Friday, February 26, 2010

நாய்ப்பொழப்பு...




ரொம்ப நாளைக்கு அப்புறம் என் நண்பன் ஒருத்தன பார்த்தேன்.. ஏதோ ஒரு கம்பெனி சாதனங்களுக்கு சர்வீஸ் மேனாக வேலை பார்க்கிறான். தெனமும் கொறஞ்சது ஆறு ஏழு இடங்களுக்கு வண்டியில பறக்கணும்.வேலை எல்லாம் எப்டிடா போகுதுன்னு கேட்டேன்..அவன் சொன்ன பதிலில் இருந்து இந்த இடுகையின் தலைப்பு ஆரம்பமாகுது...

"அதை ஏண்டா கேக்குற... நாய்ப்பொழப்பு..."

எங்க வீட்டுல ஒரு ரெண்டுமாச நாய்க்குட்டி இருக்குது..(பேரு ரெமோ) காலங்காத்தால நேரத்துல எந்திரிச்சிடுவான்.. வீட்டு கேட்ட தொறக்கும்போதேல்லாம், ஏதோ பெரிய வேலை இருக்குற மாறி அவசர அவசரமா வெளியில ஓடுவான். வேடிக்க பார்ப்பான்.. அடுத்த தடவ கேட்ட தொறக்கும் போது அவசர அவசரமா உள்ள ஓடி வருவான். என்னமோ உள்ள பெரிய பிசினஸ் இருக்குறா மாறி.. டைமுக்கு நல்லா வாங்கி கொட்டிக்குவான்.. அப்புறம் எதையோ வெட்டி முறிச்சா மாறி தூங்குவான்.. அப்புறம் அடுத்த நாள் காலையில இதே ஜோலி ஆரம்பம்..

இதுதான் உண்மையான நாய்ப்பொழப்பு...

ஆனா நம்ப வாழ்க்கைய கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன்..

காலைல நேரத்துல எந்திரிக்க வேண்டியது.. கொஞ்ச நேரம் மச மசன்னு யோசிக்க வேண்டியது..அப்புறமா கீ குடுத்த பொம்ம மாறி(இப்பெல்லாம் கீ குடுக்குற பொம்ம எங்க இருக்கு.. எல்லாம் பாட்டரி மாட்டுன பொம்மைகள் தான்..)அங்குட்டும் இங்குட்டும் ஓட வேண்டியது.. அப்புறமா தண்ணி சூடு பண்ணி-பல்லு வெளக்கி-குளிச்சு-துணி அயன் பண்ணி-பர்சு,சீப்பு,ஐடி கார்டு சகிதங்களை எடுத்து-அவசர அவசரமா ஷூ மாட்டி- ஓட்டமும் நடையுமா பஸ் ஸ்டாண்டுக்கு போய்-பஸ்ல தொத்தி-நசிஞ்சு போய் எறங்கி-கம்பெனிக்குப் போய்-ஏசி காத்துல உக்காந்து கம்ப்யுட்டர தட்டி-டீ ப்ரேக்-லஞ்ச் ப்ரேக்-பிரெண்ட்ஸ் கூட அரட்டை-சாயங்காலம் கெளம்ப வேண்டியது- அதே பஸ் சகிதங்கள் ரிவர்ஸில்-மப்டிக்கு மாறி சாப்புட்டு தூங்க வேண்டியது...

அடுத்த நாள் இதே வேலை...

சனி ஞாயிறு சொல்லவே தேவை இல்லை.. ரெமொவாச்சும் அப்ப அப்ப எந்திரிச்சு வெளிய போயிட்டு வருவான்.. முழிச்சிருக்கும்போது சுருசுருப்பாத்தான் இருப்பான்.. ஆனா நாமளோ கட்டில்லையே படுத்துட்டு, டிவி ரிமோட்ட கையில வெச்சிட்டு அந்த நாள் முழுசா அப்படியே போகும்..

உண்மையா நெனச்சுப் பாத்தா நம்ம பொழப்ப விட நாய்ப் பொழப்பு தேவலைன்னுதான் தோணுது.. ரெமோ சந்தோஷாமாத்தான் அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தீட்டுத் திரியறான்.. ஆனா நாம சந்தோஷமா இருக்கோமா..?

இப்படியே இதே மாறி நாம சுத்திகிட்டு இருந்தோம்னா நம்ம மண்ட நெசமா மழுங்கித்தான் போகும்.. அப்புறமா நம்ம புள்ளைங்க இதையேதான் செய்யப் போகுது..

ஆனா இத கொஞ்சம் நாம மாத்திகலாமொன்னு யோசிக்கும் போது பிறந்த ஐடியாக்கள்..

சிலவற்றை நான் செய்தும் பார்த்து விட்டேன்..

