Saturday, September 18, 2010

தகடு வைத்தால் தான் உயிர் பிழைக்கலாம்....

அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கங்கள்.. சந்தித்து கொஞ்ச நாள் ஆகி விட்டது.. என்னடா இவன் கேப்புல மந்திரம் தந்திரம்னு போய்ட்டானா..? தகடு கிகடுன்னு ஆரம்பிசிட்டானே'ன்னு நினைக்கிறீங்களா...? தலைப்பில் பொடி வெச்சு எழுதணும்னு ஆசை.. இப்பத்திக்கு பிரபலம் எந்திரன் தான்.. அதை வெக்கலாம்னு பாத்தா இன்ட்லி புல்லா இப்ப அதுதான் ட்ரெண்டு.. அது தான் இப்படி ஒரு தலைப்பு.. வேற என்னத்த பேசப் போறேன்..? வாங்க நம் உயிரை மட்டும் அல்ல, நம் உலகத்தைக் காப்பாற்றப் போகும் ஒரு தகடைப் பற்றிப் பார்ப்போம்..

சோலார் தகடுகளை உபயோகியுங்கள், சுற்றுச் சூழலைக் காப்பாற்றுங்கள் என்கின்ற பிரச்சாரங்கள் தொடங்கி ரொம்ப நாட்களாகி விட்டது.. எத்தனை பேர் செவி மடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதில் உள்ள சில விஷயங்களைப் பற்றி அலச நினைக்கிறேன்.

சூரியன் என்கின்ற ஒன்று தான் நமது வாழ்வின் ஆதாரமாக உள்ளது. நமது பூமியை மட்டும் இல்லாமல் பல கோள்களையும் தூசு துகள்களையும் மற்றும் பல்வேறு ஜீவராசிகளையும் (சூரியக் குடும்பத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், நம்மால் உணர முடியாத உருவத்தில், பரிமாணத்தில் இருக்கலாம்)தன்னோடு பிணைத்துக் கொண்டு சுழலும் ஒரு அதிசயம். அப்படிப்பட்ட சூரிய ஒளியைக் கொண்டே நாம் உயிர் வாழ்கிறோம். ஆம், புவிப்பரப்பின் மேல் பட்டு தெறித்தது போக (சராசரியாக 30%)மீதி கிடைக்கும் 70% ஒளியைக் கொண்டே நமது புவியின் தட்பவெப்பநிலை உயிர்கள் வாழ ஏதுவாக உருவாகி உள்ளது. அது மட்டுமா, தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டே பச்சையத்தைத் தயாரிக்கின்றன. கடல் நீரை ஆவியாக்கி மழையாகத் தருவிப்பதும் நமது சூரியத் தந்தை தான்.(பூமியைத் தாய் என்று சொல்லி விட்டோம் அதனால் தான்)

பூமி உருவாகி குளிரத் தொடங்கிய பிறகு சூரிய ஒளியின் உதவி கொண்டே உலகின் முதல் உயிரின வகை(ஆல்கே) உருவாகியதாக அறிவியல் கூறுகிறது.அது மட்டும் அல்லாமல் நமது உடலும் அது இயங்கத் தேவையான பல்வேறு சக்திகளை சூரிய ஒளியில் இருந்து நேரடியாகப் பெறுகிறது. அதனை உணர்ந்ததால் தான் பெரியோர் சூரிய வணக்கம், காலையில் மற்றும் மாலையில் உலவுதல் போன்ற பல்வேறு விதமான நடைமுறைகளை உருவாக்கி வைத்து உள்ளனர். சூரியனைக் கடவுளாக வணங்கும் பழக்கம் பல்வேறு மதங்களில் காணப்படுகிறது.

சரி சரி ரொம்ப நீளுது.. சீக்கிரம் பதிவுக்குள்ள போகலாம்(என்னது..? இன்னும் பதிவுக்குள்ளயே போகலையா...)இப்படி சூரிய ஒளியைத் தேக்கி வைத்த தாவர வகைகள் பின்னாளில் மண்ணோடு மண்ணாகி சிதைந்து மக்கி உருவாகியது தான் எரிபொருட்கள். இது சும்மா இரண்டு மூன்று நாட்களில் நடக்கும் விஷயம் இல்லை. பல லட்சக் கணக்கான வருடங்கள் மண்ணுக்கடியில் அதிகப் படியான அழுத்தத்திலும், வெப்பத்திலும் உருவாகியவை தான் இன்றைய நிலக்கரியும், பெட்ரோலியமும். ஆனால் மனிதன் தான் சிறு தேவைகளுடன் திருப்தி அடையாதவன் ஆயிற்றே..

பூமிக் கருப்பைக்குள் இருப்பதைச் சுரண்டி எடுத்துத் தின்னும் நமது அசுரப் பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல லட்ச வருட செல்வங்கள் நொடிக்கு நொடி அழிக்கப் படுகின்றன. அதுவும் பெட்ரோல் உபயோகிக்க ஆரம்பித்து இந்த சில வருடங்களிலேயே இந்த நிலைமையை நாம் எட்டி உள்ளோம்(புள்ளிக் கணக்குகள் தருவதைத் தவிர்க்க நினைக்கிறேன். இல்லாவிட்டால் இந்தப் பதிவை முடிக்க முடியாது).. இனி சுரண்ட ஒன்றும் இல்லை மக்களே.. இருந்ததை எல்லாம் கொடுத்து விட்டு அம்போ என்று நிற்கிறாள் நமது தாய்..

