Thursday, March 10, 2011

கொதி நிலை - பாகம் 3

தினகரனில் வெளிவந்த செய்தி:
-----------------------------

இது எனக்கு தமிழமுதம் குழுமத்தில் வந்தது.. கொதிக்கும் கலனில் இதையும் போடலாம்.. இதற்கு என்னுடைய பதிலும் பின்பகுதியில் உள்ளது..


வெளிநாட்டு மோகம் போயே போச்சு...நாடு திரும்பும் இந்தியர்கள்
------------------------------------------------------------
http://www.dinakaran.com/specialdetail.aspx?id=30760&id1=22

அதென்ன இந்திய அமெரிக்கர், அமெரிக்க இந்தியர்? இரண்டு வகை இந்தியர்கள் உள்ளனர் அங்கே. ஒன்று, அமெரிக்காவில் பல தலைமுறையாகவே வாழ்ந்து வருவோரின் வாரிசுகள்; அவர்கள் முகத்தில், தோற்றத்தில் வேண்டுமானால் இந்திய களை கட்டும்; ஆனால், அவர்கள் முழுக்க முழுக்க அமெரிக்கர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பே செட்டில் ஆனவர்கள். சில ஆண்டுக்கு முன்பு குடியேறியவர்கள் இந்திய அமெரிக்கர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த இரண்டாமவரே இப்போது 25 லட்சம் பேர் வரை உள்ளனர்.

இதுபோல பிரிட்டனிலும் பல தலைமுறைகளுக்கு முன் சென்று செட்டில் ஆனவர்கள் பிரிட்டிஷ் இண்டியன்; சமீப ஆண்டுகளில் போய் செட்டில் ஆனவர்கள் இண்டியன் பிரிட்டிஷ். இவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும் என்று தகவல் சொல்கிறது.

இந்தியாவுக்கு போயிடலாம்!

சமீபகாலமாக வெளிநாட்டு மக்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். வரலாற்று, கலாசார, பாரம்பரிய இடங்கள், கோவா போன்ற பீச்
பகுதிகள், மகாபலிபுரம் போன்ற மகத்தான இடங்களைப் பார்க்கிறவர்கள், நமது வாழ்க்கை முறையையும் பார்த்து வியந்து போகின்றனர். காலை எழுந்ததும் காபி, டீ குடிப்பது முதல் இரவு படுப்பது வரை இந்தியர்களின் பழக்க வழக்கங்கள், விழாக்கள், சடங்குகள், சமுதாய அமைப்புகள் எல்லாம் வெளிநாட்டவரை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்று விடுகிறது. இந்தியா என்றாலே முகத்தை சுளித்தவர்கள், இப்போது மலைத்துப்போய் நிற்கின்றனர். செயற்கையான மேற்கத்திய வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை அவர்கள் உணர்கின்றனர். இப்போது பல தலைமுறைகளுக்கு முன் போய் செட்டில் ஆன அமெரிக்க இந்தியர், பிரிட்டிஷ் இந்தியர்களுக்கும் அதே நினைப்பு வந்து விட்டது. கடந்த இரண்டாண்டுகளில் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் வீடு வாங்கிக் குடியேறியவர்களில் இவர்களின் எண்ணிக்கையும் அடங்கும் என்றால் வியப்பில்லை.

வேலைக்கு இங்கே வர்றாங்க!

மாநகராட்சி பள்ளியில் படித்து, அரசு கல்லூரியில் பட்டம் முடித்து, வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்று பலரும் அலையும் நிலையில், அமெரிக்க இந்தியர்கள் பலரும் இப்போது தங்கள் பிள்ளைகளுக்கு இந்தியாவில் வேலை கிடைத்தால் போதும்; இங்கே அளவு அதிக சம்பளம் அங்கும் கிடைக்கிறதே என்று நினைக்கின்றனர். இந்தியாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களில் இவர்கள் கணிசமாக உள்ளனர். மும்பை, டெல்லி, பெங்களூரு தெருக்களில் இவர்களை பார்க்கலாம். இந்தியோ, தமிழோ சரிவர வராவிட்டாலும், பல தலைமுறைக்கு முன் இவர்கள் மூதாதையர் இந்த மொழி பேசியவர்கள்தான். தடுக்கியாவது பேசி பழகி வருகின்றனர்.

