Saturday, October 29, 2011

திரு.ஃபிராங்க்ளின் - புதிய தலைமுறையின் நம்பிக்கை

இவரைப் பற்றிப் பல்வேறு பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஈரோடு கதிரின் கசியும் மௌனம் வலைப்பூவில் பிரசுரிக்கப்பட்ட ஒரு பதிவு எனக்கு ஒரு மின் மடலாக வந்திருந்தது. முதலில் மேலோட்டமாகப் படித்த நான் 'மேட்டுப்பாளையம்', 'அன்னூர் சாலை' போன்றவற்றைப் பார்த்ததும் சற்று உன்னிப்பாகப் படிக்க ஆரம்பித்தேன். அட இந்தப் பள்ளி என் வீட்டிலிருந்து இருபது நிமிட தொலைவில் தான் உள்ளது என்பதை அப்போது தான் அறிந்தேன். பதிவைப் படித்து முடித்ததும் திரு.ஃபிராங்க்ளின் அவர்களைப் பார்த்தே தீர்வது என்று முடிவெடுத்தேன்.

உடன் பணிபுரியும் சமூக உணர்வுள்ள இரு நண்பர்களையும் மற்றும் புளியம்பட்டி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன் அவர்களையும் அழைத்துக் கொண்டு அந்தப் பள்ளிக்குச் சென்றோம். வேறு வேலை காரணமாக இப்படிக்கு இளங்கோ இளங்கோவால் எங்களுடன் இணைய முடியவில்லை. வெளியே சாதாரண அரசுப்பள்ளிகளைப் போலத் தோற்றமளித்த அக்கடிதத்தின் உட்பகுதியின் ஒவ்வொரு அங்குலத்திலும் திரு.ஃபிராங்க்ளின் அவர்களின் உழைப்பு தெரிந்தது. மேற்படி அந்தப் பள்ளியின் பெருமைகளை ஈரோடு கதிர் மிகவும் விரிவாக எழுதி விட்டார். எனவே நான் கவனித்த சில விஷயங்களை மட்டும் இங்கே பகிர்கிறேன். எங்கு சென்றாலும் கேமராக் கண்களுடன் அலையும் என்னை, கேமராவைக் கொண்டு சென்ற போதும், எடுக்க மனமில்லாமல் கடைசி வரை வாய்பிளந்து வேடிக்கை பார்க்க வைத்த பெருமை திரு.ஃப்ராங்க்ளின் அவர்களையே சேரும்.

கடலின் சில துளிகள்:

-அழகழகாக ஒழுங்காய் வெளியே விடப்பட்டிருந்த குழந்தைகளின் காலணிகளை வருணித்தாலே அது ஒரு தனிக்கவிதை. குழந்தைகளின் ஒழுங்கு உள்ளே நுழையும்போதே தெரிந்தது.

-திரு.ஃபிராங்க்ளின் மற்றும் திருமதி.சரஸ்வதி, எளிமையின் உச்சங்கள்.

-திரு.ஃபிராங்க்ளின் அவர்கள் எங்கள் பள்ளியில் எனக்கு சீனியர் என்று தெரிந்தபோது பெருமிதத்தின் உச்சிக்கே சென்றேன்.

-வகுப்பறை உலகத்தரம். வருணிக்க வார்த்தைகள் இல்லை. எழுந்து வர மனமே இல்லை.
இவ்வளவு அழகான படிக்கும் சூழ்நிலை பெற்ற குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.

-பிரார்த்தனை நேரம் ஆரம்பித்ததும் நாங்களும் அவர்களுடன் பங்கெடுத்துக் கொண்டோம். குழந்தைகள் அழகாகவும் வரிசையாகவும் நின்றிருந்தனர். வலமிருந்து இடமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் நின்றிருந்தனர். சில குழந்தைகளுக்கு இடையே மற்றும் இடைவெளிகள் காணப்பட்டன. அப்போது தாமதமாக ஒரு சிறுமியை அதன் தாய் வந்து விட்டுச் சென்றார். அந்தச் சிறுமி, சரியாக இந்த இடைவெளிகளில் ஒன்றில் வந்து நின்று கொண்டார். அப்போது தான் புரிந்தது, யார் வந்தாலும் வரா விட்டாலும் ஒரு குழந்தையின் பிரார்த்தனைக்கு நிற்கும் இடம் முன்னமே முடிவு செய்யப் பட்டு, பின்பற்றப் படுகிறது என்று. கடவுள் வாழ்த்து முடிந்ததும், ஒரு சிறுமி வந்து ஒரு குரளை ஒப்பித்தார். பின்பு அடுத்தடுத்து ஒவ்வொரு வகுப்பிலிருந்தும், தலா ஒவ்வொரு குழந்தை வந்து தங்களுக்கான குறளை ஒப்பித்தனர். அவர்கள் ஒப்பிக்கத் திணறுகையில், நண்பர்கள் எடுத்துக் கொடுத்த விதம் அவர்களின் குழு முயற்ச்சிக்கு ஒரு சான்று.

