Tuesday, May 1, 2012

அரசாமை

அன்பு நண்பர்களே.. வணக்கம்.

என்னுடைய ஒரு சிறு போர் அடிக்கும் அனுபவத்தை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.

எனது இன்டர்நெட் மோடம் பழுதாகி விட்டதால் புதியதாக ஒரு மோடம் வாங்கி இருந்தேன். அதை கான்பிகர் செய்ய மேட்டுப்பாளையம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு சனிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் கொண்டு சென்றேன்.

முதல் அறையில் யாரும் இல்லை. நிறைய நோட்டுக்கட்டுகள் மேசை மீது விரவி இருந்தன. மற்றும் பல பொருட்கள் மேலேயே போடப்பட்டு இருந்தன. இளநிலைப் பொறியாளர்(JTO-Junior Telecom Officer)அறையிலும் ஈ காக்கை இல்லை. கணினி லாக் செய்யப் படாமல் இயங்கிக் கொண்டு இருந்தது. ஏகப்பட்ட லான்ட்லைன் தொலைபேசிகள், மோடம்கள் கைக்கு எட்டும் தொலைவில் அனாதைகளாகக் கிடந்தன. அடுத்து ஒரு மிகப்பெரிய ஹால். அதிலே பழைய காகிதக் கட்டுகள் அலமாரியில் அடுக்கப் பட்டு இருந்தன. அங்கே நாலைந்து பழைய மேசைகள் போடப்பட்டு அதிலே நான்கைந்து கிழம் கட்டைகள் படுத்துக் கொண்டு இருந்தனர் (மதிய ஓய்வாம்)அறைகள் முழுக்க மின்விசிறிகள் மிக வேகமாக சுழன்று கொண்டு இருந்தன.

JTO வைப் பாக்க வேண்டும் என்று சொன்னேன். இப்போதான் அவர் வெளியே போனார், அவர் அறையில் காத்து இருங்கள் என்றும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்றும் ஒருவர் சொல்லி விட்டு மறுபடியும் அனந்த சயனத்தில் ஆழ்ந்தார்.

அவர் அறையில் காத்துக்கொண்டு இருந்தேன். கால்மணி நேரம், அரை மணி நேரம் கழிந்தது. பக்கத்து அறையில் படுத்துக் கொண்டு இருந்தவரில் ஒருவர் மெதுவாக ஜேடிஒ அறையைக் கடந்து இன்னொரு அறைக்குப் போனார். ஆமை கூட அவ்வளவு வேகமாக நடந்து இருக்காது.(அந்த அறைக்குப் போனவர், அங்கேயும் மேசையில் படுத்துக் கொண்டார் என்பது அப்புறம் தான் தெரிந்தது). அடுத்து நான் இருந்த அறைக்கு தூங்கிக் கொண்டு இருந்தவர்களில் இன்னொருவர் வந்து அமர்ந்தார். மின்விசிறியை மிக வேகமாக ஓட விட்டார். ஒன்றிரண்டு நோட்டுகள்,ஒரு தொலைபேசி தவிர அந்த மேசையில் ஒன்றுமே இல்லை. வெகுநேரம் சும்மாவே உக்காந்து கொண்டு இருந்தார். நானாவது மொபைலில் இன்றைய செய்திகளைப் புரட்டிக் கொண்டு இருந்தேன். பிறகு தொலைபேசியை எடுத்து ஒவ்வொருவராக அழைக்க ஆரம்பித்தார். தான் இந்த மாதம் பணி-ஒய்வு பெறப்போவதாகவும் அதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப் பட்டு இருப்பதாகவும் கட்டாயம் வந்து விடுமாறும் கூறினார். கிட்டத்தட்ட அரைமணிநேரம் இதே போல பலருக்கும் போன் செய்து இதையே அளந்து கொண்டு இருந்தார். பிறகு பத்து நிமிடம் மறுபடியும் சுவரையும், மேசையையும் என்னையும் திரும்பித் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார் (சும்மா இருப்பவர்களுக்கு மூளை டீபால்டாக இதைச் செய்யச் சொல்லும் போல.. ). பிறகு மெதுவாக எழுந்து அந்தத் 'தூங்கும்' அறைக்கே சென்று விட்டார். அங்கு ஆல்ரெடி இருந்தவர்கள் இன்னும் வெளியே வரவே இல்லை.

--
கொஞ்ச நேரம் கழித்து,
JTO சரசரவென உள்ளே வந்தார். முப்பதிலிருந்து முப்பைந்து வயது மதிக்கத் தக்க இளைஞர். அவருக்கு வலது கை கொஞ்சம் சிறியது. சமீபத்தில் தான் ஒரு பழைய JTO பணி ஓய்வு பெற, இவர் அந்தப் பதவிக்கு வந்திருந்தார். கொஞ்சம் சுறுப்பான இளைஞர். இதற்கு முன்பு நான் கொடுத்த கம்ப்ளைண்டுகளை சரியாகப் பார்த்துச் சரி செய்து கொடுத்திருக்கிறார்.(இந்த ஒரு முகத்துக்காகத் தான் இவ்வளவு நேரம் அங்கே பொறுத்து இருந்தேன்... ம்ம்ம்). உள்ளே வந்ததும் முதல் வேலையாக "வாங்க சார்.. மன்னிச்சிகுங்க.. வெளிவேலைய முடிச்சுக் கொடுக்க கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு.. பாதியில விட்டுட்டு வர முடியல. என்ன பிரச்சினை..?"

"சார்.. புது மோடம்.. கண்பிகர் பண்ணனும்.."

"ரெண்டு நிமிஷம்.. இப்படி உக்காருங்க.."

