
"எப்படிங்க மேட்டுப்பாளையம் ரோட்டுல வண்டி ஓட்டிட்டு வர்றீங்க...?" எப்போதாவது நான் ஆபீஸ்க்கு வண்டி எடுத்திட்டு போனா அதிகமான பேரு கேக்குற கேள்வி.. கோயம்பத்தூர்ல இப்ப வண்டி ஓட்றதே கஷ்டம், அதுவும் மேட்டுப்பாளையம் ரோடுன்னா அவன் அவன் அரண்டு ஓடுறான்..ஆமாங்க ரொம்ப சின்ன ரோடு, அங்க அங்க ஆள விழுங்குற அளவுக்கு குண்டுங்குழி. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜான்னு பாடும்போது எம்.ஜி.ஆர் குலுங்குவாரே அந்த மாறி தான் வண்டி ஓட்டனும்..
மொதல்ல கஷ்டமா தான் இருந்துச்சு.. ஆனா "அப்புறம் பழகிப் போச்சு.." அட இந்த ப்ரைவேட் பஸ் காரனுக ஒருத்தன ஒருத்தன் ஓவர் டேக் பண்றதுக்கு காட்டுற சாகசங்கள் சொல்லி மாளாது.. விஜயகாந்த் மாறி ரெண்டு வீல்ல வண்டி ஓட்ரானுக....கம்பிய புடிச்சி நின்னுட்டு போறவனுக வீடு போய்ச் சேர்ரதுக்குள்ள பாட்டாப் பட்டி கிழிஞ்சு டார் டார் ஆய்டும்..அதுவும் கடைசி படிய விட்டு கால கீழ வெக்கரதுக்குள்ள விசில் அடிப்பான் பாருங்க.. தெறம இருந்தா பொழச்சுக்கலாம்..50 பேர் உயிரை விட, அஞ்சு நிமிஷம் முன்னாடி போறதுதான் அவனுக்கு முக்கியம்.. எப்படி இவனுகளால முடியுது...? "எல்லாம் பழகிப் போச்சு.."
கரண்டு போனா வெளக்கு வெக்க பழகிப் போச்சு..காசு குடுத்தா ஓட்டு போட பழகிப் போச்சு.. வெலையேருனா நொந்துக்கிட பழகிப் போச்சு.. எங்க கம்பெனில வேல பாக்குற ஒரு ஜெர்மன் காரர் தெனமும் நொந்துக்குவார்.. இந்தியா ஏன் இப்படி இருக்குன்னு.. "எல்லாம் பழகிப் போச்சு.." இது தான் பதில்.. முதலில் அவமானமாத் தான் இருந்துச்சு.. அவர் அடிக்கடி அவர் புலம்புறதால் "அதுவும் பழகிப் போச்சு..."
ஏன் இதெல்லாம் பழகிப் போச்சு...? வெளிப்படையாக உள்ள நம்மோட சோம்பேறித் தனத்தினால தான்.. ஒரு தனி மனுஷனா ஒரே பாட்டுல இந்த ஊரத் திருத்தறது நம்ம ஊரு ஹீரோகளால தான் முடியும்(அதையும் பாத்து நமக்கு பழகிப் போச்சு..) நான் எப்போதும் சொல்றது நம்மளோட தனி மனித ஒழுக்கத்தைப் பத்தி தான்.. மாற்றங்கள் என்னைக்குமே கொஞ்சம் கொஞ்சமாத் தான் வரும்..
நாம் ஏமாளியாக இருக்க ஒத்துக் கொள்வதினால் தான் நம்மை ஏமாற்றத் துணிகிறார்கள்.. சில விஷயங்களைக் கூர்ந்து கவனித்த போது கிடைத்தவை இங்கே..
