Tuesday, June 19, 2012

கோவையில் தண்ணீர் பஞ்சமா?? - சும்மா விளையாடாதீங்க..

இடம் : சரவணம்பட்டி அம்மன் கோயில் அருகில்.

வீட்டில் இருந்து ஹோட்டலை நோக்கி நடந்து கொண்டு இருந்தேன். ஒரு பணக்கார பங்களா அருகே வந்தவுடன், அதன் வாசலில் வீட்டின் உள்ளிருந்து ஆற்றைப் போலப் பெருக்கெடுத்து ஓடி சாக்கடையில் குடிநீர் கலப்பதைப் பார்த்தேன். உள்ளே எட்டிப் பார்த்தேன். பாதாளத் தொட்டி நிரம்பி நீர் வெளியே வழிந்து கொண்டு இருந்தது. வீட்டின் கேட்டிற்கும் வீட்டுக் கதவுக்கும் இடையில் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கும் போல .. கத்தினால் கூட கேட்காது. உரக்கக் கத்தினேன்.

 "அண்ணா .. யாராவது இருக்கீங்களா...??? "

தொலைகாட்சி சப்தம் குறைய ஆரம்பித்து ஒரு வயதான அம்மா மெல்ல வெளியே வந்தார்.

"தண்ணி வழிஞ்சு போகுதுங்க..."

"சரிங்க தம்பி.."

அவர் மெல்ல நடந்து பைப்பை போட்டு வேறொரு சின்டெக்ஸ் டாங்குக்கு தண்ணியை மாற்றும்வரை நின்று பார்த்து விட்டு நகர்ந்தேன்.. அதற்குள் எப்படியும் மூன்று குடம் தண்ணீராவது வீணாகி இருக்கும். (நான் வாராததற்கு முன்பு எவ்வளவு போய் இருக்குமோ..) .

அதையடுத்து ஒரு இரண்டு வீடு தாண்டி இருப்பேன்.. இதே போன்று இன்னொரு வீடு.. அங்கேயும் கூப்பிட்டு சொன்னேன். அடுத்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. வெளிவாசலில் இருந்து நீண்டு கொண்டு போனது ஒரு ரப்பர் குழாய். அந்தக் குழாயில் போகும் நீரை விட விரயமாயிருந்த தண்ணீர் அதிகமாக இருந்தது. மழை பெய்த இடம் போலக் காட்சி அளித்தது.
 

அதைத் தாண்டி கொஞ்ச தூரம் தள்ளி நடக்கையில் அருவி கொட்டுவது போன்று சட சடவென்று சத்தம்.. மோட்டார் போட்டு தண்ணீரை மேலே ஏற்றிக் கொண்டு இருந்தனர் போலும்.. மேல்நிலைத் தொட்டி நிரம்பியதைக் கூட அந்த வீட்டார் கவனிக்கவில்லை. அமைதி இழந்து நான் கேட்டைத் திறந்து உள்ளேயே போய் விட்டேன். கதவை இரண்டு முறை பலமாகத் தட்டினேன்.. திறப்பார் இல்லை. வெளியில் இருந்த நாலைந்து சுவிட்ச் களைத்தட்டி விட்டேன்.. ஏதோ ஒன்றின் மூலம் மோட்டார் நின்றது .

ஒரு வழியாக ஹோட்டலில் சாப்பிட்டு விட்டுத் திரும்புகையில் பார்த்தால் வழி நெடுக புதிது புதிதாக நீரோட்டங்கள்.. அவ்வளவும் குடிநீர்... வீட்டில் இருந்து வெளியேறும் பைப்புகளில் இருந்து தண்ணீர் சாக்கடைகளில் கொட்டும் சத்தம் காதைக் கிழித்தது.



இப்ப சொல்லுங்க சார்.. கோவையில் தண்ணீர் பஞ்சமா... விளையாடாதீங்க..

 கீழே காண்பவற்றை யோசிப்போம்.

 1 . தேவைக்கு அதிகமாக மாநகராட்சி தண்ணீரைத் திறந்து விடுவதால் தான் சேமிப்பு அளவைத் தாண்டியதும் மீதி நீர் விரையமாவாதை மக்கள் கண்டு கொள்வதில்லையா..??

2 . குடிசையில் மற்றும் சிறு வீடுகளில் வாழ்பவர்கள் கூடக் குடங்கள் வைத்து தண்ணீரை அழகாக வீடுகளுக்குள் கொண்டு செல்கின்றனர். பணக்கார வீடுகளில் பைப் போட்டு அழகாக வீட்டின் பாதாளத் தொட்டிக்கே தண்ணீர் கிடைக்கும் வழிவகைகள் இருந்தும் கூட ஒரு நிமிடம் நின்று தண்ணீர் வீணாவதைக் கவனிக்ககூட நேரம் கிட்டாதா...??