சரி.. இனி.. தந்தை தான்.(ஏன்னா அவர் மட்டும் தான் பாக்கி). அதனால் மக்களே எல்லோரும் சூரிய ஒளித் தகடுகளை உபயோகிப்போமாக......... என்று மேம்போக்காக முடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இங்கே என் முன் வைக்கப் பட்டுள்ள கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

கேள்வி: நான் மாதா மாதம் ஐந்நூறு ருபாய் மின் கட்டணம் செலுத்துகிறேன். மின்சாரம் வருகிறது.அப்புறம் எதற்கு லட்சக் கணக்கில் செலவு செய்து சோலார் இணைப்பைப் பெற வேண்டும்..?

பதில்: விஷயங்களை மேலோட்டமாகப் பார்ப்பது தவறு. இன்று வேண்டுமானால் நமக்கு ஐநூறு ரூபாய்க்குக் கிடைக்கலாம்,ஏனென்றால் நிலக்கரி கிடைக்கிறது, யுரேனியம் இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்கு..?
தினம் தினம் வெட்டப் படும் நிலக்கரியையும், அவை வெட்ட உபயோகப்படுத்தப் படும் இயந்திரங்களையும், பயன்படுத்தப் படும் மனித வளங்களையும், கொண்டு செல்ல உபயோகப் படுத்தப் படும் பிரம்மாண்ட வாகனங்களையும், அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் உலைகளையும் பார்த்தால் சத்தியமாக நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டீர்கள்.. மொத்தமாக உற்பத்தி செய்வதால் இந்த விலைக்குக் கொடுப்பதில் அரசுக்கு லாபம் உள்ளது. மூலப் பொருட்கள் தீரத் தீர அரசு என்ன செய்யும்..?வேற என்ன அந்தச் சுமை நம்ம மேல தான்..இப்போதே இரண்டு மூன்று மணி நேர மிந்தடையச் சமாளிக்க தனியார்க் கம்பெனிகள் லட்சக் கணக்கில் பணம் செலவு செய்கின்றனர்.இது திரும்பப் பெற முடியாத செல்வம்... அதனால் நாளைக்கும் இதே செலவில் இது நமக்குக் கிடைக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம்.

மேலும் அந்த ஐநூறு ருபாய் மின்சாரம் காற்றில் வந்து நமது வீட்டில் விழவில்லை.. அதற்குக் கம்பம் நட வேண்டும், கம்பி இழுக்க வேண்டும், அளவிட்டுக் கருவி பொறுத்த வேண்டும், கண்காணிக்க வேண்டும், இன்னும் நிறைய இருக்கின்றன.. ஓடி ஆடிப் பணம் சம்பாதிக்கிறோம்.எப்படிப் பார்த்தாலும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் மின்சாரத்திற்குச் செலுத்தத் தயாராகி இருப்போம்.. ஆனால் தருவதற்கு மின்சாரம் தான் இருக்காது. ஆக இதற்கு முன் சோலார் கருவிக்கு இன்று செய்யும் ஓரிரு லட்சம் ஒன்றும் பெரிய செலவில்லை.இன்னும் என்னால் புள்ளிக் கணக்காக பதில் சொல்ல முடியும்.. ஆனால் ஒரே ஒரு கோரிக்கை..நம் தாய்க்காக இதைச் செய்வோமே..பதிவு நீளமாகிக் கொண்டே போகிறது.. மன்னித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை ஒரே பதிவில் முடித்துக் கொள்ள முயல்கிறேன்.

கேள்வி: இவ்வளவு நல்லது என்றால் அரசே இதைச் செய்யலாமே.. மானிய விலைக்கு கொடுக்கலாமே ..?

பதில்: அரசு இதைச் செய்யத் தொடங்கி விட்டது. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. சோலார் தகடுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆய்வுகளும் தொடங்கி விட்டன. பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் சூரிய ஒளியில் இயங்கும் உபகரணங்களை உபயோகித்தல் கட்டாயமாக்கப் பட்டு வருகின்றன. ஆனால் என்னுடைய பயம் என்னவென்றால் தனியார்த் துறைப் பண முதலைகள் மற்றும் அரசாங்க லஞ்சப் பெருச்சாளிகள் இந்த வகை மின் உற்பத்தியை வருங்காலத்தில் லாபம் தரும் தொழிலாகவே பார்க்கின்றனர்.(சன் குழுமம் விரைவில் இந்தத் துறையில் குதித்தாலும் குதிக்கலாம்..). இது ஆபத்து. உதாரணத்திற்கு வாகனம் தயாரிக்க அரசு மானியம் தருகிறது என்று வைத்துக் கொள்வோம்(மக்களுக்குப் பயன் தர வேண்டி).. தயாரிக்கப் படும் வாகனம் சைக்கிளாக இருக்கும் பட்சத்தில் அது சரி.. ஆனால் அதுவே காராக இருந்து விட்டால்..? அதன் தயாரிப்பு செலவுக்கான ஞாயமான காசை நாம் கொடுக்க வேண்டுமே.ஆக அந்த உதவி மேல் தட்டு மக்களுக்குத் திருப்பி விடப்பட்டு விடும் வாய்ப்பு உள்ளது. அது தான் எனது கவலை. தனியார்த்துறை இதில் காட்டும் முனைப்பைப் பார்க்கையில் எனக்கு அவர்களின் பொது நல நோக்கு தெரியவில்லை.. அவர்களின் லாப நோக்கே தெரிகிறது. அவர்கள் அதனை ஒரு காரைப் போல உருவாக்கி அழகு படுத்தி லேபில் குத்திக் காசு பார்க்க நினைக்கின்றனர். மூலப் பொருட்களின் விலை உயர்வும் விற்கப் படும் பொருட்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். 2012ல் மட்டும் பல நூறு மில்லியன் டாலர்கள் பணம் புழங்கும் தொழிலாக சோலார் மின் உற்பத்தி இருக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது..

