Sunday, November 21, 2010

சுற்றுலா... பகுதி 2 - திருநெல்வேலி.

அனைத்து நல் உள்ளங்களுக்கும், இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

சுற்றுலான்னு நெனச்சாலே, குளுகுளுன்னு, பச்சைப் பசேல்னு, மலைமேல.... இப்படி எல்லாம் தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, சும்மா ஒரு பயிற்சிக்காக திருநெல்வேலி போய் அது எனக்கு மிகச்சிறந்த சுற்றுலா அனுபவமாகியது.

அசோகா ட்ரஸ்ட் என்ற அமைப்பு, திருநெல்வேலியில், தன்னுடைய கிளையை அமைத்து, சுற்றுச் சூழல் பற்றிய ஆய்வுகளைச் செய்து வருகிறது. இதன் விரிவான விவரங்களை "சமூக ஆர்வலர்களுக்கு என் அனுபவம்" என்ற பதிவில் பகிர்ந்திருந்தேன்.அந்த இரண்டு நாள் அனுபவம் மறக்க முடியாதது.

திருநெல்வேலி மாவட்டத்தை நெருங்கும்போதே சிவப்பான, வறண்ட மண்ணும், பாலைவனத்தில் முள் மரங்களை நட்ட வைத்ததைப் போன்ற காட்சிகளும், தெரிய ஆரம்பித்தன. பேருந்து நிலையத்தில் இருந்து அயன் சிங்கப்பட்டிக்கு, தனியாக ஒரு ஒருமணி நேரப் பயணம், அந்த நடத்துனர், அழகான திருநெல்வேலித் தமிழில் பேசி, பேருந்தையே கலகலப்பாக நடத்திய விதம் மறக்க முடியாதது. வடநாட்டைச் சேர்ந்த பாஷை தெரியாத சில செம்பட்டைத் தலை இளைஞர்கள், வழிமாறி இந்தப் பேருந்தில் ஏறியிருக்க, பயணச்சீட்டு கொடுக்கும் அந்த சமயத்திலும் கூட, அவர்களுக்கு சைகை மூலம் பரிவாக விளக்கி இறக்கி விட்டார். பழந்தமிழர்களின் பரிவும் விருந்தோம்பலும், உபசரிப்பும் எப்படி இருந்து இருக்கும் என்று என் கண் முன்னால் வந்து போயிற்று.

நாங்கள் தங்கியிருந்த இடம் அயன் சிங்கப்பட்டி, அதன் அருகே ஜமீன் சிங்கம்பட்டி, பின்னர் மணிமுத்தாறு ஆணை, அப்புறம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் என்று நிறைய இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்.

முதல் நாள் சனிக்கிழமை இரண்டு சைக்கிள்களை எடுத்துக் கொண்டு மணிமுத்தாறு அருவிக்குப் போகலாம் என்று புறப்பட்டோம், ஆனால், அணைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டனர். காரணம், புலிகள் நடமாட்டம் உள்ள சாலைப் பகுதி. அதனால், பெரிய வாகனங்களில் வருபவர்களை மட்டுமே அனுமதித்தனர். அதனால் அருவிக்குச் செல்லாமல் அணையை மட்டுமே சுற்றி பார்த்தோம். மண்வாசனை கமழும் சாலையில், சைக்கிளை அமுத்திக் கொண்டு ஆணை வரை சென்றதை இன்னமும் மறக்க முடியாது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவ்வளவு அகண்டு விரிந்த அணைக்கட்டில், இருவர் மட்டுமே நின்று கொண்டு இருந்தோம். கார்த்தியும் நானும் ஒருவரை ஒருவர் மாறி மாறி புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அணைக்கட்டின் மேல் கட்டப் பட்டிருந்த ஒரு இரும்புப் பாலத்தில் இருந்து பார்க்கும்போது, நெல்வயல்கள் அழகாகக் காட்சி அளித்தன. சில அரிய இனப் பறவைகளும் காணக் கிடைத்தன.

இரண்டாம் நாள், ட்ரஸ்டில் இருக்கும் மதிவாணன் என்பவரிடம் கேட்டு ஒரு RX-100 வாங்கிக் கொண்டோம். இந்த முறை எப்படியேனும், அருவிக்குச் சென்று விடவேண்டும் என்று. அநேகமாக RX-100 ல் தயாரிக்கப் பட்ட முதல் வண்டி அதுவாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். எந்த கியரில் வண்டி ஓடியது என்று அதற்கும் தெரியவில்லை எனக்கும் தெரியவில்லை.

