கொதிநிலை என்ற ஒன்று ஒவ்வொருவருக்குள்ளும் உண்மையாக வர வேண்டும், அது தேர்தலிலிலும் வெடிக்க வேண்டும்,அதற்குப் பிறகும் உயிரோடு இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
நமது நாட்டின் அவல நிலையைப் பற்றித் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்தத் தொடரின் நோக்கமே, பிரச்சினைகளையும் கூறிப் பின் அதற்கான தீர்வுகளையும் நுட்பமாக அலசுவதே..
ஆக இன்னும் பிரச்சினைகளையும் அடுக்கிக் கொண்டே போனால், நான் உண்மையில் சொல்ல வந்ததே மறந்து விடவும் வாய்ப்புள்ளது. அது இந்தப் பகுதியில் இருந்து தொடங்குகிறது. நமது நாட்டில் தற்போது நடக்கும் விஷயங்களைச் சற்று அலசிப் பார்ப்போம்.
'மாமூலாக' நடந்து கொண்டிருந்த லஞ்ச ஊழல் போட்டியில் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு போக, சட்டென்று அதில் ஏதோ ஒன்று வெளிச்சத்திற்கு வர அனைவரும் உஷாராகி விட்டனர். வெளிநாட்டுக் காரர்கள் இந்தியாவைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். திடீரென ஊழலுக்கேதிரான ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும் என அன்னா ஹசாரே புறப்பட அவருடன் பலபேர் கைகோர்த்தனர். நேரில் கூடியவர்கள் தான் பாராட்டப் பட வேண்டியவர்கள்.. மக்கள் சக்தியை அரசுக்குக் காண்பிக்க உதவியது.நோக்கம் நிறைவேறுமா என்பது வேறு விஷயம். ஆனால் இணையத்தில் என்னவென்றே தெரியாமல் பலநூறு பின்தொடர்பவர்கள். என்ன பயன்..?(எப்படியும் அவர் கூப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டியதில்லை.. இருந்த இடத்தில் ஒரு பொத்தான் தானே.. எளிதில் அமுக்கி விடலாம்).
தேர்தல் ஆணையம் சற்று கறாராக நடந்து கொள்வது மனதிற்குக் கொஞ்சம் ஆறுதல்(இதிலும் ஏதேனும் அரசியல் பின்னணி உண்டோ என்னவோ ஆண்டவனே..). அதைப் பொறுக்காமல் சின்னக் குழந்தையின் கையிலிருந்த குச்சி முட்டையைப் பிடுங்கினால் போல அழும் முதலமைச்சர். இப்படிக் கெடுபிடிகளைத் தாண்டியும் மக்களுக்குத் தேர்தல் 'அன்பளிப்பைக்' கொடுத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் பலே கில்லாடிகள்.
இதிலிருந்து நான் கவனித்த சில விஷயங்கள்.
படித்த அதிக வருமானம் ஈட்டும் இளைஞர்கள் இந்தியாவில் பெருகி வருகிறார்கள். அவர்களை இணைக்கும் பாலமாக பேஸ்புக் போன்ற இணையதளங்கள் செயல்படுகின்றன. ஆனால் இவர்களால் என்ன பயன் விளையப் போகிறது..? இவர்களை ஒரு பொருட்டாகவே மத்திய மாநில அரசுகள் கருதவில்லை. அவர்கள் தங்களுடைய 'டார்கெட்'டில் தெளிவாக இருக்கிறார்கள். இலவசங்கள் ஆபத்தானவை என்று இந்த படித்த இளைஞர்களுக்குத் தெரிகிறது. எப்படி..? நிறைய படிக்கிறார்கள், மடல்கள் அனுப்புகிறார்கள், நண்பர்களுடன் ஜாலியாகப் பகிர்கிறார்கள். ஆனால் இது போன்ற பொதுவெளி ஊடகங்களுடன் தொடர்பில்லாத மக்கள் தான் இந்தியாவில் அதிகம் நண்பர்களே.. எனவே தான் இந்தத் தேர்தலிலும் இலவசங்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். இணைய இளைஞர்கள் அவர்களின் டார்கெட்டிலேயே இல்லை..
