Monday, April 11, 2011

நாளைக்கு சோத்துக்கு..?

அடுப்பங்கரையில் புகை மூக்கில் ஏற இருமிக்கொண்டே நெருப்பை ஊதி விட்டுக்கொண்டிருந்த அம்மாவிடம் ஓடி வந்தான் செல்வம்.

அம்மா அம்மா..வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள் னு புக்குல போட்டிருக்கே.. வருமைன்னா என்னம்மா..??

தெரியலடா கண்ணா...(எப்படி சொல்வதென்று தான் தெரியவில்லை)

வயிறு பசிக்குதும்மா படிக்கவே முடியல..

இருடா கண்ணு சாதம் வடிச்சவொடனே தர்றேன்.

அம்மா இது எதுக்கும்மா மண்ணெண்ண வெளக்கு.. எழுத்தெல்லாம் மங்கலா தெரியுது.. மூக்கு எரியுது.. காலைல எந்திரிச்சா மூக்குல எல்லாம் கரி ஒட்டி இருக்கு.. இந்த பல்பு எரியவே எரியாதா..

கரண்டு இல்லடா கண்ணு..(கரண்டு பில்லு கட்டவும் காசு இல்லடா..)

"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."
"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."

அதா உங்கப்பா வர்றாரு அவருகிட்டையே கேளு..

"எவண்டா இது.. கதவ இவ்ளோ சின்னதா வெச்சது... ஹிக்.. ஓ.. ஜன்னலா.. எவ்ளோ ஏத்தனாலும் நம்ம ஊட்ட கரீக்டா கண்டு புச்சுடுவேன்.. நா யாரு.."

அப்பா அப்பா.. வேகமாக ஓடி வந்தவன் வாடை அதிகமா அடிக்கவே ரெண்டடி தள்ளி நின்றான்..

வாடா என் சிங்கக்குட்டி.. என்னாப்பா படிக்கிறியா.. நீ படிச்சு என்ன சாதிக்கப் போறே..??
ஏந் தலைவன்.. இந்த ஊரு எம்எல்ஏ எலெக்ஷன்ல நிக்கிறவரு.. என்னா பச்சிருக்காரு..? ஆறாப்பு.. ஆனா பெரிய படிப்பு படிச்சவன் எல்லாம் வேலைக்கு மனு குடுத்து கியூவுல நிக்கிறான் நாய் மாறி.. இதெல்லாம் உனக்கு சொன்னா எங்க புரியப்போகுது.. உனக்கு பீஸ் கட்டியே ஏன் சொத்தெல்லாம் போகப்போகுது.

"ம் க்ம்.. ஒழுங்கா சம்பாரிசிட்டு வர துப்பில்லை.. கச்சி கச்சின்னு நாயாட்டம் அலஞ்சு வீடே உருக்குலஞ்சு போச்சு.. எங்க இருக்கு சொத்து.. அழிக்கறக்கு..? அதான் எல்லாம் குடிச்சே அழிச்சாச்சு.."

"ஏய் என்னாடி அங்க தனியா கத்திக்கிட்டு இருக்கே.."

"அப்பா வருமைன்னா என்னப்பா...?"

"நாம எல்லாம் வருமைல தான் இருக்கோம் ராசா.."

"ஓ ராசா எல்லாம் வருமைல தான் இருப்பாங்களா.."

"..."

"தலைவர்கள்னா யாருப்பா.."

"அப்டி கேளு ராசா.. இப்போ அப்பாவுக்கு ஒழுங்கா ஜோலி இல்ல. எலக்ஷன் டைம் ஆச்சா.. நம்ம எம்எல்ஏ பாரு.. கொடி கட்ட கூப்ட்டாறு.. ஒரே நாளு.. முன்னூறு ரூபா.. ஒரு நாள் சோத்துக்கு வழி பண்ணீட்டாறு.. அவரு தான் தலைவரு..!!"