-'குறள்' பேச்சு முடிந்ததும், "சார் அடுத்து நீங்க கதை சொல்லணும்" என்று திரு.ஃபிராங்க்ளினை பார்த்து அனைவரும் சொன்னதும், "பிறர்க்கின்னா முற்பகல்" குறளை ஒரு அழகான சிறு கதையில் மழலைச் செல்வங்களுக்குப் புரியும் வகையில் சொல்லி எங்களை எல்லாம் புல்லரிக்க வைத்தார், அவ்வப்போது குழந்தைகளையும் கதையுடன் ஒன்றிப் பேச வைத்தார்.

"அதனால் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது" என்று முடித்தவுடனே, ஒரு மாணவன் தானாக வந்து அங்கிருந்த செய்தித் தாளை எடுத்துத் தலைப்புச் செய்திகளை வாசிக்க ஆரம்பித்தான். இடையில் அவன் பிழையாகப் படித்த போது திருமதி.சரஸ்வதி கனிவாக அதைத் திருத்தினார்.மாணவர்களிடம் எதுவும் சொல்லாமலேயே மாணவர்கள்,அவர்களாகவே ஒன்றன் பின் ஒன்றாகச் செயல்படுத்திய விதம், இந்த ஆசிரியர் நல்ல தலைவர்களை, செயல்வீரர்களை உருவாக்குவார் என்ற நம்பிக்கையை அளித்தது.

-உலகத்தரம் வாய்ந்த அந்தப் படிக்கும் அறை எப்படிச் சாத்தியமானது? எவ்வளவு செலவானது?எப்படிக் கிடைத்தது? என்ற எனது நேரடிக் கேள்விகளுக்கு, திரு.ஃபிராங்க்ளின் அவர்கள் கூறிய பதில் அப்படியே இங்கே: "இதைச் செய்ய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. முதல் படியை நான் எடுத்து வைத்தேன். பிறகு ஊர்ப்பொது மக்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுக்கு நம்பிக்கை வந்ததும், அவர்களிடம் இருந்து பணம் திரட்டி (சுமார் இரண்டரை இலட்சம் செலவில்) இந்த உள்கட்டமைப்பை உருவாக்கினோம். மொத்தப் பணத்தையும் நன்கொடையாகப் பெற்றோ அல்லது நம் கையில் இருந்து கொடுத்தோ செய்தல் சரியாகாது. ஏனெனில் ஊர்ப்போதுமக்களின் பங்களிப்பு இருந்தால் தான் இந்தப் பள்ளியையும், இந்த கட்டமைப்பையும் நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க முடியும். நான் சிறிது காலத்தில் மாற்றல் ஆகிச் சென்று விடும் பட்சத்தில், அடுத்து வருபவருக்கு, இந்தப் பள்ளி இவ்வாறாக உருவாக்கப் பட்டதற்கான நோக்கமும், இதனைப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் புரியாமல் போகலாம், அந்நிலையில் ஊர்ப்போதுமக்கள் கட்டாயம் இதனைப் பாதுகாப்பார்கள். எனவே தான் ஊர்ப்பங்களிப்பு எங்களுக்கு முக்கியமாகப் பட்டது".

-சர்வ சிக்ஸ அபியான் (SSA)திட்டத்தின் கீழ் பாடநூல்களும், செயல்முறை அட்டைகளும் வழங்கப்பட்டு இருந்தன. அந்த அட்டைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து குழந்தைகள் அவர்களுக்கான அட்டைகளை எடுத்த விதம் அழகு. "குழந்தைகள் அட்டைகளை அப்படியே போட்டு விடும் பட்சத்தில், அவற்றை பராமரிப்பது மிகவும் கடினம், அதைக் குழந்தைகளே ஒழுங்காகச் செய்கையில் அது மிக எளிதாகிறது, நீங்களே கவனியுங்கள் அவர்கள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்று" என்று திருமதி.சரஸ்வதி சொல்ல, நான் ஒரு சிறுவனை அழைத்து, அவன் கையில் இருந்த அட்டையை அதன் அலமாரியில் வைக்கச் சொன்னேன்.