சரி சராசரி மனிதனுக்கு ஒரு செய்தி எப்படி சென்றடைகிறது..? ஊடகங்கள்..?? அவை எப்படிச் செய்தியைத் திரித்துச் சொல்கின்றன என்பது உங்களுக்கே தெரியும். பல இடங்களில் வருடக் கணக்காகத் தொடரும் போராட்டங்களை அவர்கள் கண்டு கொள்வதே இல்லை, வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் இல்லை, ஆனால் திடீரென ஏதாவது ஒன்று தானாக வெளிச்சத்திற்கு வந்து விட்டால், தங்களது பத்திரிக்கை விற்பனைக்காக அதை ஊதிப் பெரிதாக்குகின்றன. ஊடகங்களில் பெரும்பாலானவை கட்சிகளின் கையில்.. என்ன செய்ய முடியும்..?? நாள்தோறும் தொகா களில் இடம்பெறும் எதிரணியினர் பற்றிய அவதூறு செய்திகள், வீடியோக்களைப் பார்க்கும் போது சிரிப்பு வருகிறது.. ஆனால் நம்பினால் நம்புங்கள், அந்த செய்திகளை நம்புவோர் நமது நாட்டில் பலர் இருக்கிறார்கள். அவர்களைத் தான் இந்த அரசியலாளர்கள் குறி வைக்கிறார்கள். நாமெல்லாம் வெத்து வேட்டுகள்.. அதாவது சிறுபான்மையினர்.
சரி. படித்த இளைஞன் என்ன செய்கிறான்..? அவனுக்கு இது தவறென்று தெரிகிறது. உடனே பேஸ்புக்கில் ஒரு மறுப்பு எழுதுகிறான். யாராவது அனுப்பியதை மற்றவர்களுடன் பரிமாறுகிறான்.. இதனால் நடப்பது என்ன..? அதே செய்தி அந்த மக்களுக்குள்ளேயே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. கோழிகள் போட்ட முட்டைகள் பண்ணையிலே இருந்தால் யாருக்கு லாபம்..? கடைத்தெருவிற்கு வர வேண்டுமே..?? அதை யார் செய்வது..? இன்று இந்த சமூக பொதுவெளி ஊடகங்களில் ஆர்ப்பரிக்கும் நண்பர்களில் எத்துனை பேர் தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இருக்கிறோம் சொல்லுங்கள். ஒரு நாள் விடுப்பு எடுத்து விட்டு வரச் சொன்னாள் வருவீர்களா.??
போராட்டத்தின் சாராம்சம் தியாகம், நீதி, நேர்மை.. அது நமக்குள் இருக்கிறதா என்று முதலில் சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்வோம். தனது ஒரு நாள் ஊதியத்தை இழக்க யாரும் தயாரில்லை, தனது தாய் தந்தையர், சுற்றத்தார் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயார் இல்லை, எங்கோ ஒருவர் தவறு செய்கிறார், யாரோ ஒருவர் கஷ்டம் அனுபவிக்கிறார், அதை நாம் யாரோ ஒருவருடன் பகிர்ந்து கொள்கிறோம், அது முடிந்தவுடன் எக்கேடோ கேட்டுப் போகிறோம். உண்மையச் சொல்லப் போனால் நமது கூரையில் தீ வைக்கப் பட்டால் தான் நெருப்பு என்றால் என்ன என்று புரியவரும்.. அது நமது இளைஞர்களில் பலருக்குப் புரியவில்லை. நான் எல்லோரையும் சொல்லவில்லை.
