Saturday, July 31, 2010

சுற்றுலா... பகுதி 1 - நெல்லியம்பதி

சுற்றுலா என்றாலே சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், அமேரிக்கா போன்ற கனவுப் பிரதேசங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதில் பெரும்பங்கு நம் திரைத்துறையினருக்கு உண்டு. ஆனா நமக்கு அவ்வளவு தூரம் போக எல்லாம் வசதிப் படாது. பள்ளி, கல்லூரிகளில் படித்த காலத்தில் சுற்றுலா என்பதை வெறும் வார்த்தையளவிலேயே கேள்விப்பட்டு இருக்கிறேன். உண்மையைச் சொன்னா இப்ப ஒரு ரெண்டு வருஷ காலமாத்தான் வெளிய சுத்த ஆரம்பிச்சிருக்கேன். சும்மா ஒரு நாள் அல்லது ரெண்டு நாள் தான் எங்கேயாவது போவோம்.

அப்போது தான் தெரிய வந்துச்சு நம்ம ஊரைச் சுற்றி எத்தனை நல்ல அருமையான இடங்கள் இருக்குன்னு. இது ஒண்ணும் பெரிய பயணக் கட்டுரை இல்லை. நான் பார்த்த (அனேகமா எல்லாரும் பாத்து இருப்பாங்க..)இடங்களைப் பற்றியும் சில நல்ல அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இதன் மூலமா இந்தப் பகுதிக்கு ஏற்கனவே யாராவது போய் இருந்தால் அவங்களுடைய அன்பவங்களையும் எல்லாரும் கேக்கலாம்..

சிறுவயதில் இதுபோன்ற பகுதிகளுக்கு செல்லாததனால் தான் என்னவோ இங்கே எல்லாம் செல்வதற்கு எனக்கு கொள்ளை இஷ்டம். கம்பெனியில் அவுட்டிங் செல்ல உத்தேசிக்கும் போதெல்லாம் இடத்தேர்வுக் குழுவில் நான் ஒட்டிக் கொள்வேன். இதன் மூலம் இரண்டு நன்மைகள். ஒன்று அந்த இடத்தை கூட்டம் இல்லாமல் ஒன்று அல்லது இரண்டு பேருடன் ரசிக்கலாம். இரண்டு அந்த இடத்தை இரு முறை பார்க்கும் போது மற்றவர்களை விட நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்.(முதல்ல போகும்போது ஆகும் என்னுடைய செலவு, என்னுடைய கையிலிருந்துதான்..)

ஊட்டி எனக்கு மிக அருகில் இருப்பதால் தானோ என்னவோ அங்கே நான் அதிகம் சென்றதே இல்லை. ஆனால் சுற்றுலா பற்றிய நல்ல பிளாகுகளைப் படித்த பின்னர் தான் அதன் பெருமையை புரிந்து கொண்டேன். அது மட்டும் அல்ல மேற்குத் தொடர்ச்சி மலை பற்றிய பல நல்ல விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பெருவாரியான சுற்றுலாத் தளங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தான் அமைந்துள்ளன என்பது எனக்கு ஆச்சரியமான செய்தி..

அலுவலக சுற்றுலாவுக்காக நாங்கள் பார்த்த இடங்களில் முக்கியமானது "நெல்லியம்பதி". எங்கள் மாமா வீட்டிலிருந்து வெறும் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவுதான்.. அனாலும் இந்தப் பெயர் ஒரு இரண்டு மாதங்களாகத் தான் எனக்குத் தெரியும். கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள் என்று தேடியபோது எனக்குச் சிக்கியது இந்தப் பெயர். மற்றபடி அந்தப் பகுதியைப் பற்றி கூகிளில் எனக்குச் சரியான தகவல்க கிடைக்கவில்லை.