நம்மள சுத்தி இருக்குற எல்லா இடங்களிலும் நம்மள புத்துணர்வா வெச்சிருக்கிற பல விஷயங்கள் இருக்கு.. அத சரியா பயன்படுத்திக்கிட்டாலே, நம்மளோட அந்த நாள் வெறும் சரா சரி நாளாக இல்லாமல் கொஞ்சம் விருவிருப்பானதா வித்தியாசமானதா இருக்கும். நம்ம கொழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்..அவங்களோட திறமைகள கண்டுபிடிக்கவும் வசதியா இருக்கும்.(ஒரு லட்சியம் அமையும் போது அங்கே தவறான வழிகளில் மனம் செல்வது தவிர்க்கப் படும் என்று நம் முன்னைய இடுகையில் பார்த்தோம் அல்லவா..)

ஐடியா 1:

எப்பப் பார்த்தாலும் ஒரே பஸ் ஸ்டாண்டுல தானே இறங்குறோம்.. ஒரு நாள் ஒரு ஸ்டாப்பிங் தள்ளி எறங்கி நடந்து பாப்போமே..இல்லாட்டி ஒரு ஸ்டாப்பிங் முன்னாடி இறங்கலாம்.. சாயங்காலம் வீட்டுக்கு வந்து படுத்துத் தூங்கத் தானே போறோம்..? ஒரு அரை மணி நேரம் தள்ளி வந்தா என்ன ஆயிடப்போகுது...? ஆனா காலைல இத முயற்சி பண்ணினா அன்னைத்த வேலைக்கு ஆப்பு தான்..
நான் ட்ரை பண்ணிப் பார்த்தேன்... (அட காலைல இல்லப்பா, சாயங்காலம் தான்..) நல்லா தான் இருந்துச்சு..கொஞ்சம் சாயங்கால காத்துல மொள்ளமா சுத்தி முத்தி வேடிக்க பாத்துக்கிட்டே.. வீடு வரைக்கும்... டெய்லி முயற்சி பண்ண முடியல.. ஆனா வாரத்துல ஒரு தடவையாவது முன்னாடி ஸ்டாப்ல எறங்கி நடப்பேன்.. என்ன பண்றது நம்ம லைப்ல இப்டித்தான் கொஞ்சம் வித்தியாசம் கொண்டு வர முடியும்.

ஐடியா 2:

டைம் கிடைக்கும்போது...நம்மள சுத்தி இருக்குற பொருட்கள உத்துப் பார்ப்பது.. அது தாம்ப்பா.. கூர்ந்து கவனிப்பது... அப்டி என்ன இருக்குன்னு கேக்குறீங்களா..?நான் எடுத்த இந்த படங்களைப் பாருங்க.. இது தெனமும் நம்மள சுத்தி இருக்குற விஷயங்கள் தான்...
நான் கொஞ்சம் உத்துப் பார்த்தப்போ கெடச்சுது..






ஐடியா 3:

இது குழந்தைகளுக்காக.. நான் ஏற்கனவே என்னுடைய இருகையில் சொன்னது தான்.. "பினாலஜி ஸ்டடி" அதாவது மரங்களை உற்று கவனிப்பது அப்டீன்னு வெச்சுக்கலாம்..
இதுவும் ஒரு வகையில நம்ம தினசரி வாழ்க்கையில சின்ன சின்ன சந்தோஷங்கள் மாற்றங்கள் தரும் விஷயங்கள் தான்..

ஐடியா 4:

பக்கத்துல இருக்குற ஏதாவது பகுதிகளுக்கு சும்மா போயிட்டு வருவது.. ஆனா எந்த நோக்கமும் இல்லாமல்.. அப்பதான் நெறைய விஷயங்கள கவனிக்க முடியும்..(சட்னிக்கு தேங்கா வாங்கப் போனதெல்லாம் இந்த கணக்குல வராதுங்கோ..)
நான் கூட மலையேற்றம் போவேன்..

என்னடா போரடிக்கிறேன்னு பாக்குறீங்களா? விஷயம் இல்லாமல் நான் சொல்ல மாட்டேன். என் கம்பெனி கஸ்டமர்கள் ஜெர்மானியர்கள். அவர்களைக் கொஞ்சம் கவனிக்கும் போதும் மற்றும் உடன் வேலை செய்யும் மற்றும் ஜெர்மனி சென்று வந்த நண்பர்கள் சொன்ன சில விஷயங்கள் சில கீழே..

அவர்கள் நுண்மையாக யோசிக்கக் கூடியவர்கள். எதையும் பொறுமையாக அணுகும் தன்மை கொண்டவர்கள். அந்த நாட்டின் படைப்புகள் மிகுந்த தரத்துடன் (உதாரணத்திற்கு போல்க்ஸ்வாகன் காரை எடுத்துக் கொள்ளுங்கள்) இருப்பதற்கு காரணமா இதைச் சொல்லலாம்..

