Friday, February 25, 2011

கொதி நிலை - பாகம் 1

நண்பர்களே..

இந்தப் பதிவு குறைந்தது பத்து பாகங்களாவது போகும். பொறுமை உள்ளவர்கள் வரலாம்.

மனதில் கருத்துக்கள் சிதறல்களாகவே தோன்றுகின்றன. மறப்பதற்கு முன் எழுதுவதே உத்தமம். சரியாகக் கோர்த்துப் படித்துக் கொள்ளவும்.

நான் இப்போது இருப்பது ஜெர்மனியில். பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போல் தான் முதலில் வேடிக்கை பார்த்தேன். இப்போது கொஞ்சம் பண்பட்ட பார்வை. நான் எழுதும்போது சிலபேர் வெளியூரைப் பார்த்ததும் நம்மூரைக் குறை சொல்கிறான் என்று நினைத்தாலும் நினைக்கலாம். இது உள்மன ஆதங்கமல்லாமல் வேர்வரை அலசிப் பார்க்கப் போகும் பதிவு.

ஜெர்மனி ஏன் இப்படி உள்ளது?? 1800 களில் நடந்த நாடுபிடி விளையாட்டாகட்டும், அதற்கப்புறம் நடந்த உலகப் போர்களில் நடத்திய களேபரமாகட்டும், அமேரிக்கா போன்ற கொடுங்கோல் வல்லரசுகளுக்கே கெட்ட கனவாகத் திகழ்ந்துள்ள ஒரு குட்டி நாடு ஜெர்மனி. அது எப்படி இவ்வளவு பலத்துடன் திகழ்கிறது?? அதெல்லாம் நமக்கெதற்கு.. சும்மா வந்தோமா, வேலையைப் பார்த்தோமா, ஊரைச் சுற்றிப் புகைப்படம் எடுத்தோமா, பொருள் வாங்கினோமா, ஊர் திரும்பினோமா என்று 'னோமா', 'னோமா' வோடு சுற்றிக் கொண்டிருக்கும் என்னை இந்தப் பதிவிடச் செய்தது இரண்டு விஷயங்கள்.

ஒன்று: இந்த ஊர் எப்படி இவ்வளவு சுத்தமாக, நல்ல பராமரிப்புடன் அழகாக உள்ளது என்று எப்போதும் மனதுக்குள் தோன்றும்.காலையில் அவசர கதியில் பேருந்தைப் பிடிக்க ஓடுகையில் ஒரு எண்பது வயது முதியவர் பேருந்து நிலையத்தை நோக்கி மெல்ல நடை போட்டுக் கொண்டு இருந்தார். சட்டென்று நின்றவர், கீழே கிடந்த சிறு தாளைக் கையில் எடுத்தார். மெதுவாக நடந்து போய் அருகில் இருந்த குப்பைத் தொட்டிகளில் காகிதம் போடுவதற்கான தொட்டியில் போட்டு விட்டு அதே மெல்ல நடையோடு அங்கிருந்து போய் விட்டார். அதிகம் ஆட்கள் நடமாடும் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் இரண்டும் ஒன்று சேரும் ஒரு பரபரப்பான பகுதி, பளிங்கு போல் காட்சி தந்ததற்கான அர்த்தம் புரிந்தது.

இரண்டு: "ஷாங்காய் நகரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கியா பிரகாஷ்..? அந்த மாறி ஒரு நகரை இன்னும் பத்து வருஷம் மெனக்கேட்டாலும் இந்தியாவால் உருவாக்க முடியாது. அத்தன அருமையான வடிவமைப்பு". கூட வந்த நண்பரின் கூற்று.

ஏன்?

ஏன்??

ஏன்???

ஜெர்மனியின் நிலப்பரப்பு தமிழ்நாட்டைப் போன்று கிட்டத்தட்ட மூன்று மடங்கே. ஆனாலும் ஜெர்மனியின் பொருளாதாரக் கட்டமைப்பை மொத்த இந்தியா சேர்ந்தாலும் தூர நின்று அண்ணாந்து பார்க்க மட்டுமே முடியும். அத்தனை நிறுவனங்கள், அத்தனை முதலீடுகள், அத்தனை கட்டுக்கோப்பு. (ஆனால் மொத்த உலகமும் இப்போது ஒரு விஷயத்துக்காக இந்தியாவைத் திரும்பிப் பார்க்கிறது.. எதற்கு என்று உங்களுக்கே தெரியும். உலகமே ஒரே அலைவரிசையில் தானே..)