அதனால் அரசு தரும் என்று எதிர்பாராமல், இன்றே ஒரு சோலார் தகடு,ஒரு பேட்டரி மற்றும் மின் மாற்றித் தரும் சாதனங்கள் ஆகியவற்றை அழகாகப் பொருத்தி அமைதியாக இருக்கலாம்..

கேள்வி: இன்னும் குறைந்தது இருபது முப்பது வருடங்களுக்காவது பெட்ரோல் வகை எரிபொருட்கள் கிடைக்குமாமே...?

பதில்: அதற்காக நமது தலைமுறைக்கு மட்டும் ஜாலியாக வாழ்ந்து அனுபவித்து விட்டுப் போகலாம் என்று நினைக்கலாமா..? அப்படி நினைக்கவில்லை என்று சொல்லும் மக்களுக்கு : ஒரு இடத்திற்குச் செலவதற்கு அதிக பட்ச சொகுசாக ஒரு காரில் செல்லலாம். அது லிட்டருக்கு பனிரண்டு கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.. ஆனாலும் ஐந்து கிலோமீட்டர் மைலேஜ் தரும் பென்ஸ் சொகுசுக் காரில் தான் செல்வேன் என்று பந்தா காட்டித் திரியும் மக்கள் நம்மில் எத்துனை பேர்..? நமக்குக் கிடைக்கும் ஆற்றல்களில்(எனர்ஜி) உபயோகப் படுத்தும் பங்கை விட வீணாக்கும் பங்கு தான் அதிகம் என்பதை நான் புள்ளி விவரத்துடன் சொன்னால் தான் நீங்கள் நம்புவீர்களா..? நாம் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உபயோகப் படுத்த நமக்கு உரிமை உள்ளது(அவ்வாறே உலகம் படைக்கப் பட்டு உள்ளது).. அனால் விரயம் செய்ய எவனுக்கும் இங்கே உரிமை இல்லை.!!

கேள்வி: பணம், பகட்டு, ஆடம்பரம், சொகுசு இவை எல்லாவற்றையும் பெரும் பண முதலைகள் அனுபவிக்க, இது போன்ற நல்ல செயல்களை மட்டும் மக்களிடம் நேரடியாகச் செய்யச் சொல்லித் திணிப்பது ஞாயமா..? எப்படி இருந்தாலும் அவ்வளவு பணம் எங்களிடம் இல்லையே..?

பதில்: இந்தக் கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை.. ஏனென்றால் இந்தக் கேள்வியை உங்களோடு சேர்ந்து அரசை நோக்கிக் கேட்கும் பிரஜையாகவே நானும் இருக்கிறேன்.. ஆம். எரிபொருளை மிச்சப் படுத்துங்கள் என்கின்ற பிரச்சாரம் மக்களை நோக்கி.., அனால் அவர்கள் போவது வருவது எல்லாத்துக்கும் ஆடம்பரக் கார்கள். அதுவும் சொகுசுக்காக மைலேஜ் குறைவாகத் தருமாறு வடிவமைக்கப்பட்டுள்ள குளிர்விக்கப் பட்ட கார்கள்..

குடும்ப விழாக்கள், பொதுக் கூட்டங்கள், என்ற ஆடம்பரச் செலவுகளை அவர்கள் செய்து விட்டு எங்கள் வீட்டுக் குழல் விளக்கை ஒன்பது மணிக்கே அணைக்கச் சொல்வது எவ்வித ஞாயம்..?

நீங்கள் விமானத்தில் தேவையில்லாமல் சுற்றுப் பயணம் செய்து விட்டு, இரு சக்கர வாகனத்தில் செல்லும் என்னை நடக்கச் சொல்வது என்ன நீதி..?

இன்று கிடைக்கும் பீசாவை மிச்சம் வைக்காமல் தின்று கொழுத்து விட்டு நாளை நான் எனக்காகச் சேமித்து வைத்துள்ள பழைய சோற்றிலும் கைவைப்பாயோ...?

ஆனால் மக்களே இதற்கும் நான் சொல்வதற்கு ஒன்று உள்ளது. சாதாரண மக்கள் பார்வையில் ஞாயமான கேள்விகள் இவை. அதற்கும் மேலாக ஒரு சமுதாய நோக்குடன் பார்க்கும் போது, அரசை மறந்து, தனியார் கம்பெனிகளை மறந்து என் கண் முன் தெரிவது இந்த பூமி தான். அவர்கள் சாக்கடை தான், அதற்குள் உழன்று புரண்டு ஞாயம் தேடாமல்(கிடைக்கப் போவது இல்லை), நமக்கு இப்போது சோறும் போடும் நமது பூமித் தாய்க்கு நம்மால் முடிந்த சிறு காயக் களிம்பு, அதனைப் போடலாமே என்ற எண்ணம் என் மனதில் எப்போதும் ஓடுகிறது.. இதனைச் செய்து நாம் ஒரு முன்னோடியாக இருக்கலாம், நம்மைப் பார்த்து நம் அருகில் உள்ளவர்கள் செய்வார்கள், ஒரு ஊர் செய்யும், பின் இந்த நாடே செய்யும்..

ஆக இதனை முயற்சித்துப் பார்க்க முற்படுவோர் தயவு செய்து உடனே செய்யுங்கள். பணம் இல்லாதோர், இந்த எண்ணத்தை எப்போதும் மனதில் வைத்து இருங்கள், பணம் கிடைக்கும்போது கட்டாயம் செய்யுங்கள். இந்த சக்தி பூமி உள்ளவரை கிடைக்கும் அழியாச் சக்தி, நமது தேவைக்கான ஒரே பதில், மற்ற வகை எரிபொருளை விட பக்க விளைவுகள் மிகக் குறைவாக உள்ள ஒரு சக்தி.. அப்புறம் மீதி மக்கள் கையில்.

