Sunday, April 17, 2011

சுற்றுலா... பகுதி 3 - பரளிக்காடு.

வணக்கம் நண்பர்களே.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை அவ்வப்போது கணினி மூலம் பார்த்து வருகிறேன். அதில் ஓவர் இடைவெளிகளில் ஒரே ஒரு விளம்பரம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது. அதுதான் கேரளா சுற்றுலாத்துறையின் அழகான வண்ண விளம்பரம். மிகவும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். பார்த்துக் கொண்டிருக்கும் வெள்ளைக் காரர்களும் உள்ளூர் வாசிகளும் தங்கள் பயணத் திட்டத்தில் கண்டிப்பாக கேரளாவை இணைத்து இருப்பார்கள். தொலைக்காட்சிகளில் அந்த விளம்பரம் இடம் பெறுகிறதா என்று தெரியவில்லை.

எதற்குச் சொல்கிறேன் என்றால், இயற்கை வனப்பும், நீர்வளமும், அழகான கடற்கரையும், ஏரிப்பகுதிகள் நிறைந்த பகுதிகளும், பலவிதமான பாரம்பரியக் கலைகள் என்று கேரளா உண்மையிலேயே அழகான மாநிலம் தான். ஆனால் நமது மாநிலமும் அதற்கு எந்த அளவிலும் குறைந்தது இல்லை. அது சரியான முறையில் மக்களைச் சென்றடைகிறதா என்பது தான் எனது கேள்வி.

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையை அரசு மேம்படுத்த வேண்டும். இருக்கும் சில புராதான கலைப் பொக்கிஷங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதே நமது ஆசை. இந்தப் பதிவில், எனக்கு ரொம்ப காலம் தெரியாமலேயே இருந்த கோவை மேட்டுப்பாளையத்தின் மிக அருகில் அமைந்திருக்கும் ஒரு அழகான சுற்றுலாத் தலத்தைப் பற்றிப் பார்ப்போம்.

(படங்களின் மீது கிளிக் செய்து பெரிது படுத்திப் பார்க்கவும்)

மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகு

கோவை மேட்டுப்பாளையத்தின் அருகே இருக்கும் காரமடை பேரூராட்சியில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பாதையில் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரளிக்காடு. மேற்குத் தொடர்ச்சி மலையின் இன்னுமொரு வரப்பிரசாதம். அந்த சாலை இன்னும் தொடர்ந்து கேரளாவிற்கும் செல்கிறது, ஊட்டியின் ஒரு பகுதியையும் கூட இணைப்பதாக செய்தி. இந்தப் பகுதிக்குச் செல்ல வனத்துறையினரின் அனுமதியை முன்னமே பெற வேண்டும். பரளிக்காட்டுக்கு மிக அருகே பவானி ஆற்றின் பில்லூர் ஆணை ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

அதிகம் அறியப்படாத பகுதி என்பதால் பிழைத்தது. அடுக்குமாடி லாட்ஜுகள், கூட்ட நெரிசல்கள், குப்பைக்கூளங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான காட்டுப் பகுதியாகவே உள்ளது. பார்ப்பதற்கு அதிகம் ஒன்றும் இல்லை என்றாலும் உங்கள் ஒருநாள் அழகான விடுமுறைக்கு இந்த அமைதியான பகுதி உத்திரவாதம் அளிக்கும்.

முப்பது பேர் கொண்ட எங்கள் டிபார்ட்மென்டில் சுற்றுலா செல்ல முடிவெடுத்த போது பயணத் தூரம் குறைவாக இருக்க வேண்டும் என்று தேட ஆரம்பித்த போதுதான் இந்தப் பகுதியைப் பற்றி அறிந்து கொண்டோம். நானும் எனது நண்பனும் இந்த இடத்தை ஒருமுறை பார்த்து விட்டு பிறகு முடிவு செய்யலாம் என்று ஒரு நாள் பணிமுடிந்து மாலை கிளம்பினோம். காரமடை தாண்டி 25 கிலோமீட்டர் தொலைவிற்கு வந்ததும் இருட்டத் தொடங்கி இருந்தது. வனப்பகுதி எல்லைச் சோதனைச் சாவடியில் காவலர் எங்களை வழிமறித்தார். வனச்சரகரிடம் முன்னமே பேசியிருந்ததாகச் சொன்னோம்.