அமெரிக்காவில், அமெரிக்கனாக பிறந்த அமெரிக்க இந்தியர் நிலை மட்டுமல்ல... பத்து, இருபது ஆண்டுக்கு முன் போய் செட்டில் ஆன இந்திய குடும்பத்தினருக்கும்கூட இதே நினைப்புதான்! சம்பாதித்தது போதும் என்று அவர்களில் பலரும் சென்னை, பெங்களூரு என்று நகரங்களிலும், மதுரையை தாண்டிய கிராமங்களிலும் வீடு, நிலங்களை வாங்க ஆரம்பித்து விட்டனர். இவர்கள் திரும்பி வர காரணம் வேறு; இனியும் தங்கள் பிள்ளைகள் அமெரிக்காவில், பிரிட்டனில் வளர்ந்தால், அவர்களின் பழக்கவழக்கம்தான் வரும்; அப்புறம் சந்ததியே மாறி விடும் என்ற பயம்தான் காரணம்.

ஐயோடா, இங்கேயுமா பர்கர்

கிழக்கு கடற்கரை சாலையில் போய்ப் பார்த்தால் சில அமெரிக்க, பிரிட்டிஷ் முகங்களை பார்க்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் இந்தியர்கள். இங்கே வீடு வாங்கி குடியேறி இருப்பர். இவர்கள் தேடித் தேடி கீரை, காய்கறி என்று வாங்கி சாப்பிடுகின்றனர். பீட்ஸா, பர்கர் பக்கமே போக மாட்டார்கள். ‘‘அங்கேதான் பர்கர், பீட்ஸா என்று பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் சமாசாரங்களை சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது. இங்கே பார்த்தால் இவற்றை நம்மாட்கள் கொண்டாடுகின்றனர்; ஒரு தமாஷ் தெரியுமா? அமெரிக்கர்கள் கூட, காலையில் கேரட் போன்ற காய்கறிகளைத்தான் பச்சையாக சாப்பிடுகின்றனர்’’ என்கிறார் அவர்களில் ஒருவர்.

ஃபாரின் கனவு தேவைதான்; ஆனால் நாம் பலவற்றை இழப்போம் என்பது மட்டும் உறுதி என்று இவர்கள் சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டியிருக்கிறது.
-----------------------

சாமக்கோடங்கியின் பதில்:


//இந்தியா என்றாலே முகத்தை சுளித்தவர்கள், இப்போது மலைத்துப்போய் நிற்கின்றனர். செயற்கையான மேற்கத்திய வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை அவர்கள் உணர்கின்றனர்.//

சத்தியமாக செம காமெடியாக இருக்கிறது..

மலைத்துப் போகும் அளவுக்கு இங்கே ஒன்றும் இல்லை..எழுதியவர் நல்லா பூ சுத்தி இருக்கிறார்.. இந்தியா முன்னேற வேண்டும் என்றால் இந்த சுய தம்பட்டம் அடிப்பதை முதலில் நிறுத்தி விட்டு இந்தியா உண்மையாக ஒரு உன்னத நிலையை எட்ட சிறு உழைப்பையாவது செலுத்த வேண்டும்..

மலைத்துப் போக ஒன்று இருக்கிறது.. சமீபத்தில் நடந்த பலகோடிகோடி ஊழல்.. உலகமே திரும்பிப் பார்க்கும் ஊழல்.

மேற்கத்திய வாழ்க்கை செயற்கையான வாழ்க்கை என்று யார் சொன்னது..? ஒரு கலாச்சாரத்தில் பிறந்து வளரும் யாரும் செயற்கையாக வளர வாய்ப்பில்லை.. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தாவுபவன் தான், அங்கே இருக்கும் விஷயங்களைப் படிக்க முடியாமல் செயற்கைத் தனமாக வாழ நேரிடும். வெளிநாட்டுக் காரன் ஸ்பூனில் சாப்பிடுவதைப் பார்த்து இது செயற்கை வாழ்க்கை என்று நீங்கள் சொன்னால், அவன் கையில் உணவருந்த கஷ்டப் படுவதைப் பார்த்து நான் என்ன சொல்வது..? கையில் உணவருந்தும் நம்மைப் பார்த்து இது செயற்கை வாழ்க்கை என்று அவன் சொன்னால் ஒத்துக் கொள்வீரா..?? அவரவரது சுற்றுப் புற சூழ்நிலையைப் பொறுத்தே அவனது வாழ்க்கை முறை அமையும். இதில் செயற்கை எங்கே வந்தது..