வழியில், ஒரு சிறிய கடையில் காலை உணவு எடுத்துக் கொண்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், இரண்டு பேரும் ஆளுக்குக் குறைந்த பட்சம் பதினைந்து பதினாறு இட்லிகளை உள்ளே தள்ளி இருப்போம். இடையிடையே உளுந்து வடைகளையும் இடைச்செருகல்களாக அமுத்திக் கொண்டு இருப்போம். என்ன சுவை.. இப்பொழுது நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறுகிறது. நிறுத்த மனமில்லாமல் முடித்துக் கொண்டு பில்லைப் பார்த்து அதிர்ந்தே விட்டோம். வெறும் முப்பைந்து ரூபாய். என்னவென்று சொல்ல. வயிறை விட மனது நிறைந்தது என்பதே உண்மை.

லஞ்சம் கேட்ட செக் போஸ்ட் அதிகாரியிடம் காசையும் கொடுத்து விட்டு, கூடவே, நாங்கள் அராய்ச்சி செய்ய வந்திருக்கிறோம் என்பதையும் சொல்ல அவர் உள்ளே போய் யோசித்து விட்டு ஏதோ அதிகாரிகள் என்று நினைத்தாரோ என்னவோ, காசைத் திருப்பி எங்கள் கையிலேயே கொடுத்து அனுப்பி வைத்தார். அதற்குப் பின் தான் த்ரில்லிங் மலைப்பயணம் ஆரம்பமானது.

ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டால், எப்படி உருண்டை உருண்டையான கற்களோடு காட்சி அளிக்குமோ, அது போன்றதொரு சாலை. குலுங்கிக் குலுங்கி மிகவும் அபாயகரமான, வளைவுகளில் வளைத்து ஓட்டும்போது தான் புரிந்தது, ஏன் எங்களை சைக்கிளில் அனுமதிக்கவில்லை என்று. "டே மாப்ள, எதுக்கால ரோடே தெரிய மாட்டேங்குதே, இந்த வண்டி வேற எப்ப பார்ட் பார்ட்டா கழண்டி விழும்னே தெரியல, இப்ப திடீர்னு ஒரு புலி துரத்துனா என்னடா பண்றது..?" என்று என் நண்பன் கேட்க, உடம்பு நடுங்கினாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அருவியை அடைந்து விட்டோம். சும்மா சொல்லக் கூடாது, அந்த RX-100ஐ மெச்சியாக வேண்டும்.

சிறிய அழகான அருவி, கூட்டம் குறைவாக இருந்ததினால் வெகு நேரம் இருந்தோம். எனக்கு இப்பவும் தோன்றும் ஒரு விஷயம் இதுதான். கிராமங்களில் தான் எவ்வளவு அழகுகள் ஒளிந்து கிடக்கின்றன.?! இதுபோன்ற தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை அழகு ததும்பும் கிராமப் பகுதிகள் உள்ளனவோ. கிராமங்களை அனுபவிப்போம், சுவாசிப்போம்.

அங்கே செய்ததிலேயே அதிக செலவு என்பது திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டும் தான். மற்றபடி, இரண்டு நாள் சாப்பாடு, அப்புறம் சூப், சாப்பிட சின்ன சுத்து முறுக்கு என்று அத்தனையும் சேர்ந்து நூறு ரூபாயைத் தாண்டவில்லை.

சாமக்கோடங்கி

14 பின்னூட்டம்:

சாமக்கோடங்கி said...

பதிவு என்பதனால், சிறிய படங்களை மட்டுமே தர முடிந்தது. மேலும் புகைப்படங்களுக்கு http://picasaweb.google.com/successprakash/Thirunelveli_trip#

நன்றி.

Unknown said...

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

ILLUMINATI said...

அடடே!எனக்கு பக்கத்துல இருக்கிற திருநெல்வேலி! :)
திருநெல்வேலி தமிழ் தனிச் சுவை தெரியுமா?கூடவே மக்களின் பரிவும்.. :)

ப.கந்தசாமி said...

நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

Unknown said...

நாந்தான் முடல

வடை எனக்குதான்

அண்ணா புகைப்படம் மிக அருமை
எப்படி எடுக்கறீங்க
கொஞ்சம் சொல்லிதாங்க

படங்களோட பகிர்வு அருமை

இளங்கோ said...

பிரகாஷ், அடுத்த தடவை போகும்போது என்னையும் சேர்த்துக்குங்க :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

எங்க ஊருக்கு வந்தீங்களா.?

நாங்க அடிக்கடி போகும் சுர்ருலா இந்த இடமெல்லாம்..

இன்னும் மாஞ்சோலை போய் பாருங்க..

கோதையாறு , குற்றாலம், செங்கோட்டை அருமையா இருக்கும்..

சாமக்கோடங்கி said...

//கலாநேசன் said...

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
//

நன்றி கலாநேசன்...

சாமக்கோடங்கி said...