இந்த பொறுமைக்கும், நிதானத்திற்கும் மூலம் விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதாகும்.
நம் தலைமுறையினரிடம் இந்த கூர்ந்து கவனிக்கும் தன்மை குறைந்து வருவதை நினைத்தே இந்த இடுகை. நல்லா படிப்பது, பாடுவது போன்ற விஷயங்கள் இதிலிருந்து வித்தியாசப் பட்டது.. இது மிகவும் தேவையானது. (பத்து நிமிஷம் அட்வைஸ் பண்றா மாறி சீன் வந்தாலே தியேட்டர விட்டு தம் அடிக்க வெளிய வந்துடராணுக நம்ம பசங்க.. இது கூட அவங்க பொறுமைக்கும் கூர்ந்து கவனிக்கும் திறனுக்கும் ஒரு எடுத்துக் காட்டு தான். வெளிப்படையாகத் தெரியாது அவ்வளவுதான்).

நம் குழந்தைகளுக்கு இந்த திறனை வளர்க்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்...?

என்ன நண்பர்களே.. கூர்ந்து கவனிப்போமா..?

உங்க கிட்ட ஏதாவது ஐடியாக்கள் இருந்தால் இங்கே பகிருங்கள்.. அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்..

நன்றி..

Wednesday, February 10, 2010

படிக்காதவன்......


அநேகமாக எனக்குத் தெரிந்து நாம் பள்ளியில் படிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே நமக்கு அறிவுரை தரும் படலம் ஆரம்பிக்குது. தீண்டாமை ஒரு பாவச்செயல், சுத்தம் சோறு போடும்,நேர்மை தவறேல்,அப்படி இப்படீன்னு ஏகப்பட்ட உபதேசங்கள்.. இதத்தான் அடுத்தவனுக்கு உபதேசம்கறது..
துடியலூர் பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்தேன்.ஒரு பஸ்சுக்கு நூறு பேர் அலைமொதிக்கரத பாத்து இந்த கவர்மேன்ட்ட நொந்துக்கிட்டேன். வேலைக்குப் போயிட்டு வந்த ரெண்டு படிச்ச பசங்க (சுமார் 22 வயசு இருக்கும்)."மாப்ள.. இந்த கவர்மென்ட் காரனுக காசு வாங்கீட்டு என்னடா பன்றாணுக.. மக்களைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. பொறுப்பே இல்ல"ன்னு சொல்லிகிட்டிருந்தான் ஒருத்தன்." ஆஹா, பரவா இல்லையேன்னு நெனைக்கிற சமயத்துல, புளிச்.....சினு என் கால் பக்கத்துல துப்புனான், செவப்பா.. பா_ பராக் போட்டுருந்தன் போல(சென்சார் கட்). கொஞ்சம் லஜ்ஜையாக இருக்கவும் லைட்டா தள்ளி நின்னேன்.நடந்து போய்க்கிட்டு இருந்தவுங்க சில பேர் கவனிச்சதால அதைத் தாண்டிப் போனாங்க. ஆனா கவனிக்காதவங்க அத மிதிச்சிட்டே போனாங்க. "நம்ம கிட்ட வரி வரின்னு வாங்குறாங்க, அத எல்லாத்தையும் அவனுகளே வாயில போட்டுக்குராணுக, நாடு எப்பத்தான் திருந்துமோ...., புளிச்.!!!....." இது இன்னொருத்தன். அட அந்த எளவு எடுத்தவனும் வாயில அதே கருமத்த தான் போட்டுக்கிட்டு இருந்தான்.
அப்ப தான் நெனச்சேன்.. இந்த மக்களுக்கு இந்த கவர்மென்ட் போதும்னு..
மாற்றங்கள் நமக்குள்ள ஆரம்பிக்கனும்னு நான் பல இடங்கள்ல சொல்லி இருக்கேன். இத்தன பேசுனவனுகளுக்கு, பொது இடத்துல அசிங்கம் பண்ணுறது தப்புன்னு தெரியலியே. தன்னோட ஒரு சிறு செயலத் தப்புன்னு உணர முடியாதவன், எப்படி மத்தவங்கள மட்டும் வாய் கூசாம திருந்தச் சொல்றான்.
பஸ்ஸுல ஏறனப்போ முன் சீட்டுல ஒரு வாத்தியார், அவரோட சின்னப் பையனோட உக்கார்ந்திருந்தாரு.பையனுக்கு பிஸ்கட் எல்லாம் குடுத்துட்டு அவன அழாமப் பாத்துக்கிட்டே வந்தாரு.பக்கத்துல இருக்குற ஆளுகிட்ட மேதாவி மாறி உபதேசங்கள்.ரோடு குண்டுங்குழியுமா இருக்குறதைப் பத்தியும், அரசின் இந்த அலட்சியப் போக்கைப் பத்தியும் ஒரு புடி புடிச்சாரு.உண்மைதான்.வெள்ளைக் காரன் போட்ட கான்க்ரீட் ரோட்டோட கிட்ட நிக்க கூட இந்த அரசுக்கு யோக்கியதை இல்ல..போடராணுக, மழை வருது, காணாமப் போகுது,பஞ்சர் போடராணுக, மழை வருது, காணாமப் போகுது.. இதே பொழப்பு. ஒரு நாளைக்கு கொறஞ்சது, நாலஞ்சு ஆம்புலன்சு போகுது.. அத்தினி விபத்து.அப்பெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ரோடு, இப்ப செம்மொழி மாநாடு, தானைத் தலைவர் வர்றார்னு சொன்னவுடனே, கண்ணுக்குப் பட்டுடுச்சு. ஒரு அமைச்சர் என்னடான்னா, மேட்டுப்பாளையம் ரோட்டுகிட்ட நின்னுகிட்டு, "இங்கிருந்து பாத்த, நேரா, பஸ் ஸ்டாண்ட் தெரியணும், சைடு ஆக்கிரமிப்பு எல்லாம் இன்னைக்கே கிளியர் பண்ணனும்,தலைவர் வரும்போது, வண்டி டர்ன் ஆகமா நேர போகனும்"னு சொல்றான்.. என்ன நடக்குது இங்க..அப்படின்னு நெனைச்சு முடிக்கல.. கையில வெச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்ட ஜன்னல் வழியா வெளிய வீசி எறிஞ்சார். குழந்தைகளுக்கு நன்னடத்தை சொல்லிக் கொடுக்கும் ஒரு பள்ளி ஆசிரியர்.
மறுபடியும் அதே தான் நெனைச்சேன்.."இந்த மக்களுக்கு இந்த கவர்மென்ட் போதும்னு.."

