Sunday, January 23, 2011

உனக்கும் கீழே.. பகுதி 1

வணக்கம் நண்பர்களே..

என்னடா இது தமிழ்நாடு இப்படி இருக்கு.. எங்க பாத்தாலும் ரோடு சரியில்லை, அது இல்லை இது இல்லை என்று மனதுக்குள் எப்போதும் ஒரு புலம்பல் இருந்து கொண்டே இருக்கும். அது மட்டுமா, காலையில் கிளம்புவதில் இருந்து, மாலையில் வீடு திரும்பும் வரை பல நிகழ்ச்சிகள் மனதிற்கு திருப்தி தருவதாக இருப்பதில்லை.

வேலை விஷயமாக சென்ற வாரம் தியோகர் என்ற ஒரு மாவட்டத்திற்குச் சென்றிருந்தேன். அது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது. கொல்கத்தா வரை வான் வழியிலும், பிறகு அங்கிருந்து ரயிலிலும் தியோகரை சென்றடைந்தேன். ஒரு நாள் வேலை தான்.

ஹௌரா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பிரச்சினையில் கொஞ்ச நேரம் தங்க வேண்டியதாயிற்று. சத்தியமாக மனம் நொந்து போனேன். எங்கு பார்த்தாலும் சிகப்பு சிகப்பாக எச்சில்(பாக்கு, பான் போடப்பட்டதால் சிவந்திருந்து). படித்தவன்(?!?!), படிக்காதவன், அவன் இவன் என்று சகலரும் கையில் புகையிலையை வைத்துக் கசக்கிக் கொண்டே இருந்தனர். தரையை உத்துப் பார்த்துக் கொண்டே நடந்தேன், மறந்தும் மிதித்து விடக் கூடாது என்று தான்.

புதிதாக பயணசீட்டு பதிவு செய்து இருப்பதாகவும், அருகில் ஏதேனும் இணையதளம் இருந்தால் நகலேடுத்துக் கொள்ளும்படியும் நண்பர் கூற, ரயில் நிலையம் முழுக்க அலைந்து தோற்றேன். வெளியில் நடக்க ஆரம்பித்தேன். எங்கும் பரவியிருந்த மூத்திர வாடை, மங்கிய ஒளியைப் படர விட்டிருந்த மஞ்சள் விளக்குகள், அழுக்கு ஆடைகளுடன் கூடிய மக்கள், பெருக்கெடுத்து ஓடும் சாக்கடைகள், அதனருகிலேயே சுத்தமில்லாத முறையில் நடைபாதை உணவகங்கள், சராமாரியாக வண்டி ஓட்டும் மனிதர்கள் என்று எங்கு பார்த்தாலும் புன்னகைக்க முடியாத ஒரு சூழ்நிலை. அவ்வளவு பெரிய ஹௌராவில் ஒரு இணைய மையம் இல்லாமல் வெறும் கையோடு ரயில் நிலையத்துக்குள் நுழைந்தேன். (என்னைப்போலவே ஒரு வெளிநாட்டுக் காரரும் இணைய மையத்திற்காக அலைந்து கொண்டு இருந்தார்).

ரயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். நடைபாதை முழுக்க நடக்க முடியாதபடி குழந்தை குட்டிகள், பெட்டி படுக்கைகளுடன் மக்கள் படுத்து இருந்தனர். முழுமையாக ஏழ்மை வாசனையை இங்கு தான் நுகர்ந்தேன்.

பாட்னா செல்லும் ரயில் வந்ததாக அறிவிக்கப் பட்டதும், அரக்கப் பறக்க ரயிலின் மூன்றாம் தர பயணிகள் பெட்டியில் ஏற அவர்கள் அடித்துக் கொண்டது கண்ணில் இப்போதும் நிற்கிறது.

அடித்துப் பிடித்து தியோகர் வந்தடைந்தேன். காலையில் எழுந்ததும், நடைப்பயணம். அதே காட்சி, இன்னும் அழுக்காக. எங்கு பார்த்தாலும் சராமாரியாகத் துப்பும் மக்கள், எல்லோர் வாயிலும் சிவப்பு. எல்லா சுவர்களிலும் சிவப்பு, அழுக்கான வீடுகள், சாக்கடைகளை ஒட்டிய கூரைகள், அதிலும் கும்பலாக குடும்பங்கள். இன்னும் நிறைய.. ஒரே பதிவில் அடக்க முடியாது.