எனக்குத் தெரிந்து ஜெர்மனி.. தெரியாமல் இன்னும் எத்தனையோ நாடுகள் இதை விட பலம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.

"ஐரோப்பாவில் பல நாடுகள் மற்றும் சீனா போன்றவை தொழிநுட்பத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளன. நமது நாட்டை எளிதில் வீழ்த்தி விட முடியும். நம்மிடம் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருந்தாலும், நல்ல அரசியலும் கை கோர்த்தால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும். உள்சண்டை வெளிநாட்டானுக்குக் கொண்டாட்டம்." இதுவும் நண்பர் கூற்றே. சில்லென்று எங்கோ உறைத்தது.

திருத்தப் பட வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. பலபேர்க்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. சும்மா பேசிக் கொண்டே இருப்பதில் பயனுமில்லை.

"Don't be a part of the question. Be a part of the solution" என் அண்ணன் சொன்னது.

நம்ம ஊரில் எல்லோரும் அரசியலைக் குறை சொல்லுவோம்(அதை அவர்கள் கண்டு கொள்வதில்லை என்பது வேறு விஷயம்.) ஆனால் ஏன் நீங்க அரசியலுக்கு வரலாமே என்று கேட்டால், நம்மில் அரசியலாளர்களைத் திட்டும் பலரும் யோசிப்பார்கள்.

உண்மையில் நாம் அரசியலை தூர நின்று கொண்டு தான் பார்க்கிறோம். அருகில் நண்பர்களிடம் பேசுபவர்கள், தெருவில் கூடிப் புலம்புபவர்கள், மெயில்களில் பதிலனுப்புபவர்கள், ப்ளாக் எழுதி அரசியலாளர்களைக் கலாய்ப்பவர்கள் என அனைவரையும் இதற்குள் அடைத்து விடலாம்..

ஆனால் மாற்றவே முடியாதா..? எதற்கும் தீர அலசலாமே.. எல்லாவற்றிற்கும் பதில் நம்மிடமே உள்ளது.

முதலில் இந்தக் காணொளியைப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=8nDvbBn_0zM&feature=player_embedded

இபோது பின்வரும் ஒரு சூழ்நிலையை யோசித்துப் பார்த்தேன். முடிந்தால் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.

"மச்சான், நான் போக்குவரத்துத் துறை அமைச்சராகீட்டேன்.. அந்த இத்துப் போன தகர டப்பா வண்டியை எல்லாம் காயலாங்கடைக்குப் போட்டுட்டு, புதுசா பேருந்துகள் வாங்கச் சொல்லி ஒரு மெயில் தட்டினேன். நம்ம சீனியர் தான மத்தியில இருக்கார்.. உடனே ஒப்புதல் அளிச்சு நிதியும் ஒதுக்கீட்டாரு. கல்லூரி மேடைகள்ள பேசும்போது அவரை சும்மான்னு நெனச்சேன்.. சொன்னத செய்யராருப்பா. அவருக்கென்ன, பிரதமரா இருக்கறது அவரோட சீனியரு. அவங்களுக்கும் காலேஜு காலத்துல இருந்தே நல்ல அண்டர்ஸ்டாண்டிங்.. அட நம்ம எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மென்ட் ரவி.. அமைச்சரானதுக்கு அப்புறம் அசத்தறாம்பா.. ஒரு மேகாவாட்டுக்கு மேல மின் உபயோகம் பண்றவன் எவனா இருந்தாலும் சோலார் பொருத்தனும்னு ஆடர்.. இல்லைன்னா லைசென்சு கட்டுன்னு போட்டானே ஒரு போடு.. அவனவன் துண்ட காணோம் துணியக் காணோம்னு ஓடிப் பொய் வாங்கி மாட்டீட்டாணுகளே.. இவனுக கிட்ட காசு இல்லாம இல்லப்பா.. எதுக்கு செலவு செய்யணும்னு மதப்பு. வெச்சாம்பாறு ஆப்பு. கரண்டு கட்டு இப்பத்தான் கம்மியாகுது.. விவசாயத்துக்கு இப்ப அதிக மின்சாரம் கெடைக்குதப்பா.. எங்க அப்பா கூட அவன மனசார வாழ்த்தனாரு. ஆமா நீயும் நெறைய கனவுகளோட இருந்தியேடா... இன்னுமா அரசியலுக்கு வரலை..?? சும்மா வாடா... நாங்க இருக்கோம்.. நெனச்ச சாதிக்க வெப்போம்.."

