Sunday, January 23, 2011

உனக்கும் கீழே.. பகுதி 1

வணக்கம் நண்பர்களே..

என்னடா இது தமிழ்நாடு இப்படி இருக்கு.. எங்க பாத்தாலும் ரோடு சரியில்லை, அது இல்லை இது இல்லை என்று மனதுக்குள் எப்போதும் ஒரு புலம்பல் இருந்து கொண்டே இருக்கும். அது மட்டுமா, காலையில் கிளம்புவதில் இருந்து, மாலையில் வீடு திரும்பும் வரை பல நிகழ்ச்சிகள் மனதிற்கு திருப்தி தருவதாக இருப்பதில்லை.

வேலை விஷயமாக சென்ற வாரம் தியோகர் என்ற ஒரு மாவட்டத்திற்குச் சென்றிருந்தேன். அது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது. கொல்கத்தா வரை வான் வழியிலும், பிறகு அங்கிருந்து ரயிலிலும் தியோகரை சென்றடைந்தேன். ஒரு நாள் வேலை தான்.

ஹௌரா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பிரச்சினையில் கொஞ்ச நேரம் தங்க வேண்டியதாயிற்று. சத்தியமாக மனம் நொந்து போனேன். எங்கு பார்த்தாலும் சிகப்பு சிகப்பாக எச்சில்(பாக்கு, பான் போடப்பட்டதால் சிவந்திருந்து). படித்தவன்(?!?!), படிக்காதவன், அவன் இவன் என்று சகலரும் கையில் புகையிலையை வைத்துக் கசக்கிக் கொண்டே இருந்தனர். தரையை உத்துப் பார்த்துக் கொண்டே நடந்தேன், மறந்தும் மிதித்து விடக் கூடாது என்று தான்.

புதிதாக பயணசீட்டு பதிவு செய்து இருப்பதாகவும், அருகில் ஏதேனும் இணையதளம் இருந்தால் நகலேடுத்துக் கொள்ளும்படியும் நண்பர் கூற, ரயில் நிலையம் முழுக்க அலைந்து தோற்றேன். வெளியில் நடக்க ஆரம்பித்தேன். எங்கும் பரவியிருந்த மூத்திர வாடை, மங்கிய ஒளியைப் படர விட்டிருந்த மஞ்சள் விளக்குகள், அழுக்கு ஆடைகளுடன் கூடிய மக்கள், பெருக்கெடுத்து ஓடும் சாக்கடைகள், அதனருகிலேயே சுத்தமில்லாத முறையில் நடைபாதை உணவகங்கள், சராமாரியாக வண்டி ஓட்டும் மனிதர்கள் என்று எங்கு பார்த்தாலும் புன்னகைக்க முடியாத ஒரு சூழ்நிலை. அவ்வளவு பெரிய ஹௌராவில் ஒரு இணைய மையம் இல்லாமல் வெறும் கையோடு ரயில் நிலையத்துக்குள் நுழைந்தேன். (என்னைப்போலவே ஒரு வெளிநாட்டுக் காரரும் இணைய மையத்திற்காக அலைந்து கொண்டு இருந்தார்).

ரயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். நடைபாதை முழுக்க நடக்க முடியாதபடி குழந்தை குட்டிகள், பெட்டி படுக்கைகளுடன் மக்கள் படுத்து இருந்தனர். முழுமையாக ஏழ்மை வாசனையை இங்கு தான் நுகர்ந்தேன்.

பாட்னா செல்லும் ரயில் வந்ததாக அறிவிக்கப் பட்டதும், அரக்கப் பறக்க ரயிலின் மூன்றாம் தர பயணிகள் பெட்டியில் ஏற அவர்கள் அடித்துக் கொண்டது கண்ணில் இப்போதும் நிற்கிறது.

அடித்துப் பிடித்து தியோகர் வந்தடைந்தேன். காலையில் எழுந்ததும், நடைப்பயணம். அதே காட்சி, இன்னும் அழுக்காக. எங்கு பார்த்தாலும் சராமாரியாகத் துப்பும் மக்கள், எல்லோர் வாயிலும் சிவப்பு. எல்லா சுவர்களிலும் சிவப்பு, அழுக்கான வீடுகள், சாக்கடைகளை ஒட்டிய கூரைகள், அதிலும் கும்பலாக குடும்பங்கள். இன்னும் நிறைய.. ஒரே பதிவில் அடக்க முடியாது.