அப்போ என்னதான் செய்யலாம்..? கொள்கை வேண்டும். கொள்கை கட்டாயம் வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிறு கொள்கையாவது இருக்க வேண்டும். மாற்றங்கள் நம்முள் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே எப்போதும் என்னுடைய கருத்து. நமது நாட்டில் நல்ல குடிமக்கள் இருக்கிறார்கள், ஆனால் வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லை என்று ஆதங்கப் படுபவர்கள் பலபேர்.. ஆனால் இப்போதைய தேவை நாம் திருந்துவதே.
உனக்கு அவசரம் என்றால் காசு கொடுத்து ஓட்டுனர் உரிமம் பெறுகிறாய்.. உனக்கு அவசரம் என்றால் போலீசுக்கு காசு கொடுத்து உரிமம் இல்லாமல் தப்பிக்கிறாய்.. அப்போதெல்லாம் அது தவறேனத் தோன்றவில்லை. இப்போது மட்டும் பொங்குகிறாய்.. இது போலி வேஷம்.. நாட்டில் நாமும் ஒரு அங்கம். நாட்டில் ஊழல் உள்ளதென்றால் உனக்குள்ளும் ஊழல் உள்ளதென்றே அர்த்தம். ஏதோ வெளியில் நடப்பதெல்லாம் அநியாயம் என்றும் நமக்குள்ளே நாமெல்லாம் மகாத்மா என்றும் நினைத்துக் கொண்டால், சமுதாயத்தைப் பற்றி நமது நாட்டைப் பற்றி இன்னும் சரியாகப் புரிதல் இல்லை என்றே அர்த்தம். அதை முதலில் புரிந்து கொள்வோம். மாற்றத்திற்கு இதுவே முதல் படி.
அடுத்த பகுதியில் குழந்தைப் புருவத்தில் இருந்து என்னன்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதைக் கலந்தாய்வோம்..
நன்றி..
சாமக்கோடங்கி |
2 பின்னூட்டம்:
//சின்னக் குழந்தையின் கையிலிருந்த குச்சி முட்டையைப் பிடுங்கினால் போல அழும் முதலமைச்சர்//
:)
//எனவே தான் இந்தத் தேர்தலிலும் இலவசங்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். இணைய இளைஞர்கள் அவர்களின் டார்கெட்டிலேயே இல்லை..//
Its really true prakash..
//அவசரம் என்றால் காசு கொடுத்து ஓட்டுனர் உரிமம் பெறுகிறாய்.. உனக்கு அவசரம் என்றால் போலீசுக்கு காசு கொடுத்து உரிமம் இல்லாமல் தப்பிக்கிறாய்.. அப்போதெல்லாம் அது தவறேனத் தோன்றவில்லை. இப்போது மட்டும் பொங்குகிறாய்.. இது போலி வேஷம்..//
ஆம் பிரகாஷ்.. நாம் கொடுத்துப் பழகிவிட்டோம்.. இப்பொழுது அவர்கள் வாங்குகிறார்கள் என்றால் என்ன நியாயம்.
நேற்று கூட, பக்கத்தில் பேசிக் கொண்டிருந்தபோது "அந்த ஊர்ல வீட்டுக்கு ரெண்டாயிரம் குடுத்திருக்காங்க, இந்தப் பக்கம்தான் ஒண்ணையும் காணோம்." இது எப்படி இருக்கு, எல்லோருக்கும் கொஞ்சம் பணம் கிடைத்தால் போதும். எதையும் விலை பேசி விடுவார்கள் போல இருக்கிறது. அவன் ஜெயித்து வந்தால் போட்ட காசை எடுக்கப் பார்க்கிறான்.
எப்படியாவது லஞ்சம் கொடுத்து வேலையை முடிக்க நினைக்கும் நாம் முதலில் மாற வேண்டும் பிரகாஷ்.
படித்தவர்களால் நாட்டில் அதிகமாக மாற்றம் வரும் என்பார்கள். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் மட்டுமல்லாது கட்டாயம் வோட்டு போட வேண்டும்.
நல்ல பதிவு.
Post a Comment