Sunday, May 16, 2010

மனமூடி - 2


உலகத்திலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பஃப்ஃபெட் பற்றி சமீபத்தில் எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது.. சற்று ஆச்சிரியமான மனிதர் தான். அந்த மின்னஞ்சலில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், அவர் இன்றுவரை தங்கியிருப்பது ஒரு சிறிய வீடாம்... அதுவும் அவருக்கு திருமணமாகும்போது வாங்கியதாம்.

நாமெல்லாம் கொஞ்சம் சம்பாதிக்கத் தொடங்கியதும், நம் மனதுக்கு முதலில் தோன்றுவது, நமக்கென்று ஓர் சொந்த வீடு. ஆனால் அந்த ஆசை அதே அளவில் இருப்பதில் தவறில்லை. சம்பாத்தியம் கொஞ்சம் அதிகமாகும்போது, அதே சிறிய வீடு நமக்கு போதுமா...? உண்மையில், தேவைக்கேற்ப நம் மனது ஆசைப்படுமானால் அந்த வீடு போதுமானதே. அனால் நம் மனது அதை ஒப்புக்கொள்ளாது.. நமது அந்தஸ்துக்கு(?!) ஏற்ப ஒரு வீட்டைத் தேடச் சொல்லும்.. இது தான் நண்பர்களே நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகும் மனமூடி.

இந்தச் சிறிய வீட்டில் அவர் இருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது வாரன் பஃப்ஃபெட் கூறிய பதில் இதுதான். நான் இருக்கும் நான் இருக்கும் வீட்டிலேயே எனக்குத் தேவையான எல்லாம் இருக்கிறது... இந்த வரிகளைக் கொஞ்சம் கவனியுங்கள் நண்பர்களே... போதும் என்ற சொல் நம் உள்மனதைப் பொறுத்தது.. வேண்டும் வேண்டும் என்று சொல்வது நாமாக நம் மனதுக்கு போட்டுக் கொண்ட மூடி... அதற்குச் சொல்லப் படும் சில காரணங்கள் நியாயமானவை. ஆனால் பல காரணங்கள் சப்பைக் கட்டே...

சமீபத்தில் ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார், நாம் சில இடங்களில் கவுரவத்திற்காகவாவது சில விஷயங்களைக் கடை பிடிக்க வேண்டும் என்று... அதாவது திருமணங்களுக்குச் செல்லும்போது தங்க நகை அணிந்து செல்ல வசதி இல்லை என்றால் கவரிங் நகை வாங்கி அணிந்து செல்லலாம் என்று.. இதை ஒத்துக் கொள்ளலாம். பல இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் சென்றால் மரியாதை இருப்பதில்லை.. வாடகைக்காவது கார் வைத்து அங்கே செல்லலாம் என்றும் சொல்லி இருந்தார்கள்.

விஷயத்தைச் சற்று உற்றுப் பார்ப்போமானால், அங்கே வருபவர்களில் பெரும்பாலானோர் கவரிங் நகை அணிந்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலானோர் வாடகைக் காரில் வந்தவர்களாகத் தான் இருப்பார்கள். ஏனென்றால் நம் சமூகமே ஒரு பெரிய வீண்கவுரவத்தில் கட்டுண்டிருக்கிறது. நம்மிடம் இருப்பதை பெருமையாக நினைக்கும் பட்சத்தில் (வாரன் பஃப்ஃபெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்) இந்த பிரச்சினையே இல்லையே.. நமக்காக எப்போது வாழப் போகிறோம்..?

நான் என்னுடைய பைக்கில் செல்வதையே பெருமையாக நினைக்கிறேன்.. பல இடங்களில் ஹெல்மெட்டுடன் செல்வதை சிலர் கவுரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள்... எனக்கு அப்படித் தோன்றவில்லை... நம்மிடம் உள்ள பொருளை மிகவும் நேசிக்கும்போது அது மற்றவர்களின் பொருட்களை விட நமக்குத் தரம் கூடியதாகவே தோன்றும்.உங்கள் தேவைக்காக வாங்குங்கள்.. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து வாங்காதீர்கள்.. உண்மையைச் சொல்லப் போனால் நம் அனைவரிடமும் ஒருவகை மனமூடி இருக்கவே செய்கிறது..

