
லட்சக் கணக்கான NGO(நான் கவர்மேண்டல் ஆர்கனைசேஷன்)கள் தேசங்களின் சுயநல நோக்கை தகர்த்தெறிந்து உளகளாவிய மக்களை ஒன்று திரட்டி அனைத்து மக்களிடையேயும் போது நல நோக்கு உள்ளது என்பதை நிரூபித்த வண்ணம் உள்ளனர்,
அண்டார்டிகாவில் இயற்கை வளங்களை பேணிப் பராமரிக்க நாற்பத்தொன்பது நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள தேசிய பூங்காக்களில்,மனித சக்தியைக் கொண்டு நிலத்தை வளப் படுத்துதல் மற்றும் புதுக் காடுகளை உருவாக்கும் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன..இந்த மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு தான் இனி நம்மைக் காப்பாற்றும்.
நியுயார்க் நகர மக்கள், தங்கள் அருகிலுள்ள காடுகள் மற்றும் ஏரிகளில் இருந்து தான் தங்களின் வாழ்வாதாரமே பூர்த்தி செய்யப் படுகிறது என்பதை உணர்ந்து அதை பேணிக் காக்க முடிவு செய்துள்ளனர்.
தென் கொரியாவில், தேசிய காடுகள் மறு சீரமைப்பு அமைப்பை ஏற்படுத்தி, போர் மற்றும் மனித தேவைகளுக்காக அழிக்கப் பட்ட காடுகளை புதுப்பித்துக் காட்டியுள்ளனர். தற்போது அவர்களின் நாட்டில் 65% நிலப்பரப்பு இயற்கை வளம் மிகுந்த காடுகளாக உருவெடுத்துள்ளது. மரங்கள் வெட்டப்படுவது மிகவும் கட்டுப் படுத்தப் பட்டுள்ளது. 75% க்கும் மேலான காகிதங்கள் மறுசுழற்சி செய்யப் படுகின்றன.
கோஸ்டாரிகா தங்கள் நாட்டின் ராணுவத்தை விட தங்கள் நாட்டின் இயற்கை வளமே முக்கியம் என முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அவர்கள் நாட்டில் ராணுவமே இல்லை. மாறாக அதில் செலவிடும் பணத்தை, தம் குழந்தைகளின் கல்விக்கும், சுற்றுலாத் துறைக்கும் மற்றும் தங்களின் பிரதான காடுகளை பாதுகாப்பதிலும் பயன் படுத்துகின்றனர்.
அங்கே ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வனப் பாதுகாப்பு சட்டங்கள் கட்டாயமாக்கப் பட்டு கடுமையாகப் பின்பற்றப் படுகின்றன.
"போர்க்களம் வெறுத்து விடு.. அங்கே பூச்செடி வைத்து விடு.. அணுகுண்டு அத்தனையும் கொண்டு பசிபிக் கடலில் கொட்டி விடு" என்னும் கவிப் பேரரசின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.. கவிஞன் கனவு பலிக்கத்தொடங்கி விட்டது. மனித நேயம் உடைய நாடுகள் அந்த நாட்டின் மீது படை எடுக்காமல் இருக்க வேண்டும்.
வர்த்தகம் நேர்மையான முறையில் நடந்து எல்லோரும் வளம் பெற்று வாழும் நிலை ஏற்படும் போது அனைத்து மக்களின் வாழ்வாதாரம் உயர்கிறது..அங்கே அதிகமாக சம்பாரிக்கத் தூண்டும் முதலாளித்துவம் மற்றும் பேராசை பொடிபடுகிறது.ஆம்.. இயந்திரங்களைக் கொண்டு லட்சக் கணக்கான ஏக்கர்களில் அறுவடை செய்யும் முதலாளி, கைகளை நம்பியே பிழைப்பு நடத்தும் சிறு விவசாயிகள், இவர்களுக்கிடையே என்ன சமநிலை இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்..
நாம் பொறுப்புள்ள நுகர்வோராகச் செயல்பட்டால் இந்த நிலை மாறும்.நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் நமது இந்த கடமையை உணர வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்கள், ஆடம்பர விளம்பரம் செய்து மக்களை முட்டாள்களாக்கி விற்கப்படும் பொருட்களைக் குறைத்து, சிறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்கள், உள்ளூரில் செய்யப் பட்ட கைவினைப் பொருட்கள், குடிசைத் தொழிலில் உற்பத்தியாகும் பொருட்கள் இவற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்போம் ..
உங்களுக்குத் தெரியுமா...? இப்போது உள்ள விவசாய நிலங்களைக் கொண்டே, இந்த கிரகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வயிறார சோறு போட முடியும். ஆனால்,மாமிசத்திற்காக கோடிக்கணக்கில் வளர்த்தப் படும் மிருகங்களின் தீவனத்திற்காக மற்றும் பயோ எரிபொருளுக்காக இவை பயன்படுத்தப் படுவதால் தான் கடைக்கோடி குடிமகனின் வாய்க்கு ஒரு கை சோறு கிடைப்பதில்லை.
குழந்தைகள் மற்றும் வருங்கால சந்ததிகளை மாமிச உண்ணிகளாக வளர்க்கக் கூடாது.மாமிசத்தின் சுவைக்குப் பழகி விட்டவர்கள் அதைக் குறைக்க மாற்று உணவுகளைக் கொள்ளலாம். கொஞ்சம் சிரமம் தான்.. ஆனால் குழந்தைகளைப் பழக்குவது எளிது. சைவ உணவுகளிலேயே எல்லா சத்தும் சுவையும் நிரம்பி உள்ளது என்பது நிரூபணமான ஒன்று.
கடலில் மீன் பிடிப்பவர்கள், கடலின் செல்வத்தை அழிக்காமல் தொழில் செய்ய வேண்டும்.

