Wednesday, October 5, 2011

வாழ்க்கை எனும் ஓடம்..

ஒரு சிறு குழந்தை ஒரு சிறிய பொம்மையை எடுத்து விளையாடுகிறது.. சிறிது நாட்கள் கழித்து இன்னொரு புதிய விளையாட்டுப் பொருள் கிடைக்கையில், இந்தப் பழைய பொம்மையை விட்டு விட்டு அதனைக் கையில் எடுத்துக் கொள்கிறது. வாழ்க்கையின் தத்துவம் இங்கே துவங்குகிறது..

பாசம், கண்ணீர், சண்டை, குதூகலம், நண்பர்கள், துரோகம், காதல், தொழில், லாபம், நட்டம், துன்பம், இன்பம், தனிமை, உளைச்சல் என்று பலவகைக் கூறுகளால் நமது வாழ்க்கை கட்டப் பட்டுள்ளது. இவைகளில் பலவற்றை அவ்வளவு சாமான்யமாக உதறித் தள்ள முடியாது.

ஆனால் எவை எவை எந்தெந்த நேரத்தில் கிடைக்கிறதோ, அதைப் பொருத்து ஒருவன் அதிர்ஷ்டசாலியாகவோ அல்லது ஏமாளியாகவோ ஆகிறான்.

சிறுவயதில் கிடைத்த நண்பர்களுடன் விளையாடுகிறோம்.. அப்புறம் பெற்றோருடன் திரைப்படங்கள் செல்கிறோம்.. வெளியே வரும்போது நாமும் ஒரு ஹீரோவைப் போலவே உணர்கிறோம்.. கெட்டவைகளை உடனே களையும் ஒரு பாராக்ரமம் நமக்குக் கிடைக்காதா என்று ஏங்குகிறோம்..வாழ்க்கை ஓடுகிறது.. பள்ளிக் காலம்.. மறக்க முடியாத நினைவுகள்.. நல்ல நண்பர்கள்.. கெட்ட நண்பர்கள்..அப்படி ஓடுகிறது வாழ்க்கை.

பள்ளி முடிந்து கல்லூரி.. சிலருக்கு பல மலரும் நினைவுகள் இங்கு தான் பதியம் போடப்படுகின்றன.. பலருக்கு பள்ளிக்கும் கல்லூரிக்கும் வித்தியாசம் சொல்ல முடியாதவாறு கல்லூரிக் காலமும் முடிகிறது..

இதற்கிடையே கிடைத்த நட்பு வட்டங்களுக்கு ஏற்றவாறு மனம் ஓடுகிறது. நல்ல திரைப்படங்களைப் பார்க்கும் நண்பர்கள் கிடைத்தால் அவர்களோடு நாமும் சேர்ந்து பார்த்து விமர்சனம் செய்கிறோம். பாட்டு ஆட்டங்களுடன் சுற்றும் நண்பர்களோடு சேர்கையில் நாமும் இறங்கி ஒரு கை பார்த்து விடுகிறோம்.. நல்ல கதைகளைப் படிக்கும் நண்பர்களோடு சேர்கையில் நமக்கும் புத்தகங்கள் கைமாறுகின்றன.

அரட்டை நண்பர்களுடன் சேர்கையில் அரட்டையில் லயிக்கிறோம்.. அப்புறம், ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் என்று ஏதோ ஒரு குறிப்பிட்ட நட்பு வட்டத்தின் உந்துதளாலும், நமது உள்மன உந்துதலாலும் ஓடிக்கொண்டு இருக்கிறோம்..

ஆனால் வாழ்க்கையில் வெற்றியை அடைந்தவர்கள், இந்த வாழ்க்கை ஓடத்தின் ஒரு சிறுபகுதியை மட்டுமே துடுப்பின்றிக் கடக்கின்றனர் என்றே தோன்றுகிறது. மீதத்தைத் துடுப்புப் போட்டுத் தங்களுக்கு ஏற்றவாறு திசைமாற்றி ஓட்டக் கற்றுக் கொள்கின்றனர். ஓட்டியும் வென்று விடுகின்றனர்.

இத்தனை காலத்திலும் நாம் இத்தனை விஷயத்தைக் கடந்து வருகிறோம்.. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் ஒரு விஷயத்தின் மீது நமக்கு உந்துதல் இல்லை என்றால் அது நமக்கான களம் இல்லை என்பதே பொருள் என்று நான் நினைக்கிறேன். நமக்கான களம் எங்கோ ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. அதைத் தேடிப்போகாதவர்கள் ஓடம் போகும் பாதையிலேயே வாழ்க்கையைப் பயணித்து விடுகின்றனர். சிலருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் போகும் பாதை இனிதாய் அமையும். சிலருக்கு அமையாது.

ஆனால் தமக்கான களம் எங்கோ இருப்பதை உணர்பவர்கள், அல்லது தமக்கான காலத்தை அமைத்துக் கொள்பவர்கள், சாதாரண மக்களை விட மிகவும் அவதிப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கை எப்போதும் கேள்விக் குறியாகவே இருக்கும். நமது இலக்கை நோக்கிச் செல்வது அவ்வளவு சாதாரணமானதல்ல. அதுவும் சொந்த பந்தங்கள், ஆசாபாசங்களால் கட்டுண்டு இருப்பவர்களால், அவ்வளவு எளிதாக அதைக் கடந்து சாதனைப் பாதையைத் தொட்டு விட முடியாது.

ஆனால் என்னைப் பொருத்தவரை தனக்கென ஒரு பாதையை வகுப்பவர்கள்.. எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தும் வியப்பதில்லை.. அதனுள் இருக்கும் விஷயங்களைப் பொறுமையாக ஆராய்ந்து கற்கிறார்கள் என்றே நினைக்கிறேன்... வியப்பவர்கள் கடைசி வரை வியந்து கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்..


விதி விலக்குகளும் இதற்கு உண்டு..

சாமக்கோடங்கி

3 பின்னூட்டம்:

பத்மநாபன் said...

பிரகாஷ் ...நீண்ட நாள் ஆயிற்று வந்தும் படித்தும் .. தத்துவ மழையாக இருக்கிறது ... கிட்ட தட்ட ஜே கே யின் தத்துவங்களை நெருங்கி இருந்தது . உண்மைதான் . வியப்பவர்கள் வியந்து கொண்டே இருக்கிறார்கள் ..உள் நுழைந்து கற்று தேருபவர்கள் வெற்றியாளர்கள் ஆகி விடுகிறார்கள் ...

Thuvarakan said...

true

சாமக்கோடங்கி said...

வாங்க பத்மநாபன்.. தத்துவம் எல்லாம் இல்லைங்க.. மனதில் ஓடியதை அப்படியே எழுதி விட்டேன்..

Post a Comment