இப்படி ஒரு சூழல் அமைந்தால் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா மாட்டீர்களா...??

நமது நாட்டின் சரித்திரத் தவறுகளில் இருந்து, உள்கட்டமைப்பு, அரசியல், இளைஞர்கள், கல்வி என்று அனைத்தையும் துல்லியமாக அலசலாம் அடுத்த பகுதியில் இருந்து.

அப்புறம் தலைப்பைப் பற்றி யாருக்கும் விளக்கம் தேவையில்லை என்று நம்புகிறேன்.

இது என்னுடைய பார்வை. பொதுவான கருத்துக்கள். அதனால் காரசாரமான எதிர்விவாதங்களை அன்புடன் ஆவலுடன் வரவேற்கிறேன்.

சாமக்கோடங்கி

32 பின்னூட்டம்:

ப.கந்தசாமி said...

நல்ல சிந்தனை பிரகாஷ். நானும் தூக்கம் வராத இரவுகளில் நான் இந்தியாவின் பிரதமரானால் என்னென்ன செய்வேன் என்று கற்பனை செய்வதுண்டு. நடைமுறையில் யார் இன்றைய அரசியலில் பங்கு பெற முடியும் என்றால் பேட்டை ரவுடியும் லோகல் தாதாவும் மட்டுமே.

தொடருங்கள், பிரகாஷ், நமக்குத்தெரியாமல் உலகில் என்னென்ன இருக்கிறது என்றாவது தெரிந்து கொள்வோம்.

Chitra said...

நான் இப்போது இருப்பது ஜெர்மனியில். பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போல் தான் முதலில் வேடிக்கை பார்த்தேன். இப்போது கொஞ்சம் பண்பட்ட பார்வை. நான் எழுதும்போது சிலபேர் வெளியூரைப் பார்த்ததும் நம்மூரைக் குறை சொல்கிறான் என்று நினைத்தாலும் நினைக்கலாம். இது உள்மன ஆதங்கமல்லாமல் வேர்வரை அலசிப் பார்க்கப் போகும் பதிவு.



......வெளிநாடு செல்லும் பெரும்பாலோருக்கு உண்டாகும் எண்ணங்கள்.... ஆனால், நீங்கள் குறிப்பிட்டு அலசி பார்த்துள்ள அளவுக்கு அத்தனை பேரும் செய்து இருக்கிறோமா என்று தெரியவில்லை. இந்த தொடரை, தொடர்ந்து வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல சிந்தனை..
நாட்டை, நாதாறிகளிடம் தாரைவார்த்ததில், நமக்கும்..அதாவது மக்களுக்கும் பங்கு உண்டு..

உண்மைதானே பிரகாஷ்.?

உம்.. ஒரு நல்ல தலைமையின்கீழ், நமது கனவு, நிறைவேறும் காலம் வெகுதொலைவில இல்லை..

Philosophy Prabhakaran said...

// 'னோமா', 'னோமா' வோடு சுற்றிக் கொண்டிருக்கும் என்னை //

இந்த இடத்தில் ரசித்தேன்...

அந்த அளவிற்கு பொறுமையில்லை தான்... நடுவில் ஓரிரு பாகங்கள் தவறவிட்டாலும் புரியும் வகையில் எழுத முயலுங்கள்...

ஜெய்லானி said...

இன்னொரு கார்பன் தொடர் ஓக்கே கலக்குங்க ...!! :-))

செல்வா said...

எனக்கும் ஜெர்மனி மேல முன்னாடி இருந்தே ஒரு ஈர்ப்பு இருக்குங்க. அது ஏன்னு தெரியல .. இந்தப் பதிவுல கூட வர நான் தயார். அந்த ஈர்ப்பு இப்போ முதல் உலகப்போர்லையும் இரண்டாம் உலகப் போர்லயும் அவுங்க செஞ்ச விசயங்கள் பிரமிப்புதான்.

நான் முதல்வரானால் அப்படின்னு கற்பனை பண்ணிப் பார்த்திருக்கேங்க.
ஆனா உங்களோட கற்பனைல கொஞ்சம் மாற்றுக்கருத்து இருக்கு ..