உதாரணத்திற்கு வெயிலில் செல்கிறோம்.. சூடு மண்டையைப் பிளக்கிறது.. கையில் இருக்கும் கைக் குட்டியைத் தலையில் போட்டுக் கொள்ளலாம்.. அனால் நம்மில் சிலர் அதைச் செய்ய மாட்டோம்.. காரணம் தலை கலைந்து விடும் அல்லது ரோட்டில் போகிறவர்கள் நகைப்பார்கள். கடைசியில் அவர்கள் எல்லாரும் சிரித்து விட்டு போய் விடுவார்கள். அவர்களா வந்து நம் மண்டை சூட்டை தணிக்கப் போகிறார்கள்...? இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

இன்னும் நமக்குள் இருந்து கிழித்து ஏறிய வேண்டிய நிறைய மனமூடிகள் உள்ளன. ஆடம்பரம் தவிர்த்து தேவைக்கேற்ப வாழ்வதே உண்மையான கவுரவம் என்பதை வாரன் பஃப்ஃபெட் பற்றிய மின்னஞ்சல் எனக்கு உணர்த்தியது. ஒரு குடும்பத்துக்கு எது தேவையோ அதை வைத்துக் கொண்டு வாழும்போது நல்ல மனிதனாகலாம். கையில் இருக்கும் சிறு பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும்போது அவர்கள் தானாக மாமனிதர்கள் ஆகி விடுகிறார்கள்.

என் நண்பன் அந்த மின்னஞ்சலைப் படித்து விட்டு சிரித்தான். நம்மை எங்கே இது போல வாழ விடுகிறார்கள்.. அண்ணன், தம்பி, மனைவி, சமூகம் என்று எல்லா காரணிகளும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை வேகமாக ஓட வைக்கிறார்கள். சம்பளம் ஏற ஏற செலவுகளையும் பெருக்கிக் கொண்டே போகிறார்கள்.. எப்போதும் தேவை குறையப் போவதில்லை என்றான். ஆம் நண்பர்களே.. ஒருவர் மனமூடியை மட்டும் கழற்றிப் பெரிய பயன் இல்லை. குடும்பத்தலைவன் இதை மற்றவர்களுக்கும் உணர்த்தி மற்றவர்களை ஒப்பிட்டு வாழ்தலை முடிந்தவரை தவிர்க்கலாம்.

மனமூடி இருக்கும்வரை தேவைகள் என்றுமே நிற்கப் போவதில்லை. நிம்மதி என்பது மூடி அணியாத மனத்திடமே உள்ளது என்பது என் கருத்து. உங்கள் கருத்து...?

24 பின்னூட்டம்:

Paleo God said...

பிரகாஷ் அது வாரன் பஃப்ஃபெட் (Warren Buffett). பணக்கடவுள் என்ற பெயரில் அவரைப்பற்றி ஒரு புத்தகம்கூட இருக்கிறது. படியுங்கள்.

மனமூடி, ஹும்ம் என்னத்தச் சொல்ல. அடுத்தவனுக்காக வாழ்ந்தே சுயத்தை இழக்கிறோம்!!

Paleo God said...

ஓட்டுப்பட்டையெல்லாம் என்னாச்சி? !!!!

பத்மநாபன் said...

மன மூடிகளை சிறப்பாக அடையாளம் காட்டுகிறிர்கள் பிரகாஷ்.....முதலில் எது எது மனதை முடுபவன என்று தெரிந்தால் தானே அது அதை நீக்க முடியும்..எளிய எடுத்துக்காட்டுக்கள்... டாரண் பஃவ்வேட் தேவையை ஒட்டி வாழும் முறையை பழக்கி கொண்ட விஷயத்தை வைத்து இந்த மனமூடியை எடுத்து சொன்ன விதம் அழகு...
பாராட்டுகள்...

எல் கே said...

miga sariya solli irukeenga. naama adutavangalukaga valnthe saigrom

சாமக்கோடங்கி said...

வாங்க ஷங்கர் அண்ணா...என்னுடன் எப்போதும் கூட இருந்து தட்டிக் கொடுத்து என்னை ஊக்கப் படுத்தும் உங்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்.."வாரன் பஃப்ஃபெட்"என்பதை எழுத முயற்சித்தேன்.. நான் எழுதிய உச்சரிப்பே போதும் என்று தோன்றியது..

பக்க வடிவமைப்பை மாற்றும்போது ஓட்டுப் பட்டைகள் போய் விட்டன... சரி செய்கிறேன்..

நன்றி..

சாமக்கோடங்கி said...

//பத்மநாபன் said...