சோதனைச் சாவடி.. இரண்டு சோதனைச்சாவடிகள் உண்டு.

"தம்பி இது என்ன சும்மா ஊருக்குள்ள போகர மாதிரியாப்பா..? ஆறுமணிக்கு பொழுது சாஞ்சு சாவகாசமா வர்றீங்க..? யானைங்க சுத்துற காடுப்பா..காரு லாரின்னாக்கூட உடலாம். டூவீலர் வெச்சுக்கிட்டு ரெண்டு பேரு.. நடுவால யானைங்க வந்துச்சுன்னா ஒன்னும் பண்ண முடியாது.. காப்பாத்த ஆளுங்களும் இல்லை.. திரும்பிப் போயிடுங்க தம்பி.. காலைல வெளிச்சமா வாங்க.." என்று பயமுறுத்தி விட்டார். "சார் நாங்க சுத்திப் பாக்க வரலை. இந்த இடம் சரியாக இருக்குமான்னு பத்து நிமிஷம் பாத்துட்டு போயிடறதாத் தான் ரேஞ்சர் கிட்ட சொல்லி இருக்கோம்" னு சொன்னேன். "அரை மணி நேரத்துக்குள்ள திரும்பி வந்துடுங்கப்பா.. எங்கயும் வண்டிய நிறுத்தாதீங்க.." மறுபடியும் பயமுறுத்தினார்.

"பிரகாசு எதுக்கு ரிஸ்க்கு.. வாய்யா போயிடலாம்.. யானை கீனைன்னு வேற பயமுறுத்துராறு"-அல்ரெடி நண்பன் ஆட்டம் கண்டிருந்தான்.
"வாடா மச்சி.. இருட்டுறதுக்குள்ள திரும்பிடலாம்.. நான் இருக்கிறேன்.. நன்பேண்டா..."

கொஞ்ச தூரம் தான் போயிருப்போம், பாதை மலையின் மீது ஏற ஆரம்பித்து வளைந்து வளைந்து சென்றது. மலைப்பாதையில் ஓட்டுவது அலாதியான சுகம் என்றாலும் இதில் ரோடு கொஞ்சம் அகலம் குறைவு. அங்கங்கே கடமுட. எங்க ரெண்டு போரையும் வைத்துக் கொண்டு என்னுடைய 100CCவண்டி திணறிக்கொண்டே ஏறியது. காட்டுப்பூச்சிகளின் இரைச்சல் வேறு பயமுறுத்தியது. வழியில் பெரிதாகக் கிடந்த யானைச் சாணியைப் பார்த்ததும் ரெண்டு பேருக்கும் கிலி பற்றிக் கொண்டது. இடையில் ஆடு மாடு நாய் கோழி ஆகியவற்றுடன் கூடிய பத்துப் பனிரெண்டு வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தைக் கடந்தோம். ஏதாவது பிரச்சினை என்றால் இங்கே தான் வர வேண்டும் என்று குறித்துக் கொண்டோம்.

ரேஞ்சரைச் சந்தித்ததும், அவரும் இதையே தான் கேட்டார். "என்ன தம்பி இவ்ளோ பொழுது சாஞ்சு வந்திருக்கீங்க. சீக்கிரம் போய் பாத்துட்டு வாங்க" என்று அனுப்பினார். அவரைத் தாண்டி ஐந்து கிலோமீட்டரில் அந்த நீர்ப்பிடிப்புப் பகுதி எங்களை அழகாக வரவேற்றது. ஒரு நாள் சுற்றுலாவுக்கு சரியான இடம் என்று தோன்றியது. பரிசல் பயணம் மற்றும் கூடி மதிய உணவு மற்றும் விளையாட்டுகளுக்கு ஏதுவான இடம்.