இப்படி சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பிக்கிற தவறுகள் தான், பெரிய பூதாகரமாகி பின்னாடி அந்த தப்புகள் நமக்கு உறைக்காமையே போயிடுது.

இதுக்கெல்லாம் காரணம் உணர்தலைத் தூண்டாத நம் அடிமைக் கல்வி. உணர்ச்சி இல்லாத ஜடக் கல்வி.முடித்த பிறகு என்ன செய்வோம் என்று தெரியாது, அனால் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற போட்டியை மட்டும் உண்டு பண்ணும் தண்டக் கல்வி..

என்ன பண்றது, படிக்க வெக்கிரவனும் கஷ்டப் பட்டு காசு கட்டி ஸ்கூல்ல சேத்துறான். வேலைக்கு வரறவனும், அன்றாடம் பல பிரச்சனைகளைச் சுமந்துட்டு, வேண்டா வெறுப்பா பாடம் சொல்லித் தர்றான். பசங்களும் பாஸ் ஆனாப் போதும்னு படிக்கிறான். சிலதுக முட்டி மோதி மொதல் மார்க்கு வாங்குதுங்க.. இதுவும் ஒரு வியாபாரம்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.இந்த ஏட்டில் இருக்கும் கருத்துக்களும் மக்களுக்கு உதவாதே விட்டது. ஆம் ஏட்டில் இருக்கும் வரை எதுவுமே உதவாது தான். அது சுரைக்காயாக இருந்தாலும் சரி, திருக்குறளாக இருந்தாலும் சரி.

படிக்க வெக்கறத விட உணர வெக்கணும். நாலு தடவ,நீங்க சாப்ட பிஸ்கட் பாக்கெட்ட கொண்டு போய் குப்பத் தொட்டியில போட்டு குழந்தைகளுக்குக் காமிச்சுக் குடுங்க. அதுங்க தானா செய்யும்.தண்ணி நெறையரக்கு முன்னாடியே, பைப்ப க்ளோஸ் பண்ணிக் காட்டுங்க.. குழந்தைங்க கத்துக்கும். குழந்தைங்க முன்னாடி தம் அடிக்கறது..தண்ணி அடிக்கறது.. இதெல்லாம் அவங்கள எங்க கொண்டு போய் விடும்னு யாராச்சும் நெனைச்சுப் பாக்குறாங்களா?