//புதுசா பேருந்துகள் வாங்கச் சொல்லி ஒரு மெயில் தட்டினேன். நம்ம சீனியர் தான மத்தியில இருக்கார்.. உடனே ஒப்புதல் அளிச்சு நிதியும் ஒதுக்கீட்டாரு. //

இது என்னனா இதுலயும் தெரிஞ்சவங்களுக்கு உதவுறோம் அப்படிங்கிற மாதிரி தான் தெரியுது .. ஆனா நீங்க சொல்ல வரது புரியுது. நல்ல சிந்தனை!!

சாமக்கோடங்கி said...

//DrPKandaswamyPhD said...

நல்ல சிந்தனை பிரகாஷ். நானும் தூக்கம் வராத இரவுகளில் நான் இந்தியாவின் பிரதமரானால் என்னென்ன செய்வேன் என்று கற்பனை செய்வதுண்டு. நடைமுறையில் யார் இன்றைய அரசியலில் பங்கு பெற முடியும் என்றால் பேட்டை ரவுடியும் லோகல் தாதாவும் மட்டுமே.

தொடருங்கள், பிரகாஷ், நமக்குத்தெரியாமல் உலகில் என்னென்ன இருக்கிறது என்றாவது தெரிந்து கொள்வோம்.
//

இதைத்தான் அடுத்த பாகத்தில் எழுத உள்ளேன்.. நாம் பிரதமரானால், நாம் முதல் மந்திரி ஆனால், என்று பல பேருக்குக் கனவு இருக்கும்.. அதையும் அலசுவோம்..
வருகைக்கு நன்றி.. கடைசி வரை இணைந்து இருங்கள்..

சாமக்கோடங்கி said...

//
......வெளிநாடு செல்லும் பெரும்பாலோருக்கு உண்டாகும் எண்ணங்கள்.... ஆனால், நீங்கள் குறிப்பிட்டு அலசி பார்த்துள்ள அளவுக்கு அத்தனை பேரும் செய்து இருக்கிறோமா என்று தெரியவில்லை. இந்த தொடரை, தொடர்ந்து வாசிக்க ஆவலாய் உள்ளேன்.//

தொடர்ந்து உங்கள் தரப்புக் கருத்துகளையும் எதிர்பார்த்து ஆவலாய் உள்ளேன். நன்றி..

சாமக்கோடங்கி said...

//பட்டாபட்டி.... said...

நல்ல சிந்தனை..
நாட்டை, நாதாறிகளிடம் தாரைவார்த்ததில், நமக்கும்..அதாவது மக்களுக்கும் பங்கு உண்டு..

உண்மைதானே பிரகாஷ்.?

உம்.. ஒரு நல்ல தலைமையின்கீழ், நமது கனவு, நிறைவேறும் காலம் வெகுதொலைவில இல்லை..
//

அப்படி சொல்லுங்க பட்டா..

அந்த மாற்றத்தை தொலைவில் நன்று ரசிப்பவனாக நான் இருக்க விரும்பவில்லை. மாற்றங்கள் நம்முள் இருந்தே தொடங்குகின்றன.. அதனால் நாமும் அதில் இருக்க வேண்டும் என்பதற்கான தயார்ப்படுத்துதலே இந்தப் பதிவாகும்..

சாமக்கோடங்கி said...

//Philosophy Prabhakaran said...

// 'னோமா', 'னோமா' வோடு சுற்றிக் கொண்டிருக்கும் என்னை //

இந்த இடத்தில் ரசித்தேன்...

அந்த அளவிற்கு பொறுமையில்லை தான்... நடுவில் ஓரிரு பாகங்கள் தவறவிட்டாலும் புரியும் வகையில் எழுத முயலுங்கள்...
//

தலைவா எப்பவாவது இந்த மாறி வந்து விழுவது உண்டு. எப்போதும் எதிர்பார்க்காதீர்கள். சுற்றி வளைத்தாவது விஷயத்துக்கு வந்து விடுவேன். கண்டிப்பாகப் புரியும் வகையில் எழுத முயல்கிறேன்.

நன்றி..

சாமக்கோடங்கி said...

//ஜெய்லானி said...

இன்னொரு கார்பன் தொடர் ஓக்கே கலக்குங்க ...!! :-))
//

கார்பன் தொடர் இன்னும் முடியவில்லை. அடுத்த பாகம் தொடர இன்னும் நிறைய தகவல்கள் சேகரிக்க வேண்டி உள்ளது..