கடைசியில் தமிழ் வலைப்பக்கங்களில் தேடியபோது, வண்ணப் படங்களுடன் பலர் அவர்களின் நெல்லியம்பதி அனுபவங்களைப் பகிர்ந்து இருந்தனர்.(தமிழ் வலை நண்பர்களுக்கு நன்றி..). தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொண்டு நானும் என் நண்பர் முல்லைவாணன் என்பவரும் சேர்ந்து ஒரே பைக்கில் புறப்பட்டோம்...[படங்களில் கருப்பு பனியனில் இருப்பவர் என் நண்பர் முல்லை.. நீல நிற உடையில் நான்]

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. அன்று நான் வண்டி ஒட்டிய மொத்த தூரம் முன்னூறு கிலோ மீட்டர் (மேட்டுப்பாளையம் டு நெல்லியம்பதி போக வர).நான் அறுபத்தைந்து கிலோ, என் நண்பர் குறைந்த பட்சம் எழுபத்தைந்து கிலோ இருப்பார். அவருக்கு வண்டி ஓட்டத் தெரியாததினால் நானே மொத்த தூரத்தையும் ஓட்டினேன். வண்டி என்ன தெரியுமா..? ஸ்டார் சிட்டி 100CC.(?!?!)

[ஊட்டி சென்றிருந்த போது என் வண்டி இரண்டு பேரை மலை மேல் இழுக்காது என்று என் நண்பர்கள் கிண்டல் செய்தனர்.. நெல்லியம்பதி மலை ஏறிவிட்டு வந்து எல்லோரிடமும் காலரைத் தூக்கி விட்டுக் காட்டியது ஒரு இனிய அனுபவம்]

மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு போகும் வழியில் துடியலூரில் முல்லைவாணனைக் கூட்டிக் கொண்டு எட்டு மணிக்குள் ஆத்துப் பாலத்தைக் கடந்து விட வேண்டும் என்பது தான் திட்டம். அனால் சாப்பாடு முடிந்து சாவகாசமாக வாளையார் பகுதியைக் கடக்கும் போது மணி ஒன்பது. கேரளாவிற்குள் நுழைந்து விட்டோம் என்பதை காற்றும் காட்சிகளும் கண் கூடாக உணர்த்தின. முதலில் எங்களை வரவேற்றவர் ஏர்டெல் என்ற நண்பர். பாலக்காட்டிலிருந்து கொஞ்ச தூரப் பயணத்திற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து நெம்மாரா செல்லும் சாலைக்குள் புகுந்தோம். வண்டி ஓட்டும் களைப்பே தெரியாதவாறு இயற்கைக் காட்சிகள், இரண்டு புறங்களிலும் நெல் வயல்கள், வளைந்து வளைந்து செல்லும் நேர்த்தியான சாலைகள் என கண்களுக்கு ஒரே விருந்து தான்.

சத்தியமாகச் சொல்கிறேன்.. ஒரு சில விஷயங்களில் பைக்கு தான் பெஸ்ட்டு.!!! மத்ததெல்லாம் வேஸ்டு.!!!

குறைந்தது ஒரு பத்து இடங்களிலாவது நிறுத்தி விலாசம் விசாரித்திருப்போம்.நெம்மாரா அருகே ஒரு கடையில் ஏதாவது குடிக்கலாம் என்று நிறுத்தினோம். கடையில் பெப்சி, கோக்,மிரிண்டா,பாண்டா எதுவும் இல்லை. வெகு தூரம் சாயாக் கடையைத் தேடி அலுத்து விட்டதனால் எது கிடைத்தாலும் குடிக்கலாம் என்ற முடிவில் தான் அங்கு நிறுத்தினோம். என்ன அதிசயம்.!!?! கோல்டுஸ்பாட், காளிமார்க் போன்ற பிராண்டு குளிர்பான பாட்டில்கள் அங்கே இருந்தன.!!