மேற்கத்திய பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் எதிர்கால சந்ததிக்குப் பாதுகாப்பானதாக இல்லையா..?? சுத்த பேத்தல்..

இந்தியாவில் தான் இப்போது பாதுகாப்பு குறைந்து வருகிறது.. நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும், கவலைப் படாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கொள்ளைக் கூட்டங்கள், கோடிகளுக்காக எதனையும் விற்கும் அரசியலாளர்கள், அதிகார வர்க்கங்கள், மாபியா கும்பல்கள் இவர்களை நம்பி நாம் எப்படி பாதுகாப்பாக இருப்பது..?? எவனோ தூக்கிப் போடும் எலும்புத் துண்டுகளுக்காக நமது ராணுவ ரகசியங்கள்(?!?!?!) வெளியில் விற்கப் பட்டிருக்காது என்று என்ன நிச்சயம்..?? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. நாம் உபயோகிக்கும் ராணுவ உபகரணங்கள் பாதுகாப்பானவை தானா அல்லது அதனை வாங்குவதிலும் ஊழல் நடந்து தரக்குறைவான பழைய ஆயுதங்களைத் தான் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.. எப்படி பாதுகாப்பு உள்ளது என்று தெரியவில்லை..

ஜெர்மனி வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பனியிலேயே அலைகிறேன்..கூட இருக்கும் நண்பர் ஆறு வருடங்களாய் இருக்கிறார்.. சளி காய்ச்சல் என்று ஒன்றும் அவருக்கு வரவில்லை.. எங்கும் சுத்தமான காற்று, சாலை விதிகளை மதிக்கும் மக்கள், சுத்தம் சுகாதாரத்தை தினம் பேணும் அரசு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் தனது கைக்குள் வைத்துக் கண்காணிக்கும் அதிகாரிகள், எதிர்காலத்திற்கான தொழில்நுட்பங்களை வளர்க்கும் கல்விக் கூடங்கள்.. இவ்வளவு ஏன் ...நீங்கள் கடையில் வாங்கும் ஒவ்வொரு சிறு பொருளிலும் கூட அரசின் தரக்கட்டுப்பாடு சரிபார்க்கப் பட்டு உறுதி செய்யப் பட்டுள்ளது.. நமது நாட்டில் அரசின் ரேசன் கடைகளில் தான் தரக்குறைவே.. பிறகு அரசு எந்த லட்சணத்தில் இருக்கும் என்று சொல்ல வேண்டுமா..??

வீடு காட்டும்போதே, அதனுடைய வரைபடமானது அந்தப் பகுதி அரசு அலுவலகத்திற்குக் கொடுக்கப் படுவது மட்டுமல்லாமல், தீயனைப்ப்பு மற்றும் காவல் துறைக்கும் அது பதிவு செய்யப் படுகிறது, மற்றும் உங்கள் வீடானது எப்போதும் அவர்களின் தொடர்பிலேயே இருக்கிறது. அவசர விபத்து அது இது என்று ஏதாவது நேர்ந்து விட்டால், உடனுக்குடன் வந்து காப்பாற்றுகிறார்கள்.. இது நகரம் கிராமம், மூலை முடுக்கில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும்..

நமது நாட்டில் கும்பகோணத்தில் பிஞ்சுக் குழந்தைகள் படித்த ஒரு பள்ளிக் கூடம் எறிந்ததே நியாபகம் இருக்கிறதா..?? அந்த அலை அடித்து உடனே ஓய்ந்து விட்டது.. இன்னும் முழுப் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது என்று நினைக்கிறீர்களா..??

வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு ஒரு காரணம் இருக்கலாம்.. இது பணக்காரர்களுக்கான சொர்க்க பூமியாக மாறுகிறது..

எத்தனை லட்சங்களானாலும், அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல், சமாளிக்கலாம். மாட்டிக் கொண்டால், எவனையும் பணத்தைக் கொண்டே அடித்து வீழ்த்தலாம். இன்றே முதலீடு செய்து நாளை லாபம் சம்பாரிக்கும் எந்தத் தொழிலையும், தாராளமாகச் செய்யலாம். அமேரிக்கா மாறி நாட்டுலையே இருந்தா வரி கட்டியே சாகணும்.. சொத்து முழுக்க அழிஞ்சிடும்.,. காப்பாத்தனுமே..

நீங்கள் சொல்லும் அந்த வெளிநாட்டில் இருந்து திரும்பும் மக்களில் மிகக் குறைவான பேர்களே கிராமங்களை நோக்கிச் செல்கின்றனர்..(உறவுக்காரர்கள யாராவது இருக்கலாம் ).. மீதி எல்லாம், ஈசிஆர், கோவா, ஊட்டி போன்ற இடங்களில் ஈஸ்டேட்டுகளுடன் செட்டில் ஆகி விடுகின்றனர்..

மறுபடியும் சொல்கிறேன்.. இந்தியா பணக்காரர்களுக்கான நாடாக என்றோ மாறி விட்டது. ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாக்கி, எங்கே அவர்கள் வளர்ந்து படிப்பறிவு முழுமையாகப் பெற்று விட்டால், ஒட்டு வங்கிக்குப் பாதகம் வந்து விடுமோ என்ற உன்னத நோக்கோடு, 'நிம்மதியான' பாதுகாப்பான வாழ்க்கையை ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எட்டாக் கனியாகவே வைத்திருக்கும் அரசியில்வாதிகள் இருக்கும்வரை இந்தியா முகம் சுளித்துப் பார்க்கக் கூடிய நாடாகவே இருக்கும்.நேற்று ஆயிரம் ரூபாய் சம்பாரிப்பவன் இன்று பத்தாயிரம் ரூபாய் சம்பாரிக்கிரார்ன். ஆனால் அன்று ஐநூறு ரூபாய்க்கு மாத பட்ஜெட் போட்டு விடலாம், இன்று ஏழாயிரம் தேவைப் படுகிறது.. ஆக அவன் முன்னேற வில்லை, இன்னும் அந்த கோட்டைத் தாண்டாமலேயே நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கிறான் என்பது விளங்குகிறது.

போலியான மெடிக்கல் பில்லை கூட காட்டி வரிசெமிப்பு செய்து ஏமாற்ற மாட்டேன் என்று உண்மையான வரியைச் செலுத்தி நான் இந்தியன் சொல்லிக் கொண்டு திரியும் என்னைப் போன்றவர்கள் தினம் தினம் நாமம் போடப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று இந்த நாட்டுக்கே தெரியும்.

புகழ் பேசுவதை தயவு செய்து நிறுத்துங்கள். பழம்பெருமை பேசாதீர்கள். அது முதுகெலும்பு இருந்த நம் முன்னோர்களால் உருவாக்கப் பட்டது.

இந்தியாவில் பாதுகாப்பும், வாழ்வாதாரமும் ஏழை எளியவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கு, சத்தியமாக இல்லை. பசி பட்டினியோடும், தீராக் கடன்களோடும், சுற்றும் நமது நாட்டின் பெரும்பான்மைப் பகுதி அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

இந்தியாவின் செயற்கையான பகுதியைப் பார்த்து இயற்கை என்று ஏமாந்து இருக்கிறார்கள்...

--
நன்றி:சாந்தி,செல்வன் மற்றும் தமிழமுதம் குழுமம்.
--
நன்றி
சாமக்கோடங்கி.

19 பின்னூட்டம்:

Chitra said...

இரண்டு பக்க கருத்துக்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றி.

r.selvakkumar said...