மாலையில் கொல்கத்தா திரும்ப வேண்டி ஜெசிடி ரயில் நிலையம் வந்தேன். உள்ளே நுழையவே முடியவில்லை. காலின் கட்டை விரல்களை மட்டுமே உபயோகித்து சாகச நடை நடந்தேன். ரயில் நிலைய மறக்கதவுகள் சிகப்புக் கரை படிந்து அழாத குறையாக நின்றன. அங்கேயும் மூட்டை முடிச்சுகளோடு ஏழை மக்கள். மூத்திர நாற்றம்.. ஐயோ சாமி, எப்படியாவது தமிழ்நாடு போய்ச் சேர்ந்து விடணும் என்று தோன்றியது.

உள்ளூர் பாசஞ்சர் ரயில் வர மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறுகையில் ஒரு அம்மாவின் தலையில் வைத்திருந்த அரிசி மூட்டை கீழே தள்ளப்பட, அரிசி கீழே சிதறியது. எல்லோரும் காலில் மிதித்து ஏறும்வரை காத்திருந்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அள்ள ஆரம்பித்து, கீழே அழுக்குத் தரையுடன் மொத்தத்தையும் கையால் கூட்டி எடுத்து மூட்டையில் சேர்த்தார்.(அங்கேயும் பான் எச்சில் துப்பப் பட்டிருந்தது). மனம் நொந்தே போனேன்.

என்னவொரு வாழ்க்கை, இந்த அரசாங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன..? எங்கிருந்து இத்தனை ஏழைகள்..? ஏன் இத்தனை வசதிக் குறைவுகள்..?

ஜோதிலிங்கத்தை தரிசிக்க வந்த இரண்டு தமிழ் யாத்திரிகர்களை அங்கே பார்த்தேன், அவர்கள் தமிழில் பேசியது காதில் விழவும், நானாகவே போய் அறிமுகப் படுத்திக் கொண்டு இவற்றைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தோம்.

அதில் ஒருவர் சொன்னார்.."நீங்கள் பரவாயில்லை, கம்பெனி காசு கொடுத்து விமானத்தில் அனுப்பி வைத்து இருக்கிறது.. நாங்கள் கையில் பத்தாயிரம் மட்டுமே எடுத்துக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றி வருகிறோம். சிக்கனப் பயணம். இந்த மக்களோடு தான் கும்பலாக மூன்றாம் தர பயணிகள் பெட்டியில் இடுக்கிக் கொண்டு எங்கள் யாத்திரை. என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் தமிழ்நாடு இன்னும் சொர்க்கம் தான், ஏழைகளாக இருந்தாலும் நம் மக்கள் பெரும்பாலானோர் சுத்தமாகவும், பொது இடங்களில் குறைந்த பட்ச நாகரிகத்துடனாவது நடந்து கொள்வர். இயற்கையான நிம்மதியான வாழ்வாதாரங்கள், தமிழ்நாட்டில் ஒருங்கே அமைந்துள்ளன. எங்கே நமது அரசியல்வாதிகள் வடநாட்டைப் போல நமது நாட்டை ஆக்கி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது"

சத்தியமாக இப்போது நானும் சொல்கிறேன்.. தமிழ்நாடு இன்னும் சொர்க்கம் தான்.. திரும்பி வந்த பிறகு என்னுடைய சாலைகள் அவ்வளவு கடினமாகத் தெரியவில்லை என்பதே உண்மை. இந்தியாவின் தென்பகுதி அழகுதான்.

ஏழைகளை இகழ்வாக நினைத்து சொல்லவில்லை.. நமது நாட்டின் சாபக்கேடினை புலம்பியிருக்கிறேன்.

இப்போது என் மனதில் தோன்றுவது..

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி..
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

தொடர்ந்து அலசுவோம்..

சாமக்கோடங்கி

20 பின்னூட்டம்:

ஹுஸைனம்மா said...

ம்.. நிறைய பேர் இப்படி சொல்லி கேட்டிருக்கேன். ஆனா, நான் கேரளா மட்டும்தான் போயிருகேன். அங்கே இன்னும் அதிக சுத்தம்தான்.

Unknown said...

உண்மைதாங்க...

ILLUMINATI said...