இவை எல்லாம் என்னுடைய பள்ளிக் காலங்களோடு வழக்கொழிந்து விட்டன என்று நினைத்திருந்தேன். ஆனால் கடைசியில் தான் புரிந்தது உள்ளே இருந்த பானம் உள்ளூர்த்தயாரிப்பு என்பது. நண்பர் வேக வேகமாகக் குடிக்க ஆரம்பித்து விட்டார். சீரகத் தண்ணீர் தான்.. உடம்புக்கு நல்லது என்றார். எனக்கு என்னவோ அதில் சீரகத்தோடு கள் வாடை கொஞ்சம் வீசுவது போல் ஒரு சந்தேகம். கேட்டேன்.. இல்லை என்றார்கள்..இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஒரு மடக்கு குடித்து விட்டு வைத்து விட்டேன்.

முதலில் எங்களை வரவேற்றது போத்தூண்டி டேம்(படம் 2 மற்றும் 3).. ஆள் அரவமே இல்லாத ஒரு டேம். தண்ணீர் பச்சை கலந்த நீல நிறத்துடன் அழகாகக் காட்சி அளித்தது. சிறு பூங்கா அமைத்திருந்தனர். உக்கார்ந்து இளைப்பாற நேரம் இல்லாத காரணத்தால் அங்கே விண் முட்டிக் காட்சி அளித்த நெல்லியம்பதி மலை மீது வண்டியை விட்டோம்..

சும்மா சொல்லக் கூடாது.. தண்ணீர்க் குடத்தில் துளை போட்ட மாதிரி அங்கங்கே பொத்துக் கொண்டு ஓடும் சிறு சிறு அருவிகள் நீர்வீழ்ச்சிகள் வழியெங்கும் வரவேற்றன. முதல் அருவியைப் பார்த்தவுடனேயே வண்டியை நிறுத்தி விட்டு புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டோம். [சில புகைப்படங்களை அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும்].அங்கே எங்களைப் போன்றே பைக்கில் வந்தவர்கள் சொன்னார்கள், இங்கே நிறைய நேரம் செலவிடாதீர்கள்.. இன்னும் நிறைய அருவிகள் மேலே செல்லச் செல்ல உள்ளன என்று.உண்மைதான்.

குளுகுளுவென சுத்தமான அருவி நீர் கடவுளின் வரம்.. இந்த மலைகளில் தான் எத்தனை அதிசயங்கள் ஒளிந்து உள்ளன என்று வியப்பிற்கு உள்ளானோம்..

பதிவு நீளமாகி விட்டதால் நெல்லியம்பதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றி மேலும் சில தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

==============================
வீட்டில் நகைச்சுவை:
"அம்மா சோறு... அம்மா சோறு..!!" என்று சொல்லிக் கொண்டே கம்ப்யுட்டரைத் தட்டிக் கொண்டு இருந்தேன். அதைக் கவனிக்காததால் என் அம்மா தட்டில் சொறோடு வந்து அருகில் உக்காந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். டிவியில் "என் தாய் எனும் கோயிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே.." ராஜ்கிரண் பாடல் பாடிக் கொண்டு இருந்தது. "அம்மா சோறு கேட்டேனே எங்கே...?" என்று நான் சொல்லிக் கொண்டு திரும்பிப் பார்க்க என் அம்மா வாய் நிறைய சொற்றோடு திருதிருவென விழித்தார்... "தன் வயிறைப் பட்டினி போட்டு என்னுயிரை வளர்த்தவளே.." என்ற வரிகள் சரியாக ஒலிக்க வீட்டில் ஒரே சிரிப்பு..
==============================

Sunday, July 18, 2010

இப்படியும் யோசிக்கலாமே...

வணக்கம் நண்பர்களே..

எனக்கே தெரியுது ஒரே மாதிரி பதிவுகள் எழுதினா செம போர் அடிக்குமுன்னு.. ஆனா என்னத்த செய்ய.. ஒரு சில விஷயங்கள் மனதில் தோன்றுகின்றன.. ஒரு சில எண்ணங்கள் கை நுனி வரை வந்து விடுகின்றன.. ஆனால் ஒரு சில விஷயங்களே என்னை எழுத வைக்கின்றன.. அதனால மன்னிச்சுக்குங்க மக்களே.. இதுவும் அதே ராகம் தான்..