சரி சொன்னபடி ஒரு பதிவுல முடிக்க முடியல, சூரிய ஒளி மின்சாரத்தை எப்படித் தயாரிக்கலாம், இதிலும் உள்ள குறைபாடுகள்(!?!?) என்னென்ன, அதனை எப்படிக் களையலாம், இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் போன்றவற்றை அடுத்த பாகத்தில் வெளியிடுகிறேன். நான் தெரிந்து கொள்ள விருப்பப்பட்ட பாடம் இது. இப்போது இந்தத் துறையிலே ஆராய்ச்சி செய்யும் பணி எனக்குக் கிடைத்து உள்ளது. எனவே இன்னும் துருவி நல்ல தகவல்களைப் பெறலாம்.. அக்டோபர் மாதம் முழுவதும் ஜெர்மனி செல்ல இருக்கிறேன். பதிவுக்கு வரமுடியுமா என்று பார்க்கிறேன்.. மற்றபடி இந்தப் பதிவில் இருப்பவை என்னுடைய பார்வை. தவறு இருக்கலாம் மாற்றுக் கருத்துகளை நெத்தியடியாக அடிக்க அனைவரையும் வரவேற்கிறேன். நிறைய தெரிந்து கொள்ளலாம்..

பி.கு:இந்தப் பதிவு பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்க இது உதவும். பொழுதுபோக்குப் பதிவு என்றால் கண்டிப்பாக நான் இதைக் கேட்க மாட்டேன்.

நன்றி..

பிரகாஷ் (எ)சாமக் கோடங்கி

67 பின்னூட்டம்:

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க மக்களே.. இணைப்புகள் ஒன்றும் கொடுக்கத் தேவையில்லை, கூகிளிலும், யுட்யூபிலும், சோலார் பேணல் என்ற தலைப்பில் ஆயிரக் கணக்கான தகவல்கள் இருக்கின்றன..

அன்புடன் பிரசன்னா said...

நல்ல ஒரு பதிவு, அதுவும் முக்கியமான ஒரு தருணத்தில் இந்த பதிவை பதிந்து உள்ளீர்கள். நமது பூமி தாயை காப்பாற்ற வேண்டியது நமது கடமை.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க பிரசன்னா.. அதற்குள் பிரசன்னமா... இன்னும் எடிட்டிங் வேலையே முடியலை.. இருந்தாலும் பரவா இல்லை. அப்படியே தெரியாத மக்களுக்கும் தெரியப் படுத்துங்கள்.. நன்றி உங்கள் வருகைக்கு...

TERROR-PANDIYAN(VAS) said...

பிரதர் நல்ல பதிவு. என்ன.... படிச்சி முடிக்கறதுகுள்ள மேல் மூச்சி, கீழ் மூச்சி வாங்குது...

சுசி said...

நல்ல பதிவு பிரகாஷ்..

பனங்காட்டு நரி said...

பாஸ் ,
உண்மையில் நல்ல பதிவு ...,

Ananthi said...

நல்ல பயனுள்ள பதிவு...

//அரசு இதைச் செய்யத் தொடங்கி விட்டது. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. சோலார் தகடுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆய்வுகளும் தொடங்கி விட்டன//

ஆரோக்யமான விஷயம்... பகிர்வுக்கு நன்றி...

சைவகொத்துப்பரோட்டா said...

வீட்டில் இதை பயன்படுத்த எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி
சற்றே விரிவாக எழுதுங்களேன். நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

LK said...

அண்ணே கொஞ்சம் பெரியப் பதிவுதான். இருந்தாலும் தேவையான அவசியமான பதிவு

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//TERROR-PANDIYAN(VAS) said...

பிரதர் நல்ல பதிவு. என்ன.... படிச்சி முடிக்கறதுகுள்ள மேல் மூச்சி, கீழ் மூச்சி வாங்குது...
//

வாங்க டெர்ரர்... என்ன செய்ய... எதுன்னா சொல்லனும்னு ஆரம்பிச்சாலே எனக்கு இப்படித்தான் ஆகுது.. ஆனாலும் இரண்டாம் பாகம் போட்டா யாராவது விட்டுப் போக வாய்ப்பிருக்கு.. அதனால தான் கொஞ்சம் இழுத்துட்டேன்.. ஒரு நாவல் மாறி படிச்சி முடிக்கிறது தான் ஒரே வழி.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//சுசி said...

நல்ல பதிவு பிரகாஷ்..
//

வாங்க சுசி... கருத்துக்கு நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//பனங்காட்டு நரி said...

பாஸ் ,
உண்மையில் நல்ல பதிவு ...,
//

வாங்க நரி.. இதுபோன்ற பதிவுகளை தான் மொதல்ல இருந்தே எழுதிகிட்டு இருக்கேன்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//Ananthi said...

நல்ல பயனுள்ள பதிவு...

//அரசு இதைச் செய்யத் தொடங்கி விட்டது. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. சோலார் தகடுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆய்வுகளும் தொடங்கி விட்டன//

ஆரோக்யமான விஷயம்... பகிர்வுக்கு நன்றி...
//

கண்டிப்பாக ஆரோக்யமான விஷயம் தான். ஏனெனில் இன்றைக்கு அது நமக்கு ஒரு ஆப்ஷன்... ஆனால் நாளை அதுவே ஒரு கட்டாயம். விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்.. கருத்துக்கு நன்றி.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//சைவகொத்துப்பரோட்டா said...

வீட்டில் இதை பயன்படுத்த எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி
சற்றே விரிவாக எழுதுங்களேன். நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
//

கண்டிப்பாக எழுதுகிறேன். அதை எழுதப் போய் தான் இவ்வளவு முன்னோட்டம்... அநேகமாக நேராகவே போய் ஆராய்ந்து எழுதினால் பலன் இருக்கும். அக்டோபரில் நல்ல தெளிவான கணக்கைச் சொல்லுகிறேன்.. நன்றி சைகொப அவர்களே..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//LK said...

