Monday, August 16, 2010

கணக்கு சரியா....?

ஒரு நாள் சனிக்கிழமை ஒரு வேலையாக கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்தேன்... வழியில் மத்தம்பாளையம் அருகே வெள்ளைச்சட்டை அணிந்த போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகள் தங்கள் பணியை (?!?!?!?) செவ்வனே செய்து கொண்டு இருந்தனர்.. அவர்களது வண்டியை தூரத்தில் பார்த்தவுடனேயே பல கில்லாடிகள் வண்டியைத் திருப்பிக் கொள்ளுவது வழக்கம். அதனை உணர்ந்ததாலோ என்னவோ, காவல் துறை மூளையைக் கசக்கி யோசித்து வண்டியை மறைவாக நிருத்தியிருந்தினர். அதுவும் அது ஒரு வளைந்த பாதை என்பதால், ஒரு முப்பதடி நெருங்கும்வரை அவர்கள் நிற்பதே தெரியாது(மாஸ்டர் பிளான்..!!!)

என் வண்டியைப் பார்த்து ஒரு பெண் போலீஸ், லட்டியை ஆட்டி ஓரமாக நிறுத்துமாறு சைகை காட்டியபடியே அடுத்த வண்டியை எதிர்பார்க்கலானார்.. ஒரு வண்டியையும் விட்டு விடக் கூடாது.. கடமையில் கொஞ்சம் கூட தவறாதவர்கள் அல்லவா..?

வண்டியை ஓரமாக ஒதுக்கிய இடத்தில் ஒரு போலீஸ் நின்று கொண்டிருந்தார்.. பக்கத்தில் ஒரு ரோந்து வாகனத்தின் உள்ளில் விறைப்பாக ஒருவர் அமர்ந்து இருந்தார்.(கண்டிப்பாக பெரிய ஆபீசராகத்தான் இருக்க வேண்டும்..)

ஹெல்மேட்டைக் கழட்டியவாறே என்னுடைய அனைத்து ஆவணங்களையும் காண்பித்தேன். வழியே செல்லும் நான்கு சக்கரவாகனங்களின் பின்னால் மறைந்து கொண்டே சில பேர் போலீசுக்கே தண்ணி காமித்துத் தப்பித்துப் போய்க் கொண்டு இருந்தனர்.. ஆனால் அவர்களைத் துரத்திப் பிடிக்க போலீஸ் முற்படவில்லை.. (ஒருவேளை வியாபாரம் கெட்டு விடும் என்ற எண்ணமோ..?)

என்னுடைய ஆவணங்களை அந்தப் போலீஸ் சரிபார்த்துக் கொண்டிருக்கும்போது, தலையில் கைக்குட்டை அணிந்த ஒரு பையன், ரோந்து வாகனத்தின் உள்ளிலிருந்த அந்த உயர் அதிகாரியிடம் ஏதோ கெஞ்சிக்கொண்டு இருந்தான்.. விளங்கி விட்டது.. எப்படியும் நல்ல காசு பார்த்து விடுவார்கள். கிடைக்கும் காசை எவ்வாறு பங்கிட்டுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. இந்த விஷயத்திலும் கீழ்மட்டத் தொழிலாளர்கள் கண்டிப்பாக ஏமாற்றப் படுகிறார்கள். வெயிலில் நின்று கைகாட்டும் அந்தப் பெண் போலீசுக்கும், பரிசோதனை செய்யும் அந்த இன்னொரு போலீசுக்கும் கிடைக்கும் பங்கு மிகக் குறைவாகத் தான் இருக்கும், மற்றும் அந்த ரோந்து வாகன ஆசாமி தான் அதிக பட்ச பங்கை அனுபவிப்பார் என்பது எனது கற்பனை.. சரியா...?

என்னிடம் ஒன்றும் கறக்க முடியாது என்ற சோகத்துடன் என்னை விட்டு விட்டனர்.. ஒரு மணி நேர வேலைக்குப் பின் திரும்பி வந்து கொண்டிருந்தேன். திரும்பி அதே இடத்துக்கு வரும்போது, ஒரு பையன் வழியில் போகின்ற இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தான்.. அருகில் நெருங்கியபோது தெரிந்தது அது அந்த கப்பம் கட்டிய பையன் தான்.. இம்முறை தலையில் கைக்குட்டை இல்லை. வழியில் போக்குவரத்துக் காவலாளிகள் நிற்பதாகவும், போதிய ஆவணங்கள் இல்லை என்றால் திரும்பிச் சென்று விடுமாறும், இல்லை என்றால் அருகில் ஒரு குறுக்கு வழி இருப்பதாகவும் சொல்லிக் கொண்டு இருந்தான். அந்தப் பையன் அருகே இன்னும் சில இளைஞர்கள் திரு திருவென்று விழித்துக் கொண்டு இருக்க அது வழியில் போகும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவனைப் பார்த்தபடியே, கொஞ்ச தூரம் சென்றதும் கவனித்தேன். அவன் சொன்னது சரிதான். அதிகார்கள் இப்போது சாலையின் மறுபுறம் நின்று கொண்டு இருந்தனர்.