ஒரு கார் விளம்பரம்.. ஒரு அம்மா தன் கைக்குழந்தையுடன் ஒரு காரில் தூங்குகிறாள்.. அந்த வண்டி ஒரு குண்டுங்குழி உள்ள சாலையைக் கடந்து செல்கிறது.. உள்ளுக்குள் ஒரு ஆட்டமும் இல்லை.."இத்தாலியன் இன்ஜினியரிங்.. மேட் பார் இந்தியன் ரோட்ஸ்.." என்னைக்காவது யோசித்திருப்போமா...அவனுடைய பொருளை இங்கே விற்பதற்கு நம்முடைய நிலைமைய கிண்டல் பண்றான்.. உண்மையைத்தான் சொல்றான்.. ஆனால் அவனுக்கு என்ன தைரியம்..? ஏன்னா, நம்மளோட மனச நல்லா படிச்சு வெச்சிருக்கான்..நம்ம ஆளுக காரையும் அதன் தரத்தையும் பார்த்து வியக்க மட்டுமே செய்வாங்க, ரோடு ஏன் இப்டி இருக்குன்னு வருத்தப் பட மாட்டாங்க'ன்னு அவனுக்கு நல்லாத் தெரியும்..
அருமையான ஒரு தொழில்நுட்பத்தை நம்ம ஆளுகளுக்காக மாற்றி அமைக்கிறாங்க.. ஏன்னா நாம மாற மாட்டோம்..
இந்தியாவில் இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களும், நம் தரத்திற்காக மாற்றப் படுகின்றன... உண்மையைச் சொல்லப் போனால் தரம் குறைக்கப் படுகின்றன.
நான் கார்மென்ட்சுல வேல செஞ்சப்போ, அங்க துணிகள தரம் பிரிப்பாங்க. முதல் தரம் இரண்டாம் தரம் எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகி விடும். மூன்றாம் தரப் பொருட்கள்
(அதாவது தரம் குறைந்த)நம் உள்ளூரில் விற்பனைக்கு விடப் படுகின்றன.. அநேகமாக நாம் அணியும் பிராண்டட் ஷர்ட் பேண்ட் எல்லாம் இந்த ரகமாகத்தான் இருக்கும்..ஒரு தாய் தன் தூய தாய்ப்பாலை விற்பனை செய்து விட்டு குழந்தைக்கு மிச்ச மீதியைக் கொடுத்தால் நாம் ஒத்துக் கொள்வோமா நண்பர்களே..?
மற்றவர்களுக்கு நல்ல தரத்தைக் கொடுப்பதை நான் தப்புன்னு சொல்ல வரல.. ஆனால் நமக்கு ஏன் அந்த தரம் தேவை இல்லைன்னு தோணுது. நமக்கு இது போதும் என்று நாம் எப்படி முடிவு செய்தோம்..?
இனி மேற்குறிய என்னுடைய சிந்தனையோடு இந்த விளம்பரங்களைப் பாருங்கள்...
"இதோ வந்து விட்டது சேர்வோ என்ஜின் ஆயில்.. இனி கடினமான சாலைகளிலும் உங்கள் எஞ்சினைப் பாதுகாக்கும்.."
"உங்க ஆபீசுக்கு நடந்து நடந்து செருப்பு தேஞ்சு போச்சு.. அட நீங்க பாரகன் ஆபீஸ் சப்பல் போடலையா..?'
இவை வெறும் சாம்பிள் தான்.. இன்னும் எவ்வளவோ உள்ளன..
உடம்பில் போடும் சோப்புக்கு என்ன தேவை..? நல்ல சுத்தம் செய்யும் சொப்பாக இருக்கணும்.. கிரகப் பிரவேசத்திற்கும் சோப்பிற்கும் என்ன சம்பந்தம்..? விளம்பரங்கள், மட்டுமல்ல, நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் நம்முடைய இன்றைய மன நிலைமையை படம் போட்டுக் காட்டி கொண்டு தான் இருக்கின்றன..ஆனா நமக்குத் தெரியறதில்ல.. ஏன்னா.."நமக்கு எல்லாமே பழகிப் போச்சு.."