அண்ணே கொஞ்சம் பெரியப் பதிவுதான். இருந்தாலும் தேவையான அவசியமான பதிவு
//

அண்ணா பதிவுல ரொம்ப ஆழமா போகலாம்னு நெனச்சா அது நீளமா ஆயிட்டுது.. இந்தப் பதிவைப் பொருத்தவரை நான் செய்ததே சரி என்று தோன்றியது.. மற்றபடி புள்ளி விவரங்கள் எதனையும் நான் சமர்ப்பிக்கவில்லை..அதுக்கே இப்படி..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பிரகாஷ், நிச்சயம் நானும் பயன்படுத்த தயாராய் இருக்கிறேன், ஆனால் இன்னும் நல்ல தரமான பேனல்கள் வரவேண்டி காத்திருக்கிறேன். இந்த விஷயத்தில் அரசாங்கம் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதுதான் கொடுமை! :( எல்லோரும் பயன் படுத்த ஆரம்பித்ததும் வரி போட மட்டும் கரெக்ட்டா வந்துடுவாங்க :)

அலைகள் பாலா said...

பாஸ் இன்னும் விரிவா எழுதுங்க. இத பத்தி நானும் சர்ச் பண்ணி பாக்குறேன். ரொம்ப யூஸ்புல் பாஸ். நன்றி.

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌ம் பிர‌காஷ். இதை ப‌ற்றி இன்னும் அதிக‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை உங்க‌ளிட‌ம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல பதிவு .இதை பற்றி என் ஆதங்கம் பற்றி ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன் நண்பரே முடிந்தால் வந்து பார்க்கவும் .இலவசங்கள் தேவையா என்ற தலைப்பில் இருக்கிறது பாருங்க.

r.v.saravanan said...

நல்ல பயனுள்ள பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்கள்

velji said...

an article of real concern!we should do something about it!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பிரகாஷ், நிச்சயம் நானும் பயன்படுத்த தயாராய் இருக்கிறேன், ஆனால் இன்னும் நல்ல தரமான பேனல்கள் வரவேண்டி காத்திருக்கிறேன். இந்த விஷயத்தில் அரசாங்கம் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதுதான் கொடுமை! :( எல்லோரும் பயன் படுத்த ஆரம்பித்ததும் வரி போட மட்டும் கரெக்ட்டா வந்துடுவாங்க :)
// அது நமது நாட்டின் சாபம்.. தேவைக்கு அதிகமாக மின்சாரம் வைத்து இருக்கும் ஜெர்மனியே சோலார் மின் உற்பத்தியின் முக்கியத்துவம் அறிந்து அதனை ஊக்கிவித்து வீட்டுக்கு வீடு அதனைப் போருத்தச் சொல்லி மானியமும் வழங்குகிறது. நம்ம நாட்டில் மின்சாரம் இப்போதே போதவில்லை.. ஆனாலும் அதைப் பற்றி நம் நாட்டு அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்த நிலை என்று மாறும்..? கட்டாயம் மாற்றம் வர வேண்டும்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//அலைகள் பாலா said...

பாஸ் இன்னும் விரிவா எழுதுங்க. இத பத்தி நானும் சர்ச் பண்ணி பாக்குறேன். ரொம்ப யூஸ்புல் பாஸ். நன்றி.
//

கண்டிப்பாக எழுதுகிறேன்.. இதைப் பற்றி தினமும் படிக்கிறேன். அனைவரும் உபயோகப் படுத்தும் வகையில் சோலார் பேனல் உருவாக்க முடியுமா என்பதனையும் தெரிவிக்கிறேன்.. நன்றி..

Riyas said...

very useful and good post..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌ம் பிர‌காஷ். இதை ப‌ற்றி இன்னும் அதிக‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை உங்க‌ளிட‌ம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
//

வந்துகிட்டே இருக்கு நாடோடி அவர்களே.. உங்கள் வருகைக்கு நன்றிகள்.. உங்களைப் போன்றோரின் தொடர்ந்த கருத்துகளும் அக்கறைகளும் மட்டுமே எனக்குத் தேவை..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல பதிவு .இதை பற்றி என் ஆதங்கம் பற்றி ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன் நண்பரே முடிந்தால் வந்து பார்க்கவும் .இலவசங்கள் தேவையா என்ற தலைப்பில் இருக்கிறது பாருங்க.
//

படித்தேன் பாபு.. உங்களைப் போன்ற பொது சிந்தனையாளர்கள் நிறைய பேர் வர வேண்டும். மாற்றத்தை வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும். நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//r.v.saravanan said...

நல்ல பயனுள்ள பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்கள்
//

இதில் முயற்சி ஒன்றும் இல்லை நண்பரே.. செயலில் இறங்கிய பிறகே மார்தட்டிக் கொள்ளலாம்.. நன்றி உங்கள் கருத்துக்கு..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//velji said...

an article of real concern!we should do something about it!
//

இந்த சிந்தனை தான் நாட்டுக்கு இப்போதைய தேவை.. நன்றி வேல்ஜி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//Riyas said...

very useful and good post..
//

வாங்க ரியாஸ்.. கருத்துக்கு நன்றி.. சோலார் பேனல் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம் சாதரணமாக ஒரு வீட்டுக்கு சுமார் 1000 -வாட்ஸ் உபயோகிக்க எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்களேன்
குறைந்த விலை கிடைக்குமா ?? என்பது பற்றி சொல்லுங்க நண்பரே!! பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி

கலாநேசன் said...

பயனுள்ள பதிவு

இளங்கோ said...