என்னை மறுபடியும் நிறுத்தினர். அதே காவலர் தான். நான் தெரிந்தவனைப் போல காட்டிக் கொண்டு புன்சிரிப்புடன் இப்போது தான் நான் இந்த வழியாகச் சென்றேன் என்று சொன்னேன். ஆனால் அவரோ என்னை இதற்கு முன் பாக்காதவர் போல் நடந்து கொண்டார். மறுபடியும் சோதனைகளை முடித்துக் கொண்டு நகர்ந்தேன்.

இந்த சம்பவத்திலிருந்து எனக்குள் கீழ்க்காணும் சிந்தனைகள் தோன்றுகின்றன.

1. போக்குவரத்தைச் சரி செய்ய வேண்டி அமர்த்தப் பட்ட இவர்கள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் காசு பார்க்கின்றனர். சரியான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு இது எச்சரிக்கை இது என்பதால் இது சரியா..?

2. சரியான ஆவணங்கள் இல்லாதவர்களை எச்சரித்த அந்தப் பையன் செய்தது சரியா...?

3. லஞ்சம் பெறுவதால் இவர்கள்(காவலர்கள்) செய்வது தவறா...?

4. லஞ்சம் கொடுத்ததால் அந்தப் பையன் செய்தது தவறா...?

போலீசார் செய்தது சரியென்றால் அந்தப் பையன் செய்ததும் சரிதான். போலீசார் செய்தது தவறென்றால் அந்தப் பையன் செய்தது தவறுதான்.

என்ன கணக்கு சரியா....?

கடைசியாக இன்னுமொரு சிந்தனை.. அந்தப் போலீசுகளும் எத்தனையோ கனவுகளோடும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் தான் பணிக்கு வந்திருப்பார்கள் அல்லவா..?

இது போன்று என் அன்றாட வாழ்வில் நான் கடந்து செல்லும் அனைத்து விஷயங்களிலிருந்தும் என் மனது பல விஷயங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும். அனால் அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது கடினம். இப்போது புரிகிறது மனிதனுக்கு எப்படி பைத்தியம் பிடிக்கிறது என்று..

நன்றி..
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

26 பின்னூட்டம்:

Chitra said...

அவங்க நல்லவங்களா? கெட்டவங்களா? இந்தியாவின் "நாயகர்கள்"!!!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க சித்ரா..

அந்தப் பையனின் மன நிலைமையில் நான் என்னை வைத்துப் பார்க்கிறேன்.. அவனுடைய எண்ணம் சட்டத்திற்கு எதிராக நடக்க வேண்டும் என்று இல்லாமல் , அந்த லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடக்க வேண்டும் என்று இருக்கலாம்...

அவர்களை லஞ்சம் கொடுப்பதிலிருந்து காப்பதின் மூலம் அவனுக்கு ஒரு தேசத்தொண்டு செய்த மனத்திருப்தி கிடைத்திருக்கலாம்..

பட்டாபட்டி.. said...

ஒருவேளை சம்பளம் கம்மியா இருக்குமோ?..

விலைவாசி தாறுமாறா ஏறுதே பிரகாஷ்...

பத்மநாபன் said...

இந்த கணக்கு ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் தோன்ற வேண்டும். சட்டம் நன்மைக்கு த்தான் போடுகிறார்கள். அதை புரிஞ்சுட்டு உங்களை மாதிரி எல்லா ஆவனங்களையும் எடுத்து வருவதைத்தான் இங்கு ஊக்குவிக்கவேண்டும். லஞ்சம் வாங்குவனுக்கு தண்டனை தர தனியாக சட்டம் இருக்கிறது . அதிகாரிகளை பொறுத்தவரை பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிக்கொள்கிறான். சமுகம் தான், சட்டத்தில் ஓட்டை போட முழு முதல் காரணமாக இருக்கிறது. மக்களுக்கு பொறுமை இல்லை 50 ருபாய் கொடுத்துட்டு எஸ் ஆகிறதலேயே இருக்கிறார்கள்.
அதிலும் கல்லூரி மாணவர்களிடம் , வளர்ந்து வரும்,இந்த சட்டமீறல் கலாச்சாரம் ரொம்ப ஆபத்தானது.

