Thursday, October 27, 2011

ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு

"இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்டானாம்" என்று நம்ம ஊரில் பழமொழி சொல்லுவார்கள். அந்நியர்களின் ஆக்கிரமிப்பால் நமது நாட்டின் வளங்கள் பல அழிந்து போயின. ஆனால் இன்று நான் பேச வந்தது மனிதர்களைப் பற்றி அல்ல. நமது நாட்டில் பரவி, பல்வேறு விதமான தீங்குகளை இழைக்கும் ஒரு தாவரத்தைப் பற்றி. இதனை லாண்டனா கமரா (Lantana Camara) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். படத்தைப் பார்த்துத் தமிழில் இதற்கு ஏதாவது பெயருள்ளதா என்று யாராவது சொல்லுங்கள்.

மத்திய அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த லாண்டனா, உலகிலேயே மிகக் கொடிய தாவரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது.உலகெங்கிலும் பலலட்சம் ஹெக்டேர்களில் பரவிக் காணப்படும் புதர் வகையைச் சேர்ந்த இத்தாவரம் அந்தந்த நாடுகளில் விளையும் தாவரங்களுக்கு மிகப்பெரும் அபாயங்களை விளைவிக்கிறது.
காப்பி,அரிசி,தேயிலை,கரும்பு,பருத்தி மற்றும் தென்னை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் இவை விவசாயத்தில் பெரும்பங்கு வகிப்பவை.

கிபி.1807 ல் கொல்கத்தா தாவரவியல் பூங்காவிற்கு ஆராய்ச்சிக்க்காகக் கொண்டுவரப்பட்ட இத்தாவரம் அங்கிருந்து தப்பித்து மிகக்குறுகிய காலத்தில், இமைய மலையில் இருந்து குமரி வரை தனது ராஜாங்கத்தைத் தானே அமைத்துக் கொண்டது. அழகான கொத்து மலர்கள் மூலமாகவும், சிறுகொத்தாக இருக்கும் கருமை நிறப் பழங்களின் மூலமாகவும், பறவைகள், மற்றும் விளங்கினன்களைக் கவர்ந்து அவற்றின் மூலமாக விதைகளை மற்ற இடங்களுக்கு இவைகள் பரப்புகின்றன.

லாண்டனாவால் பாதிப்பு என்று எப்படிக் கூறுகிறோம்..??

ஒன்று: இது பரவும் விதம் மற்றும் வேகம். மண்வளம் குறைவாக உள்ள பகுதிகளிலும் மிக இலகுவுகாக வேர்களைப் பரப்பும் இவை, அப்பகுதி வாழ் தாவர்களுடன் மிக எளிதாகப் போட்டியிட்டு வீழ்த்தி விடுகின்றன.

இரண்டு: காடுகளின் அமைப்பையே மாற்றும் அபாயம். அதாவது, ஓரிடத்தில் பிறந்து வளரும் பூர்வீகத் தாவரங்களால் அந்த இடத்தின் மண்வளம், நிலத்தடி நீர்வளம், இயற்கை அமைப்பு, பறவைகள், விலங்குகள் போன்றவை மாறாமல் சமநிலையுடன் பாதுகாக்கப் படுகின்றன. இந்த வகை ஊடுருவுத் தாவரங்களால் அந்த சமநிலை பாதிப்படைகிறது.

மூன்று: லாண்டனா வளரும் காட்டுப் பகுதிகளின் நிலமானது மழைக்காலங்களில் நீரை உறிஞ்சி நலத்தடிக்குள் அனுப்பும் பண்பை இழந்து விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள். இதனால் மண்ணின் பசைத்தன்மை போய், மண்சரிவு ஏற்பட ஏதுவாகிறது.

நீலகிரி மலைப்பகுதிகளில் கூட மண்சரிவு அடிக்கடி ஏற்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு மலை ரயிலில் பயணிக்கையில் வழிநெடுகும் லாண்டனாக்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன.என்னுடைய புகைப்படக் கருவியில் அடக்க முடியாத அளவுக்கு. விசாரிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுதும் இதன் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளதாம். நமது சொந்த மண்ணிற்கு இந்தச் செடியினால் ஏற்படும் அபாயம் தெரியாமல் குழந்தைகளும் பெரியவர்களும் கைகளை நீட்டி, அந்த விஷச் செடியினைப் பறித்து விளையாடினர்.