உண்மை சாமு.தென் இந்தியா வட இந்தியாவுக்கு எவ்வளவோ பரவாயில்லை.மேலும்,இவர்கள் ரயிலில் பண்ணும் அட்டூழியம் இருக்குதே..ஒருமுறை நீங்களே அனுபவிச்சா தான் தெரியும்.

அந்நியன் 2 said...

/தரையை உத்துப் பார்த்துக் கொண்டே நடந்தேன், மறந்தும் மிதித்து விடக் கூடாது என்று தான். //

நெருப்பிலே கூட கண்ணைக் கட்டிக் கொண்டு நடந்து விடுவிர்கள் ஆனால் பான்பராக் எச்சில் மீது ரொம்ப கவனமாக நடந்து சென்றது எனக்கு வேதனை அளிக்கவில்லை சிரிப்புதான் வந்தது.

//சத்தியமாக இப்போது நானும் சொல்கிறேன்.. தமிழ்நாடு இன்னும் சொர்க்கம் தான்.. //
இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டியே போல தெரிகிறது நண்பா.

//ஏழைகளை இகழ்வாக நினைத்து சொல்லவில்லை.. நமது நாட்டின் சாபக்கேடினை புலம்பியிருக்கிறேன்.//

ஏழைகள் என்றுமே யாராலும் மதிக்கப் படுவதில்லைதான் அவர்களின் நிலைமையையும் கணக்கில் கொண்டு வருத்தப் பட்டதிற்கு மனதிற்கு சந்தோசமா இருக்கு சார்.

மத்திய மாநில அரசுகளை பொறுத்தவரை கீழ்த்தர மக்கள்களின் நிலையை புரிந்து கொள்வதில்லை பாவப்பட்ட ஏழைகளும் இதை ஒன்னும் பெருசா எடுத்துகொள்வதில்லை காரணம் அவர்களுக்கு உன்ன மூன்று வேலை உணவு கிடைத்தாலே போதும் என்ற மனப்பான்மைதான்.
அரசிடமிருந்து அவர்களுக்கு கிடைக்ககூடிய சழுகைகள் கிடைக்காமல் தடுப்பதற்கு சாதி,மதம்,மேல்வகுப்பு,கீழ்வகுப்பு,நடுத்தரம் இன்னும் ஏரளாமான அமைப்புகளை வைத்துக் கொண்டு மக்கள்கள் போராடுவதால் அந்த ஏழை மக்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து உதவிகளும் இவர்களுக்கு போயி விடுகிறது.

நாம் சொல்லுவதெல்லாம் நன்றே செய்க,அதை இன்றே செய்க,என்பதுதான்.
இதன் மூலமாகவது அம்மக்களின் வாழ்க்கை விடிவு பெறட்டும்.
வாழ்த்துக்கள் நண்பரே அருமையான சமுதாய நோக்கோடு உங்கள் பதிவு இருக்கின்றது ரொம்ப நன்றி.

குறையொன்றுமில்லை. said...

நீங்க சொல்லி இருப்பது எல்லாமே உண்மையிலும்
உண்மை தான..

சாமக்கோடங்கி said...

//ஹுஸைனம்மா said...

ம்.. நிறைய பேர் இப்படி சொல்லி கேட்டிருக்கேன். ஆனா, நான் கேரளா மட்டும்தான் போயிருகேன். அங்கே இன்னும் அதிக சுத்தம்தான்.
January 23, 2011 4:42 AM //

வாங்க ஹுசைனம்மா அவர்களே.. நல்லது.. முடிந்தவரை வடக்குப் பக்கம் போகாதீர்கள்..

வடக்கு வாடுகிறது..
தெற்கு தேடுகிறது..

சாமக்கோடங்கி said...

//கலாநேசன் said...

உண்மைதாங்க...
//

வாங்க கலாநேசன்.. கஷ்டத்தை உடனே பகிர்ந்துக்கணும்.. அதான் பகிர்ந்துக்கிட்டேன்..

சாமக்கோடங்கி said...

//ILLUMINATI said...

உண்மை சாமு.தென் இந்தியா வட இந்தியாவுக்கு எவ்வளவோ பரவாயில்லை.மேலும்,இவர்கள் ரயிலில் பண்ணும் அட்டூழியம் இருக்குதே..ஒருமுறை நீங்களே அனுபவிச்சா தான் தெரியும்.
//

ஆமாப்பா.. இப்பத்தான் அனுபவிச்சேன்.. ஒரு பகுதியில் படாடோப வாழ்க்கை... அதே கொல்கத்தாவின் மறுமுகம் மிகவும் கோரமானது... ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வுகள்.. கொடுமை..