நான் படித்ததில் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்த விஷயம். எழுதத் தூண்டிய விஷயம். டாக்டர் ஆர் ஏ மஷேல்கர் என்பவர் கூறியது. அதில் உள்ள விஷயங்களைப் படித்த பிறகு தான் தெரிந்தது மாமனிதர்கள் எல்லோரும் வருங்காலத்தை யூகிப்பதில்லை.. அவர்கள் தான் வருங்காலத்தை வகுக்கிறார்கள்.. உங்களில் பல பேர் அந்த pdf ஐப் படித்திருக்கலாம்.. "காந்தியன் இன்ஜினியரிங்"


அது என்ன..? காந்திக்கும் இன்ஜினியரிங்குக்கும் என்ன சம்பந்தம்...? அந்தக் கொள்கை என்னவென்றால் "குறைந்த பட்ச உள்ளீடுகளின் மூலம் அதிக பட்ச பலன்களைப் பெற்று அதன் மூலம் அந்தப் பலனைப் பலபல பேர்களுக்குச் சென்றையச் செய்வது."

கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்..தூக்கம் போக, துக்கம் போக, குழந்தைப் பருவம் போக, தள்ளாத வயது போக, ஒரு மனிதன் வாழ்வது அதிக பட்சம் இருபது வருடங்கள் இருக்கலாம்.. பூமி கொடுத்திருக்கும் அனைத்து வரங்களையும் அனுபவிக்கும் உரிமை அதில் அனைவருக்கும் உண்டு அல்லவா..? செவ்வாய் கிரகம் போய் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு மனிதன் வளர்ந்து விட்டான். அனால் அந்தத் தொழில்நுட்பத்தால் இன்று பசியால் வாடும் ஏழைக்கு என்ன பயன்..? அதனால் பயன்கள் இல்லாமல் இல்லை. அனால் நாட்டிற்கு இப்போதைக்கு தேவை அனைவருக்கும் பயன்படக்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புகளே..

காந்தி எளிமை வாழ்வு வாழச் சொன்னார்.. அதன் உள்ளர்த்தம் அனைத்தையும் தியாகம் செய்வதல்ல.. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அதே போல புதிய கண்டுபிடிப்புகளும் தொழில் நுட்பங்களும் அனைவருக்கும் பலனளிக்க வேண்டும்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம். கைப்பேசி கண்டுபிடிக்கப் பட்ட பொது, அதை ஒரு சில செல்வந்தர்களால் மட்டுமே வாங்கி உபயோகிக்க முடிந்தது. அதன் மூலப் பொருட்களின் உண்மை விலை கைப்பேசியின் விலையை விடக் குறைவே.அனால் அந்தத் தொழில்நுட்பத்திற்கு தான் அந்த விலை."ஒரு தொலைபேசி அழைப்பானது ஒரு தபால் அட்டையின் கட்டணத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.." என்று திருபாய் அம்பானி சொன்னபோது அனைவரும் சிரித்தனர்.. அனால் இப்போதைய நிலைமையை கொஞ்சம் யோசியுங்கள்.. ஒரு சிறு பொறி எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறது.. இன்று மூன்று வேலை அடுப்பு எரியாதவர் வீட்டிலும் கூட குறைந்த பட்சம் மூன்று கைப்பேசிகள் என்ற நிலைமை உருவாகி இருக்கிறது.. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விலைக் குறைப்பின் மூலம் இதனைத் தயாரித்தவர்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை.. மாறாக பெரும் லாபமே. ஏனென்றால் உற்பத்தி அதிகரித்துள்ளதல்லவா...?