மன மூடிகளை சிறப்பாக அடையாளம் காட்டுகிறிர்கள் பிரகாஷ்.....முதலில் எது எது மனதை முடுபவன என்று தெரிந்தால் தானே அது அதை நீக்க முடியும்..எளிய எடுத்துக்காட்டுக்கள்... டாரண் பஃவ்வேட் தேவையை ஒட்டி வாழும் முறையை பழக்கி கொண்ட விஷயத்தை வைத்து இந்த மனமூடியை எடுத்து சொன்ன விதம் அழகு...
பாராட்டுகள்...
//

வாங்க பத்மநாபன்.. கண்டிப்பாக அடுத்த பதிவில், மனதை மூடுபவை என்னென்ன என்று எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறேன்.. மனமூடி பாகம் ஒன்றைப் படித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்..

சாமக்கோடங்கி said...

//LK said...

miga sariya solli irukeenga. naama adutavangalukaga valnthe saigrom
//

"அடுத்தவர்களுக்காக வாழ்ந்தே சாகிறோம்...." இதை இருவகைகளில் எடுத்துக் கொள்ளலாம்..ஒன்றில் தவறில்லை... இன்னொன்றில் தவறு உள்ளது..

அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்தே வாழ்கிறோம்.. முழுமையாக மாற்ற முடியாது... நமது சமூக அமைப்பு அப்படி.. அதனால் முடிந்தவரை மாற்றிக் கொள்ளலாம்..
நன்றி....

சாமக்கோடங்கி said...

//பணக்கடவுள் என்ற பெயரில் அவரைப்பற்றி ஒரு புத்தகம்கூட இருக்கிறது. படியுங்கள்.//

நீங்கள் சொன்னபிறகு படிக்காமல் இருப்பேனா..? அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல்.. கண்டிப்பாகப் படிப்பேன்.. நன்றி ஷங்கர் அண்ணா...

நாடோடி said...

//கையில் இருக்கும் சிறு பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும்போது அவர்கள் தானாக மாமனிதர்கள் ஆகி விடுகிறார்கள்.///

இதை க‌ண்டிப்பாக‌ உண‌ர‌வேண்டும்... ம‌ன‌மூடி சிந்திக்க‌ வேண்டிய‌ விச‌ய‌ம்.. வாழ்த்துக்க‌ள் பிர‌காஷ்.

ஜெய்லானி said...

என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது இந்த பதிவு . வாழ்த்துக்கள் பிரகாஷ் !!!

சுசி said...

நல்ல பதிவு பிரகாஷ்.

க ரா said...

நல்ல பகிர்வு பிரகாஷ்.

சைவகொத்துப்பரோட்டா said...

உண்மைதான்!! நாம் கழற்ற வேண்டிய மன மூடிகள் நிறய
இருக்கின்றன.

தமிழ் உதயம் said...

மிகச்சரி. நாம் வீண் கௌரவம் ரெம்ப பார்க்கிறோம். அது நம்மை பெருமைபடுத்தாது. சிறுமை படுத்த தயங்காது.

சாமக்கோடங்கி said...

@நாடோடி,
@ஜெய்லானி
@சுசி
@இராமசாமி கண்ணன்,
@ராமசாமி கண்ணன்@சைவக்கொத்துபரோட்டா,
@தமிழ் உதயம்

அனைவருக்கும் நன்றிகள்.. வீண் கவுரவத்தால் விளையும் பலன் ஒரு கானல் நீரே..

மரா said...

நண்பரெ..வாரனிடம் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய விசயங்கள் எக்கச்சக்கம். நன்றி.

ILLUMINATI said...

//ஏனென்றால் நம் சமூகமே ஒரு பெரிய வீண்கவுரவத்தில் கட்டுண்டிருக்கிறது.//

அடுத்தவனை விட நான் பெஸ்டாக இருக்க வேண்டும்.இதுதான் நம் நினைப்பு.இப்படி அடுத்தவனைப் பற்றியே நினைக்கும் நாம் நமக்கு உண்மையிலேயே என்ன வேண்டும் என்று நினைப்பதுண்டா?

//நமக்காக எப்போது வாழப் போகிறோம்..?//

Show off பண்ணுவதை விடும் போது....

//கையில் இருக்கும் சிறு பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும்போது அவர்கள் தானாக மாமனிதர்கள் ஆகி விடுகிறார்கள்.//

முற்றிலும் உண்மை.....
மிக நல்ல பதிவு சாமு.வாழ்த்துக்கள்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

90% of time, நாம மற்றவர்களுக்காத்தான் , நடிக்கிறோம்..
நல்ல பதிவு..( நானே சிலவற்றை ப்லோ பண்ணுவதில்லை பிரகாஷ்...