சாமக்கோடங்கி said...

//அந்நியன் 2 said...

/தரையை உத்துப் பார்த்துக் கொண்டே நடந்தேன், மறந்தும் மிதித்து விடக் கூடாது என்று தான். //

நெருப்பிலே கூட கண்ணைக் கட்டிக் கொண்டு நடந்து விடுவிர்கள் ஆனால் பான்பராக் எச்சில் மீது ரொம்ப கவனமாக நடந்து சென்றது எனக்கு வேதனை அளிக்கவில்லை சிரிப்புதான் வந்தது.//

நெருப்பில் நடந்தால் கால சுடும்.. பான்பராக் எச்சில் மீது நடந்தால் மனசு சுடும்.. சாரி சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்..

பொறுமையாக பத்தி பத்தியாக பிரித்து பின்னூட்டம் போட்டமைக்கு முதற்கண் நன்றிகள்..

எச்சிலை மிதிப்பதில் பிரச்சினை இல்லை.. ஆனால் வெளிநாட்டவர்க்கோ பார்ப்பவர்க்கோ ஏழைகள் மீது ஏற்படும் அருவெறுப்பு உறுதி செய்யப் படுவது குறித்து தான் மனவருத்தம்.. நாகரிகத்திற்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம்..

சாமக்கோடங்கி said...

////சத்தியமாக இப்போது நானும் சொல்கிறேன்.. தமிழ்நாடு இன்னும் சொர்க்கம் தான்.. //
இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டியே போல தெரிகிறது நண்பா.//

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது அக்கரையைப் பார்க்காத வரை மட்டுமே..

பார்த்த பின் தான் தெரிகிறது... நம்முடையது பொண்ணு விலையுர பூமியின்னு..

சாமக்கோடங்கி said...

//மத்திய மாநில அரசுகளை பொறுத்தவரை கீழ்த்தர மக்கள்களின் நிலையை புரிந்து கொள்வதில்லை பாவப்பட்ட ஏழைகளும் இதை ஒன்னும் பெருசா எடுத்துகொள்வதில்லை காரணம் அவர்களுக்கு உன்ன மூன்று வேலை உணவு கிடைத்தாலே போதும் என்ற மனப்பான்மைதான்.
அரசிடமிருந்து அவர்களுக்கு கிடைக்ககூடிய சழுகைகள் கிடைக்காமல் தடுப்பதற்கு சாதி,மதம்,மேல்வகுப்பு,கீழ்வகுப்பு,நடுத்தரம் இன்னும் ஏரளாமான அமைப்புகளை வைத்துக் கொண்டு மக்கள்கள் போராடுவதால் அந்த ஏழை மக்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து உதவிகளும் இவர்களுக்கு போயி விடுகிறது.

நாம் சொல்லுவதெல்லாம் நன்றே செய்க,அதை இன்றே செய்க,என்பதுதான்.
இதன் மூலமாகவது அம்மக்களின் வாழ்க்கை விடிவு பெறட்டும்.
வாழ்த்துக்கள் நண்பரே அருமையான சமுதாய நோக்கோடு உங்கள் பதிவு இருக்கின்றது ரொம்ப நன்றி.//

சரியாகச் சொன்னீர் நண்பரே.. அடுத்த பகுதியில் இதை விரிவாக அலசலாம்..

சாமக்கோடங்கி said...

//Lakshmi said...

நீங்க சொல்லி இருப்பது எல்லாமே உண்மையிலும்
உண்மை தான..
//

வாங்க லக்ஷ்மி அம்மா... உங்களுக்கு ஏதேனும் அனுபவங்கள் இது போல இருந்ததுண்டா..

Chitra said...

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி..
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

..... 100 % correct!

செல்வா said...