நன்றி ஜெய்லானி..

சாமக்கோடங்கி said...

//கோமாளி செல்வா said...

எனக்கும் ஜெர்மனி மேல முன்னாடி இருந்தே ஒரு ஈர்ப்பு இருக்குங்க. அது ஏன்னு தெரியல .. இந்தப் பதிவுல கூட வர நான் தயார். அந்த ஈர்ப்பு இப்போ முதல் உலகப்போர்லையும் இரண்டாம் உலகப் போர்லயும் அவுங்க செஞ்ச விசயங்கள் பிரமிப்புதான்.

நான் முதல்வரானால் அப்படின்னு கற்பனை பண்ணிப் பார்த்திருக்கேங்க.
ஆனா உங்களோட கற்பனைல கொஞ்சம் மாற்றுக்கருத்து இருக்கு ..

//புதுசா பேருந்துகள் வாங்கச் சொல்லி ஒரு மெயில் தட்டினேன். நம்ம சீனியர் தான மத்தியில இருக்கார்.. உடனே ஒப்புதல் அளிச்சு நிதியும் ஒதுக்கீட்டாரு. //

இது என்னனா இதுலயும் தெரிஞ்சவங்களுக்கு உதவுறோம் அப்படிங்கிற மாதிரி தான் தெரியுது .. ஆனா நீங்க சொல்ல வரது புரியுது. நல்ல சிந்தனை!!
//

நீங்க சொல்வது சரி தான்.. தெரிந்தவங்களுக்கு தான் அதிகம் உதவுவோம்.. அது மனித இயல்பு. நாடு முழுவதும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த வரிகளின் நோக்கம். அரசியல் இலகுவாக இருக்க்க வேண்டும் என்பதே கருத்து.

இளங்கோ said...

கொதி நிலை - தலைப்பு அருமை பிரகாஷ்.

சுத்தம் மற்றும் வேறெந்த நல்ல விசயம் வெளிநாட்டில் இருந்தாலும் நாம் அதைப் பாராட்டுகிறோம். ஆனால், ஒரு காலத்தில் சென்னை போன்ற நகரங்களே அழகாகத்தானே இருந்தது, கூவம் உட்பட. அந்தக் காலத்தில் பாலிதீன் பைகள் இல்லாத கிராமங்கள் நிறைய இருந்தன, ஆனால் இன்று அங்கும் அவை விரவிக் கிடக்கின்றன.

மக்கள் பெருக்கம் அதிகமாகும் பொழுது செய்ய வேண்டியவை பற்றி தொலை நோக்குத் திட்டங்கள் நம்மிடம் இருப்பதில்லை. இதில் வோட்டு போட்ட நமது குற்றமா, இல்லை அரசியல்வாதிகள் குற்றமா ? .

//இந்த ஊர் எப்படி இவ்வளவு சுத்தமாக, நல்ல பராமரிப்புடன் அழகாக உள்ளது என்று எப்போதும் மனதுக்குள் தோன்றும்//

இது சூழல், நாடு மற்றும் மக்களின் பொருளாதாரம், நல்ல அரசியல் தலைவர்களின் நீண்ட கால திட்டம் ஆகியவற்றைப் பொருத்தது என நான் நினைக்கிறேன். இந்தியாவில், இன்னும் முறையான கழிப்பிட வசதி இல்லாமல் இருப்பவர்கள் நிறைய. ஏன், கோவை மாநகராட்சி பேருந்து நிலையத்தையே எடுத்துக் கொள்ளுங்கள் பிரகாஷ், போன வாரம் பார்த்தேன் (நீங்களும் பார்த்திருப்பீர்கள்).. கொடுமை.

இதை எல்லாம் சரி பண்ணாமல் (நிதி இல்லை என்று சொல்லுவார்கள் !!), நமது தலைவர்கள் இலவசங்களை அள்ளி வழங்கி வோட்டுகளை அள்ளுகிறார்கள்.

இன்னும் பேசலாம் பிரகாஷ்.. :)

சாமக்கோடங்கி said...

//இன்னும் பேசலாம் பிரகாஷ்.. :)//

வாங்க இளங்கோ..

நிறையப் பேசலாம்.. செய்யக் கூடியனவற்றைப் பேசலாம்..

உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.. நீங்கள் செயல்வீரர்.