இயற்கை வளங்கள் குறைந்து வரும் சூழலில் இந்த மாதிரி மாற்று வழிகளை காண வேண்டும்.

ஹுஸைனம்மா said...

எனக்கும் இவற்றில் மிகுந்த ஆர்வம் உண்டு. இந்தியாவில் வந்து செட்டிலாகும்போது இதெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்; பார்க்கலாம் இறைவன் நாட்டம்.

ஆனால், சோலார் பேனல்களின் ஆரம்பகால இன்வெஸ்ட்மெண்டும், பராமரிப்புச் செலவுகளும், இதில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள்/ஆடகள் அதிகம் இல்லாததும் கொஞ்சம் தயக்கத்தைத் தருகின்றன. நான் செயலாற்றுவதற்குள் இத்தடைகள் களையப்படுமென்று நம்புகிறேன்.

venkat said...

நல்ல பயனுள்ள தகவல்கள்

madurakarandoi said...

migavum sirappana oru pani.. congratulations

பத்மநாபன் said...

இயற்கையின் மீதுள்ள நம்பிக்கையும், சுற்றுப்புற சுழல் மீதுள்ள ஆர்வமும், சமுக அக்கறையும் ஒருங்கிணைந்து அருமையான பதிவாக்கி விட்டீர்கள்... அரசு இதை எளிதில் செய்யலாம். காற்றாலையில் முன்னோடி மாநிலமாக விளங்கும் நம் மாநிலம் நிச்சயம் சூரிய சக்தியை முழுமையாக படுத்தும் நாள் நெருங்கிங்கொண்டிருக்கிறது...உங்கள் ஆராய்ச்சியும் அதற்கு சிறப்பாக பயன்பட வாழ்த்துகிறேன்.... ஜெர்மன் பயணம் இனிதாக விளங்கவும் வாழ்த்துக்கள்

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம் சாதரணமாக ஒரு வீட்டுக்கு சுமார் 1000 -வாட்ஸ் உபயோகிக்க எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்களேன்
குறைந்த விலை கிடைக்குமா ?? என்பது பற்றி சொல்லுங்க நண்பரே!! பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி
//

தோராயமான கணக்கு உதவாது.. அதனால் உங்கள் கேள்விக்கு துல்லியமான புள்ளிவிவரத்தோடு பதில் அளிக்கிறேன்.. கட்டாயமாக.. நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//கலாநேசன் said...

பயனுள்ள பதிவு
//

பயன் படுத்தினால் தான் பயன் உண்டாகும்.. என்ன..? சரிதானே கலாநேசன் அவர்களே..? நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//இளங்கோ said...

இயற்கை வளங்கள் குறைந்து வரும் சூழலில் இந்த மாதிரி மாற்று வழிகளை காண வேண்டும்.
//

உங்களைப் போன்றோர் மனது வைத்தால் கட்டாயம் மாற்று வழிகள் பிறக்கும்.. நன்றி இளங்கோ.. எப்போதும் கூட இருந்து ஊக்கப் படுத்தும் உங்கள் நல்லுள்ளத்திற்கு...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//ஹுஸைனம்மா said...

எனக்கும் இவற்றில் மிகுந்த ஆர்வம் உண்டு. இந்தியாவில் வந்து செட்டிலாகும்போது இதெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்; பார்க்கலாம் இறைவன் நாட்டம்.

ஆனால், சோலார் பேனல்களின் ஆரம்பகால இன்வெஸ்ட்மெண்டும், பராமரிப்புச் செலவுகளும், இதில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள்/ஆடகள் அதிகம் இல்லாததும் கொஞ்சம் தயக்கத்தைத் தருகின்றன. நான் செயலாற்றுவதற்குள் இத்தடைகள் களையப்படுமென்று நம்புகிறேன்.
//

கண்டிப்பாக அந்தத் தகவல்களுடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்... நன்றி

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//venkat said...

நல்ல பயனுள்ள தகவல்கள்
//

நன்றி வெங்கட் அவர்களே..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//madurakarandoi said...

migavum sirappana oru pani.. congratulations
//

வாழ்த்துக்கு நன்றி.. தொடர்ந்து வாருங்கள்...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//பத்மநாபன் said...

இயற்கையின் மீதுள்ள நம்பிக்கையும், சுற்றுப்புற சுழல் மீதுள்ள ஆர்வமும், சமுக அக்கறையும் ஒருங்கிணைந்து அருமையான பதிவாக்கி விட்டீர்கள்... அரசு இதை எளிதில் செய்யலாம். காற்றாலையில் முன்னோடி மாநிலமாக விளங்கும் நம் மாநிலம் நிச்சயம் சூரிய சக்தியை முழுமையாக படுத்தும் நாள் நெருங்கிங்கொண்டிருக்கிறது...உங்கள் ஆராய்ச்சியும் அதற்கு சிறப்பாக பயன்பட வாழ்த்துகிறேன்.... ஜெர்மன் பயணம் இனிதாக விளங்கவும் வாழ்த்துக்கள்
//

நன்றி பத்மநாபன்.. உங்கள் அன்புக்கு என்றென்றும் கடமைப் பட்டவன் ஆகிறேன்.. கண்டிப்பாக நான் பிறந்த மண்ணுக்கு ஏதேனும் நல்லது செய்தே தீர வேண்டும்..

hamaragana said...

dear friend thank you very much and best wishes foryour reserch and journey . good luck.

ப.செல்வக்குமார் said...

//இந்தப் பதிவு பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்க இது உதவும். பொழுதுபோக்குப் பதிவு என்றால் கண்டிப்பாக நான் இதைக் கேட்க மாட்டேன்.//

நிச்சயம் வாக்களித்து விடுகிறேன் ..!! கொஞ்சம் பெரிய பதிவு ..இருந்தாலும் அவசியமான பதிவு ..