//
போலியான மெடிக்கல் பில்லை கூட காட்டி வரிசெமிப்பு செய்து ஏமாற்ற மாட்டேன் என்று உண்மையான வரியைச் செலுத்தி நான் இந்தியன் சொல்லிக் கொண்டு திரியும் என்னைப் போன்றவர்கள் தினம் தினம் நாமம் போடப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
//
உண்மை..உண்மை..உண்மை...
உரத்துச் சொல்ல வேண்டும் என்பதால் 3 முறை சொல்லியிருக்கிறேன்.

ஜெய்லானி said...

//இந்தியாவின் செயற்கையான பகுதியைப் பார்த்து இயற்கை என்று ஏமாந்து இருக்கிறார்கள்...//

ம்.உண்மைதான் நடுநிலையான பதிவு ...!! :-)

//நாம் உபயோகிக்கும் ராணுவ உபகரணங்கள் பாதுகாப்பானவை தானா அல்லது அதனை வாங்குவதிலும் ஊழல் நடந்து தரக்குறைவான பழைய ஆயுதங்களைத் தான் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.. எப்படி பாதுகாப்பு உள்ளது என்று தெரியவில்லை//

இதை கேட்டாதான் இல்லை நினைச்சாதான் ஓரே பே(பீ)தீயா இருக்கு ..!!

ramalingam said...

மானம் கெட்ட பத்திரிக்கைகள்.

பட்டாபட்டி.... said...

ஹா..ஹா அருமை...//
வீடு காட்டும்போதே, அதனுடைய வரைபடமானது அந்தப் பகுதி அரசு அலுவலகத்திற்குக் கொடுக்கப் படுவது மட்டுமல்லாமல், தீயனைப்ப்பு மற்றும் காவல் துறைக்கும் அது பதிவு செய்யப் படுகிறது,
//


இந்த சிக்கல், பாம்பே தீவிரவாத பிரச்சனையின்போது எழுந்ததே..!!

கமெண்டோஸ் இடம் கொடுக்கப்பட்ட ஹோட்டல் வரைபடமும், உண்மையான கட்டிடத்தின் அவசர வழிகளும்.. கருணநிதி, ஜெயலலிதா மாறி, எதிர்திசைகளில் இழுத்துக்கிட்டு இருந்ததா, செய்திகள் சொல்லியது..


//புகழ் பேசுவதை தயவு செய்து நிறுத்துங்கள். பழம்பெருமை பேசாதீர்கள். அது முதுகெலும்பு இருந்த நம் முன்னோர்களால் உருவாக்கப் பட்டது.//

சாட்டையடி பிரகாஷ்...

இளங்கோ said...

பிரகாஷ், ஒவ்வொன்றும் நெத்தியடி..
கோபக் கனல் தெறிக்கும் வார்த்தைகள்...
//இந்தியாவில் பாதுகாப்பும், வாழ்வாதாரமும் ஏழை எளியவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கு, சத்தியமாக இல்லை.//
உண்மை பிரகாஷ்..

siva said...

அருமை...

ரஹீம் கஸாலி said...

thanks for sharing

எல் கே said...

no comment

சாமக்கோடங்கி said...

//Chitra said...

இரண்டு பக்க கருத்துக்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றி.
//

வாங்க சித்ரா அக்கா... இன்னும் எவ்வளவோ இருக்கு.. அதுக்கு இடையில இதையும் போடணும்னு தோனுச்சு...

சாமக்கோடங்கி said...

//உண்மை..உண்மை..உண்மை...
உரத்துச் சொல்ல வேண்டும் என்பதால் 3 முறை சொல்லியிருக்கிறேன்.//

பெருமைக்காகச் சொல்லவில்லை. என்னை விட மூன்று மடங்கு சம்பாரிக்கும் என்னுடைய நண்பர் சொல்கிறார் "நான் உண்மையாக வரி கட்டுகிறேன், கடந்த மூன்று வருடங்களாக எங்கள் குடும்பத்தினரால் கட்டப் பட்ட வரியைக் கொண்டு மட்டும், எங்கள் கிராமத்திற்கு அழகான இருவழிச் சாலை போட முடியும், ஆனால் அரசு நமக்கு என்ன செய்தது..? இன்னும் அதே புழுதி பறக்கும் மண் ரோடுதான்.." என்று.. நாம் என்ன பதில் சொல்ல..???