///..அரிசி மூட்டை கீழே தள்ளப்பட, அரிசி கீழே சிதறியது. எல்லோரும் காலில் மிதித்து ஏறும்வரை காத்திருந்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அள்ள ஆரம்பித்து, கீழே அழுக்குத் தரையுடன் மொத்தத்தையும் கையால் கூட்டி எடுத்து மூட்டையில் சேர்த்தார்.(அங்கேயும் பான் எச்சில் துப்பப் பட்டிருந்தது). மனம் நொந்தே போனேன்....////

ஒரே மூச்சில் படிச்சு முடிச்சேங்க ..உண்மையச் சொல்லப்போனா நான் கோபில இருந்து திருப்பூர் தினமும் வருவேன். அது கோபில ஒரு கிராமம். அங்க இருக்குற அழகுல இங்க தினமும் வந்து போகும் போதெல்லாம் , அதுவும் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வருபோதேல்லாம் என்னடா கொடுமை இது , இவ்ளோ அசிங்கமா இருக்கே அப்படின்னு நினைப்பேன் . நீங்க சொல்லுறதப் பார்த்தா அங்க அவ்ளோ கொடுமையா இருக்கா ? நினைக்கவே கஷ்டமா இருக்கு. எது எப்படி இருந்தாலும் நாமா ஊரும் இன்னும் கொஞ்சம் மாறனும் ..

இளங்கோ said...

நல்ல பகிர்வு பிரகாஷ்..
அதுவும் அரிசியை அள்ளிக் கூட்டிய அந்த அம்மா, இந்தியாவின் முகம் போலத் தெரிகிறது இல்லீங்களா.

தாறுமாறு said...

இந்தியாவிற்கு இரண்டு முகங்கள் இருப்பது உண்மையே. இது இந்தியா மட்டுமல்ல. அனைத்து மூன்றாம் உலக நாடுகளிலும் உள்ள ஒரு பிரச்சனை. வட இந்தியாவில் ரயில் பயண நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?
அங்கு வேறு பயண வசதிகளே இல்லை. நம்ம ஊரில் ரயில் இல்லனா பஸ், இல்லனா மினி பஸ், ஷேர் ஆட்டோ என்று பல மாற்று வழிகள் உள்ள்ன. ஆனால் வட இந்தியாவில் பல இடங்களில் ஓரிடத்திலிருந்து
மற்றோரிடத்திற்குச்செல்வதற்கு ரயில் மட்டும்தான். இப்போ சென்னையிலிருந்து திருச்சி போவதற்கு ரயில் மட்டும்தான் என்றால் அது எவ்வளவு கேவலமாக இருக்கும் என யூகிக்க முடியும். அது போல்தான்.
வட இந்தியாவில் பிரைவேட் பஸ் முதலாளிகள் குறைவு. அரசு பஸ் சர்வீஸ் இல்லவே இல்லை. அதான். ஆனால் ஒன்று. 10 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது நிலமை மிக முன்னேற்றம் என
விவரமறிந்தோர் கூறுகிறார்கள்.

Unknown said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

ராஜராஜ சோழன் எம்.ஏ ., said...

Mr சாமகொடாங்கி!!!
அசிங்கத்த பார்த்து ஒதுங்கற வரைக்கும் அது அசிங்கம் தான் ... அத சுத்தம் பண்ணைனும்னு என்னைக்காவது யாராவது நினைக்கறப்ப கண்டிப்பா வட இந்தியா வும் சொர்க்க பூமி தான் ...... அவங்க வாழ்க்கை முறைய ஒரீரு நாள்ல அலசி பார்க்க முடியாது. .. நீங்க சொன்ன வரைக்கும் ரயில் நிலயத்த மட்டுமே பாத்து இருக்கீங்க ன்னு தோணுது .... நீங்க அங்க ப்ரொவ்சிங் சென்டர் தேடுனது .....தட்டி விலாஸ் கடைல pizza கேக்கற மாதிரி இருக்கு . .. . . அவங்களும் நம்ம மக்கள் தாங்க.... உங்க கூற்றினால் நிறைய பேரு வட நாடு போற ஐடியா வே விட்ருவாங்க ... எப்படியோ .... உங்க கருத்தை மறுக்க அது ஒன்னும் பொய் இல்ல .. 100 % உண்மையான விஷயம். . . (நான் யாருன்னு தெரியுதா .... நான் தான் உங்க பழைய தோழன் .......................................)

ராஜராஜ சோழன் எம்.ஏ ., said...

சிறிது ... "எளிது எளிது கடத்தல் எளிது " என்ற உங்கள் பதிவை பார்க்கவும்.. தென் இந்திய நிலைமையும் புரியும்...

Unknown said...

வணக்கங்களும்,வாக்குகளும்...

Post a Comment