"பாத்தாச்சு இல்ல.. வா போகலாம்.." - நண்பன்.

திரும்பி வரும்போது இன்னும் திரில். இறக்கமான வளைவுகளில் பத்தடிக்கு மேல் ரோடு தெரியவில்லை. எதிரே யானைக் கூட்டங்கள் நின்னுட்டு இருந்தா வண்டியைத் திருப்பக் கூட முடியாது. உயிரைக் கையில புடிச்சிட்டு சோதனைச் சாவடியை அடைந்த போது.. "தப்பிச்சுட்டீங்களா.." என்று கேட்பது போல இருந்தது அந்தக் காவலாளியின் பார்வை. ஒரே சலாமை வைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருந்தோம்.

பாதுகாப்புடன் கூடிய பரிசல் பயணம்

பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி, திரில் பரிசல் பயணம் எல்லாமே அழகு. ஆங்காங்கே கரையோரங்களில் இறக்கி விடப் படுவீர்கள் கொஞ்ச நேரம் இயற்கையை ரசிக்கலாம். பரிசலில் சுற்றியவாறே மலைகளின் அழகைக் காணலாம். மேலே மலை மக்களின் குடியிருப்புகளையும் பார்க்கலாம். திரும்பி வரும் வழியில் ஆற்றில் குளிக்க ஒரு அழகான இடம் உள்ளது. நண்பர்கள் பலருக்கும் ஒரு மணி நேரம் ஆகியும் அந்த ஆற்றை விட்டு வெளியே வர மனசில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கண்ணாடி போன்ற தெளிவான சுத்தமான ஆனால் உறைய வைக்கும் பரளியாற்று நீர் உங்கள் உடலைக் குளுமைப் படுத்தும்.

பரிசலில் இருந்த படியே பில்லூர் அணையைப் பார்க்கலாம்

மலைமக்கள் வாழும் பகுதி

கண்ணாடி போன்ற தெளிவான நீர்ப்பிடிப்புப் பகுதி

பரிசலை ஓட்டியவர் கூறினார் அங்கே முதலில் எல்லாம் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனராம். இப்போது அடிக்கடி சந்தைக்காக கீழே இறங்கி வர வேண்டியிருப்பதால் அவர்களின் கலாச்சாரம் அப்படியே மாறி தாலி கட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்களாம்.


மதிய உணவு.. மீன் மற்றும் சிக்கனும் கிடைக்கும்.

மதிய உணவு தான் இங்கே ஒரு ஸ்பெஷல். ரேஞ்சரிடம் சொல்லி விட்டால் அவரே சைவ மற்றும் அசைவ மெனுவை உங்களுக்கு அளிப்பார். நீங்கள் வேண்டியதைச் சொல்லி விட்டால் அங்கே உள்ள கிராமப் புற மக்கள் மூலம் தயாரித்துக் கொடுப்பார். நீங்கள் செலுத்தும் முன்னூறு(இப்பொழுது எவ்வளவு என்று தெரியவில்லை)ரூபாயில், பரிசல் பயணம் மற்றும் இந்த மதிய உணவு மற்றும் காலையில் தேநீர் போன்றவை அடங்கும். இதில் ஒரு பங்கு மலைவாழ் மக்கள் நலனுக்காக அரசால் உபயோகப் படுத்தப் படுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
யானைகள் இங்கே தண்ணீர் குடிக்க வருமாம்

யானைகள் சுற்றும் காட்டுப் பகுதி ஆனாலும் நீலகிரிக்குச் செல்லக்கூடிய குறைவான பேருந்துப் போக்குவரத்து உள்ளது. பெரிய வண்டிகளில் வந்தால் பயம் இல்லை, யானைகள் இருந்தால் அப்படியே வண்டியை அணைத்து நிறுத்தி விட்டால் அவைகள் தானாகப்போய் விடும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். முடிந்தால் வந்து பாருங்கள். அப்படியே உங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிறு சிறு சுற்றுலாத் தளங்களையும் அறிமுகப் படுத்துங்கள். அனைவரும் பயனடைவோம்.