ஒரு காலத்தில் ஒரு அறையையே அடைத்தது போல் இருந்த கணினி இன்று நம் மடியில் உக்கார்ந்து கொள்ளும் அளவுக்கு சுருங்கி விட்டது ஆனால் அதனை விட பல மடங்கு வேகத்துடன்.. ஆனால் இதனால் பலன் அவ்வளவு இல்லை. நாம் யோசிக்க வேண்டியது என்னவென்றால், ஐம்பதினாயிரம் மதிப்புள்ள கணினியை அதன் செயல்திறன் மாறாமல் ஐந்தாயிரம் ரூபாய்க்கு கொடுக்க முடியுமா என்பது தான். ஏனெனில் அப்போதுதான் அது மேலும் பல லட்சம் பேரைச் சென்றடையும்.இது தான் காந்தியன் இன்ஜினியரிங்.


ரத்தன் டாடாவின் நானோவும் இந்த எண்ணத்தில் உதித்தது தான். ஆடம்பரமாக வாழ நினைப்பவர்களுக்கு இந்த விதி ஒத்து வராது. பூமி கொடுத்ததில் நமது வாழ்க்கைக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு அடுத்தவருக்கு வழி விடுவதே இதன் சாராம்சம். குறைவான விலையில் காரை வாங்குவதன் மூலம் நமது குறைந்த பட்ச கார் தேவையும் நிறைவடைகிறது. "இலவச சோலார் பேனலை கலைஞர் வழங்கினால்" என்று ஒரு பதிவு நான் எழுதி இருந்தேன். அது இப்போது ஞாபகம் வருகிறது.

சோலார் பேனல் இப்போது விலை ரொம்ப அதிகமே. அதையே குறைந்த விலையில் ஒருவர் தயாரிப்பாரானால், அது அனைவரும் வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். (ஒரு டிவியையே இலவசமாக வழங்குபவருக்கு இது சாத்தியமில்லையா என்ன...?)இதனால் அரசாங்கத்தின் மின்சார உற்பத்திப் பளுவும் குறையும்.மின்சாரத் தேவையில் நாமும் தன் நிறைவைப் பெற்று விடலாம்.

எனவே ஒரு தொழில்நுட்பமானது ஏழைகளுக்கும் பலனளிப்பதாக இருக்க வேண்டும்.அனால் விலைக் குறைப்பினால் தரத்தில் எந்தக் குறைவும் இருக்கக் கூடாது. தரம் தான் எப்போது தாரக மந்திரம். இரண்டு லட்சம் மதிப்புள்ள செயற்கைக் கால்கள் ஏழைக்கு எட்டாக் கனவே. எனவே விஞ்ஞானிகளே...அதே கால்களை இரண்டாயிரத்துக்கு தயாரிக்க முயற்சியுங்கள். ஒவ்வொரு ஏழைக்கும் அது பயன் தரும். ஒரு பொருளின் மதிப்பு, மனிதன் நிர்ணயித்ததே. தங்கம் என்பது மனிதனுக்கு மட்டுமே தங்கம். விலங்குகளுக்கு அது ஒரு கல்லைப் போன்ற பொருளே. மனிதனின் ஆசையால் இப்போது தங்கம் ஏழைகளுக்கு எட்டாக் கனி. அந்த நிலை இனி நீடிக்கக் கூடாது.

அரசு நினைத்தால் எந்த ஒரு பொருளையும் குறைந்த விலைக்குக் கொண்டு வர முடியும்.இதனால் பலன் அத்துனை கோடி மக்களுக்கும் சென்றடையும்.(அது தான் அரசின் கடமையும் கூட).