சாமக்கோடங்கி said...

//
இதை கேட்டாதான் இல்லை நினைச்சாதான் ஓரே பே(பீ)தீயா இருக்கு ..!!//

வாங்க ஜெய்லானி.. ஜப்பானில் தாக்கியது போல ஒரு சுனாமி இந்தியாவைத் தாக்கி இருந்தால் பலி எண்ணிக்கையை சற்று ஊகம் செய்து கொள்ளுங்கள்.. நமது இந்தியாவில் பாதுகாப்பு எப்படி, மனித உயிரின் மதிப்பு எவ்வளவு என்று புரியும்..

செல்வக்குமார் அவர்களின் வருகைக்கும் நன்றி..

சாமக்கோடங்கி said...

//ramalingam said...

மானம் கெட்ட பத்திரிக்கைகள்.
//

நமது ஊரில் கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டிடங்கள், மற்றும் பொதுச் சாலைகள் அனைத்தும் தரக்குறைவே.. அரசும் தரமாகச் செய்வதில்லை, தனியார் கட்டுமானக் காரர்களும், தங்கள் பங்குக்கு லாபம் பார்க்க தரம் குறைத்துக் கட்டுகிறார்கள்..

இதுல இந்தியா பாதுகாப்பானதாம்.. வெங்காயம்..

நன்றி ராமலிங்கம் அவர்களே.. தொடர்ந்து இந்த அலைவரிசையில் இனைந்து இருங்கள்...

சாமக்கோடங்கி said...

//
இந்த சிக்கல், பாம்பே தீவிரவாத பிரச்சனையின்போது எழுந்ததே..!!

கமெண்டோஸ் இடம் கொடுக்கப்பட்ட ஹோட்டல் வரைபடமும், உண்மையான கட்டிடத்தின் அவசர வழிகளும்.. கருணநிதி, ஜெயலலிதா மாறி, எதிர்திசைகளில் இழுத்துக்கிட்டு இருந்ததா, செய்திகள் சொல்லியது..
//

வாங்க பட்டா...

உள்ளுக்குள்ள ஒரு குடும்பமே தீ பிடிச்சு எரிந்து கொண்டிருக்கும்போது, ஒரு வரைபடத்தைக் கையில் வைத்துக் கொண்டு, "இங்கே ஒரு கதவு இருந்திருக்கனுமே, ஆனா இல்லையே..எப்படி உள்ள போகறது" என்று தீயணைப்புத் துறையினர் விழித்துக் கொண்டு இருப்பார்கள்..

சாமக்கோடங்கி said...

//இளங்கோ said...

பிரகாஷ், ஒவ்வொன்றும் நெத்தியடி..
கோபக் கனல் தெறிக்கும் வார்த்தைகள்...
//இந்தியாவில் பாதுகாப்பும், வாழ்வாதாரமும் ஏழை எளியவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கு, சத்தியமாக இல்லை.//
உண்மை பிரகாஷ்..
//

நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதை முதலில் உணர வேண்டும்.. அப்பொழுது தான் அதைச் சரி செய்யும் வித்தை நமக்குப் புரியும்..இப்போதிருந்தே முழுமூச்சுடன் தொடங்கினால், இன்னொரு நூற்றாண்டில் நம் தேசம் செழுமை அடையலாம்..ஆனால் பார்க்க நாம் இருக்க மாட்டோம்...

சாமக்கோடங்கி said...

//siva said...

அருமை...
//

தொடர்ந்து இனைந்து இருங்கள்.. நன்றி சிவா அவர்களே..

சாமக்கோடங்கி said...

//ரஹீம் கஸாலி said...

thanks for sharing
//

அது தானே நம்ம வேலை.. ஆனால் ஷேர் பண்ணினால், குறையப் போகும் பாரம் இல்லை இது. என்ன செய்ய...

சாமக்கோடங்கி said...

//எல் கே said...

no comment
//

வாங்க எல்கே... பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.. நமது வளர்ச்சிக்கு அது உறுதுணையாக இருக்கும்.. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டல்லவா..

Part Time Jobs said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

Post a Comment