நன்றி
சாமக்கோடங்கி

Monday, April 11, 2011

நாளைக்கு சோத்துக்கு..?

அடுப்பங்கரையில் புகை மூக்கில் ஏற இருமிக்கொண்டே நெருப்பை ஊதி விட்டுக்கொண்டிருந்த அம்மாவிடம் ஓடி வந்தான் செல்வம்.

அம்மா அம்மா..வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள் னு புக்குல போட்டிருக்கே.. வருமைன்னா என்னம்மா..??

தெரியலடா கண்ணா...(எப்படி சொல்வதென்று தான் தெரியவில்லை)

வயிறு பசிக்குதும்மா படிக்கவே முடியல..

இருடா கண்ணு சாதம் வடிச்சவொடனே தர்றேன்.

அம்மா இது எதுக்கும்மா மண்ணெண்ண வெளக்கு.. எழுத்தெல்லாம் மங்கலா தெரியுது.. மூக்கு எரியுது.. காலைல எந்திரிச்சா மூக்குல எல்லாம் கரி ஒட்டி இருக்கு.. இந்த பல்பு எரியவே எரியாதா..

கரண்டு இல்லடா கண்ணு..(கரண்டு பில்லு கட்டவும் காசு இல்லடா..)

"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."
"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."

அதா உங்கப்பா வர்றாரு அவருகிட்டையே கேளு..

"எவண்டா இது.. கதவ இவ்ளோ சின்னதா வெச்சது... ஹிக்.. ஓ.. ஜன்னலா.. எவ்ளோ ஏத்தனாலும் நம்ம ஊட்ட கரீக்டா கண்டு புச்சுடுவேன்.. நா யாரு.."

அப்பா அப்பா.. வேகமாக ஓடி வந்தவன் வாடை அதிகமா அடிக்கவே ரெண்டடி தள்ளி நின்றான்..

வாடா என் சிங்கக்குட்டி.. என்னாப்பா படிக்கிறியா.. நீ படிச்சு என்ன சாதிக்கப் போறே..??
ஏந் தலைவன்.. இந்த ஊரு எம்எல்ஏ எலெக்ஷன்ல நிக்கிறவரு.. என்னா பச்சிருக்காரு..? ஆறாப்பு.. ஆனா பெரிய படிப்பு படிச்சவன் எல்லாம் வேலைக்கு மனு குடுத்து கியூவுல நிக்கிறான் நாய் மாறி.. இதெல்லாம் உனக்கு சொன்னா எங்க புரியப்போகுது.. உனக்கு பீஸ் கட்டியே ஏன் சொத்தெல்லாம் போகப்போகுது.

"ம் க்ம்.. ஒழுங்கா சம்பாரிசிட்டு வர துப்பில்லை.. கச்சி கச்சின்னு நாயாட்டம் அலஞ்சு வீடே உருக்குலஞ்சு போச்சு.. எங்க இருக்கு சொத்து.. அழிக்கறக்கு..? அதான் எல்லாம் குடிச்சே அழிச்சாச்சு.."

"ஏய் என்னாடி அங்க தனியா கத்திக்கிட்டு இருக்கே.."

"அப்பா வருமைன்னா என்னப்பா...?"

"நாம எல்லாம் வருமைல தான் இருக்கோம் ராசா.."

"ஓ ராசா எல்லாம் வருமைல தான் இருப்பாங்களா.."