நாம் உபயோகப் படுத்தும் சக்திகளில் 80% பூமியிலிருந்து எடுக்கப் படுபவை தான்.
சீனாவில் மட்டும் வாரத்திற்கு இரண்டு அனல் மின் நிலையங்கள் உருவாக்கப் படுகின்றன. அதே நேரத்தில் டென்மார்க்கில் அனல் மின் நிலையத்தில் உருவாகும் கார்பனை காற்றில் கலக்காமல் மண்ணில் மக்கச் செய்யும் உக்தியை கையாளத்தொடங்கியுள்ளனர்.
ஐஸ்லாந்தில் பூமியின் அடி சூட்டைக்கொண்டு மின்சாரம் எடுக்கின்றனர். கடலின் அலைகளிலிருந்து மின்சாரம் எடுக்கின்றனர்.


இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் தான் இந்த மறுசுழற்சி செய்யகூடிய சக்திகளில் அதிகம் முதலீடு செய்துள்ளனர்.

சக்தியின் அதே அளவை, ஒரு மணி நேரத்தில் சூரியன் நமக்கு அளிக்கிறான் என்றால் நம்புகிறீர்களா?
ஆம் நண்பர்களே.. இனி மேலும் கீழேயே பார்த்து நடப்பதை விட்டு மேலே பார்போம். அங்கேயும் உள்ளது.
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் நேரம் வந்து விட்டது.
இன்னும் நம்மிடம் 50% காடுகள் உள்ளன.எண்ணற்ற இயற்கை வளங்கள், ஆயிரக்கணக்கான ஏரிகள், பனிப்பாறைகள் என இன்னும் நம்மிடம் கொஞ்சம் மிச்சம் உள்ளன..
துபாய் போன்ற பணக்கார நாடுகளிடம் என்ன இருக்கிறது? வெறும் எண்ணெய் தான் இருக்கிறது. அதை விற்றே அனைத்தையும் வாங்குகிறான்.அங்கே சுட்டெரிக்கும், வெயில் இருக்கிறது, ஆனால் ஒரு சூரிய ஒளி பேணல்(solar panel) கூட அங்கே இல்லை.மற்ற நாடுகள் அனைத்தும், உள்ளூரில் குறைந்த விலைக்கு பொருட்களை விற்று நாட்டை வளப் படுத்த நினைக்காமல், அதிக லாபத்திற்காக அவனிடம் நாட்டை அடகு வைக்கின்றனர்.
அதனை நிறுத்தி இது போன்ற நாடுகளின் இந்த சுயநலப் போக்கிற்கு பாடம் புகட்ட வேண்டும்.
மாற்றம் நம் ஒவ்வொருவரின் உள்ளிருந்து வர வேண்டும், அதை வெளியே எதிர் பார்க்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இந்த மாற்றங்கள் அனைத்தும் நிகழ அடிப்படைத் தேவை கல்வியறிவு மற்றும் பொது சிந்தனை அவ்வளவே(எல்லார்க்கும் எல்லாமும்).
இந்த சிந்தனையுடன் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை நோக்குங்கள்.. நாம் செய்ய வேண்டிய மறுமலர்ச்சி நமக்கே விளங்கும்.
இதை தான், நம்முடைய சுற்றம் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு நாம் சொல்ல வேண்டும்.
எப்படியெல்லாம் இந்த மாற்றத்தைச் செயல்முறைப் படுத்தலாம் என்று நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே....
கார்பன் சுவடுகள் முற்றுப் பெறுகிறது...