நல்ல கருத்துக்களை சொன்னதற்க்கு நன்றி.. என்னை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு இது..)

நன்றி

ஸ்ரீராம். said...

ஆசைகள் தேவையைப் பொறுத்தது என்றில்லாமல் தேவைகள் ஆசையைப் பொறுத்து அமைந்து விடுகிறது.ஆசையை அறுப்பது கடினமாகி விடுகிறது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

இளங்கோ said...

தேவைகளை குறைத்து கொண்டால் நன்றாக இருக்கும்தான். ஆனால் கொஞ்சம் கஷ்டம்தான்.

ஒரு சில நேரங்களில் வேண்டும் என்கின்ற மனதுதான் நாம் முன்னேற தூண்டு கோலாக இருக்கிறது. போதும் என்று உக்கார்ந்து விட்டால், நாம் எதையும் பெற முடியாது. ஒருவேளை துறவிகளுக்கு இது சரிபட்டு வரலாம்.

வாரன் பப்பெட் கூட தன்னுடைய வீட்டை நேசிக்கிறார். ஆனால் அவர் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை நிறுத்தவில்லை. நாம் பழையதை மறந்து விடுகிறோம். ஆனால் அவர் அதையும் வைத்து கொண்டு, தொழிலும் முன்னேறி வருகிறார் இவ்வளவு வயசு ஆன பின்னரும்.

ஆசை படுவோம் வானம் வசப்படும் வரைக்கும்.

நன்றி பிரகாஷ்

சாமக்கோடங்கி said...

நன்றி மயில்ராவணன்
நன்றி இல்லுமினாட்டி
நன்றி பட்டா,
நன்றி ஸ்ரீராம்,
இளங்கோ கூறுவது மிகச் சரி... ஆனால் ஒரு விஷயத்தை நாம் தெளிவு படுத்த வேண்டும்..
நமக்கு தூண்டு கோலாக அடுத்தவர்கள் இருக்கலாம்... அவ்வளவே..

நம்முடைய வளர்ச்சியின் ஒப்பீட்டுக் கருவி நாமாக மட்டுமே இருக்க வேண்டும்.. அடுத்த வீட்டுக் காரனாக இருக்க கூடாது .. எப்போது மற்றவர்களைப் பார்த்து நம்மை ஒப்பிடுகிறோமோ அன்று நம்முடைய நிம்மதி பறிபோகிறது.. என்றும் இதையே ஒரு வழக்கமாக நம்முடைய மனது பழகுகிறது.. நம்முடைய உழைப்பைக் காட்டி யாருக்கும் துன்பம் இழைக்காமல் சமூகத்தில் முன்னேறி நம் தனித்திறமையை மற்றவர்களிடம் காட்டி பெரிய மனிதனாகும் முறை ஒன்று. யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராமல் இறைநிலை தேடும் துறவிகளின் முறை ஒன்று. இதில் எதை வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம்..

//போதும் என்று உக்கார்ந்து விட்டால், நாம் எதையும் பெற முடியாது// சரிதான்.. ஆனால் நமக்கானதை மட்டுமே நாம் பெற வேண்டும் நண்பரே.. மற்றவர்கள் பொருளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.. அதையும் வாரன் செய்து காட்டி இருக்கிறார்... அதுவும் முப்பத்தொரு பில்லியன் டாலர் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. இங்கு தான் அவர் மாமனிதனாகிறார்..
முட்டி மோதி பணத்தைச் சம்பாதிக்கும் அதே வேலையில், தேவை போக மீதியைப் பகிர்ந்தளிக்கும் பாங்கு வேண்டும் என்று உணர்த்துகிறதல்லவா அவர் செயல்...?

நன்றி இளங்கோ....

Menaga Sathia said...

நல்ல பதிவு...

ஷர்புதீன் said...

vottu potti enge?

சாமக்கோடங்கி said...

வாங்க ஷர்புதீன்...

//மனமூடி இருக்கும்வரை தேவைகள் என்றுமே நிற்கப் போவதில்லை. நிம்மதி என்பது மூடி அணியாத மனத்திடமே உள்ளது என்பது என் கருத்து. உங்கள் கருத்து...?//

இந்த வரிகளுக்குக் கீழே பாருங்கள்.. ஓட்டுப் பெட்டி இருக்கு..

நன்றி..

Post a Comment