மாலையில் கொல்கத்தா திரும்ப வேண்டி ஜெசிடி ரயில் நிலையம் வந்தேன். உள்ளே நுழையவே முடியவில்லை. காலின் கட்டை விரல்களை மட்டுமே உபயோகித்து சாகச நடை நடந்தேன். ரயில் நிலைய மறக்கதவுகள் சிகப்புக் கரை படிந்து அழாத குறையாக நின்றன. அங்கேயும் மூட்டை முடிச்சுகளோடு ஏழை மக்கள். மூத்திர நாற்றம்.. ஐயோ சாமி, எப்படியாவது தமிழ்நாடு போய்ச் சேர்ந்து விடணும் என்று தோன்றியது.

உள்ளூர் பாசஞ்சர் ரயில் வர மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறுகையில் ஒரு அம்மாவின் தலையில் வைத்திருந்த அரிசி மூட்டை கீழே தள்ளப்பட, அரிசி கீழே சிதறியது. எல்லோரும் காலில் மிதித்து ஏறும்வரை காத்திருந்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அள்ள ஆரம்பித்து, கீழே அழுக்குத் தரையுடன் மொத்தத்தையும் கையால் கூட்டி எடுத்து மூட்டையில் சேர்த்தார்.(அங்கேயும் பான் எச்சில் துப்பப் பட்டிருந்தது). மனம் நொந்தே போனேன்.

என்னவொரு வாழ்க்கை, இந்த அரசாங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன..? எங்கிருந்து இத்தனை ஏழைகள்..? ஏன் இத்தனை வசதிக் குறைவுகள்..?

ஜோதிலிங்கத்தை தரிசிக்க வந்த இரண்டு தமிழ் யாத்திரிகர்களை அங்கே பார்த்தேன், அவர்கள் தமிழில் பேசியது காதில் விழவும், நானாகவே போய் அறிமுகப் படுத்திக் கொண்டு இவற்றைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தோம்.

அதில் ஒருவர் சொன்னார்.."நீங்கள் பரவாயில்லை, கம்பெனி காசு கொடுத்து விமானத்தில் அனுப்பி வைத்து இருக்கிறது.. நாங்கள் கையில் பத்தாயிரம் மட்டுமே எடுத்துக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றி வருகிறோம். சிக்கனப் பயணம். இந்த மக்களோடு தான் கும்பலாக மூன்றாம் தர பயணிகள் பெட்டியில் இடுக்கிக் கொண்டு எங்கள் யாத்திரை. என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் தமிழ்நாடு இன்னும் சொர்க்கம் தான், ஏழைகளாக இருந்தாலும் நம் மக்கள் பெரும்பாலானோர் சுத்தமாகவும், பொது இடங்களில் குறைந்த பட்ச நாகரிகத்துடனாவது நடந்து கொள்வர். இயற்கையான நிம்மதியான வாழ்வாதாரங்கள், தமிழ்நாட்டில் ஒருங்கே அமைந்துள்ளன. எங்கே நமது அரசியல்வாதிகள் வடநாட்டைப் போல நமது நாட்டை ஆக்கி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது"

சத்தியமாக இப்போது நானும் சொல்கிறேன்.. தமிழ்நாடு இன்னும் சொர்க்கம் தான்.. திரும்பி வந்த பிறகு என்னுடைய சாலைகள் அவ்வளவு கடினமாகத் தெரியவில்லை என்பதே உண்மை. இந்தியாவின் தென்பகுதி அழகுதான்.

ஏழைகளை இகழ்வாக நினைத்து சொல்லவில்லை.. நமது நாட்டின் சாபக்கேடினை புலம்பியிருக்கிறேன்.

இப்போது என் மனதில் தோன்றுவது..

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி..
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

தொடர்ந்து அலசுவோம்..

சாமக்கோடங்கி

Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்..




