இன்றைய ஸ்கூல் பசங்க... சாயங்காலம் ஆச்சுனா, பங்க கடையல தம்மு.. விடுமுறைகள்ள தண்ணி.. காசு..? அப்பன் பாக்கேட்டுல இருந்து சுட்டது.. இல்ல பொய் சொல்லி வாங்குனது.செல் போனு எங்கிருந்து...? அதுல கொறஞ்சது நாலைஞ்சு பொண்ணுக நம்பர்..(இல்லேன்னா பசங்க மதிக்க மாட்டானுவ).ரீசார்ஜ் பண்றதுக்கு, செலவு பண்றதுக்கு, இதுக்கெல்லாம் ஏது காசு.. தன் ரத்தத்தைக் கேவலம் காசுக்காக விற்று இந்து சுகத்தை அனுபவிக்கிறார்கள், நண்பர்களே.. சொல்லவும் கூசுகிறது, நான் கனவு கண்ட இந்தியா இப்படியா ஆக வேண்டும்...?

இவர்கள் எல்லாம் என்ன படித்தார்கள், என்ன படிக்கிறார்கள், காலை ஒன்பது மணியிலிருந்து தொடங்கி மாலை ஐந்து மணிவரை.(இப்பெல்லாம், காலையில ஏழு மணிக்கே ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பம், சாயங்காலம் எட்டு மணி வரைக்கும் எக்ஸ்ட்ரா கோச்சிங்) ஒரு நாள் முழுசும் அப்படி என்ன தான் சொல்லித் தராணுக,, அப்படி இதுங்களும் என்ன தான் படிச்சுக் கிழிக்குதுங்க..

வாழ்க்கை தறி கேட்டு சின்னா பின்னமான பிறகு இந்த படிப்பு எதுக்கு உதவும்.? வாழும்போதே மனுஷன நல்வழிப் படுத்தணும், இள ரத்ததுலையே அத பாய்ச்ச்சனும்னு தான் இத சின்ன வயசுல சொல்லித் தராணுக.இள வயசு கள்ளம் கபடம் இல்லாதது. மத்தவங்கள எதிர்த்துப் பேசாது(அதிகம் தெரியாததினால), வெளிவிடரதக் காட்டிலும் மூளை அதிகம் கிரகிக்கும்.. அதனால அந்த வயசில பாடத்தைக் காட்டிலும் நன்னடத்தைகள்ள அதிக முக்கியத்துவம் குடுக்கணும்.

ஒரு குழந்தை,அதைச் சுத்தி விளையாடிட்டு இருக்குற சின்ன பூனைக் குட்டிய கழுத்தப் புடிச்சு நேரிக்குது.. அது வலி தாங்க முடியாம துடிக்கும் போது, இந்தக் குழந்தை சிரிக்குது. இந்தக் குழந்தையோட பெற்றோர், அதப் பாத்து ஆனந்தப் படறாங்க.. அது தெரியாத குழந்தை,அதனால சிரிக்குது. இந்த பெரிய மனிதர்களுக்கு எங்கே போனது அறிவு. அது சிரிக்கனும்கரதுகாக,இன்னொரு பச்சைக் குழந்தை(பூனை)அவஸ்தை அனுபவிக்கலாமா? அன்பையும் பண்பையும் குழந்தைகளுக்கு நாம தானே சொல்லிக் கொடுக்கணும்..? அன்பு பரிவு, மனிதாபிமானம், இது தான் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக் கொடுக்க வேண்டியது..

எத்தனையோ பெற்றோர், குழந்தைகள லீவு நாள்ல பார்க் பீச்சுன்னு கூட்டீடு போறாங்க.. அவங்க சாப்ட்ரதுக்கு அதிகம் கேக்கும் போது செலவு செஞ்சு மனசு நோகறாங்க.. ஊதாரியா வளர்றத நெனைச்சு வருத்தப் படறாங்க..ஆனா எத்தன பெற்றோர் தங்களோட குழந்தைகள ஒரு அநாதை ஆசிரமத்துகோ, ஒரு உடல் ஊனமுற்ற குழந்தைகள் இல்லத்துக்கோ, ஒரு முதியோர் இல்லத்துக்கோ கூட்டீட்டு போறாங்க..? அங்கெல்லாம் போனா, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு அவங்க எவ்வளவு கஷ்டப் படறாங்க.. கெடைக்கிற கொஞ்சம் பொருள எப்படிப் பகிர்ந்து சாப்டறாங்க.. இறைவன் அவங்களுக்கு காட்டுற சிறு வெளிச்சத்திலும் அவங்க எப்படி சந்தோஷமா வாழுறாங்க.. அப்படீன்னு புரியும். கை இல்லாம காலால ஒரு குழைந்தை எழுதுரத பாக்கும் போது, அப்பா கிட்ட பாரின் பென் கேக்குற ஆச விட்டுப் போகும். கெடைக்கிற சிறு உணவ அவங்க பகிர்ந்து சாப்பிடும் அழகைப் பாக்கும்போது, தின் பண்டங்கள் கேக்குற ஆச விட்டுப் போகும். வருங்காலம் ஒண்ணு இருக்கோ இல்லையோ, தனக்காக ஒரு சிறு உண்டியல்ல காசு போடும் அந்த பிஞ்சு உள்ளங்களைப் பார்க்கும்போது, ஊதாரித் தனமா செலவு செய்யுறது எவ்வளவு தப்புன்னு தோணும்.தனக்கு ஒரு கால குடுக்கலைன்னாலும் இன்னொரு காலும் ரெண்டு கையும், நல்லா படச்சதுக்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் அந்த மனங்களை உணரும்போது, ரெண்டு கை ரெண்டு கால் இருந்தும் நாம ஊனமா வெளங்காம இருப்பது புரியும்.