இன்னும் நிறைய அலசலாம்..

test said...

கொதிநிலை! - தலைப்பே சொல்கிறது.
இதே சுவாரஸ்யத்துடன் நிறையச் சொல்லுங்கள் பொறுமையுடன் படிப்போம்.

நீங்கள் யோசித்துப் பார்க்கச் சொன்ன சூழ்நிலை - ஒரு நல்ல குடிமகனின் கனவைச் சொல்லும் ஒரு அருமையான குறும்படத்திற்கான கரு!

என்ன செய்வது நீங்கள் நல்ல விஷயமொன்ற்றைச் சொன்னாலே அதையும் 'படமாகவே' கற்பனை செய்ய முடிகிறது! :-)

சாமக்கோடங்கி said...

//ஜீ... said...

கொதிநிலை! - தலைப்பே சொல்கிறது.
இதே சுவாரஸ்யத்துடன் நிறையச் சொல்லுங்கள் பொறுமையுடன் படிப்போம்.

நீங்கள் யோசித்துப் பார்க்கச் சொன்ன சூழ்நிலை - ஒரு நல்ல குடிமகனின் கனவைச் சொல்லும் ஒரு அருமையான குறும்படத்திற்கான கரு!

என்ன செய்வது நீங்கள் நல்ல விஷயமொன்ற்றைச் சொன்னாலே அதையும் 'படமாகவே' கற்பனை செய்ய முடிகிறது! :-)
//

வாங்க ஜி..

கற்பனையில் எந்தத் தவறும் இல்லை.. அந்தச் சூழலை உருவாக்க என்ன செய்யலாம் என்பதை அலசலாம்..

வலையுகம் said...

கொதிநிலை தலைப்பே வித்தியாசமாக இருக்கு

வாழ்த்துக்கள் நண்பரே

நல்ல பதிவு

இனி உங்களை தொடர்கிறேன்

அந்நியன் 2 said...

tamil converter treble pannudhu naalaikku comment poduren brother.

சாமக்கோடங்கி said...

//ஹைதர் அலி said...

கொதிநிலை தலைப்பே வித்தியாசமாக இருக்கு

வாழ்த்துக்கள் நண்பரே

நல்ல பதிவு

இனி உங்களை தொடர்கிறேன்
//

நன்றி நண்பரே.. வாருங்கள்

சாமக்கோடங்கி said...

//அந்நியன் 2 said...

tamil converter treble pannudhu naalaikku comment poduren brother.
//

பொறுமையா வாங்க.. கட காலியாத்தான் இருக்கு...

Asiya Omar said...

உங்க பார்வையும் கருத்தும் அருமையாக வெளிப்படுத்தி இருக்கீங்க,பிரகாஷ்! வாழ்த்துக்கள்,தொடருங்க.

BalajiS said...

வாழ்த்துக்கள்,
உங்களிடம் இருந்து உருப்படியான கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்

இளைஞர்கள் அரசியல் என்றால் எம் எல் ஏ எம்பி அமைச்சர் என்று தான் நினைக்கிறார்கள்.

நாட்டை திருத்த நினைப்பவர்கள் அவர்கள் ஊரில் ஒரு கவுன்சிலர் பஞ்சாயத்து உறுப்பினர் ஆகி முதலில் நிர்வாகம் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டு சிறிய அளவில் ஆரம்பிக்க வேண்டும்

பாலாஜி

Jayadev Das said...