"நீ கெடுத்ததும் இல்லாம குடிச்சிட்டு வந்து ஏன் இப்படி பையனையும் கெடுக்கற...முந்தா நேத்து ராத்திரி போனது இப்பதான் வீடு கண்ணுக்கு தெரிஞ்சுதா..??"

"ஏய்.. என்னாடி தப்பா சொல்லீட்டேன்..? நேத்து ஒரு வேல.. மூனாந்தெருவுல இருக்குற அத்துன வீட்டுல இருக்குறவங்களுக்கும் பணப்பட்டுவாடா செய்யணும்.. ஓட்டுக்கு ஆயிரம் ரூவா... இந்தக் காலத்துல எவன் தருவான் சொந்தக் காசில இருந்து ஆயிரம் ரூவா...?? எந்தலைவரு கொடைவள்ளல்.. டே மாரி..காலைல அஞ்சர மணிக்கு மாரியம்மன் கோயில் கிட்ட 108 சத்தமில்லாம வரும்.. பணத்த எறக்கிக்க.. அந்த முட்டு சந்துல இருக்குறானே கணேசன், அவனும் அவன் கூட்டாளிகளும் வெட்டிப்பசங்க.. வீணா தேசியம் பேசிட்டு திரியறவிங்க.. அவங்க கண்ணுக்கு மட்டும் படாம எல்லா வீட்டுலையும் கதவு வழியா உள்ள போட்டுடு.. எலக்ஷன் முடிஞ்சவுடனே லம்பா ஒரு அமவுண்ட் தர்றேன்னாரு..

நல்லதா கூட மறச்சு மறச்சு செய்ய வேண்டி இருக்குது பாரு..காலம் கெட்டுப்போச்சு..

வெடியக்கால பணத்த குடுத்திட்டு இருந்தா எந்த எட்டப்பனோ போலீசுல போட்டுக் கொடுத்திட்டான்.. கொஞ்சம் இல்ல.. முடிசிருப்பாணுக... உன் தாலி தப்பிச்சிது.. மூஞ்சிய மூடி இருந்ததால அவனுகளுக்கு அடையாளம் தெரியல.."

"அடப்படுபாவி நீ எல்லாம் திருந்தவே மாட்டியா.. இதுல அவனுகள நீ எட்டப்பன்னு சொல்ற.. கடவுளே..இரு இரு.. பாத்துகிட்டே இரு.. உன் தலைவன் குடுப்பான் பாரு.."

"என்னாடி தரல..?? எல்லா வீட்டுக்கும் ஒரு டிவிதானடி குடுத்தாங்க.. நமக்கு மட்டும் எப்படிடி ரெண்டு டிவி வந்துச்சு..??அதுல ஒண்ண வித்து தாண்டி வட்டிகாரன் கடன அடச்சேன்.. ஒர்ருவா அரிசி ஒரு மூட்ட நமக்கு சும்மா தந்திருக்காரு.. வேற யாருக்காவது தந்தாரா.. டாஸ்மாக்குல சரக்கு என்ன வெல விக்குது.. கட்சிக்காரங்க கஷ்டப் படுறாங்கன்னு எங்களுக்கு ஓசியிலேயே குடுக்கறாரு.. வேற யாரு குடுப்பா...? மரியாதிக்கு பேசுறத நிறுத்திட்டு சோத்த போடுற.. நாளைக்கு வந்து தலைவருக்கு ஓட்ட போடுற.. மத்தவங்கள மாதிரி இல்ல... நமக்கு ஸ்பெஷலு.. ஐயாயிரம் ரூபா குடுக்கறேன்னு சொல்லி இருக்காரு.. ரெண்டு பேத்துக்கும் சேத்தி.. மூணு நாலு மாசம் மாங்கு மாங்குன்னு ஒழச்சாலும் கெடைக்காது தெரிஞ்சுக்க.."

"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."
"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."

செல்வம் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தான்..
--------

மக்களே.. இது போன்ற 'மாரி'கள் தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் என்பது நமக்கே நன்றாகத் தெரியும். இப்போது தமிழ்நாட்டின் கிராமங்களில் என்ன பேச்சு தெரியுமா..?

