Sunday, April 17, 2011

சுற்றுலா... பகுதி 3 - பரளிக்காடு.

வணக்கம் நண்பர்களே.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை அவ்வப்போது கணினி மூலம் பார்த்து வருகிறேன். அதில் ஓவர் இடைவெளிகளில் ஒரே ஒரு விளம்பரம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது. அதுதான் கேரளா சுற்றுலாத்துறையின் அழகான வண்ண விளம்பரம். மிகவும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். பார்த்துக் கொண்டிருக்கும் வெள்ளைக் காரர்களும் உள்ளூர் வாசிகளும் தங்கள் பயணத் திட்டத்தில் கண்டிப்பாக கேரளாவை இணைத்து இருப்பார்கள். தொலைக்காட்சிகளில் அந்த விளம்பரம் இடம் பெறுகிறதா என்று தெரியவில்லை.

எதற்குச் சொல்கிறேன் என்றால், இயற்கை வனப்பும், நீர்வளமும், அழகான கடற்கரையும், ஏரிப்பகுதிகள் நிறைந்த பகுதிகளும், பலவிதமான பாரம்பரியக் கலைகள் என்று கேரளா உண்மையிலேயே அழகான மாநிலம் தான். ஆனால் நமது மாநிலமும் அதற்கு எந்த அளவிலும் குறைந்தது இல்லை. அது சரியான முறையில் மக்களைச் சென்றடைகிறதா என்பது தான் எனது கேள்வி.

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையை அரசு மேம்படுத்த வேண்டும். இருக்கும் சில புராதான கலைப் பொக்கிஷங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதே நமது ஆசை. இந்தப் பதிவில், எனக்கு ரொம்ப காலம் தெரியாமலேயே இருந்த கோவை மேட்டுப்பாளையத்தின் மிக அருகில் அமைந்திருக்கும் ஒரு அழகான சுற்றுலாத் தலத்தைப் பற்றிப் பார்ப்போம்.

(படங்களின் மீது கிளிக் செய்து பெரிது படுத்திப் பார்க்கவும்)

மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகு

கோவை மேட்டுப்பாளையத்தின் அருகே இருக்கும் காரமடை பேரூராட்சியில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பாதையில் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரளிக்காடு. மேற்குத் தொடர்ச்சி மலையின் இன்னுமொரு வரப்பிரசாதம். அந்த சாலை இன்னும் தொடர்ந்து கேரளாவிற்கும் செல்கிறது, ஊட்டியின் ஒரு பகுதியையும் கூட இணைப்பதாக செய்தி. இந்தப் பகுதிக்குச் செல்ல வனத்துறையினரின் அனுமதியை முன்னமே பெற வேண்டும். பரளிக்காட்டுக்கு மிக அருகே பவானி ஆற்றின் பில்லூர் ஆணை ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

அதிகம் அறியப்படாத பகுதி என்பதால் பிழைத்தது. அடுக்குமாடி லாட்ஜுகள், கூட்ட நெரிசல்கள், குப்பைக்கூளங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான காட்டுப் பகுதியாகவே உள்ளது. பார்ப்பதற்கு அதிகம் ஒன்றும் இல்லை என்றாலும் உங்கள் ஒருநாள் அழகான விடுமுறைக்கு இந்த அமைதியான பகுதி உத்திரவாதம் அளிக்கும்.

முப்பது பேர் கொண்ட எங்கள் டிபார்ட்மென்டில் சுற்றுலா செல்ல முடிவெடுத்த போது பயணத் தூரம் குறைவாக இருக்க வேண்டும் என்று தேட ஆரம்பித்த போதுதான் இந்தப் பகுதியைப் பற்றி அறிந்து கொண்டோம். நானும் எனது நண்பனும் இந்த இடத்தை ஒருமுறை பார்த்து விட்டு பிறகு முடிவு செய்யலாம் என்று ஒரு நாள் பணிமுடிந்து மாலை கிளம்பினோம். காரமடை தாண்டி 25 கிலோமீட்டர் தொலைவிற்கு வந்ததும் இருட்டத் தொடங்கி இருந்தது. வனப்பகுதி எல்லைச் சோதனைச் சாவடியில் காவலர் எங்களை வழிமறித்தார். வனச்சரகரிடம் முன்னமே பேசியிருந்ததாகச் சொன்னோம்.

சோதனைச் சாவடி.. இரண்டு சோதனைச்சாவடிகள் உண்டு.