இந்த மாறி உணர்ந்து வளரும் குழந்தைகள் தான் தனக்கென்று ஒரு பாதைய அமச்சுகிட்டு வீறு நடை போடும். ஒரு லட்சியம் அமையும் போது, அங்க தேவையில்லாம கெட்ட எண்ணங்களுக்கு மனம் போகாது. உணர்ந்து வளரும் போது தான் குழந்தைகள், எ.ஆர். ரஹ்மான் மாதிரியும்,கல்பனா சாவ்லா போலவும், ஏன் அப்துல் கலாம் போலவும் உருவெடுப்பார்கள்.. சும்மா பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு பொறுப்பை உணராமல் பேசும் எச்சில் துப்பும் "படித்த" இளைஞர்கள் அங்கே விட்டில் பூச்சிகளாக மறைந்து போவார்கள்..

எவர் கேட்டாலும், இன்ஜினியரிங் படித்துள்ளேன், பத்தாம் வகுப்பு பர்ஸ்ட் கிளாஸ், ப்ளஸ் டூ நூத்துக்கு நூறு என்று சொல்லுகிறோமே.. இப்போது சொல்லுங்கள்.. நம்மில் படித்தவர்கள் எத்தனை பேர்..? படிக்காதவர்கள் எத்தனை பேர்..?

படிக்கும்போது அறிவு வளர்கிறது.. உணரும்போதே மாற்றங்கள் நிகழ்கின்றன...
(ஆஹா இன்னைக்கும் இடுகை பெரிசாயிடுச்சே,. மன்னிச்சிகுங்கப்பா..)
நன்றி.,.

Sunday, January 31, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 5

இந்த பகுதியுடன் கார்பன் சுவடுகள் முடிவடைகிறது.. எனவே சிரமம் பார்க்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுங்கள்.உலகின் பல நாடுகளில் மாற்றங்கள் நிகழத் தொடங்கி விட்டன.. வறுமையின் கோரப் பிடியில் வாழும் லெசோதோ போன்ற நாடுகளே உலகின் நன்மைக்காக தமது பங்கைச் செய்ய ஆயத்தமாகும் போது வேறு என்ன வேண்டும்..? நாமும் சோதியில் இணைய வேண்டியதுதான். செல்வச் செழிப்பில் ஊறித்திளைக்கும் கத்தார் போன்ற நாடுகளும் கல்விக்காக தனது கதவுகளைத் திறந்து விட்டிருக்கின்றன. கலை, ஆராய்ச்சி, கல்வி, தீரா சக்தி (சூரிய சக்தி போன்றவை )மற்றும் புதுக் கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் அவர்கள் பல்கலைக் கழகங்களை அனுமதித்துள்ளனர்.

லட்சக் கணக்கான NGO(நான் கவர்மேண்டல் ஆர்கனைசேஷன்)கள் தேசங்களின் சுயநல நோக்கை தகர்த்தெறிந்து உளகளாவிய மக்களை ஒன்று திரட்டி அனைத்து மக்களிடையேயும் போது நல நோக்கு உள்ளது என்பதை நிரூபித்த வண்ணம் உள்ளனர்,

அண்டார்டிகாவில் இயற்கை வளங்களை பேணிப் பராமரிக்க நாற்பத்தொன்பது நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள தேசிய பூங்காக்களில்,மனித சக்தியைக் கொண்டு நிலத்தை வளப் படுத்துதல் மற்றும் புதுக் காடுகளை உருவாக்கும் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன..இந்த மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு தான் இனி நம்மைக் காப்பாற்றும்.

நியுயார்க் நகர மக்கள், தங்கள் அருகிலுள்ள காடுகள் மற்றும் ஏரிகளில் இருந்து தான் தங்களின் வாழ்வாதாரமே பூர்த்தி செய்யப் படுகிறது என்பதை உணர்ந்து அதை பேணிக் காக்க முடிவு செய்துள்ளனர்.