"..."

"தலைவர்கள்னா யாருப்பா.."

"அப்டி கேளு ராசா.. இப்போ அப்பாவுக்கு ஒழுங்கா ஜோலி இல்ல. எலக்ஷன் டைம் ஆச்சா.. நம்ம எம்எல்ஏ பாரு.. கொடி கட்ட கூப்ட்டாறு.. ஒரே நாளு.. முன்னூறு ரூபா.. ஒரு நாள் சோத்துக்கு வழி பண்ணீட்டாறு.. அவரு தான் தலைவரு..!!"

"நீ கெடுத்ததும் இல்லாம குடிச்சிட்டு வந்து ஏன் இப்படி பையனையும் கெடுக்கற...முந்தா நேத்து ராத்திரி போனது இப்பதான் வீடு கண்ணுக்கு தெரிஞ்சுதா..??"

"ஏய்.. என்னாடி தப்பா சொல்லீட்டேன்..? நேத்து ஒரு வேல.. மூனாந்தெருவுல இருக்குற அத்துன வீட்டுல இருக்குறவங்களுக்கும் பணப்பட்டுவாடா செய்யணும்.. ஓட்டுக்கு ஆயிரம் ரூவா... இந்தக் காலத்துல எவன் தருவான் சொந்தக் காசில இருந்து ஆயிரம் ரூவா...?? எந்தலைவரு கொடைவள்ளல்.. டே மாரி..காலைல அஞ்சர மணிக்கு மாரியம்மன் கோயில் கிட்ட 108 சத்தமில்லாம வரும்.. பணத்த எறக்கிக்க.. அந்த முட்டு சந்துல இருக்குறானே கணேசன், அவனும் அவன் கூட்டாளிகளும் வெட்டிப்பசங்க.. வீணா தேசியம் பேசிட்டு திரியறவிங்க.. அவங்க கண்ணுக்கு மட்டும் படாம எல்லா வீட்டுலையும் கதவு வழியா உள்ள போட்டுடு.. எலக்ஷன் முடிஞ்சவுடனே லம்பா ஒரு அமவுண்ட் தர்றேன்னாரு..

நல்லதா கூட மறச்சு மறச்சு செய்ய வேண்டி இருக்குது பாரு..காலம் கெட்டுப்போச்சு..

வெடியக்கால பணத்த குடுத்திட்டு இருந்தா எந்த எட்டப்பனோ போலீசுல போட்டுக் கொடுத்திட்டான்.. கொஞ்சம் இல்ல.. முடிசிருப்பாணுக... உன் தாலி தப்பிச்சிது.. மூஞ்சிய மூடி இருந்ததால அவனுகளுக்கு அடையாளம் தெரியல.."

"அடப்படுபாவி நீ எல்லாம் திருந்தவே மாட்டியா.. இதுல அவனுகள நீ எட்டப்பன்னு சொல்ற.. கடவுளே..இரு இரு.. பாத்துகிட்டே இரு.. உன் தலைவன் குடுப்பான் பாரு.."

"என்னாடி தரல..?? எல்லா வீட்டுக்கும் ஒரு டிவிதானடி குடுத்தாங்க.. நமக்கு மட்டும் எப்படிடி ரெண்டு டிவி வந்துச்சு..??அதுல ஒண்ண வித்து தாண்டி வட்டிகாரன் கடன அடச்சேன்.. ஒர்ருவா அரிசி ஒரு மூட்ட நமக்கு சும்மா தந்திருக்காரு.. வேற யாருக்காவது தந்தாரா.. டாஸ்மாக்குல சரக்கு என்ன வெல விக்குது.. கட்சிக்காரங்க கஷ்டப் படுறாங்கன்னு எங்களுக்கு ஓசியிலேயே குடுக்கறாரு.. வேற யாரு குடுப்பா...? மரியாதிக்கு பேசுறத நிறுத்திட்டு சோத்த போடுற.. நாளைக்கு வந்து தலைவருக்கு ஓட்ட போடுற.. மத்தவங்கள மாதிரி இல்ல... நமக்கு ஸ்பெஷலு.. ஐயாயிரம் ரூபா குடுக்கறேன்னு சொல்லி இருக்காரு.. ரெண்டு பேத்துக்கும் சேத்தி.. மூணு நாலு மாசம் மாங்கு மாங்குன்னு ஒழச்சாலும் கெடைக்காது தெரிஞ்சுக்க.."