"தம்பி இது என்ன சும்மா ஊருக்குள்ள போகர மாதிரியாப்பா..? ஆறுமணிக்கு பொழுது சாஞ்சு சாவகாசமா வர்றீங்க..? யானைங்க சுத்துற காடுப்பா..காரு லாரின்னாக்கூட உடலாம். டூவீலர் வெச்சுக்கிட்டு ரெண்டு பேரு.. நடுவால யானைங்க வந்துச்சுன்னா ஒன்னும் பண்ண முடியாது.. காப்பாத்த ஆளுங்களும் இல்லை.. திரும்பிப் போயிடுங்க தம்பி.. காலைல வெளிச்சமா வாங்க.." என்று பயமுறுத்தி விட்டார். "சார் நாங்க சுத்திப் பாக்க வரலை. இந்த இடம் சரியாக இருக்குமான்னு பத்து நிமிஷம் பாத்துட்டு போயிடறதாத் தான் ரேஞ்சர் கிட்ட சொல்லி இருக்கோம்" னு சொன்னேன். "அரை மணி நேரத்துக்குள்ள திரும்பி வந்துடுங்கப்பா.. எங்கயும் வண்டிய நிறுத்தாதீங்க.." மறுபடியும் பயமுறுத்தினார்.

"பிரகாசு எதுக்கு ரிஸ்க்கு.. வாய்யா போயிடலாம்.. யானை கீனைன்னு வேற பயமுறுத்துராறு"-அல்ரெடி நண்பன் ஆட்டம் கண்டிருந்தான்.
"வாடா மச்சி.. இருட்டுறதுக்குள்ள திரும்பிடலாம்.. நான் இருக்கிறேன்.. நன்பேண்டா..."

கொஞ்ச தூரம் தான் போயிருப்போம், பாதை மலையின் மீது ஏற ஆரம்பித்து வளைந்து வளைந்து சென்றது. மலைப்பாதையில் ஓட்டுவது அலாதியான சுகம் என்றாலும் இதில் ரோடு கொஞ்சம் அகலம் குறைவு. அங்கங்கே கடமுட. எங்க ரெண்டு போரையும் வைத்துக் கொண்டு என்னுடைய 100CCவண்டி திணறிக்கொண்டே ஏறியது. காட்டுப்பூச்சிகளின் இரைச்சல் வேறு பயமுறுத்தியது. வழியில் பெரிதாகக் கிடந்த யானைச் சாணியைப் பார்த்ததும் ரெண்டு பேருக்கும் கிலி பற்றிக் கொண்டது. இடையில் ஆடு மாடு நாய் கோழி ஆகியவற்றுடன் கூடிய பத்துப் பனிரெண்டு வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தைக் கடந்தோம். ஏதாவது பிரச்சினை என்றால் இங்கே தான் வர வேண்டும் என்று குறித்துக் கொண்டோம்.

ரேஞ்சரைச் சந்தித்ததும், அவரும் இதையே தான் கேட்டார். "என்ன தம்பி இவ்ளோ பொழுது சாஞ்சு வந்திருக்கீங்க. சீக்கிரம் போய் பாத்துட்டு வாங்க" என்று அனுப்பினார். அவரைத் தாண்டி ஐந்து கிலோமீட்டரில் அந்த நீர்ப்பிடிப்புப் பகுதி எங்களை அழகாக வரவேற்றது. ஒரு நாள் சுற்றுலாவுக்கு சரியான இடம் என்று தோன்றியது. பரிசல் பயணம் மற்றும் கூடி மதிய உணவு மற்றும் விளையாட்டுகளுக்கு ஏதுவான இடம்.

"பாத்தாச்சு இல்ல.. வா போகலாம்.." - நண்பன்.

திரும்பி வரும்போது இன்னும் திரில். இறக்கமான வளைவுகளில் பத்தடிக்கு மேல் ரோடு தெரியவில்லை. எதிரே யானைக் கூட்டங்கள் நின்னுட்டு இருந்தா வண்டியைத் திருப்பக் கூட முடியாது. உயிரைக் கையில புடிச்சிட்டு சோதனைச் சாவடியை அடைந்த போது.. "தப்பிச்சுட்டீங்களா.." என்று கேட்பது போல இருந்தது அந்தக் காவலாளியின் பார்வை. ஒரே சலாமை வைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருந்தோம்.

பாதுகாப்புடன் கூடிய பரிசல் பயணம்

பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி, திரில் பரிசல் பயணம் எல்லாமே அழகு. ஆங்காங்கே கரையோரங்களில் இறக்கி விடப் படுவீர்கள் கொஞ்ச நேரம் இயற்கையை ரசிக்கலாம். பரிசலில் சுற்றியவாறே மலைகளின் அழகைக் காணலாம். மேலே மலை மக்களின் குடியிருப்புகளையும் பார்க்கலாம். திரும்பி வரும் வழியில் ஆற்றில் குளிக்க ஒரு அழகான இடம் உள்ளது. நண்பர்கள் பலருக்கும் ஒரு மணி நேரம் ஆகியும் அந்த ஆற்றை விட்டு வெளியே வர மனசில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கண்ணாடி போன்ற தெளிவான சுத்தமான ஆனால் உறைய வைக்கும் பரளியாற்று நீர் உங்கள் உடலைக் குளுமைப் படுத்தும்.