சவுதியில இருக்கும் ரோடுல சாப்பாடு போட்டு கொழம்ப ஊத்தி பெசஞ்சு அடிக்கலாமாம்..அவ்வளவு பளபளன்னு இருக்குமாம்.. ஆட்ட அனக்கமே இல்லாம ரொம்ப தூரம் ஒட்டுனவுங்க தூங்கிடக் கூடாதுங்கரக்காக அங்கங்க வேணுமுன்னே சிறு சிறு மேடு பள்ளங்களை வச்சிருக்காங்களாம். நம்ம தரம்....?
ஜெர்மனியில பெரிய பெரிய நகரங்களிலேயே கூட்டமே கிடையாது. அப்ப கிராமங்கள்ள எப்படி இருக்குமுன்னு யோசியுங்க.. இருந்தாலும் நாலு ரோடு சந்திப்புகள்ள, டிரைவர் வண்டிய நிறுத்தி, ரெண்டு பக்கமும் வண்டி வருதான்னு பொறுமையாப் பாத்துதான் வண்டிய எடுப்பாங்களாம்..நம்ம பொறுப்புணர்ச்சி..?
ஜெர்மனியிலிருந்து என்னோட பிரெண்ட் கெளம்பும்போது மிச்சம் மீதி இருந்த சமையல் பொருட்கள் அத்தனையையும் வீணாக்காமல் வாங்கி வைத்துக் கொண்டார்களாம் அவர் தங்கி இருந்த வீட்டு உரிமையாளர்.. இதனால் அவர்கள் ஒன்றும் பிச்சைக் காரர்கள் என்று அர்த்தம் இல்லை.. பொருட்கள் வீணாகக் கூடாது என்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை நம் கண்ணுக்கு எப்போதும் போல் வித்தியாசமாகத் தான் தெரியும்.
அவர்கள் கண்ணோட்டங்கள் சற்று மாறுபட்டவை.. நமக்கு கண்ணோட்டம் உள்ளதா இல்லையா என்பதிலேயே எனக்கு சந்தேகம் உள்ளது..

வெளிநாடுகள்ல தடை செய்யப் பட்ட பல மாத்திரை மருந்துகள் நம்ம ஊர்ல விற்பனை ஆவது ஏன்..?
ஒண்ணும் இல்லை நண்பர்களே.. நம்முடைய நிலைமையை நாமே தாழ்த்திக்கொள்வதை நாம முதலில் நிறுத்திக்கணும்...அப்புறம் வெட்டி பந்தாவையும் கொஞ்சம் ஓரம் தள்ளி வைக்கணும்.. தரமான பொருட்கள சரியான விலையில் வாங்கணும்.. யாருக்காகவும் நமது தரத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது...
அதுக்கு முதல்ல நம்மள நாம உயர்வா நினைக்கணும்.. நாம எந்த விதத்திலும் யாருக்கும் குறைஞ்சவங்க இல்லைங்கற உணர்வு எங்க போனாலும் இருக்கணும். இப்பத்திக்கு இந்த பயிற்சி ஒண்ணு போதும்னு நான் நெனைக்கிறேன்..இதே பெருமித உணர்வோட எல்லா விஷயங்களையும் அணுகினா வித்தியாசம் தெரியும். நமது இந்த நிலைமை மாறும்..
"இத்தாலியன் தொழில்நுட்பம் இப்போது இன்னும் மெருகேறி இந்தியர்களுக்காக...!"
என்றொரு விளம்பரம் நம் காதில் ஒலிக்கும் நாள் வருமா..? அது நம் கையில்தான் உள்ளது..
பி.கு:உங்கள் பின்னூட்டங்களும் ஓட்டுக்களும் நான் செல்வது சரியான பாதையா என்பதைத் தீர்மானிக்கும்... நன்றிகள் பல..