"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."
"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."

செல்வம் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தான்..
--------

மக்களே.. இது போன்ற 'மாரி'கள் தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் என்பது நமக்கே நன்றாகத் தெரியும். இப்போது தமிழ்நாட்டின் கிராமங்களில் என்ன பேச்சு தெரியுமா..?

"பக்கத்துத் தெருவுல ஓட்டுக்கு ஆயிரம் ரூவா குடுத்திருக்காங்க.. நமக்கு வெறும் ஐநூறு தானாக்கும்.. இருவே.. அந்த எம்எல்ஏ எவ்வளவு தருவார்னு தெரியலே."

"மாப்ள ஓட்டுக்கு இருநூத்து அம்பது ரூபா தாரமுன்னு சொன்னாங்க. எரநூறு ரூபா தான் குடுத்தாங்க.. . தேர்தல் சமயத்துல தண்ணி பிரியாணி செலவுக்கு வேண்டி தலைக்கு அம்பது ரூபா மட்டும் இப்பவே புடிச்சிக்கிறதா சொன்னாங்க.. அது சரி.. எவன் அம்பது ரூபாய்க்கு தண்ணியும், பிரியாணியும் குடுப்பான்.."

நல்ல மக்கள்.. மக்களுக்கு ஏற்ற அரசு.. வாழ்க ஜனநாயகம்..

சாமக்கோடங்கி

Saturday, April 9, 2011

கொதி நிலை - பாகம் 5

வணக்கம் நண்பர்களே..

கொதிநிலை என்ற ஒன்று ஒவ்வொருவருக்குள்ளும் உண்மையாக வர வேண்டும், அது தேர்தலிலிலும் வெடிக்க வேண்டும்,அதற்குப் பிறகும் உயிரோடு இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.

நமது நாட்டின் அவல நிலையைப் பற்றித் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்தத் தொடரின் நோக்கமே, பிரச்சினைகளையும் கூறிப் பின் அதற்கான தீர்வுகளையும் நுட்பமாக அலசுவதே..

ஆக இன்னும் பிரச்சினைகளையும் அடுக்கிக் கொண்டே போனால், நான் உண்மையில் சொல்ல வந்ததே மறந்து விடவும் வாய்ப்புள்ளது. அது இந்தப் பகுதியில் இருந்து தொடங்குகிறது. நமது நாட்டில் தற்போது நடக்கும் விஷயங்களைச் சற்று அலசிப் பார்ப்போம்.

'மாமூலாக' நடந்து கொண்டிருந்த லஞ்ச ஊழல் போட்டியில் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு போக, சட்டென்று அதில் ஏதோ ஒன்று வெளிச்சத்திற்கு வர அனைவரும் உஷாராகி விட்டனர். வெளிநாட்டுக் காரர்கள் இந்தியாவைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். திடீரென ஊழலுக்கேதிரான ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும் என அன்னா ஹசாரே புறப்பட அவருடன் பலபேர் கைகோர்த்தனர். நேரில் கூடியவர்கள் தான் பாராட்டப் பட வேண்டியவர்கள்.. மக்கள் சக்தியை அரசுக்குக் காண்பிக்க உதவியது.நோக்கம் நிறைவேறுமா என்பது வேறு விஷயம். ஆனால் இணையத்தில் என்னவென்றே தெரியாமல் பலநூறு பின்தொடர்பவர்கள். என்ன பயன்..?(எப்படியும் அவர் கூப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டியதில்லை.. இருந்த இடத்தில் ஒரு பொத்தான் தானே.. எளிதில் அமுக்கி விடலாம்).