அவன் அலமாரி அருகே சென்று,முதலில் அந்த அட்டை இருந்த அடுக்கை சரிபார்த்தான். பிறகு அங்கு இருந்த ஒரு அட்டைக்கட்டை எடுத்து வந்து மேசையில் வைத்து, கட்டை அவிழ்த்தான். எங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தான் 1,2,....6,_,8. அங்கே நிறுத்தினான். அவனது 7ஆம் எண் அட்டையை அங்கே செருகி, மீண்டும் அழகாக அதைக் கட்டி எடுத்த இடத்திலேயே வைத்தான். அந்த மாணவன் இரண்டாம் வகுப்பே படிக்கிறான். இதற்கு மேல் என்ன சொல்ல.

-"சார், பாத்ரூம் எங்க இருக்கு?" நான் கேட்க, ஒரு சிறுவனை ஆசிரியர் என்னுடன் அனுப்பினார். முதலில் அந்த சிறுவன் கழிப்பறை செல்வதற்காக தனியே வைக்கப்பட்டு இருந்த ஒரு காலணியை அணிந்து கொண்டான். பிறகு கழிப்பறையின் முகப்புக் கதவைத் திறந்து விட்டான். கழிப்பறையின் தூய்மையைப் பார்வையிட்டு திரும்பி வெளியே வந்ததும், வெளியில் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுவன், சரியாக வந்து அதன் கதவை மூடித் தாழிட்டான்.

-ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தை அழகாகப் படித்துக் கொண்டிருக்கையில், Hi, what is your name, what is your father's name, how are you..போன்ற கேள்விகளுக்கு அழகாக சிரித்த முகத்துடன் பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு நண்பர் "How did you celebrate deepavali?" என்று கேட்க, குழந்தைகள் விழிக்க, உடனே நான் "ஏம்ப்பா இவ்வளவு கஷ்டமான கேள்விகளுக்கு எப்படி அவர்கள் பதில் சொல்வார்கள் என்று சொல்ல உடனே ஆசிரியர் வந்தார்.

இல்லை இல்லை அவர்கள் சொல்வார்கள், கேள்வியைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள் என்றார். பின்னர், மாணவர்களிடம் திரும்பி,

ஆசிரியர்:how நா என்ன..
மாணவர்கள்: எப்படி
ஆ: celebrate நா
மா: கொண்டாடறது..
ஆ: அப்ப மொத்தமா சொன்னா..
மா: தீபாவளியை எப்படி கொண்டாடினோம்.
ஆ: ஆ... இப்ப பதில் சொல்லுங்க..
மா: "சந்தோஷமா." "நல்லா"...
ஆ: அவங்க இங்கிலீஷ் ல கேட்டாங்க இல்ல, அப்ப இங்க்லீஷ்ல பதில் சொல்லுங்க பாப்போம்..
மாணவர்கள் விழிக்க..அடுத்த மேசையில் உக்காந்திருந்த ஒரு அழகுச் சிறுமி "ஹேப்பியா" என்று சொல்ல எங்களிடம் இருந்து பலத்த கைத்தட்டல்.

யப்பா தமிழக அரசு கனவான்களே.. அந்த நல்லாசிரியர் விருத தயவு செஞ்சு இவருக்குக் குடுங்கப்பா....

சார், கோவையின் தற்போதைய கலெக்டர் யாரு சார்..?
நான்: தெரியலப்பா..
எம்.கருணாகரன் சார்...
சரிப்பா, தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் சொல்லுங்க.
டாக்டர், செல்வி, ஜே.ஜெயலலிதா.
அப்படியா, இந்தியாவின் பிரதம மந்திரி பெயர் சொல்லுங்க.
பிரதீபா பாட்டில்.. டேய்.. இல்லடா தப்பு தப்பு.. சார் டாக்டர்.மன்மோகன் சிங்.
சரிப்பா, கோவையின் தற்போதைய மேயர் பெயர் சொல்லுங்கப்பா..(எனக்கும் தெரியல).
தெரியல சார்.
ஏம்ப்பா கொஞ்ச நேரம் முன்னாடி பேப்பர்ல வாசிச்சிங்க இல்ல.. போய் பாத்துட்டு வாங்க.
இரண்டே நிமிடத்தில், ஓடிப்போய் திரும்பி வந்த சிறுவன் சொன்னான், "திரு.எஸ்.எம்.வேலுசாமி". நாங்கள் மாணவர்களிடம் இருந்த சமயம் முழுக்க கேள்விகளாலும் பதில்களாலும் வெளுத்துக் கட்டினார்கள். உண்மையைச் சொன்னாள் அவர்களிடம் கேளிவிகள் கேட்கவே பயமாக இருந்தது.

