமுறை கையிலிருந்து இரண்டு மூன்று நூறு ருபாய் நோட்டுகள் வெளியில் செல்லும் வழியே தெரிவதில்லை..


நண்பர்களோடு சுற்றுலா போயிருந்த போது சிகப்புப் பூப்போட்ட சட்டையும், அரைக்கால் பேண்ட்டும் கண்ணில் குளிர் கண்ணாடியும், கழுத்தில் பெரிய காமிராவுடனும் சுற்றிக் கொண்டிருந்த அந்த வெள்ளைக்காரனைப் பார்த்ததும் பொறாமையாக இருந்தது.. தான் இரண்டு வருடம் சம்பாதித்த தொகையைக்கொண்டு இந்தியா வந்திருக்கிறான்.. இன்னும் ஆறு மாத காலம் வேறு சில நாடுகளுக்கும் சுற்றுலா செல்ல இருக்கிறானாம்.. கையிலிருக்கும் பணம் செலவழிந்ததும் மீண்டும் தாய்நாடு சென்று ஏதாவது வேலையில் உடனடியாக இணைந்து பணம் சேர்க்க ஆரம்பித்து விடுவானாம்.. எந்த வேலையாக இருந்தாலும் பரவா இல்லையாம்... சந்தோஷம் மட்டுமே அவர்களது குறிக்கோள்.. அதற்காக நன்கு சம்பாரிக்க வேண்டும்.. இதில் ஒரு முக்கிய விஷயம் என்ன வென்றால் என்ன தொழில் செய்தாலும் அங்கே கவுரவக் குறைச்சல் இல்லை. படிப்பு என்பது அங்கே தொழிலுக்காகவும் இல்லை.. அது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமே..

அந்த வெள்ளைக் காரன் சொன்னான்,அங்கே கார் ட்ரைவராக இருக்கும் ஒரு ஐம்பத்தைந்து வயது மதிக்கத் தக்க நபர், ஏதோ பட்டப் படிப்பு படிக்கிறாராம்.. அவர் ஏற்கனவே பல பட்டங்களைப் பெற்றவர். படிப்பு என்பது அவருக்கு ஒரு பிடித்த விஷயம் அவ்வளவே..எவ்வளவு வேண்டுமானாலும் படிப்பாராம், ஆனால் ட்ரைவிங் என்பது அவருக்கு பிடித்த ஒரு தொழில், அதில் நிறைய ஓய்வு நேரம் கிடைப்பதாலும், குறைவான நேரத்தில், பணம் கிடைப்பதாலும் அந்தத் தொழிலில் இருக்கிறார்... ஆனால் நம்ம ஊரில், முதுகலைப் பட்டம் பெற்ற யாராவது கார் டிரைவராக வேலை பார்க்க ஒப்புக் கொள்வாரா...?

நம் மக்களின் செலவு..? அதுவும் பந்தா காட்டுவதற்காகவே.. பக்கத்து வீட்டுக் காரன், மற்றும் கூட வேலை பார்ப்பவன், அனைவரையும் பார்த்து தன்னுடைய நிலையையும் அவர்கள் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று நினைக்கின்றனர். .. அவர்கள் எல்லாரும் இரண்டு தலைமுறைக்கு முன்னர் இருந்தே பணம் படைத்தவர்களாக இருப்பர். ஆனால் மனித மனம் சும்மா இருக்காது. அது கிளைக்கு கிளை தாவும் ஒரு குரங்கைப் போன்றதாயிற்றே.. தான் இருக்கும் இடத்தை ஒப்பிட்டுப் பார்த்தே வாழ்பவன் ஆயிற்றே.. பத்து ருபாய் சம்பாதித்தால், இருபது ருபாய் சம்பாதிப்பவனை ஒப்பிடுவான், பத்தாயிரம் சம்பாதித்தால்....?

அந்த செலவு, இந்த செலவு, ஏகப்பட்ட பில்கள், கடன் என்று உழைத்துக் கிடைக்கும் பணம் அனைத்தும் பிடுங்கப்படுகிறது.. சுற்றம் சொந்தம் என அனைத்தும் பணத்தைக் கறக்கும் ஊடகமாகவே இருக்கின்றன.. நிம்மதி என்பது எங்கே... கடவுளே.. நீ உண்மையில் இருக்கிறாயா...? எங்கே இருக்கிறாய்...? என் முன்னால் வா... உண்மையான நிம்மதியைத் தா...என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்த அசரீரி குரல் கேட்டது... அதுவும் அவன் குரலிலேயே.. "நிம்மதி வேண்டுமானால், காலை போத்தனூர் ரயில் நிலையத்திற்கு வா.. சரியாக பத்து மணிக்கு இரண்டாவது தளத்திற்கு வரும் ரயிலின் இரண்டாவது பெட்டியில் ஏறு.. நிம்மதியை நான் உனக்கு காட்டுகிறேன்...". கனவு கலைய எழுந்து உக்கார்ந்த அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.. ச்சே.. கனவா... அது தானே.. கடவுள் எப்படி நேரில் வருவார்..? அனால், கனவில் வந்த விஷயங்கள் துல்லியமாகவே இருக்கின்றனவே.. சோதித்துப் பார்ப்போமா...? நடக்காவிட்டால் என்ன நஷ்டம் ஏற்பட்டு விடப் போகிறது...?