இளம் பொறியாளர் ஆஷிஷ் கவ்டே(Ashish Gawde)சொல்கிறார்.பன்னாட்டு நிறுவனங்களில் பணம் சம்பாதித்தது போதும். ஏழைகளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று. அவரது குறிக்கோள் இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களின் உள்ளிலும் வெளிச்சம் கொண்டு வர வேண்டுமென்று. அல்ட்ரா கபாசிடர் ஒன்றை மிதிவண்டியில் இணைத்து அதன் மூலம் எல்ஈடி விளக்கை எரியவைக்கும் சாதனத்தை அவர் தயாரித்துள்ளார். நான்கு நிமிடம் மிதிவண்டிச் சக்கரத்தைச் சுற்ற வைப்பதன் மூலம் நான்கு மணி நேரம் வெளிச்சம் பெற முடியும். என்ன ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு. ஆனால் அல்ட்ரா கபாசிடர் விலை ரொம்ப அதிகம். அரசு முன்வந்து இது போன்ற கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அதன் மூலம் இந்தியாவின் முதுகெலும்பை நிமிர்த்த வேண்டும். இயற்கை வளங்கள் அழிந்து வரும் நிலையில் இது போன்ற விஞ்ஞானிகள் வளர்க்கப் பட வேண்டும்.

எனவே எதிர்கால இளைஞர்கள் விஞ்ஞானிகள் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் தொழில்நுட்பங்களைப் படைக்க வேண்டும்.ஏனென்றால் பூமி கொடுத்த கொடை அனைவருக்கும் சொந்தம்..

அடுத்த பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கிறேன்.

நன்றி..

Tuesday, July 13, 2010

இறுதி அஞ்சலி....

மூன்று தலைமுறையாய் பலன் தந்த தெய்வங்கள்,
அடுத்த தலைமுறைக்காய் வழி விட்டு சாய்ந்தார்கள்..
குடை போல சாலை மூடி நிழல் தந்த என் தாய்கள்,
இன்று குடை சாய்ந்து தலைகீழாய் வீழ்ந்தே போனார்கள்..
சின்னப் பருவத்திலேயிருந்து நான் பார்த்த பசுமைகள்,
இனி எந்த ஜென்மத்திலும் அழியாச் சுவடுகள்...
அழகாக தலையாட்டிய என் ஊரின் செல்வங்கள்,
கொடுங்கோல் மனிதர்களால் காணாமல் போனார்கள்..
ஒருகை இயந்திரத்தால் பெயர்த்தெடுத்த மனிதர்கள்,
தன் இருகை சேர்த்தெடுத்து ஒரு கன்று நடுவானேயானால்,
அதுவே நம் மரங்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி..பேருந்தில் ஜன்னலில் ஓரத்தில் அமரும்போதேல்லாம் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு என்னைக் கடந்த அந்த பச்சைப் பசுமைகள், இன்று அடியோடு சாய்த்து எறியப் பட்டதைக் காணச் சகிக்கவில்லை. அனைவருக்கும் குளிர் நிழல் தந்த பெரிய பெரிய மரங்கள், இன்று வேரோடு பெயர்த்தேடுக்கப்பட்டு சாலையோரம் எங்கும் சிறு சிறு கட்டைகளாய் கிடக்கின்றன.. வழிநெடுக பிணத்தைப் பரப்பி ஒப்பாரி வைப்பதைப் போல உணர்ந்தேன்..
இப்பவும் அவை மனிதர்களுக்கு பலன் தந்தே இருக்கின்றன. மனிதனாய் பிறந்து நீ பிறருக்கு செய்தது என்ன...? நீ சாதித்தது என்ன...? என்று கேட்பதைப் போல உணர்கிறேன்..இந்த இயந்திர உலகில் எதைப் பற்றியும் யாருக்கும் கவலை இல்லை. புதிதாக சாலை அமைக்கப் போவதாய்ச் சொல்கிறார்கள்..அது எப்போது வேண்டோமானாலும் போடட்டும்.. உடனே அகலப் படுத்தப் பட்ட பகுதியில், புதிய மரக்கன்றுகளை நட்டால் பரவாயில்லை..

அதுவரை, வீழ்ந்த அந்த செல்வங்களுக்கு எனது இறுதி அஞ்சலி..