ரெண்டே நிமிஷம்.. கான்பிகரேஷன் முடித்துக் கொடுத்தார்.. வலது கை சற்று ஊனமாக இருப்பினும், கீ போர்டை லாவமாக கையாண்டார்.வீட்டிற்குப் போய் கனெக்ட் செய்தால் இணையம் உடனே கிடைக்கும் என்று சொன்னார். நான் கேட்டதற்காக மொபைல் நம்பரும் கொடுத்தார். இன்முகத்துடன் விடை கொடுத்து அனுப்பினார். வெளியே வரும்போது பார்த்தேன்.. அந்த 'தூங்கும்' அறையிலும், மற்றும் இன்னொரு அறையிலும் இருந்த யாரையும் இப்போது காண வில்லை.

இது போன்ற அனுபவங்கள் நம்மில் பல பேருக்கு இருக்கலாம். நிற்க நேரம் இல்லாமல் காலில் இறக்கை கட்டிக் கொண்டு ஓடி ஆடி வேலை செய்யும் மக்கள் ஒரு புறம். அது போன்ற பொதுமக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அலுவலர்கள் ஒரு புறம். இப்படி இருந்தால் அரசு நிறுவனங்கள் எப்படி லாபம் ஈட்ட முடியும்..? எப்படி தனியார் நிறுவனங்களுடன் போட்டி இட முடியும்..?? (எதற்காக போட்டி இட வேண்டும் என்ற கேள்வியும் இருக்கலாம்). அரசு நிறுவனங்கள் பல ஏன் நஷ்டக் கணக்கைக் காட்டிக் கொண்டு இருக்கின்றன என்று இப்போது புரிகிறது.

புதிதாக வந்துள்ள அந்த அதிகாரியைப் போல நிறைய இளரத்தங்கள் இன்னும் நிறைய தேவைப் படுகின்றன. கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் பார்த்த எஸ்பிஐ வங்கிக்கும் இப்போது நான் பார்க்கும் வங்கிக்கும் நிறைய வித்தியாசங்கள்.. அத்தனைக்கும் காரணம் சில இளரத்தங்கள்.
இந்த முதியவர்கள் இளமைக்காலங்களில் இங்கே பணிக்கு வந்திருக்கலாம். அரசு நிறுவனம் என்பதால் அனைத்துச் சலுகைகளும் மற்றும் பணி நிரந்தரமும் இவர்களுக்கு அந்த மதப்பைக் கொடுத்திருக்கலாம். வேலை குறைவாக இடங்களில் அதிகப் பணியிடங்கள் நிரப்பப் பட்டு இருக்கலாம். இந்த முதிய வயதில் அவர்களை உடனே வெளியே அனுப்பச் சொல்லவில்லை. ஆனால் இதற்கு மாற்று என்ன என்று ஆராய வேண்டும். இப்படி மேசை மீது தினமும் தூங்குபவர்களுக்குச் சம்பளம் கொடுத்துக் கொண்டு இருக்கிற வரையில் நாடும் தூங்கிக் கொண்டு இருக்கும்.

ஆமை வேகத்தில் போய்க்கொண்டு இருக்கும் அரசு நிறுவனங்களைக் காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரிப்பணம் பொதுவாக வருவதால் எப்படி வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் சம்பளம் கொடுக்கலாம். அனால் ஒவ்வொரு அரசு நிறுவனங்களிலும் பணிசுமையைக் கணக்கிட்டு சில மறுசீரமைப்பு பணிகளை உடனே முடுக்கி விட வேண்டும்.இதெல்லாம் நடக்கிற காரியமா..?? ஏதோ எனது ஆதங்கம். அரசு ஆமையை உடனே முயலாக மாற்ற முடியாது. ஆனால் இன்னும் கொஞ்சம் வேகமாக நகரலாம்.

நன்றி.
சாமக்கோடங்கி

8 பின்னூட்டம்:

பழனி.கந்தசாமி said...

கொஞ்சம் பாரா பிரித்து போட்டிருக்கலாமே. கண்ணை இருட்டிக்கொண்டு வருகிறது.

இதற்கு முன் கவர்ன்மென்ட் ஆபீஸ் போனதில்லையா?

பட்டாபட்டி.... said...

இதிலிருந்து என்ன தெரியுது?..

மோடம் config பண்ண அவரவர் தெரிந்துகொண்டால்.. இந்த நாள் மட்டுமல்ல.. எல்லா நாளும் இனிய நாளா அமையும்...
:-)

இளங்கோ said...

இவர்கள் திருந்தப் போவதில்லை. எதற்க்காக நான் பதில் சொல்ல வேண்டும் என்கிற தொனியில்தான் பேசுகிறார்கள். மாற்றம் வரும் என்று நம்புவோம்.

கலாகுமரன் said...

சரியாக சொன்னீர்கள் !!!

சாமக்கோடங்கி said...

நன்றி நண்பர்களே.. ப்ளாக்கர் இல் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பாரா பிரிக்கப் படாமல் போட்டும் கூடப் படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றிகள்.

உங்களுள் ஒருவன் said...

நண்பரே.... முதலில் எல்லா இடங்களிலும் வயதானவர்களை பனி நிக்கம் செய்து விட்டு..... young peoples க்கு பனி வழங்கினால் போதும்..... ஆனால் அவர்களும் இந்த வயதானவர்கள் போல் ஆகி விட குடாது....

உலக சினிமா ரசிகன் said...

கோவை பதிவர்கள் குழுமத்தில் உள்ள உங்களோடு இணைவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
இணைவோம் இணையத்திலும்...இதயத்திலும்...
இவண்
உலகசினிமா ரசிகன்,
கோவை

சாமக்கோடங்கி said...

நன்றி நண்பரே.. எனக்கும் மகிழ்வே..

Post a Comment