
ரொம்ப நாளைக்கு அப்புறம் என் நண்பன் ஒருத்தன பார்த்தேன்.. ஏதோ ஒரு கம்பெனி சாதனங்களுக்கு சர்வீஸ் மேனாக வேலை பார்க்கிறான். தெனமும் கொறஞ்சது ஆறு ஏழு இடங்களுக்கு வண்டியில பறக்கணும்.வேலை எல்லாம் எப்டிடா போகுதுன்னு கேட்டேன்..அவன் சொன்ன பதிலில் இருந்து இந்த இடுகையின் தலைப்பு ஆரம்பமாகுது...
"அதை ஏண்டா கேக்குற... நாய்ப்பொழப்பு..."
எங்க வீட்டுல ஒரு ரெண்டுமாச நாய்க்குட்டி இருக்குது..(பேரு ரெமோ) காலங்காத்தால நேரத்துல எந்திரிச்சிடுவான்.. வீட்டு கேட்ட தொறக்கும்போதேல்லாம், ஏதோ பெரிய வேலை இருக்குற மாறி அவசர அவசரமா வெளியில ஓடுவான். வேடிக்க பார்ப்பான்.. அடுத்த தடவ கேட்ட தொறக்கும் போது அவசர அவசரமா உள்ள ஓடி வருவான். என்னமோ உள்ள பெரிய பிசினஸ் இருக்குறா மாறி.. டைமுக்கு நல்லா வாங்கி கொட்டிக்குவான்.. அப்புறம் எதையோ வெட்டி முறிச்சா மாறி தூங்குவான்.. அப்புறம் அடுத்த நாள் காலையில இதே ஜோலி ஆரம்பம்..
இதுதான் உண்மையான நாய்ப்பொழப்பு...
ஆனா நம்ப வாழ்க்கைய கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன்..
காலைல நேரத்துல எந்திரிக்க வேண்டியது.. கொஞ்ச நேரம் மச மசன்னு யோசிக்க வேண்டியது..அப்புறமா கீ குடுத்த பொம்ம மாறி(இப்பெல்லாம் கீ குடுக்குற பொம்ம எங்க இருக்கு.. எல்லாம் பாட்டரி மாட்டுன பொம்மைகள் தான்..)அங்குட்டும் இங்குட்டும் ஓட வேண்டியது.. அப்புறமா தண்ணி சூடு பண்ணி-பல்லு வெளக்கி-குளிச்சு-துணி அயன் பண்ணி-பர்சு,சீப்பு,ஐடி கார்டு சகிதங்களை எடுத்து-அவசர அவசரமா ஷூ மாட்டி- ஓட்டமும் நடையுமா பஸ் ஸ்டாண்டுக்கு போய்-பஸ்ல தொத்தி-நசிஞ்சு போய் எறங்கி-கம்பெனிக்குப் போய்-ஏசி காத்துல உக்காந்து கம்ப்யுட்டர தட்டி-டீ ப்ரேக்-லஞ்ச் ப்ரேக்-பிரெண்ட்ஸ் கூட அரட்டை-சாயங்காலம் கெளம்ப வேண்டியது- அதே பஸ் சகிதங்கள் ரிவர்ஸில்-மப்டிக்கு மாறி சாப்புட்டு தூங்க வேண்டியது...
அடுத்த நாள் இதே வேலை...
சனி ஞாயிறு சொல்லவே தேவை இல்லை.. ரெமொவாச்சும் அப்ப அப்ப எந்திரிச்சு வெளிய போயிட்டு வருவான்.. முழிச்சிருக்கும்போது சுருசுருப்பாத்தான் இருப்பான்.. ஆனா நாமளோ கட்டில்லையே படுத்துட்டு, டிவி ரிமோட்ட கையில வெச்சிட்டு அந்த நாள் முழுசா அப்படியே போகும்..
உண்மையா நெனச்சுப் பாத்தா நம்ம பொழப்ப விட நாய்ப் பொழப்பு தேவலைன்னுதான் தோணுது.. ரெமோ சந்தோஷாமாத்தான் அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தீட்டுத் திரியறான்.. ஆனா நாம சந்தோஷமா இருக்கோமா..?
இப்படியே இதே மாறி நாம சுத்திகிட்டு இருந்தோம்னா நம்ம மண்ட நெசமா மழுங்கித்தான் போகும்.. அப்புறமா நம்ம புள்ளைங்க இதையேதான் செய்யப் போகுது..
ஆனா இத கொஞ்சம் நாம மாத்திகலாமொன்னு யோசிக்கும் போது பிறந்த ஐடியாக்கள்..
சிலவற்றை நான் செய்தும் பார்த்து விட்டேன்..
நம்மள சுத்தி இருக்குற எல்லா இடங்களிலும் நம்மள புத்துணர்வா வெச்சிருக்கிற பல விஷயங்கள் இருக்கு.. அத சரியா பயன்படுத்திக்கிட்டாலே, நம்மளோட அந்த நாள் வெறும் சரா சரி நாளாக இல்லாமல் கொஞ்சம் விருவிருப்பானதா வித்தியாசமானதா இருக்கும். நம்ம கொழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்..அவங்களோட திறமைகள கண்டுபிடிக்கவும் வசதியா இருக்கும்.(ஒரு லட்சியம் அமையும் போது அங்கே தவறான வழிகளில் மனம் செல்வது தவிர்க்கப் படும் என்று நம் முன்னைய இடுகையில் பார்த்தோம் அல்லவா..)