//மெதுவாக நடந்து போய் அருகில் இருந்த குப்பைத் தொட்டிகளில் காகிதம் போடுவதற்கான தொட்டியில் போட்டு விட்டு அதே மெல்ல நடையோடு அங்கிருந்து போய் விட்டார்.//இந்த மாதிரி தனி மனித பொறுப்பு நம் நாட்டில் யாருக்கும் இல்லை. ஆட்சி செய்பவர்களுக்கு இருக்கும் வரை எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அவ்வளவு அடிப்போம் என்ற குறிக்கோள், மக்களுக்கு, எவன் அப்பன் வீட்டு காசோ எனக்கென்ன வந்தது என்ற பொறுப்பற்ற தனம். இரண்டு தரப்புக்குமே அக்கறை இல்லை. அப்புறம் வேறென்ன நடக்கும்? எந்த பைத்தியக் காரனாவது சாக்கடையையும், ரசாயன ஆலைகளில் இருந்து வரும் விஷக் கழிவுகளையும் குடிக்கும் நீரைத் தரும் ஆற்றில் கொண்டு போய் கலக்க விடுவானானா? ஆற்று மணலை கேரளா வழியே அரபு நாடுகளுக்குக் கடத்தி மக்களுக்கு ஜீவனாக விளங்கும் ஆறுகளைக் கொள்வானா? உணவு தரும் விலை நிலங்களை வெறும் முதளீடு செய்து பின்னால் விற்ப்பதற்க்காகவே வாங்கப் படும் பிளாட்டுகளாக பிரித்துப் போட்டு விற்க அனுமதிப்பானா? மக்களுக்குப் சேர வேண்டிய பணத்தை தனியார்க்காரன் பங்கு பிரித்துப் போட்டு தின்னுமாறு "அலையலையாய்" ஊழல் பண்ணுவானா? திருடன், ரவுடி நாட்டை பணத்துக்கு காட்டிக் கொடுப்பவர்கள்தான் இன்று நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதற்க்கு ஒரே வழி, மக்கள் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது வரும் அதே தேச பக்தி, ஒற்றுமையோடு ஆட்சியாளனை சட்டைக் காலரைப் பிடித்து கேள்வி கேட்கும் நாள் வர வேண்டும், அன்று எல்லாம் சரியாகும். [அது எங்க நடக்கப் போவுது...???]

Anonymous said...

ரோஜா அழகு என்பது ஒரு ஒப்பீடுதான்.
ஒப்பீடு தான் எது அழகானது என்பதையும்,அழகானதல்ல என்பதையும் எடுத்துக்காட்டும்.

ஜோதிஜி said...

நண்பர் பலருக்கும் இதை அனுப்பி உள்ளார். எனக்கும் வந்தது. ஆமா எப்ப திடீர்ன்னு ஜெர்மனி?

தலைப்பு ரொம்பு அற்புதம்.

இது போல யோசித்து பித்து பிடித்தது தான் மிச்சம்.

படித்த பசிதம்பரமே இப்படி? படிக்காத ஆளுங்கள எப்படி குறை சொல்வீங்க?

சாமக்கோடங்கி said...

//asiya omar said...

உங்க பார்வையும் கருத்தும் அருமையாக வெளிப்படுத்தி இருக்கீங்க,பிரகாஷ்! வாழ்த்துக்கள்,தொடருங்க.
//

வாங்க ஆசியா உமர் அவர்களே.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

சாமக்கோடங்கி said...

//நாட்டை திருத்த நினைப்பவர்கள் அவர்கள் ஊரில் ஒரு கவுன்சிலர் பஞ்சாயத்து உறுப்பினர் ஆகி முதலில் நிர்வாகம் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டு சிறிய அளவில் ஆரம்பிக்க வேண்டும் //

அருமையான வரிகள்.. நாம் சின்னவர்கள், சிறிதாக செய்யும் தவறுக்கும், அவர்கள் பெரிய இடத்தில் இருந்து கொண்டு பெரிதாகச் செய்யும் தவறுகளுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை என்பதை உணர வேண்டும்..ஆகவே சிறிய அளவில் நல்லவற்றை ஆரம்பிக்க வேண்டும்..

சாமக்கோடங்கி said...

//திருடன், ரவுடி நாட்டை பணத்துக்கு காட்டிக் கொடுப்பவர்கள்தான் இன்று நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதற்க்கு ஒரே வழி, மக்கள் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது வரும் அதே தேச பக்தி, ஒற்றுமையோடு ஆட்சியாளனை சட்டைக் காலரைப் பிடித்து கேள்வி கேட்கும் நாள் வர வேண்டும், அன்று எல்லாம் சரியாகும். [அது எங்க நடக்கப் போவுது...???]//

வாங்க ஜெயதேவ்...

அனல் தெறிக்கும் வசனங்கள்.. கண்டிப்பாக மக்கள் கொதித்தெழும் நாள் வரும்.. அது தான் இந்த இடுகையின் தலைப்பு.. அடுத்த பகுதிக்கும் வந்து விடுங்கள்.. இன்றும் நன்றாகக் கொதிக்க விடலாம்..

சாமக்கோடங்கி said...

//"குறட்டை " புலி said...

ரோஜா அழகு என்பது ஒரு ஒப்பீடுதான்.
ஒப்பீடு தான் எது அழகானது என்பதையும்,அழகானதல்ல என்பதையும் எடுத்துக்காட்டும்.
//

வாங்க குறட்டை புலி..