பரிசலில் இருந்த படியே பில்லூர் அணையைப் பார்க்கலாம்

மலைமக்கள் வாழும் பகுதி

கண்ணாடி போன்ற தெளிவான நீர்ப்பிடிப்புப் பகுதி

பரிசலை ஓட்டியவர் கூறினார் அங்கே முதலில் எல்லாம் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனராம். இப்போது அடிக்கடி சந்தைக்காக கீழே இறங்கி வர வேண்டியிருப்பதால் அவர்களின் கலாச்சாரம் அப்படியே மாறி தாலி கட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்களாம்.


மதிய உணவு.. மீன் மற்றும் சிக்கனும் கிடைக்கும்.

மதிய உணவு தான் இங்கே ஒரு ஸ்பெஷல். ரேஞ்சரிடம் சொல்லி விட்டால் அவரே சைவ மற்றும் அசைவ மெனுவை உங்களுக்கு அளிப்பார். நீங்கள் வேண்டியதைச் சொல்லி விட்டால் அங்கே உள்ள கிராமப் புற மக்கள் மூலம் தயாரித்துக் கொடுப்பார். நீங்கள் செலுத்தும் முன்னூறு(இப்பொழுது எவ்வளவு என்று தெரியவில்லை)ரூபாயில், பரிசல் பயணம் மற்றும் இந்த மதிய உணவு மற்றும் காலையில் தேநீர் போன்றவை அடங்கும். இதில் ஒரு பங்கு மலைவாழ் மக்கள் நலனுக்காக அரசால் உபயோகப் படுத்தப் படுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
யானைகள் இங்கே தண்ணீர் குடிக்க வருமாம்

யானைகள் சுற்றும் காட்டுப் பகுதி ஆனாலும் நீலகிரிக்குச் செல்லக்கூடிய குறைவான பேருந்துப் போக்குவரத்து உள்ளது. பெரிய வண்டிகளில் வந்தால் பயம் இல்லை, யானைகள் இருந்தால் அப்படியே வண்டியை அணைத்து நிறுத்தி விட்டால் அவைகள் தானாகப்போய் விடும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். முடிந்தால் வந்து பாருங்கள். அப்படியே உங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிறு சிறு சுற்றுலாத் தளங்களையும் அறிமுகப் படுத்துங்கள். அனைவரும் பயனடைவோம்.

நன்றி
சாமக்கோடங்கி

6 பின்னூட்டம்:

MANO நாஞ்சில் மனோ said...

அட்டகாசமான சுற்றுலா உங்களோடு நானும் பயணத்தில், படங்கள் சூப்பரோ சூப்பர்....

Anonymous said...

ஊரை சுற்றி காட்டியதற்கு நன்றி.

// கண்ணாடி போன்ற தெளிவான சுத்தமான ஆனால் உறைய வைக்கும் பரளியாற்று நீர் உங்கள் உடலைக் குளுமைப் படுத்தும்.//

சென்னை வெயில்ல கிடந்து வெந்துகிட்டு இருக்கேன் நண்பரே..

Unknown said...

குளுகுளுன்னு இருக்கு

எண்ணங்கள் 13189034291840215795 said...

எத்தனை அழகான இயற்கை சூழல்.. கேட்டதுமே போகணும்னு தோணுது.. அரசு இது போன்ற இடங்களை சுற்றுலா தளமாக அறிவிக்கலாம்தான்..

//காட்டுப்பூச்சிகளின் இரைச்சல் வேறு பயமுறுத்தியது.//

இதை வாசித்ததுமே இங்கே நாங்க அடிக்கடி செல்லும் மலைப்பயணம் நியாபகம் வந்தது.. எனக்கு ரொம்ப பிடித்தது இந்த சத்தம்,.. கார் ஓட்டும்போதே ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டே கேட்டுக்கொண்டே செல்வோம்..அந்த மரங்கள் காற்றில் அசையும் ஓசை..பறவைகளின் பேச்சு..

இவையெல்லாம் இங்கே மட்டுமே மாசின்றி கேட்கக்கூடியவை..

எண்ணங்கள் 13189034291840215795 said...

நீங்கள் செலுத்தும் முன்னூறு(இப்பொழுது எவ்வளவு என்று தெரியவில்லை)ரூபாயில், பரிசல் பயணம் மற்றும் இந்த மதிய உணவு மற்றும் காலையில் தேநீர் போன்றவை அடங்கும். இதில் ஒரு பங்கு மலைவாழ் மக்கள் நலனுக்காக அரசால் உபயோகப் படுத்தப் படுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.//

அருமை.. நிச்சயம் செலவிடலாம்..

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பயணம்

Post a Comment