ஐடியா 1:
எப்பப் பார்த்தாலும் ஒரே பஸ் ஸ்டாண்டுல தானே இறங்குறோம்.. ஒரு நாள் ஒரு ஸ்டாப்பிங் தள்ளி எறங்கி நடந்து பாப்போமே..இல்லாட்டி ஒரு ஸ்டாப்பிங் முன்னாடி இறங்கலாம்.. சாயங்காலம் வீட்டுக்கு வந்து படுத்துத் தூங்கத் தானே போறோம்..? ஒரு அரை மணி நேரம் தள்ளி வந்தா என்ன ஆயிடப்போகுது...? ஆனா காலைல இத முயற்சி பண்ணினா அன்னைத்த வேலைக்கு ஆப்பு தான்..
நான் ட்ரை பண்ணிப் பார்த்தேன்... (அட காலைல இல்லப்பா, சாயங்காலம் தான்..) நல்லா தான் இருந்துச்சு..கொஞ்சம் சாயங்கால காத்துல மொள்ளமா சுத்தி முத்தி வேடிக்க பாத்துக்கிட்டே.. வீடு வரைக்கும்... டெய்லி முயற்சி பண்ண முடியல.. ஆனா வாரத்துல ஒரு தடவையாவது முன்னாடி ஸ்டாப்ல எறங்கி நடப்பேன்.. என்ன பண்றது நம்ம லைப்ல இப்டித்தான் கொஞ்சம் வித்தியாசம் கொண்டு வர முடியும்.
ஐடியா 2:
டைம் கிடைக்கும்போது...நம்மள சுத்தி இருக்குற பொருட்கள உத்துப் பார்ப்பது.. அது தாம்ப்பா.. கூர்ந்து கவனிப்பது... அப்டி என்ன இருக்குன்னு கேக்குறீங்களா..?நான் எடுத்த இந்த படங்களைப் பாருங்க.. இது தெனமும் நம்மள சுத்தி இருக்குற விஷயங்கள் தான்...
நான் கொஞ்சம் உத்துப் பார்த்தப்போ கெடச்சுது..





ஐடியா 3:
இது குழந்தைகளுக்காக.. நான் ஏற்கனவே என்னுடைய இருகையில் சொன்னது தான்.. "பினாலஜி ஸ்டடி" அதாவது மரங்களை உற்று கவனிப்பது அப்டீன்னு வெச்சுக்கலாம்..
இதுவும் ஒரு வகையில நம்ம தினசரி வாழ்க்கையில சின்ன சின்ன சந்தோஷங்கள் மாற்றங்கள் தரும் விஷயங்கள் தான்..
ஐடியா 4:
பக்கத்துல இருக்குற ஏதாவது பகுதிகளுக்கு சும்மா போயிட்டு வருவது.. ஆனா எந்த நோக்கமும் இல்லாமல்.. அப்பதான் நெறைய விஷயங்கள கவனிக்க முடியும்..(சட்னிக்கு தேங்கா வாங்கப் போனதெல்லாம் இந்த கணக்குல வராதுங்கோ..)
நான் கூட மலையேற்றம் போவேன்..
என்னடா போரடிக்கிறேன்னு பாக்குறீங்களா? விஷயம் இல்லாமல் நான் சொல்ல மாட்டேன். என் கம்பெனி கஸ்டமர்கள் ஜெர்மானியர்கள். அவர்களைக் கொஞ்சம் கவனிக்கும் போதும் மற்றும் உடன் வேலை செய்யும் மற்றும் ஜெர்மனி சென்று வந்த நண்பர்கள் சொன்ன சில விஷயங்கள் சில கீழே..
அவர்கள் நுண்மையாக யோசிக்கக் கூடியவர்கள். எதையும் பொறுமையாக அணுகும் தன்மை கொண்டவர்கள். அந்த நாட்டின் படைப்புகள் மிகுந்த தரத்துடன் (உதாரணத்திற்கு போல்க்ஸ்வாகன் காரை எடுத்துக் கொள்ளுங்கள்) இருப்பதற்கு காரணமா இதைச் சொல்லலாம்..
இந்த பொறுமைக்கும், நிதானத்திற்கும் மூலம் விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதாகும்.
நம் தலைமுறையினரிடம் இந்த கூர்ந்து கவனிக்கும் தன்மை குறைந்து வருவதை நினைத்தே இந்த இடுகை. நல்லா படிப்பது, பாடுவது போன்ற விஷயங்கள் இதிலிருந்து வித்தியாசப் பட்டது.. இது மிகவும் தேவையானது. (பத்து நிமிஷம் அட்வைஸ் பண்றா மாறி சீன் வந்தாலே தியேட்டர விட்டு தம் அடிக்க வெளிய வந்துடராணுக நம்ம பசங்க.. இது கூட அவங்க பொறுமைக்கும் கூர்ந்து கவனிக்கும் திறனுக்கும் ஒரு எடுத்துக் காட்டு தான். வெளிப்படையாகத் தெரியாது அவ்வளவுதான்).
நம் குழந்தைகளுக்கு இந்த திறனை வளர்க்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்...?
என்ன நண்பர்களே.. கூர்ந்து கவனிப்போமா..?
உங்க கிட்ட ஏதாவது ஐடியாக்கள் இருந்தால் இங்கே பகிருங்கள்.. அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்..
நன்றி..