தேர்தல் ஆணையம் சற்று கறாராக நடந்து கொள்வது மனதிற்குக் கொஞ்சம் ஆறுதல்(இதிலும் ஏதேனும் அரசியல் பின்னணி உண்டோ என்னவோ ஆண்டவனே..). அதைப் பொறுக்காமல் சின்னக் குழந்தையின் கையிலிருந்த குச்சி முட்டையைப் பிடுங்கினால் போல அழும் முதலமைச்சர். இப்படிக் கெடுபிடிகளைத் தாண்டியும் மக்களுக்குத் தேர்தல் 'அன்பளிப்பைக்' கொடுத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் பலே கில்லாடிகள்.

இதிலிருந்து நான் கவனித்த சில விஷயங்கள்.

படித்த அதிக வருமானம் ஈட்டும் இளைஞர்கள் இந்தியாவில் பெருகி வருகிறார்கள். அவர்களை இணைக்கும் பாலமாக பேஸ்புக் போன்ற இணையதளங்கள் செயல்படுகின்றன. ஆனால் இவர்களால் என்ன பயன் விளையப் போகிறது..? இவர்களை ஒரு பொருட்டாகவே மத்திய மாநில அரசுகள் கருதவில்லை. அவர்கள் தங்களுடைய 'டார்கெட்'டில் தெளிவாக இருக்கிறார்கள். இலவசங்கள் ஆபத்தானவை என்று இந்த படித்த இளைஞர்களுக்குத் தெரிகிறது. எப்படி..? நிறைய படிக்கிறார்கள், மடல்கள் அனுப்புகிறார்கள், நண்பர்களுடன் ஜாலியாகப் பகிர்கிறார்கள். ஆனால் இது போன்ற பொதுவெளி ஊடகங்களுடன் தொடர்பில்லாத மக்கள் தான் இந்தியாவில் அதிகம் நண்பர்களே.. எனவே தான் இந்தத் தேர்தலிலும் இலவசங்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். இணைய இளைஞர்கள் அவர்களின் டார்கெட்டிலேயே இல்லை..

சரி சராசரி மனிதனுக்கு ஒரு செய்தி எப்படி சென்றடைகிறது..? ஊடகங்கள்..?? அவை எப்படிச் செய்தியைத் திரித்துச் சொல்கின்றன என்பது உங்களுக்கே தெரியும். பல இடங்களில் வருடக் கணக்காகத் தொடரும் போராட்டங்களை அவர்கள் கண்டு கொள்வதே இல்லை, வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் இல்லை, ஆனால் திடீரென ஏதாவது ஒன்று தானாக வெளிச்சத்திற்கு வந்து விட்டால், தங்களது பத்திரிக்கை விற்பனைக்காக அதை ஊதிப் பெரிதாக்குகின்றன. ஊடகங்களில் பெரும்பாலானவை கட்சிகளின் கையில்.. என்ன செய்ய முடியும்..?? நாள்தோறும் தொகா களில் இடம்பெறும் எதிரணியினர் பற்றிய அவதூறு செய்திகள், வீடியோக்களைப் பார்க்கும் போது சிரிப்பு வருகிறது.. ஆனால் நம்பினால் நம்புங்கள், அந்த செய்திகளை நம்புவோர் நமது நாட்டில் பலர் இருக்கிறார்கள். அவர்களைத் தான் இந்த அரசியலாளர்கள் குறி வைக்கிறார்கள். நாமெல்லாம் வெத்து வேட்டுகள்.. அதாவது சிறுபான்மையினர்.