ஏழாவது படிக்கையில,
மத்தியான சாப்பாட்டு இடைவேளைல,
சைக்கிள்ல கொரங்கு பெடல் அடிச்சு,
ஸ்கூலுக்கு வெளியில இருக்குற பாட்டி கடைக்குப் போயி,
எட்டணா குடுத்து பொங்கல் வாழ்த்து அட்டை கேட்க,
அது ஏதோ ஒண்ண உருவி குடுக்க,
வேண்டாம் பாட்டி, அந்த கத்தைய குடு,
நானே எடுத்தக்கறேன்னு சொல்ல, பாட்டி குடுக்க,
அளவில கொஞ்சம் பெருசா,
ஒரு பொங்கப் பானையும்,
அழகான ஓட்டு வீடும்,
ஒரு வெள்ளைப் பசுமாடும் கன்னும்,
அழகான சேலை கட்டி அம்மாவும்,
எடுப்பான வேட்டி கட்டி அப்பாவும்,
பட்டுப்பாவாடை போட்ட குட்டிப் பொண்ணும்,
மஞ்சள் சூரியனும் இருக்கும் அழகான ஒரு வாழ்த்து அட்டையை
பிரிச்சு எடுத்து, பின்னாடி திருப்பி,
பாட்டிகிட்டையே ரீபில் வாங்கி ஊதி ஊதி
"அன்பு நண்பனுக்கு பொங்கல் வாழ்த்து.., இப்படிக்கு பிரகாஷ்" ன்னு எழுதி,
அந்த பல்லு போன பாட்டிகிட்டையே ஸ்டாம்பையும் வாங்கி
எச்ச தொட்டு ஒட்டி,
பக்கத்து தபால் ஆபீஸ்க்கு கொரங்கு பெடல்லையே போயி,
எட்டாத ஒசரத்தில இருக்குற செகப்புப் பெட்டிகிட்ட எத்தி நின்னு,
அட்டையை பெருமிதத்தோட உள்ளே போட்டு,
எடக்கம்பியில மாட்டினா
எங்க போஸ்ட்டுமேனு கையில கிட்டாம
போயிடுமோன்னு இன்னும் கொஞ்சம் எட்டி,
கையால ஆட்டி விட்டு,
உள்ளே உழுந்தத ஊர்ஜிதம் பண்ணிக்கிட்டு,
பள்ளிக்குத் திரும்பையில,
சாப்பாட்டு நேரம் முடிஞ்சு போக
சத்துணவும் தீந்து போக,
வகிறு நெறையில்லின்னாலும்,
மனசு நெறஞ்ச அந்த சந்தோஷம்,...இன்னிக்கு,
ஐயாயிரம் ரூவா செல்போணுல
"ஹாப்பி பொங்கல்"னு குறுஞ்செய்தி அடிக்கையில வரலையே நண்பர்களே..
ஆமா.. வாழ்க்கையே குறுகிப் போச்சோ..
என்றைக்காவது எனக்கொரு வாழ்த்து அட்டை வராதா...


அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

சாமக்கோடங்கி

Sunday, January 2, 2011

விமர்சனம்

சாயங்காலம் வீட்டுக்கு கெளம்பற வேளையில மாப்ள.. படத்துக்குப் போலாமாடான்னு பசங்க கேட்க, தட்ட முடியாம கெளம்புங்கடான்னு சொல்லியாச்சு..

நூறடி ரோடு கங்கா யமுனா காவேரி தியேட்டர்கள்ல தலா காந்திபுரம், மன்மதன் அம்பு, --(ஒரு பெண்ணின் பெயர்)கொலைவழக்கு போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டு இருந்தன. இரண்டாவது படத்துக்கு டிக்கட் இல்ல(பசங்களுக்கு விருப்பமும் இல்ல), மூணாவது படம் ரூல்டு அவுட்.. ஆக முதல் படம் மட்டுமே ஒரே சாய்ஸ். மாப்ள படம் ஓரளவுக்கு இருக்கும்டான்னான் ஒருத்தன். எங்க ஊரு மேட்டுப்பாளையத்திலும் அது நான்கு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கவும் நல்லாத்தான் இருக்கும்னு போனோம்.

படம் தொடங்கிய இரண்டாவது நிமிடம் அது டப்பிங் செய்யப்பட்டது என்று உணர்ந்தபோது ஒருவரை ஒருவர் முகத்துக்கு முகம் திருதிருவென பார்த்துக்கொண்டோம். டே மாப்ள.. வருஷக் கடைசி அதுவுமா வந்து மாட்டிகிட்டோமேடா... டிக்கட் வெலை வேற எழுபது ரூவா..

அவ்ளோ தான்... படம் முடியற வரைக்கும் ஒரே ரகளை.. சிரிச்சு சிரிச்சு, தாடை முதல் அடிவயிறு வரையிலான அனைத்து உடல்பாகங்களும் வலிக்கும் அளவு சிரிச்சோம்..நாங்கள் பண்ணிய அதகளத்தில் முன்னிருந்தவர்களும் பின்னிருந்தவர்களும் கூட சிரித்தனர்.