//ILLUMINATI said...

அடடே!எனக்கு பக்கத்துல இருக்கிற திருநெல்வேலி! :)
திருநெல்வேலி தமிழ் தனிச் சுவை தெரியுமா?கூடவே மக்களின் பரிவும்.. :)//

கண்டிப்பாக.. அதுவும் அவர்கள் இழுப்பார்கள் பாருங்கள், ஒரு ராகம் ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும்..,, தேன் சிந்தும்..

மிக்க நன்றி..

சாமக்கோடங்கி said...

//DrPKandaswamyPhD said...

நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.
//

வாங்க ஐயா.. நன்றி..

சாமக்கோடங்கி said...

//siva said...

நாந்தான் முடல

வடை எனக்குதான்

அண்ணா புகைப்படம் மிக அருமை
எப்படி எடுக்கறீங்க
கொஞ்சம் சொல்லிதாங்க

படங்களோட பகிர்வு அருமை
//
எனது பக்கத்திற்கு வரும் அனைவருக்கும் வடை கொடுக்க முடிவெடுத்துள்ளேன்.. கல்லா கட்ட வேண்டுமே..

அப்புறம் புகைப்படங்களில் ஒன்றும் வித்தை இல்லை. இன்னமும் நன்றாக எடுத்திருக்கலாமே என்றே தோன்றுகிறது. எல்லாம் என்னுடைய SONY DSC-H50 யின் மகிமையோ..?வலையில் பல நல்ல புகைப்படக் கலைஞர்களின் படைப்புகள் உள்ளன. அவற்றைக் கூர்ந்து கவனித்து, பழகிக் கொள்ளலாம். அந்த இரவு தொடும் மாலை நேரத்தில், அந்த பாலத்தின் மீது நிற்கும் காட்சி கூட ஏதோ ஒரு வலைத்தளத்தில் பார்த்த ஞாபகம். அதே போன்று எடுக்க முயற்சித்தேன். படிக்கத் தொடங்கினால், வெளிச்சம், ஒளி அமைப்புகள், சட்டம், கோணம் என பல விஷயங்கள் உள்ளன. நல்ல புகைப்படங்கள் எடுக்க பெரிய காமெரா அவசியமில்லை.. ரசனை தான் முக்கியம்.

சாமக்கோடங்கி said...

//இளங்கோ said...

பிரகாஷ், அடுத்த தடவை போகும்போது என்னையும் சேர்த்துக்குங்க :)
//

உங்களைப் போன்ற நண்பருடன் செல்வது எனக்குப் பெருமை. கட்டாயம் அழைக்கிறேன். ஆனால் சிலவற்றை நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்.. சின்ன பறவைகள் முதல் பூக்கள் வரை ஒவ்வொன்றையும் உத்துப் பார்த்துக்கொண்டே வருவேன். சின்னச் சின்னப் பூக்களையும் நிதானமாக புகைப்படம் எடுப்பேன். நேரம் போவதே தெரியாமல் வானத்தைப் பார்த்தே ரசித்துக் கொண்டு இருப்பேன். அதனால் எந்த பயணத் திட்டத்துடன் வந்தால் ஏமாற்றம் மிஞ்சலாம்.
உங்களைப் போன்ற ஒரு மென்மையான இதயம் படைத்த நண்பர் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி..

சாமக்கோடங்கி said...

//பயணமும் எண்ணங்களும் said...

எங்க ஊருக்கு வந்தீங்களா.?

நாங்க அடிக்கடி போகும் சுர்ருலா இந்த இடமெல்லாம்..

இன்னும் மாஞ்சோலை போய் பாருங்க..

கோதையாறு , குற்றாலம், செங்கோட்டை அருமையா இருக்கும்..
//

சுற்றுலாப் பதிவு எழுதுவதே இதற்காகத்தான்.. நான் சிலவற்றைப் பகிர்ந்தேன். நீங்கள் கொஞ்சம் சொல்கிறீர்கள், மற்றொருவர் வந்து இன்னும் பல விஷயங்களைச் சொல்லுவார். இதன் மூலம் அந்த இடத்திற்குப் போகாமல் கூட நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். சுற்றுலா போன அனுபவங்கள் பெறலாம்.
கண்டிப்பாக இன்னொரு முறை அங்கே செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் மேற்சொன்ன இடங்களுக்குச் செல்கிறேன்..

நன்றி..

கோலா பூரி. said...

நான் திருன வேலிக்காரியாக்கும். ர்ொம்ப சின்னப்பொNண்ணா இருக்குமபோது நீங்க சொன்ன
இடங்கல்லாம் போனதுதான். இப்ப உங்க பதிவு கூட
போனேன்.அருமயான பதிவு.

Post a Comment