தென் கொரியாவில், தேசிய காடுகள் மறு சீரமைப்பு அமைப்பை ஏற்படுத்தி, போர் மற்றும் மனித தேவைகளுக்காக அழிக்கப் பட்ட காடுகளை புதுப்பித்துக் காட்டியுள்ளனர். தற்போது அவர்களின் நாட்டில் 65% நிலப்பரப்பு இயற்கை வளம் மிகுந்த காடுகளாக உருவெடுத்துள்ளது. மரங்கள் வெட்டப்படுவது மிகவும் கட்டுப் படுத்தப் பட்டுள்ளது. 75% க்கும் மேலான காகிதங்கள் மறுசுழற்சி செய்யப் படுகின்றன.

கோஸ்டாரிகா தங்கள் நாட்டின் ராணுவத்தை விட தங்கள் நாட்டின் இயற்கை வளமே முக்கியம் என முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அவர்கள் நாட்டில் ராணுவமே இல்லை. மாறாக அதில் செலவிடும் பணத்தை, தம் குழந்தைகளின் கல்விக்கும், சுற்றுலாத் துறைக்கும் மற்றும் தங்களின் பிரதான காடுகளை பாதுகாப்பதிலும் பயன் படுத்துகின்றனர்.
அங்கே ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வனப் பாதுகாப்பு சட்டங்கள் கட்டாயமாக்கப் பட்டு கடுமையாகப் பின்பற்றப் படுகின்றன.

"போர்க்களம் வெறுத்து விடு.. அங்கே பூச்செடி வைத்து விடு.. அணுகுண்டு அத்தனையும் கொண்டு பசிபிக் கடலில் கொட்டி விடு"
என்னும் கவிப் பேரரசின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.. கவிஞன் கனவு பலிக்கத்தொடங்கி விட்டது. மனித நேயம் உடைய நாடுகள் அந்த நாட்டின் மீது படை எடுக்காமல் இருக்க வேண்டும்.

வர்த்தகம் நேர்மையான முறையில் நடந்து எல்லோரும் வளம் பெற்று வாழும் நிலை ஏற்படும் போது அனைத்து மக்களின் வாழ்வாதாரம் உயர்கிறது..அங்கே அதிகமாக சம்பாரிக்கத் தூண்டும் முதலாளித்துவம் மற்றும் பேராசை பொடிபடுகிறது.ஆம்.. இயந்திரங்களைக் கொண்டு லட்சக் கணக்கான ஏக்கர்களில் அறுவடை செய்யும் முதலாளி, கைகளை நம்பியே பிழைப்பு நடத்தும் சிறு விவசாயிகள், இவர்களுக்கிடையே என்ன சமநிலை இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்..

நாம் பொறுப்புள்ள நுகர்வோராகச் செயல்பட்டால் இந்த நிலை மாறும்.நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் நமது இந்த கடமையை உணர வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்கள், ஆடம்பர விளம்பரம் செய்து மக்களை முட்டாள்களாக்கி விற்கப்படும் பொருட்களைக் குறைத்து, சிறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்கள், உள்ளூரில் செய்யப் பட்ட கைவினைப் பொருட்கள், குடிசைத் தொழிலில் உற்பத்தியாகும் பொருட்கள் இவற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்போம் ..

உங்களுக்குத் தெரியுமா...? இப்போது உள்ள விவசாய நிலங்களைக் கொண்டே, இந்த கிரகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வயிறார சோறு போட முடியும். ஆனால்,மாமிசத்திற்காக கோடிக்கணக்கில் வளர்த்தப் படும் மிருகங்களின் தீவனத்திற்காக மற்றும் பயோ எரிபொருளுக்காக இவை பயன்படுத்தப் படுவதால் தான் கடைக்கோடி குடிமகனின் வாய்க்கு ஒரு கை சோறு கிடைப்பதில்லை.

குழந்தைகள் மற்றும் வருங்கால சந்ததிகளை மாமிச உண்ணிகளாக வளர்க்கக் கூடாது.மாமிசத்தின் சுவைக்குப் பழகி விட்டவர்கள் அதைக் குறைக்க மாற்று உணவுகளைக் கொள்ளலாம். கொஞ்சம் சிரமம் தான்.. ஆனால் குழந்தைகளைப் பழக்குவது எளிது. சைவ உணவுகளிலேயே எல்லா சத்தும் சுவையும் நிரம்பி உள்ளது என்பது நிரூபணமான ஒன்று.
கடலில் மீன் பிடிப்பவர்கள், கடலின் செல்வத்தை அழிக்காமல் தொழில் செய்ய வேண்டும்.