விமர்சனமா...? அட அந்தப் படத்தில் கதைன்னு சொல்ல ஒண்ணும் இல்ல.. அப்புறம் தான விமர்சிக்க.. படத்துல எப்ப அழுகுராணுக, எப்ப சிரிக்கிராணுக, எப்ப சண்டை, எப்ப பாட்டு, எப்ப க்ளைமாக்ஸ் ஒண்ணுமே புரியல..வில்லன் வேற அடிக்கடி கண்ணுல மை போட்டுட்டு வந்து பயமுறுத்தினான். இதுல ஸ்பெஷல் என்னவென்றால், அவன் எதிரிகளைச் சுட்டதை விட தன்னுடைய ஆட்களைத் தான் அதிகம் கொன்றான். முடியல.. தலையில கை வெச்சுகிட்டு உக்காந்து இருந்தோம்.. அப்புறம் வந்தது வந்தாச்சு. கடுப்பிலையே எவ்வளவு நேரம் தான் இருக்கறது என்று சொல்லி தான் இந்த கலாய்ப்பு விஷயங்களைச் செய்தோம். வெளியில் வந்த பிறகும் கூட ஒரு நண்பன் "ஏய் சாலா , ஏய் சாலா" என்று கத்திக் கொண்டே வந்தான்.. அப்டீன்னா என்னன்னு கேக்கறீங்களா..?? அது தான் வில்லனின் பஞ்ச் டயலாக்.

அப்புறம் எதுக்கு இந்த பதிவுன்னு கேக்கறீங்களா?? நேத்து கடலோர கவிதைகள் படம் பாத்தேன்.
ஒவ்வொரு பிரேம்மையும் இயக்குனர் எப்படி செதுக்கி இருக்கிறார் என்று பார்த்து வியந்தே போனேன்.. ஏற்கனவே பார்த்து இருந்தாலும், காந்திபுரம் போல ஒரு படத்தை திரையில் பாத்து விட்டு வந்ததும் இந்த வித்தியாசத்தை நன்கு உணர்ந்தேன். கேமராவின் கோணம், சொல்லவந்ததை சொல்லிய திறமை, சத்யராஜ் முதற்கொண்டு அனைத்து நடிகர்களை நடிக்கவைத்த திறமை, படத்தை முடித்த விதம் என எல்லா விஷயங்களிலும் பாரதிராஜாவின் உழைப்பு எவ்வளவு மகத்தானது என உணர்ந்தேன்.

படத்தில் இன்னொரு விஷயம் இசைஞானியின் ஒலி விளையாட்டு.. படத்தோடு ஊன்றிப் பார்த்ததில் பின்னணி இசை ஒலிப்பதை மறந்தே போனேன். அதுதான் அவரது வெற்றி. பின்னணி இசையை கவனிக்க ஆரம்பித்தவுடன் அதிலேயே லயித்து விட்டேன். இயக்குனர் என்ன சொல்ல நினைக்கிறார், அந்த காட்சிக்கு என்ன இசை வேண்டும். இசை எவ்வளவு கதை சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாகக் காட்டி இருக்கிறார். பாரதிராஜாவுக்கு இசைஞானி இந்தப் படத்தில் சரிசமமாகக் கை கொடுத்திருக்கிறார் என்றே உணர்கிறேன்.

நான் என்ன சொல்ல வர்றேன்னா.... அதிநவீன கேமராக்கள், ஒலிஒளி அமைப்புக் கருவிகள், மற்றும் பல நவீன திரைப்படத் தொழில்நுட்பங்கள் அதிகம் இல்லாத காலத்திலேயே இவ்வளவு அழகான கதையைக் கோர்த்து ரசிகர்களுக்கு நிறம் மாறாமல் கொண்டு சேர்த்த இந்த படங்கள் எங்கே, அதற்கப்புறம் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து லேட்டஸ்டாக வந்திருக்கும் இந்தப் படங்கள் எங்கே.. உங்களுக்கு கதைக்குப் பஞ்சமா இல்லை இதுபோன்ற படங்களை நீங்கள் பார்த்ததில்லையா...?(கொடுமை என்னவென்றால் தெலுங்கில் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாம்.. ). வருஷக் கடைசியில் இப்படியும் ஒரு அனுபவம்..!?!?!

இதுவரை நான் எந்தத் திரைப்பட விமர்சனமும் எழுதியதில்லை..ஆனால் கடைசியில் என்னையும் விமர்சனம் எழுத வெச்சுட்டாங்களே...

புது வருஷமாவது என்னை விமர்சனம் எழுத விடாத அளவுக்கு படங்கள் வரணும்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்
சாமக்கோடங்கி