Prabhu said...

hai prakash,

nice to see ur blog.

this is the first time i visited.

i am prabhu from madurai., i already planned to install solar panel in my shop, and i got quatation from " Kotak Urja ".
i have some doubts regarding the solar plant.,
please send ur mail id to my mail :-jessitravels@gmail.com

ILLUMINATI said...

அக்கறை உள்ள பதிவு நண்பா!

நீங்கள் சொன்னதைப் போல இன்று சோலார் ஒரு option,ஆனால் நாளை அது கட்டாயமே! இப்போதைய எனர்ஜி ஆராய்ச்சிகளில் முக்கியமானவைகள் இரண்டே!சோலார் மற்றும் ஹைட்ரோஜென் !

ஆனால்,இப்போதைய சோலார் பானேல்கள் அவ்வளவு சுகாதாரமானவை அல்ல.நச்சுத் தன்மை வாய்ந்ததோடு மட்டுமல்லாமல்,radiation ஐயும் வெளிப்படுத்தக் கூடியவை இந்த பானேல்கள்.விலையைப் பொறுத்த வரை,கூடும் குறையும் என்று இரு வேறு கருத்துக்கள் உள்ளன.ஆனால்,என்னைப் பொறுத்த வரை,இந்தப் பானேல்களின் குறைகள் சரி செய்யப்பட்டவுடன் நாம் அவற்றை உபயோகப்படுத்த ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால்,என்ன தான் நச்சுத் தன்மை கொண்டதாக இருந்தாலும்,நாம் இப்போது கெடுப்பதை விட சுற்றுச் சூழல் கெட வாய்ப்பு இல்லை.

siva said...

anna paathithan padithen..athukula oru commentu poda venum thonichu..

great anna..ungal tholai nooku paarvaikkum oru salute..

siva said...

49.

siva said...

50...

Priya said...

பயனுள்ள பதிவு...மிக‌ நன்றாக எழுதி இருக்கீங்க!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//hamaragana said...

dear friend thank you very much and best wishes foryour reserch and journey . good luck.
//

நன்றி ஹமாராகானா அவர்களே..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//ப.செல்வக்குமார் said...

//இந்தப் பதிவு பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்க இது உதவும். பொழுதுபோக்குப் பதிவு என்றால் கண்டிப்பாக நான் இதைக் கேட்க மாட்டேன்.//

நிச்சயம் வாக்களித்து விடுகிறேன் ..!! கொஞ்சம் பெரிய பதிவு ..இருந்தாலும் அவசியமான பதிவு ..
//

நன்றி செல்வா... நீளமாகும் என்று முன்னாடியே தெரியும்.. என்ன செய்ய.. தெரிந்த தகவல்களை சொல்ல நினைத்தேன்.. இன்னும் நிறைய இருக்கின்றன... அலுப்புத் தட்டாமல் இருக்க அவற்றை அடுத்த பதிவில் அளிக்கிறேன்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//Prabhu said...

hai prakash,

nice to see ur blog.

this is the first time i visited.

i am prabhu from madurai., i already planned to install solar panel in my shop, and i got quatation from " Kotak Urja ".
i have some doubts regarding the solar plant.,
please send ur mail id to my mail :-jessitravels@gmail.com
//

வாங்க பிரபு..

kotak urja பெங்களூரைச் சேர்ந்த நம்பத்தகுந்த கம்பெனி. உங்கள் வீட்டிற்கு சோலார் பேணல் வாங்கும் முன் உங்கள் வீட்டின் முழுப்பயன் அதாவது Wattage ஐ தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் அதற்கு ஏற்றவாறு உங்களுக்கு அவர்களே தகுந்த சோலார் பேணல் அளிப்பார்கள். எதற்கும் இன்னும் சில கம்பெனிகளில் கொட்டேஷன் வாங்கி விலையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.. மற்றபடி சோலார் பேணல் பற்றிய அனைத்து விஷயங்களும் நெட்டில் உள்ளன. தேடித் பிடியுங்கள்.. நாம் நினைப்பதை விட அதிகப்படியான விஷயங்கள் கிடைக்கும்..நானும் எனக்குத் தெரிந்தவரையில் கண்டிப்பாக உதவுகிறேன்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//ILLUMINATI said...

அக்கறை உள்ள பதிவு நண்பா!

நீங்கள் சொன்னதைப் போல இன்று சோலார் ஒரு option,ஆனால் நாளை அது கட்டாயமே! இப்போதைய எனர்ஜி ஆராய்ச்சிகளில் முக்கியமானவைகள் இரண்டே!சோலார் மற்றும் ஹைட்ரோஜென் !

ஆனால்,இப்போதைய சோலார் பானேல்கள் அவ்வளவு சுகாதாரமானவை அல்ல.நச்சுத் தன்மை வாய்ந்ததோடு மட்டுமல்லாமல்,radiation ஐயும் வெளிப்படுத்தக் கூடியவை இந்த பானேல்கள்.விலையைப் பொறுத்த வரை,கூடும் குறையும் என்று இரு வேறு கருத்துக்கள் உள்ளன.ஆனால்,என்னைப் பொறுத்த வரை,இந்தப் பானேல்களின் குறைகள் சரி செய்யப்பட்டவுடன் நாம் அவற்றை உபயோகப்படுத்த ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால்,என்ன தான் நச்சுத் தன்மை கொண்டதாக இருந்தாலும்,நாம் இப்போது கெடுப்பதை விட சுற்றுச் சூழல் கெட வாய்ப்பு இல்லை.
//

நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. ஆனால் ஒரு கிலோவாட் மின்சாரத்தை நீங்கள் photovoltaic சோலார் பேனலில் இருந்து தயாரிப்பீர்களானால் நீங்கள் 300 பவுண்டு கரியமிலவாயுவை காற்றில் கலக்காமல் தடுக்கிறீர்கள்.