நிகழ்காலத்திற்கு திரும்பி வந்தவனாய் கடிகாரத்தை மறுபடியும் பார்க்க மணி சரியாகப் பத்து அடிக்கவும், அந்த ரயிலின் கூ... சத்தம் கேட்டது.. முதல் பெட்டி முழுக்க பயணிகள் நிரம்பி வழிய இரண்டாவது பெட்டி யாருமற்று காலியாக வந்தது அவனுக்கு பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்தது.. சரி... வந்தது வந்தாயிற்று.. ஏறித்தான் பார்ப்போமே.. ஏறிய அடுத்த வினாடி, ஒளிவேகத்தில் ரயில் புறப்பட, அடுத்த சில வினாடிகளில், அவன் கண்முன்னாடி நகர்ந்த அதிசயங்கள் எழுத்தால் விவரிக்க முடியாதவையாக இருந்தன..

கண்விழித்துப் பார்த்த பொது, அழகான கடற்கரையில் இருந்தான், நீல நிற அலை வெள்ளை நிற நுரையோடு, காலை வருடிச் சென்றது, எழுந்து நின்றான், சுருக்கென்று குத்தாத இதமான வெயில், கரையின் ஓரத்திலேயே அழகான சோலை தெரிந்தது, இந்தப்புறம் பெரிய மலை பச்சைப் பசேல் என்று விரிந்து இருந்தது.. பனிக்கூட்டங்கள் அப்படியே அந்த மலையை வருடிச் சென்று கொண்டிருந்தது.. கரையை நோக்கி நடக்க ஆரம்பிக்க சில்லென வீசிய காற்று அவனுக்குள் ஏதோ ஒரு வித ஆனந்தத்தை உணர்த்தியது.. சற்றேன இடது புறத்தில் சில குரல்கள் கேட்க திரும்பினான். அவனது குழந்தைகள், மர நிழலில், ஈரமான மணலை வீடு போல் கட்டி விளையாடிக் கொண்டு இருந்தனர்.. அந்தப் பெரிய மரத்தின் கிளையில் ஒரு அழகான குடில் தெரிந்தது.. குடிலின் ஜன்னலின் வழியே அவன் மனைவி ஏதோ சமைத்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.. கண்ணில் பட்ட மரங்கள் அனைத்திலும் பழங்கள்..

அழகழகான விலங்குகள், பறவைகள், சுற்றிலும் ஒழி எழுப்பியபடி இருந்தன.. சுத்தமான தண்ணீர் ஊற்று ஒன்று மிக அருகில் கண்ணில் பட்டது.. கொஞ்சம் தொலைவில் மக்கள் வாழ்வதற்கான சத்தங்கள் கேட்டன.. உக்கார்ந்து சாப்பிட்டாலும் ஆயுள் முழுக்க சாப்பிடலாம்.. அந்த அளவுக்குப் பழங்கள், காய்கள்.. மலையை நோக்கி நடக்க ஆரம்பிக்க இன்னும் பல ஆச்சரியங்கள்.. அதிசயங்கள்.. காணக்கிடைக்காத மரங்கள், பறவைகள், பூச்சிகள், என்று விரிந்து கொண்டே இருந்தது... இலையை ஆடையாக உடுத்தியிருந்த அவனுடைய குழந்தைகளைப் பார்த்ததும் சட்டென்று அவனுக்கும் ஒரு சந்தேகம் வந்தது... தன்னையும் பார்த்துக் கொண்டான்.. இலையால் வேயப்பட்ட ஒரு ஆடையை உடுத்தி இருந்தான்.. சொர்க்கத்தைக் காட்டுவதாகக் கூட்டி வந்தாரே..? ஆனால் இங்கு கொண்டு வந்திருக்கிறார்...? சொர்க்கம் எங்கே...? கடவுள் எங்கே..?

திடீரென ஏதோ ஒரு எண்ணம் வந்தவனாய்... கடவுளே.. கடவுளே.. இது என்ன கனவா..? நீ எங்கே இருக்கிறாய்...? எனக் கேட்க, "என்ன ஆயிற்று உனக்கு..?" எனப் பதில் வந்தது... "நான் என்னுடைய வீட்டிற்குப் போக வேண்டும்....என் சட்டைப் பைக்குள் என்னுடைய பர்ஸ் இருக்கிறது.. அதை மட்டும் எடுத்து வர வேண்டும்.. அதில் தான் என்னுடைய அனைத்துக் கார்டுகளும், பணமும் உள்ளது..." என்று போட்டானே ஒரு போடு..

சட்டென்று அனைத்தும் தூசியாய் மறைந்து போக கட்டிலுக்குப் பக்கத்தில் தொம்மென்று விழுந்தான்... "ஏங்க... இத்தன நேரமா ஏங்க பொய் இருந்தீங்க..? கூரையைப் பிச்சிகிட்டு குதிச்ச மாறி திடீர்னு வந்துட்டீங்க.. சரி... உங்க பர்ஸ்ல இருந்து ஐநூறு ரூபாய் எடுத்துக்கறேன்.. மளிகைக் கடைக்குப் போகணும்.."என மனைவி சொன்னாள்...

மனிதன் எங்கிருந்தாலும் மனிதன் தான்... அவனுக்குச் சொர்க்கம் என்பது வெளியில் உள்ள ஒரு விஷயம்.. கிடைத்த சொர்க்கத்தை (நம் இயற்க்கை பூமியைத் தான் சொல்கிறேன்..) விட்டு விட்டு, உண்மையான சொர்க்கம் எங்கே என்று தேடிக் கொண்டு இருக்கிறோம்...

நரகத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட நமக்கு சொர்க்கம் அருகில் இருந்தாலும் அதை உணரும் சக்தி இல்லை..