
நான் என்னுடைய பள்ளிப் படிப்பை முடிக்கும்போது என் முன்னே இரண்டு பாதைகள் தெரிந்தன.. எல்லோரையும் போன்று "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது..." என்று பாட எனக்கும் ஆசை.. என் முன் தெரிந்த இரண்டு பாதைகளை நான் கூற விழைகிறேன்.. கொஞ்சம் எனக்காகப் பொறுமையாக படியுங்கள்..
பாதை 1: கண்டிப்பாக சொந்தமாக ஒரு நிலம் வேண்டும்.. தண்ணீர்..? எப்படியாவது கொண்டு வந்தே ஆக வேண்டும்.. உழைப்பு..? கிடைக்கும் வருவாய்க்கு மீறியதாகத்தான் இருக்கும்..
பாதை 2: நிலம் கிலம் எல்லாம் தேவை இல்லை. நீங்கள் வெறும் கையோடு வாருங்கள் வேலை தருகிறேன் என்றார்கள்.. பேச்சுத் திறமை, மூளையை நெளிவு சுளிவுடன் உபயோகிக்க வேண்டும்...
பாதை 1: வெயில், மழை என்றெல்லாம் பார்க்கக் கூடாது, வேலை செய்வதற்கிடையில் ஓய்வை எதிர்பார்க்கக் கூடாது. கொஞ்சம் இடைவேளை கிடைக்கும்போது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். களத்தில் தான் வேலை.
பாதை 2: வெளியில் மழை பெய்தாலும், கத்திரி வெயில் தாளித்து எடுத்தாலும் ஒன்றும் தெரியாத ஒரு செயற்கைக் குளிர்விக்கப்பட்ட அறையில் தான் பணி. அதுவும் பகலிலேயும் கூட விளக்கு வெளிச்சத்தில் தான் பணி செய்ய வேண்டுமாம்.
பாதை 1: யோசிப்பதற்கு அதிக நேரம் இல்லை. களத்தில் இறங்கியவுடன் வேலை.. உடல் உழைப்பு அதிகம் தேவை.
பாதை 2: ஒரு நாள் வேலைக்கு இரண்டு நாள் கூட ரூம் போட்டு யோசிக்கலாம்.
பாதை 1: பருவ கால மாற்றங்களால் விளையும் நஷ்டங்களுக்கு நானே பொறுப்பு, அரசு மானியம் என்ற ஒன்றைத் தரும். ஆனால் அதைக்கொண்டு ஒரு வாரம் காலம் தாட்டுவதே பெரிய விஷயம்.
பாதை 2: பருவ மாற்றங்கள்..? அப்படி என்றால் என்ன...?
பாதை 1: வாரம் ஏழு நாளும் வேலை தான்.. எட்டாவது நாள் கிட்டாதா...?
பாதை 2: வெறும் ஐந்து நாள் தான் இங்கு வேலை..
பாதை 1: இரவு நேரங்களில் கூட கண்காணிப்பு செய்ய வேண்டும். வெள்ளம் வந்தால் உடனே போய்ப் பார்க்க வேண்டும். சில சமயம் தூக்கமே வராது.
பாதை 2: ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு யார் சொன்னாலும் நான் வேலை செய்யத் தேவை இல்லை.
பாதை 1: சேமிப்பு என்று ஒன்றும் செய்ய முடியாது. நானும் என் குடும்பமும் கடைசி வரை அன்னாடங்காச்சியாகத் தான் இருக்க வேண்டும்.
பாதை 2: நான்கு அல்லது ஐந்து வருடங்கள் போதும்.. கார், வீடு என்று செட்டிலாகி விட முடியும்.
பாதை 1: என்னுடைய உழைப்பின் பலனை கண் முன்னே காணும்போது கண்கள் குளிரும், குளமாகும்.. அனால் வயிறு மட்டும் எரிந்து கொண்டே தான் இருக்கும்.
பாதை 2: உழைப்பின் பலனை கண்முன் காண முடியாது.. ஆனால் என்ன..? மாசா மாசம் சம்பளம் வரும்.
பாதை 1: சொந்தத் தாய் மாமன் கூட பெண் கொடுக்க முன் வர மாட்டான்..
பாதை 2: கொளுத்து வேலை பார்ப்பவன் முதல் கோடீசுவரன் வரையில் எனக்குப் பெண் கொடுக்க வருவார்கள்.. எங்கே போனாலும் மரியாதை தான். பார்டி அது இதென்று வாழ்க்கை நன்றாகப் போகும்..
பாதை 1: உழைத்துக் கொடுக்கும் எனக்கு கொஞ்சம் தான் மிச்சம். அனால் என்னிடம் பொருளை வாங்கி, பாலீஷ் போட்டு பெக்குகளில் அடைத்து விற்பனை செய்து(நடிகைகளை வைத்து கோடி கோடி செலவு செய்து விளம்பரம் வேறு..) உழைத்தவனை விட லாபம் பார்ப்பவர்கள் பண முதலைகள். கண்ணீர்க்கதை என்னவென்றால், அந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகைக்குக் கொடுக்கப்படும் ஒருநாள் சம்பளம், எனக்குக் கிடைக்கும் ஆறுமாதகால வருமானத்தை விட பத்து மடங்கு அதிகம்.
பாதை 2: எந்த முதலாளி எந்த விலைக்கு விற்றாலும் என்னுடைய உழைப்புக்கு(?!)மேல் எனக்குப் பலன் கொடுப்பார்கள்..(மற்ற தொழில்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது)
இப்போது சொல்லுங்கள்..! நான் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று..! பாதை 1ஐ தேர்ந்தெடுத்தால் இந்த உலகமே முட்டாள் என்று என்னைச் சொல்லும் என்று எனக்கும் தெரியும்..
அனால், இந்த முட்டாள் உலகத்துக்குப் படியளப்பவனே நான் தான்.. ஆம் நான் பாதை 1 ஐத் தேர்ந்தெடுத்தேன்..
நான்... விவசாயி...

மக்களே.. எனக்காவது இரண்டு பாதை காண்பிக்கப் பட்டது.. ஆனால், நம் நாட்டில் ஏறக்குறைய அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு பாதை மட்டுமே காண்பிக்கப் படுகிறது.. அதுவும், ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஊட்டப் படுகிறது.. பத்தாம் வகுப்பில் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் வகுப்பெடுத்த மாணவர்கள் பேட்டியளிப்பதைப் பாருங்கள்..
நாங்கள் தெரியாமல் தான் ஏமாளியாக இருப்பதாய் நீங்கள் நினைக்கிறீர்களா...? இல்லை இவர்கள் ஏமாளியாக இருக்கும் வரை தான் நமக்கு நல்லது என்று நீங்கள் சொல்கிறீரா...? உங்கள் எதிர்காலம் எங்கள் கையில் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.. நீங்கள் முன்னேறுங்கள், கோடி கோடியாய்ச் சம்பாரியுங்கள்.. நாங்கள் உங்களைத் தடுக்கவில்லை.. உங்கள் வயிற்றுக்குப் படியளக்கும் நான் என்றும் உங்களைக் கண்டு பொறாமைப் பட மாட்டேன்.. ஆனால், எங்கள் வயிற்றுக்குக் கிடைப்பதைத் தயவு செய்து தட்டிப் பறிக்காதீர்கள், அடிவயிற்றில் அடிக்காதீர்...
நன்றி..
விவசாயி..