3 . தண்ணீர் திறந்து விட்ட பிறகு ஒரு அரைமணிநேரமோ அல்லது ஒரு மணி நேரமோ கழித்து மாநகர குடிநீர் வழங்கல் துறை ஒரு சிறிய ரோந்து செய்து, தண்ணீர் வீணாக்குவோரைக் கண்டு பிடித்து உடனடி அபராதம் விதிக்க முடியாதா..?? (என்னைக் கேட்டால் இவர்களை எல்லாம் முட்டிக்கு முட்டி தட்டலாம் ).

நாம் படிப்பது வெறும் ஏட்டளவில் தானா...?? அவரவர் வீடுகளில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் பொதுப்பணி பேசி என்ன பயன்..? இதனைப் படிப்பவர் அனைவரும் முதலில் அவரவர் வீடுகளில் தண்ணீர் முறையாகச் சேமித்து வைத்துப் பயன் படுத்தப் படுகிறதா என்பதை உறுதிப் படுத்துவோம்.

மாநகராட்சியையோ, அரசையோ இதில் கடிந்து பயன் இல்லை. புற்றீசல் போலப் பல்கிப் பெருகி விட்ட மாநகரங்களில் ஒவ்வொரு வீட்டையும் வந்து ஒழுங்கு செய்வது சாத்தியமற்றது. இதை எல்லாம் பார்க்கும்போது மக்களுக்கு ஏற்ற அரசு தான் இருக்கிறதோ என்றே தோன்றுகிறது.

நான் நடந்து இரண்டே தெருக்களில்.. அப்போது கோவையில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீடுகளிலும் எத்தனை தண்ணீர் இதே போன்று வீணாகிறதோ..??? அங்கே மட்டும் ஒழுங்காகவா இருக்கப் போகின்றது.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

இன்னும் கொஞ்ச நாளில் சிறுவாணியிலும் கட்டி விடுவார்கள் அணையை. அப்புறம் பார்க்கிறேன்.. எப்படி இவர்கள் இந்த வீணாக்கும் விளையாட்டை விளையாடுகிறார்கள் என்று.

நன்றி..
சாமக்கோடங்கி 

7 பின்னூட்டம்:

ப.கந்தசாமி said...

வழிகள் இருக்கின்றன. மனதுதான் இல்லை.

என் வீட்டில் கீழ்மட்டத் தொட்டியில் தண்ணீர் வரும் பைப்பில் Float Valve ஒன்று (டாய்லெட்டில் ஃபிளஷ் டேங்கில் இருக்கும்) மாட்டியிருக்கிறேன். அந்த மட்டத்திற்கு தண்ணீர் நிரம்பியவுடன் தண்ணீர் வரத்து நின்றுவிடும். இதன் விலை 200 ரூபாய்தான்.

கீழ்த்தொட்டியிலிருந்து மேல் நிலைத் தொட்டிக்கு மோட்டார் பம்ப் வைத்திருக்கிறேன். இதற்கு ஆட்டோமேடிக் லெவல் கன்ட்ரோலர் என்று ஒரு சிஸ்டம் இருக்கிறது. விலை 2000 ரூபாய். விலை அதிகம் என்று மோட்டார் பம்ப் வைத்திருப்பவர்கள் நினைக்கக் கூடாது. மேல் தொட்டியில் நாம் நிர்ணயித்த அளவிற்கு தண்ணீர் நிரம்பியவுடன் மோட்டார் தானாகவே நின்றுவிடும்.

எந்த நிலையிலும் தண்ணீர் வீணாகாது.

காற்றும் தண்ணீரும் இலவசமாக இயற்கை தரும் வளங்கள் என்று 50 வருடங்களுக்கு முன் பள்ளிப் பாடங்களில் படித்திருப்போம். ஆனால் அவை இன்று விலை மதிப்புள்ளவை. இன்னும் கொஞ்ச காலத்தில் கிடைக்காமல் போகலாம். மனிதர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நகரங்களில் ஒவ்வொரு வீட்டையும் வந்து ஒழுங்கு செய்வது சாத்தியமற்றது. இதை எல்லாம் பார்க்கும்போது மக்களுக்கு ஏற்ற அரசு தான் இருக்கிறதோ என்றே தோன்றுகிறது.//

உண்மையான வார்த்தைகள் சார்..

தமிழ்மலர் said...

very nice post

முத்தரசு said...

//இன்னும் கொஞ்ச நாளில் சிறுவாணியிலும் கட்டி விடுவார்கள் அணையை. //

அப்ப தான் புரியும் இந்த வீணர்களுக்கு,

பகிர்வுக்கு நன்றி

Thozhirkalam Channel said...

மின்சார தட்டுபாட்டை சமாளிக்க முடியாமல் தினறுபவர்கள்தானே நாம்...?

பகிர வேண்டிய விளிப்புணர்வு பகிர்வு சகோ,,

நல்லது

தொடருங்கள்,,,

Dino LA said...

அருமை

Unknown said...

Hi.....

Post a Comment