நச் வரிகள்..

சாமக்கோடங்கி said...

//ஜோதிஜி said...

நண்பர் பலருக்கும் இதை அனுப்பி உள்ளார். எனக்கும் வந்தது. ஆமா எப்ப திடீர்ன்னு ஜெர்மனி?

தலைப்பு ரொம்பு அற்புதம்.

இது போல யோசித்து பித்து பிடித்தது தான் மிச்சம்.

படித்த பசிதம்பரமே இப்படி? படிக்காத ஆளுங்கள எப்படி குறை சொல்வீங்க?
///

இதைத்தான் நானும் சொல்ல வருகிறேன்.. ஆட்சியாளர்கள் திருந்தினால் மக்களும் நல்லபடியாகவே நடந்து கொள்வார்கள்..

மதன் said...

அரசியலுக்கு எப்படி வரது வழிகள்
1) காசு பணம் கடன் வாங்கியாவது ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணனும்.
2) அடுத்தவன ஏமாத்தி வந்த காசுல ஒரு ஸ்கார்பியோ வாங்கணும்.
3) அப்படியே அதுல ஊர சுத்தி சுத்தி வந்து கூட இருக்க அல்க்கைகளுக்கு ஊத்தி விட்டு பெரும பேச வைக்கணும்.
4) அப்ப அப்ப அந்த பக்கமா வந்துட்டு போற அரசியல் பெரும்புள்ளிக்கு ஒரு மது....பல மாதுனு லைட்டா மாமா வேல பாக்கணும்...அப்படியே அடுத்த வர எந்த தேர்தலா இருந்தாலும் சீட்டுக்கு அடி போடணும்.
5) தேர்தலக்கு முன்னாடி பொட்டியா பொட்டியா காசு கொடுத்து சீட் வாங்கணும்.
6) சேர்ந்து இருக்க கட்சியோட பேர வச்சியும், வீட்டுக்கு இவ்வளவுனு அமோண்ட் கொடுத்தும் ஓட்டு வாங்கணும்.
7) CONGRATS NOW U R A POLITICIAN MAN.....

Unknown said...

ஐக்கிய மாநிலத்திற்கும் உலகெங்கிலும் உள்ள இலுமினாட்டியின் சிறந்த ஆர்டரின் வாழ்த்துக்கள், நீங்கள் இழந்த கனவுகளை மீட்டெடுக்கக்கூடிய, மற்றும் நீங்கள் செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் ஒளியைக் காணக்கூடிய ஒளிரும் சகோதரத்துவத்தில் சேர இது ஒரு திறந்த வாய்ப்பு. எந்த இரத்த தியாகமும் இல்லாமல். மேலும் அனைத்து புதிய உறுப்பினர்களையும் சகோதரத்துவத்தில் சேர்த்துக் கொள்வதற்காக 500,000 USD தொகையை நாங்கள் செலுத்துகிறோம், மேலும் அவர்கள் விரும்பும் ஒரு வீடு மற்றும் முதலீடுகளுடன், அவர்கள் வாழ்க்கையில் பிரபலமாக இருப்பதற்கான வாய்ப்பு.

வெளிச்சத்தில் சேரும் புதிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நன்மைகள்.
1. USD $ 500,000 USD பண வெகுமதி.
2. USD $ 200,000 USD மதிப்புள்ள ஒரு புதிய நேர்த்தியான கனவு CAR
3. உங்களுக்கு விருப்பமான நாட்டில் வாங்கப்பட்ட கனவு வீடு மற்றும் இன்னும் பல

குறிப்பு; நீங்கள் இந்தியா, துருக்கி, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மலேசியா, உலகில் எங்கிருந்தும் இல்லுமினாட்டி சகோதரத்துவத்தில் சேரலாம்.
துபாய், குவைத், யுனைடெட் கிங்டம், ஆஸ்திரியா, ஜெர்மனி, ஐரோப்பா. ஆசியா, ஆஸ்திரேலியா, முதலியன

குறிப்பு: நீங்கள் ஆர்வமாக இருந்தால் தயவுசெய்து எங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்: brotherhoodilluminati959@gmail.com

வாழ்த்துகள் டெம்பிள் ஒளிரும் ஐக்கிய மாநிலங்கள்

Post a Comment