இது எப்படிப் பிழைக்கிறது? மிகக் கடினமான பாறை இடுக்களிலும், தண்ணீர் அதிகமாகக் கிடைக்காத பகுதிகளிலும் கூட எளிதில் வளரக்கூடிய அமைப்பு கொண்ட இத்தாவரத்தின் விதைகள் காட்டுதீயாலும் பாதிக்கப் படுவதில்லை. எனவே, காட்டுத் தீ வந்த பிறகு, மற்ற செடிகளின் விதைகள் அந்தப் பகுதிக்குள் விழுவதற்குள், இவைகள் புதர்களாக வளர்ந்து அந்த இடத்தை ஆக்கிரமித்து விடுகின்றன. தண்ணீர் கிடைக்கையில் அதனை உறிஞ்சி தண்டுப் பகுதியில் சேமித்து வைத்துக் கொண்டு, பாலைவன ஒட்டகம் போல, வெகு நாள் செழிப்போடு இருக்கிறது. இதனால் தான் மற்ற செடிகள் வாடிக் கருகிக் கிடைக்கும்போதும், இந்த லாண்டனாப் புதர்கள் செழிப்போடு இருக்கின்றன.

இவற்றின் வளர்ச்சியை எப்படிக் கட்டுப் படுத்தலாம்..??

மிக எளிய வழி மனித ஆக்கிரமிப்பு. அதாவது மனிதன் இந்த லாண்டனாவைப் பெரிய அளவில் உபயோகப் படுத்தினால் தானாக இவை குறைந்து விடும்.
அழிப்பது ஒன்றும் நமக்குப் பெரிய வேலை இல்லை. தற்போது இந்த லாண்டனா விறகாகவும் கூடை நெய்யவும் மற்றும் சிலவகை மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றன. சிலவகை ரசாயனம் கலந்தால் இதன் தண்டுகளைக் காகிதம் தயாரிக்க உபயோகப் படுத்தலாம். இதனைப் பெரிய அளவில் செய்ய முனைந்தால் இவை அழிக்கப்படவோ, இவற்றின் ஆக்கிரமிப்பு குறைக்கப்படவோ அல்லது மேலும் விரவாமல் கட்டுப்படுத்தபடவோ வாய்ப்புகள் உள்ளன.

மற்றபடி ரசாயனகள் மூலமோ , புல்டோசர் எந்திரங்களின் மூலமோ, கைகளால் வெட்டுவதன் மூலமோ, தீயிட்டுக் கொளுத்துவதன் மூலமோ சிறு சிறு நிலப்பகுதி மக்கள் அங்கே படர்ந்துள்ள லாண்டனாவைக் கட்டுப் படுத்தலாம்.
சிலவகைப் பூச்சிகளைப் பரப்புவதன் மூலம் கூட இச்செடியின் இனவிருத்தியைக் குறைக்க முடியுமாம்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், மக்களிடம் விழிப்புணர்ச்சி வர வேண்டும் என்பதே..!! நான் மேற்கூரியதைப் போல மக்களுக்கு இதனைப் பற்றித் தெரியாததால், ரயில் பாதை நெடுகும் பரவியிருந்த இந்த 'அழகான' தாவரத்தை மட்டுமே ரசித்துக் கொண்டே வந்தனர். இந்தச் செடிகள் வருவதற்கு முன்னர், அங்கே எவ்விதமான தாவரங்கள் இருந்திருக்கக் கூடும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இதை விடக் கொடுமை, இந்தத் தாவரம் செடிகள் விற்கும் நர்சரிகளில் அழகுப் பொருளாக விற்பனைக்கு உள்ளன. மக்களும் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு,சிவப்பு என்று விதம் விதமாகக் கொத்துக் கொத்தாகப் பூக்கும் இச்செடியை ஆவலுடன் வாங்கிச் செல்கின்றனர்.

என் நண்பர் ஒருவர் இதைப் பற்றி ஒரு கடையில் விசாரித்து விட்டுப் பிறகு அவர்களிடம் இதன் தீமைகளைப் பற்றிக் கூறி, இதை விற்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார். ஆனால் கடைக்காரர் எப்படி பதில் கூறியிருப்பார் என்று நமக்கு எல்லோருக்குமே தெரியும்..


நன்றி..
சாமக்கோடங்கி

9 பின்னூட்டம்:

சாமக்கோடங்கி said...

ரொம்ப நாள் கழித்து ஒரு அறிவியல் பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல விழிப்புணர்வு பதிவு ...

சாமக்கோடங்கி said...

நன்றி பட்டா... உங்களையும் பாத்து ரொம்ப நாள் ஆச்சு..:)

Selvastar said...

excellent man :-)

சாமக்கோடங்கி said...

நன்றி செல்வா...

venkatx5 said...
This comment has been removed by the author.
venkatx5 said...

வேலி மரம்தான் பிரச்சனை பண்ணுதுன்னு சொன்னங்க.. இந்த பூ செடியும் அதே வகையா??
இந்த தகவலை இன்னும் பெரிய அளவில் பரப்ப வேண்டும்..

venkatx5 said...

Am taking the content of this post to create awareness. Hope there is no copyright problem.

சாமக்கோடங்கி said...

வாங்க வெங்கட்... காசா பணமா..??காப்பிரைட் டீ ரைட் எல்லாம் இல்லைங்க.. நம்ம நோக்கமே இந்த மாதிரி தகவல்கள் நிறையபேரைச் சென்றடைய வேண்டும் என்பதே.. நன்றிகள் பல..

Post a Comment