இப்போது சொல்லுங்கள்... மற்ற பெட்ரோல் வகையறா எரிபொருட்களை விட சோலார் பேணல் அந்த அளவுக்கு நச்சாகுமா என்று.. நச்சு தான் CdTe எனப்படுகிற காட்மியம் தெல்லூரைடு நச்சுத்தன்மை உள்ளதே.. ஆனாலும் அதிகப்படியான உபயோகத்தின் போது கண்டிப்பாக இதனை மாற்றும் தொழில்நுட்பம் வரும் என்று நம்புகிறேன்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//siva said...

anna paathithan padithen..athukula oru commentu poda venum thonichu..

great anna..ungal tholai nooku paarvaikkum oru salute..
/

அட தம்பி.. பாதி படிக்கரதுக்குள்ள என்னப்பா அவசரம்.. 48,49,50 கவுண்ட் பண்ற அளவுக்கு ட்ராபிக் உள்ள இடம் இது இல்லை.. அதுக்கு நிறைய பேர் இருக்காங்கப்பு.. பொறுமையா வந்து படிச்சிட்டுப் போகிற இடம் இது.. (இருந்தாலும் பரவா இல்லப்பா என்னையும் மதிச்சு என்னோட ப்ளாக்ல மோத மோதலா கவுண்ட் பண்ணினது நீங்க தான்.)அப்புறம் இந்த கவுன்டையும் ஒத்துக்க முடியாது.. ஏன்னா இதுல பாதிக்கு மேல நான் பின்னூட்டம்(கள்ள ஒட்டு) போட்டிருக்கேன் ..ஹி ஹி...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//Priya said...

பயனுள்ள பதிவு...மிக‌ நன்றாக எழுதி இருக்கீங்க!
//

வாங்க பிரியா.. உங்கள் ஒரு வரி எனக்கு மிகவும் ஊக்கம் தருகிறது... மிக்க நன்றி..(என் தங்கை பெயரும் பிரியா தான்.. ஹி ஹி)

சிநேகிதி said...

மிகவும் பயனுள்ள பதிவு

ஸ்ரீராம். said...

உபயோகமான பதிவு பாஸ். உங்கள் பதிவுகளில் பெரும்பாலும் சமுதாய அக்கறையைப் பார்க்கிறேன். முன்பு சுற்றுச் சூழல் பற்றி ஒரு பதிவு படித்த நினைவு உள்ளது.

ம.தி.சுதா said...

சகோதரா பாவம் சத்தியராஜ்...

தியாவின் பேனா said...

நல்ல பதிவு ...

அன்னு said...

நல்ல பதிவுதேன் ண்ணா, ஆனா அதுல 35 சதவிகிதம்தேன் லாபம். அதனாலதான் அதோட பயன் தெரிஞ்சிருந்தும் யாரும் அதிகமா மெனக்கெடுவதில்லை. குறைந்தது 75‍ அல்லது 80 சதவிகிதம் லாபம் காட்டும் வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டால், நாமெல்லாம் இப்படி பதிவு போட்டு மக்களை அழைக்க வேண்டிய தேவை இருக்காது. நான் சொல்றது சரியா?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//மிகவும் பயனுள்ள பதிவு// ஆனால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது சிநேகிதி.. பயன்படுத்தினால் தான் பயன்.. அனைவரும் உபயோகிக்கும் நிலை வரும்..

நன்றிகள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//ஸ்ரீராம். said...

உபயோகமான பதிவு பாஸ். உங்கள் பதிவுகளில் பெரும்பாலும் சமுதாய அக்கறையைப் பார்க்கிறேன். முன்பு சுற்றுச் சூழல் பற்றி ஒரு பதிவு படித்த நினைவு உள்ளது.
//

அது தான் எங்கிட்ட இருக்கிற பிரச்சினையே.. ஜாலியா ஒண்ணு எழுதனும்னு நினைச்சிகிட்டே இருப்பேன்.. ஆனா எழுத உக்காந்தா இது தான் வந்து விழும்.. நன்றி உங்கள் கருத்துக்கு...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//ம.தி.சுதா said...

சகோதரா பாவம் சத்தியராஜ்...

//
தகடு தகடுன்னு அப்பவே அவர் சொல்லி இருக்காரு.. பெரிய ஞானியா இருப்பாரு போல...?

நன்றி சகோதரா....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//தியாவின் பேனா said...

நல்ல பதிவு ...
//

தியாவின் பேனாவே சொன்னதுக்கப்புறம் என்ன..? சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன்.. நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//அன்னு said...

நல்ல பதிவுதேன் ண்ணா, ஆனா அதுல 35 சதவிகிதம்தேன் லாபம். அதனாலதான் அதோட பயன் தெரிஞ்சிருந்தும் யாரும் அதிகமா மெனக்கெடுவதில்லை. குறைந்தது 75‍ அல்லது 80 சதவிகிதம் லாபம் காட்டும் வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டால், நாமெல்லாம் இப்படி பதிவு போட்டு மக்களை அழைக்க வேண்டிய தேவை இருக்காது. நான் சொல்றது சரியா?
//

சூரிய ஒளியை நேரடியாக வெப்பமாக மாற்றும் கருவிகளில் தான் நீங்கள் சொல்லும் லாபம் கிடைக்கும் PV என்றழைக்கப்படும் photovoltaic cellsகளில் பத்திலிருந்து பதினைந்து சதவிகித பலனே கிடைக்கிறது.. ஆய்வுகள் நடக்கின்றன.. விரைவில் எதிர்பார்க்கலாம்.. நல்லது நடக்கும்..

Post a Comment