சரி. படித்த இளைஞன் என்ன செய்கிறான்..? அவனுக்கு இது தவறென்று தெரிகிறது. உடனே பேஸ்புக்கில் ஒரு மறுப்பு எழுதுகிறான். யாராவது அனுப்பியதை மற்றவர்களுடன் பரிமாறுகிறான்.. இதனால் நடப்பது என்ன..? அதே செய்தி அந்த மக்களுக்குள்ளேயே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. கோழிகள் போட்ட முட்டைகள் பண்ணையிலே இருந்தால் யாருக்கு லாபம்..? கடைத்தெருவிற்கு வர வேண்டுமே..?? அதை யார் செய்வது..? இன்று இந்த சமூக பொதுவெளி ஊடகங்களில் ஆர்ப்பரிக்கும் நண்பர்களில் எத்துனை பேர் தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இருக்கிறோம் சொல்லுங்கள். ஒரு நாள் விடுப்பு எடுத்து விட்டு வரச் சொன்னாள் வருவீர்களா.??

போராட்டத்தின் சாராம்சம் தியாகம், நீதி, நேர்மை.. அது நமக்குள் இருக்கிறதா என்று முதலில் சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்வோம். தனது ஒரு நாள் ஊதியத்தை இழக்க யாரும் தயாரில்லை, தனது தாய் தந்தையர், சுற்றத்தார் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயார் இல்லை, எங்கோ ஒருவர் தவறு செய்கிறார், யாரோ ஒருவர் கஷ்டம் அனுபவிக்கிறார், அதை நாம் யாரோ ஒருவருடன் பகிர்ந்து கொள்கிறோம், அது முடிந்தவுடன் எக்கேடோ கேட்டுப் போகிறோம். உண்மையச் சொல்லப் போனால் நமது கூரையில் தீ வைக்கப் பட்டால் தான் நெருப்பு என்றால் என்ன என்று புரியவரும்.. அது நமது இளைஞர்களில் பலருக்குப் புரியவில்லை. நான் எல்லோரையும் சொல்லவில்லை.

அப்போ என்னதான் செய்யலாம்..? கொள்கை வேண்டும். கொள்கை கட்டாயம் வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிறு கொள்கையாவது இருக்க வேண்டும். மாற்றங்கள் நம்முள் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே எப்போதும் என்னுடைய கருத்து. நமது நாட்டில் நல்ல குடிமக்கள் இருக்கிறார்கள், ஆனால் வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லை என்று ஆதங்கப் படுபவர்கள் பலபேர்.. ஆனால் இப்போதைய தேவை நாம் திருந்துவதே.

உனக்கு அவசரம் என்றால் காசு கொடுத்து ஓட்டுனர் உரிமம் பெறுகிறாய்.. உனக்கு அவசரம் என்றால் போலீசுக்கு காசு கொடுத்து உரிமம் இல்லாமல் தப்பிக்கிறாய்.. அப்போதெல்லாம் அது தவறேனத் தோன்றவில்லை. இப்போது மட்டும் பொங்குகிறாய்.. இது போலி வேஷம்.. நாட்டில் நாமும் ஒரு அங்கம். நாட்டில் ஊழல் உள்ளதென்றால் உனக்குள்ளும் ஊழல் உள்ளதென்றே அர்த்தம். ஏதோ வெளியில் நடப்பதெல்லாம் அநியாயம் என்றும் நமக்குள்ளே நாமெல்லாம் மகாத்மா என்றும் நினைத்துக் கொண்டால், சமுதாயத்தைப் பற்றி நமது நாட்டைப் பற்றி இன்னும் சரியாகப் புரிதல் இல்லை என்றே அர்த்தம். அதை முதலில் புரிந்து கொள்வோம். மாற்றத்திற்கு இதுவே முதல் படி.

அடுத்த பகுதியில் குழந்தைப் புருவத்தில் இருந்து என்னன்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதைக் கலந்தாய்வோம்..

நன்றி..
சாமக்கோடங்கி