நாடோடி said...

ப‌த்ம‌நாப‌ன் அவ‌ர்க‌ள் சொல்வ‌து தான் ச‌ரி.. ச‌ரியான‌ ஆவ‌ண‌ங்க‌ளை எடுத்து செல்ல‌ வேண்டிய‌து ந‌ம் ஒவ்வொருவ‌ரின் க‌ட‌மை..

இளங்கோ said...

// அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது கடினம். இப்போது புரிகிறது மனிதனுக்கு எப்படி பைத்தியம் பிடிக்கிறது என்று.. //
கண்டவர் விண்டிலர் பிரகாஷ் :)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

உண்மை பிரகாஷ்.. சம்பளம் தவிர்த்து இந்த மாதிரி சம்பாதிப்பதற்கு என்ன தேவை..

Anonymous said...

பிரகாஷ் உங்க கணக்கு சரியா தான் இருக்கு ..பத்மநாபன் சார் சொன்னதும் மிக சரி தான்

ப.செல்வக்குமார் said...

என்னைப் பொறுத்த வரை அவர்களைக் குறை சொல்வதைக் காட்டிலும் நமக்குத் தேவையான ஆவணகளை சரியாக வைத்துக்கொள்வதே சரியானது. உண்மையில் யோசித்துப்பாருங்கள் " உங்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லாத போது உங்களை அவர் சோதனை செய்கிறார். அப்பொழுது அவர் நீங்க கோர்ட்ல வந்து பெயின் கட்டிட்டு வண்டிய எடுத்துட்டு போங்க " அப்படின்னு சொல்லறார். உடனே நீங்க சாரி சார் எனக்கு நேரம் இல்லை இந்தப் பணத்த வச்சுட்டு வண்டிய விடுங்க அப்படின்னு சொல்லறீங்க. இப்போ அவர் அந்தப் பணத்த வாங்கிட்டு உங்க வண்டிய விட்டுடறார். இப்ப அவர் செஞ்சது எப்படி தவறாகும். உங்க தப்பா மறைக்கறக்குத் தானே அவருக்கிட்ட பணம் கொடுக்குறீங்க..??

//ப்போது புரிகிறது மனிதனுக்கு எப்படி பைத்தியம் பிடிக்கிறது என்று..//
அது வேணா அப்படித்தாங்க .. எனக்கும் அடிக்கடி அப்படித்தான் ..

சுசி said...

எனக்கென்னமோ கணக்கு சரின்னுதான் தோணுது..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//பட்டாபட்டி.. said...

ஒருவேளை சம்பளம் கம்மியா இருக்குமோ?..

விலைவாசி தாறுமாறா ஏறுதே பிரகாஷ்...
//

அவங்க வாங்குற சம்பளத்தைக் கேட்டா, ஆடிப்போயடுவோம்... ஆனாலும் அவங்களுக்கு அது போதாதுதான்... யாருக்கும் தான் வாங்கும் சம்பளம் போதாது என்பது தான் இயற்கை அமைத்துள்ள விதி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//அதிலும் கல்லூரி மாணவர்களிடம் , வளர்ந்து வரும்,இந்த சட்டமீறல் கலாச்சாரம் ரொம்ப ஆபத்தானது.//

கல்லூரி மாணவர்களைப் பொருத்தவரை ஹோட்டல் பேரருக்கு கொடுக்கும் டிப்ஸ் பணமும், இவர்களுக்குக் கொடுக்கும் லஞ்சப் பணமும் ஒன்றுதான்...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//நாடோடி said...

ப‌த்ம‌நாப‌ன் அவ‌ர்க‌ள் சொல்வ‌து தான் ச‌ரி.. ச‌ரியான‌ ஆவ‌ண‌ங்க‌ளை எடுத்து செல்ல‌ வேண்டிய‌து ந‌ம் ஒவ்வொருவ‌ரின் க‌ட‌மை..
//

ஹெல்மெட் அணிவது கூட கடமை தான்.. நான் என் ஹெல்மெட் அணியாமல் வெளியில் வண்டியை எடுப்பதே இல்லை. அதைப் பழக்கப் படுத்திக் கொண்டால் கஷ்டம் இல்லை..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//இப்ப அவர் செஞ்சது எப்படி தவறாகும். உங்க தப்பா மறைக்கறக்குத் தானே அவருக்கிட்ட பணம் கொடுக்குறீங்க..??//