-வகுப்பறையில் அடிக்கும் குச்சிகள் இல்லை. மாணவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்து கொண்டே இருந்தனர். யார் யார் அந்த நாள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது முன்பே திட்டமிட்டு வகுக்கப் பட்டிருந்தது. Everything is systematic..!!! காலைப் பிரார்தனைக்குக் கூட யார் யார் என்ன என்ன செய்தார்கள் என்பதற்குத் தனியாக ஒரு கையேடு வைத்து பராமரிக்கப் பட்டு இருந்தது, அதையும் அந்த மழலைச் செல்வங்களே அவர்களின் அழகுக் கையெழுத்தில் எழுதி இருந்தது மிக அருமை. ஆசிரியருக்கு இதற்காக ஒரு தனி "பலே".

-குழுவாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னது, மதிய உணவு செய்யும் ஒரு அம்மாவையும் அழைத்து வந்து குழந்தைகளுடன் நிற்க வைத்து "நாங்கள் ஒரு குடும்பம்" என்பதைச் சொல்லாமல் சொன்ன திரு.ஃபிராங்க்ளினின் கண்களில் பெருமிதமும், இளைய சமுதாயத்திற்கான எதிர்காலக் கனவுகளும் மின்னியது. பிரிய மனமில்லாமல் அங்கிருந்து விடை பெறுகையில் "Rejoice Always" என்று சொல்லி மாணவர்கள் எங்களை வாழ்த்தி வழியனுப்பினர்.


இரண்டரை லட்சம் மிக எளிது, ஆனால் திரு.ஃபிராங்க்ளின் அவர்களைப் போன்றவர்களை உருவாக்குவதே இப்போதைய கடமை. இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை வலுவாக்கும் இவரது முயற்சிக்கு உரிய உதவிகளைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தோம். அதில் முதல் பணி இவரது பணிகளைச் சரியாக விளம்பரப்படுத்தி மற்றவர்களையும் சென்றடையச் செய்வதே. சமூக உணர்வாளர்கள் இதனால் ஒன்று கூடிச் செயல்பட முடியும்.

உடன் வந்த நண்பர் நிறைய புகைப்படங்கள் எடுத்தார். தன்னுடைய வலைப்பூவில் அவற்றைப் பகிர்வார் என்று நினைக்கிறேன். அவை முழுக்க நான் கண்டவை, அந்தக் குழந்தைகளின் சந்தோஷமும் எதிர்காலமும்.

திரு. ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com 99424 72672

இவரை அறிய உதவிய திரு.ஈரோடு கதிருக்கு மறுபடியும் என் நன்றிகள்.

கொஞ்சம் புகைப்படங்களை இதற்கு அடுத்த பதிவில் இணைத்துள்ளேன். பதிவின் நீளம் கருதி இங்கே அவற்றை இணைக்கவில்லை.

நன்றி
சாமக்கோடங்கி

22 பின்னூட்டம்:

kathir said...

மனம் நெகிழ்ந்து வாசித்தேன்! மிக மிக நேர்த்தியான, உண்மையான பகிர்வு

நான் சென்ற அன்று மாணவர்களைச் சந்திக்க இயலவில்லை. பிறிதொரு நாள் பள்ளி இயங்கும் நாளில் செல்லவேண்டும் போல் உள்ளது.

திருமதி.சரஸ்வதி, திரு.ஃப்ராங்களின் குறித்து பெருமை கூடுகிறது...

Selvastar said...

thanks for given a chance to meet those living legends ..

சாமக்கோடங்கி said...

செல்வா... முடிந்தவரை இந்தச் செய்தியைப் பரப்புவோம்.. வேண்டியவர்கள் இவரிடமிருந்து தெரிந்து கொள்ளட்டும்..

சாமக்கோடங்கி said...

வாருங்கள் கதிர்.. என்னையும் அழையுங்கள்.. கட்டாயம் நானும் உடன் வர ஆயத்தமாக உள்ளேன்...

நிகழ்காலத்தில்... said...

முடிந்தால் ஒரு குறும்படமாக எடுக்க யாரேனும் முன் வந்தால் நல்லது. இது போன்ற விசயங்கள் ஆவணப்படுத்த வேண்டியவையே...!!

சிவாஜி said...