"பக்கத்துத் தெருவுல ஓட்டுக்கு ஆயிரம் ரூவா குடுத்திருக்காங்க.. நமக்கு வெறும் ஐநூறு தானாக்கும்.. இருவே.. அந்த எம்எல்ஏ எவ்வளவு தருவார்னு தெரியலே."

"மாப்ள ஓட்டுக்கு இருநூத்து அம்பது ரூபா தாரமுன்னு சொன்னாங்க. எரநூறு ரூபா தான் குடுத்தாங்க.. . தேர்தல் சமயத்துல தண்ணி பிரியாணி செலவுக்கு வேண்டி தலைக்கு அம்பது ரூபா மட்டும் இப்பவே புடிச்சிக்கிறதா சொன்னாங்க.. அது சரி.. எவன் அம்பது ரூபாய்க்கு தண்ணியும், பிரியாணியும் குடுப்பான்.."

நல்ல மக்கள்.. மக்களுக்கு ஏற்ற அரசு.. வாழ்க ஜனநாயகம்..

சாமக்கோடங்கி

10 பின்னூட்டம்:

DrPKandaswamyPhD said...

ஆகவே இந்த நாடு உருப்படும்னு நம்பிக்கிட்டு இருக்காங்க.

Chitra said...

"மாப்ள ஓட்டுக்கு இருநூத்து அம்பது ரூபா தாரமுன்னு சொன்னாங்க. எரநூறு ரூபா தான் குடுத்தாங்க.. . தேர்தல் சமயத்துல தண்ணி பிரியாணி செலவுக்கு வேண்டி தலைக்கு அம்பது ரூபா மட்டும் இப்பவே புடிச்சிக்கிறதா சொன்னாங்க.. அது சரி.. எவன் அம்பது ரூபாய்க்கு தண்ணியும், பிரியாணியும் குடுப்பான்.."

நல்ல மக்கள்.. மக்களுக்கு ஏற்ற அரசு.. வாழ்க ஜனநாயகம்..


......அவ்வ்வ்வ்...... !!!!! Reality bites! :-(

இளங்கோ said...

//"பக்கத்துத் தெருவுல ஓட்டுக்கு ஆயிரம் ரூவா குடுத்திருக்காங்க.. நமக்கு வெறும் ஐநூறு தானாக்கும்.. இருவே.. அந்த எம்எல்ஏ எவ்வளவு தருவார்னு தெரியலே."//
:(

சாமக்கோடங்கி said...

என்ன பின்னூட்டங்களில் ஒரே சோக முகமா இருக்கு... விடுங்க இளங்கோ. உங்களை மாதிரி ஆட்கள் தான் எங்களுடைய ஒரே நம்பிக்கை..

நன்றி சித்ரா அவர்களே. நன்றி டாக்டர் அவர்களே..

நாடோடி said...

என்ன‌த்த‌ சொல்ல‌..

விக்கிறோம்.. விக்கிறோம்.. எல்லாத்தையும் விக்கிறோம்..

selva said...
This comment has been removed by the author.
சாமக்கோடங்கி said...

என்ன செல்வா... நல்ல கமென்ட் தான போட்டீங்க.. ஏன் தூக்கீட்டிங்க.. நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான். நானும் என்னோட மனசாட்சி கிட்ட அப்பப்ப கேக்கறது உண்டு..

அப்புறம் இன்னொரு சந்தோஷம், என்னோட ப்ளாக எல்லாத்தையும் என்னைத் தவிர படிக்க இன்னொரு ஆளும் இருக்கார்னு நெனைச்சு சந்தோஷமா இருக்கு.. அடிக்கடி வாங்க..

அருள் said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

சாமக்கோடங்கி said...

வாங்க அருள்.. உங்களுடைய துணிச்சலுக்கும் செயலுக்கும் பாராட்டுகள்.

சிநேகிதி said...

:-((

Post a Comment