சூழ்நிலைக் கைதிகள் தான் நாம்.. பயனிப்பவர்களில் கண்டிப்பாக பெரும்பாலானோர் ஏதேனும் அவசர காரியமாகத் தான் சென்று கொண்டிருப்பார்கள்.. மற்றும் கோர்ட் கேஸ்கள் என்று அலைவது அவரளுக்குப் பழக்கமும் இருக்காது.. எனவே தான் குறுக்கு வழியை நாடுகிறார்கள். மாறாக நடமாடும் நீதிமன்றங்களுடன் இந்த போக்குவரத்து அதிகாரிகள் வந்தார்கள் என்றால் ஒரு சில மனிதர்களாவது கண்டிப்பாக அபராதம் செலுத்துவர். ஆனால் உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் பொதுமக்களின் தவறு தான் இவர்களுக்கு ஆயுதம். அதனால் அனைத்து ஆவணங்களையும் வைத்துக் கொண்டால் யாருக்கும் பயப்பட வேண்டாம்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//// அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது கடினம். இப்போது புரிகிறது மனிதனுக்கு எப்படி பைத்தியம் பிடிக்கிறது என்று.. //
கண்டவர் விண்டிலர் பிரகாஷ் :)//

சரிதான்...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//தேனம்மை லெக்ஷ்மணன் said...

உண்மை பிரகாஷ்.. சம்பளம் தவிர்த்து இந்த மாதிரி சம்பாதிப்பதற்கு என்ன தேவை..
//

தேவைகளுக்கா பஞ்சம்...?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//sandhya said...

பிரகாஷ் உங்க கணக்கு சரியா தான் இருக்கு ..பத்மநாபன் சார் சொன்னதும் மிக சரி தான்
//

என்ன கணக்கோ போங்க....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//அது வேணா அப்படித்தாங்க .. எனக்கும் அடிக்கடி அப்படித்தான் ..//

வாங்க செல்வக்குமார் சார்... "என் இனமடா நீ.." என்று சொல்லத் தோன்றுகிறது..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//சுசி said...

எனக்கென்னமோ கணக்கு சரின்னுதான் தோணுது..
//

ஆஹா... உங்களைத் தான் தேடிக்கிட்டு இருந்தேன்...

ILLUMINATI said...

தாங்கள் நியாயமாக செய்ய வேண்டிய வேலைக்கு கூட லஞ்சம் எதிர்பார்க்கும் இந்நாட்டில்,அந்தப் பையன் செய்தது சரியே நண்பா!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க இல்லுமி.. எப்படி நீங்க கேட்ட பேஸ்புக் அப்புறம் ட்விட்டர்.. எல்லாத்தையும் கொண்டு வந்துட்டேன்...

Jaleela Kamal said...

ம்ம்ம் எப்ப தான் திருந்துவார்களோ.

மதுரைக்காரன் said...

இந்த பதிவை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் தான் ஞாபகத்துக்கு வருது. நண்பர்களோடு பைக்கில் கொடைக்கானல் சென்று விட்டு மாலைப் பொழுதில் மலை இறங்கிக் கொண்டிருந்த போது நடுக் காட்டில் ட்ராபிக் போலிஸார் மறித்தார்கள். கையில் குறைந்த அழவே பணம் இருந்த படியால் அவர்கள் கேட்ட 300 ருபாய் தர வழியில்லாமல் அப்படி இப்படி பேசி ஒரு ஐம்பது ருபாய் மட்டும் அவர்களிடம் லஞ்சமாக குடுத்து புறப்பட தயாரான போது எங்களில் ஒரு பைக் மட்டும் என்ன பண்ணியும் ஸ்டார்ட் ஆக வில்லை. ஒரு போலிஸ்காரர் வந்து அவர் பங்குக்கு உதையோ உதை என்று உதைத்தார். வண்டியை சாய்த்து மறுபடியும் உதைத்தார். பின்னர் என்னை உட்கார வைத்து அவர் சிறிது தூரம் தள்ளிக் கொண்டே ஒடி வந்தார். அந்த குளிர்ச்சியிலும் அவர் முகம் வேர்த்ததில் ஒரே காமெடி தான். வெறும் ஐம்பது ருபாய்க்கு அவர் உழைத்த இந்த உழைப்பை இப்போது நினைச்சாலும் சிரிப்பு தான் வருது.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க மதுரைக்காரன்... சிரிப்பா வருது.. கொடுத்த காசுக்கு வேலை வாங்கீட்டீங்க போல....?

siva said...

:)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க சிவா.... சும்மா சிரிச்சா என்ன அர்த்தம்....

Post a Comment