ஊருக்க்கு ஊர் செய்ய வேண்டியது இது. உண்மையில் அவர் முயற்சி நிறையபேருக்கு ஊக்கமளிக்கிற்து.

பழமைபேசி said...

நன்றிங்க... நாம அடிக்கடி www.pazamaipesi.comலதான் எழுதுறதுங்க.

சாமக்கோடங்கி said...

@நிகழ்காலத்தில்..
நீங்கள் சொல்வது சரிதான். இவர்கள் விளம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால் நம் வேலை இவர்களைச் சரியாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது.

நல்ல யோசனை.

சாமக்கோடங்கி said...

@சிவாஜி...

ஆமாங்க.. ஊருக்கு ஊர் பணத்தைத் திரட்டி விடலாம். ஆனால் ஊருக்கு ஊர் பிராங்க்ளின்களை உருவாக்குவது கடினம். அதற்குத்தான் இந்தச் செய்தியை நாம் பரப்ப வேண்டியுள்ளது. இதுபோன்று பள்ளிகளுக்கு அரசும் பணம் ஒதுக்கிக் கொண்டு தான் வருகிறது.ஆனால் இடையில் அவைகள் சுரண்டப்பட்டு விடுகின்றன. பேசாமல், பொதுமக்களே கூடி நேரடியாக இதுபோன்ற காரியங்களை ஊக்குவிக்கலாம். அரசும் இதுபோன்ற பொதுமக்களின் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு வழங்கலாம். ஏனெனில் அரசு செய்யவேண்டிய காரியங்களை மக்களே செய்து கொள்கிறார்களே...

சாமக்கோடங்கி said...

@பழமைபேசி.. சரிங்க..

manjoorraja said...

க்திர் மற்றும் உங்கள் பதிவு அந்தப் பள்ளியை பார்க்கவேண்டும் என்னும் ஆவலை தூண்டுகிறது.

ஒரு இடத்தில் குரள் என எழுதியுள்ளீர்கள். மாற்றவும்.

Ask me said...

ஒரு வாழும் வரலாறைப் பற்றி நீங்கள் எழுதியவை இந்த சமுதாயதிற்கு நல்ல தூண்டுகோல். நன்றி!

சாமக்கோடங்கி said...

வாங்க manjoorraja அவர்களே.. கட்டாயம் சென்று அந்தப் பள்ளியைப் பார்வையிடுங்கள்.. "குறள்" என்பதை திருக்குறள் என்னும் பொருளிலேயே எழுதி உள்ளேன். தவறு எங்கே என்பதை மறுபடியும் சுட்டிக் காட்டவும்.. நான் இருமுறை தேடித் பார்த்துவிட்டேன்..:)

சாமக்கோடங்கி said...

Ask Me அவர்களே.. வருகைக்கு நன்றி.. இதில் எமது பணி விளம்பரம் மட்டுமே... இதன் முழுப்பெருமையும் அப்பள்ளி ஆசிரியர்களை மட்டுமே சேரும்..

இளங்கோ said...

அன்று கொஞ்சம் வேலைகள் இருந்ததால் வர முடியவில்லை பிரகாஷ், மீண்டும் ஒருநாள் கூடிய விரைவில் சந்திக்கலாம்.

தருமி said...

’நிகழ்காலத்தில் ..’ சொன்னது போல் ஒரு குறும்படம் எடுத்து you tube-ல் கட்டாயம் போட நண்பர்கள் முயற்சிக்க வேண்டும். கண்ணால் காண அத்தனை ஆசை.

arul said...

superb post(www.astrologicalscience.blogspot.com)

சாமக்கோடங்கி said...

வாங்க இளங்கோ ..

கட்டாயம் ஒரு நாள் சந்திப்போம்..

சாமக்கோடங்கி said...

நன்றி அருள் அவர்களே

Franklin said...

அன்புள்ள சகோதரருக்கு வணக்கம். எங்கள் பள்ளியைப் பற்றிய செய்திகளைத் தங்களின் இணையப்பதிவில் வெளியிட்டமைக்கு நன்றிகள் பல.எதிர்கால இந்தியாவை ஒன்றிணைந்து கட்ட கரம்கோர்த்து பணியாற்றுவோம்.நன்றி.
அன்புடன்,
பிராங்கிளின்.

சாமக்கோடங்கி said...

பிராங்க்ளின் சார்.. கட்டாயமாக.. உங்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்குப் பெருமை. கட்டாயம் உங்களைக் கூடிய விரைவில் சந்திக்கிறோம். நன்றிகள் பல.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. நல்ல மனங்கள் வாழ்க.

Post a Comment