ஜெர்மனி'யில் உள்ள பையர்பாக் என்ற இடத்தில், 5000 மக்கள் உலகின் முதல் eco-freindly மாவட்டத்தை அமைத்துக் காட்டி உள்ளனர்.அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து மின்சாரத்தையும் சூரிய ஒளி மூலம் அவர்களே தயாரித்துக் கொள்கின்றனர்.

நாம் உபயோகப் படுத்தும் சக்திகளில் 80% பூமியிலிருந்து எடுக்கப் படுபவை தான்.
சீனாவில் மட்டும் வாரத்திற்கு இரண்டு அனல் மின் நிலையங்கள் உருவாக்கப் படுகின்றன. அதே நேரத்தில் டென்மார்க்கில் அனல் மின் நிலையத்தில் உருவாகும் கார்பனை காற்றில் கலக்காமல் மண்ணில் மக்கச் செய்யும் உக்தியை கையாளத்தொடங்கியுள்ளனர்.

ஐஸ்லாந்தில் பூமியின் அடி சூட்டைக்கொண்டு மின்சாரம் எடுக்கின்றனர். கடலின் அலைகளிலிருந்து மின்சாரம் எடுக்கின்றனர்.
கடலெங்கிலும் காற்றாடி வயல்கள் உருவாக்கப் பட்டு அவர்கள் நாட்டின் மின்சாரத்தில் 20%ஐ காற்றின் மூலம் உற்பத்தி செய்கின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் தான் இந்த மறுசுழற்சி செய்யகூடிய சக்திகளில் அதிகம் முதலீடு செய்துள்ளனர்.

சூரிய வெப்பம், பூமியின் அனைத்துப் பகுதிகளையும் தாளித்துக் கொண்டு இருக்கிறது. உலகமக்கள் அனைவரும் ஒரு வருடம் உபயோகப் படுத்தும்
சக்தியின் அதே அளவை, ஒரு மணி நேரத்தில் சூரியன் நமக்கு அளிக்கிறான் என்றால் நம்புகிறீர்களா?

ஆம் நண்பர்களே.. இனி மேலும் கீழேயே பார்த்து நடப்பதை விட்டு மேலே பார்போம். அங்கேயும் உள்ளது.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் நேரம் வந்து விட்டது.

இன்னும் நம்மிடம் 50% காடுகள் உள்ளன.எண்ணற்ற இயற்கை வளங்கள், ஆயிரக்கணக்கான ஏரிகள், பனிப்பாறைகள் என இன்னும் நம்மிடம் கொஞ்சம் மிச்சம் உள்ளன..

துபாய் போன்ற பணக்கார நாடுகளிடம் என்ன இருக்கிறது? வெறும் எண்ணெய் தான் இருக்கிறது. அதை விற்றே அனைத்தையும் வாங்குகிறான்.அங்கே சுட்டெரிக்கும், வெயில் இருக்கிறது, ஆனால் ஒரு சூரிய ஒளி பேணல்(solar panel) கூட அங்கே இல்லை.மற்ற நாடுகள் அனைத்தும், உள்ளூரில் குறைந்த விலைக்கு பொருட்களை விற்று நாட்டை வளப் படுத்த நினைக்காமல், அதிக லாபத்திற்காக அவனிடம் நாட்டை அடகு வைக்கின்றனர்.
அதனை நிறுத்தி இது போன்ற நாடுகளின் இந்த சுயநலப் போக்கிற்கு பாடம் புகட்ட வேண்டும்.

மாற்றம் நம் ஒவ்வொருவரின் உள்ளிருந்து வர வேண்டும், அதை வெளியே எதிர் பார்க்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இந்த மாற்றங்கள் அனைத்தும் நிகழ அடிப்படைத் தேவை கல்வியறிவு மற்றும் பொது சிந்தனை அவ்வளவே(எல்லார்க்கும் எல்லாமும்).

இந்த சிந்தனையுடன் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை நோக்குங்கள்.. நாம் செய்ய வேண்டிய மறுமலர்ச்சி நமக்கே விளங்கும்.
இதை தான், நம்முடைய சுற்றம் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு நாம் சொல்ல வேண்டும்.

எப்படியெல்லாம் இந்த மாற்றத்தைச் செயல்முறைப் படுத்தலாம் என்று நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே....

கார்பன் சுவடுகள் முற்றுப் பெறுகிறது...

Friday, January 29, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 4

நண்பர்களே..
இந்த இயற்கைச் சீரழிவின் பின்னணியில் பல்வேறு பேராசை பிடித்த நாடுகள் செயல் படுவதையும் மற்றும் லாபம் மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் உள்ளன என்றும் கார்பன் சுவடுகள் பாகம்-மூன்றின் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன்.
மிக விளக்கமாக அறிய "செங்கொடியின் சிறகுகள்" இட்ட பதிவான "ஒரு மணி நேரம் விளக்கனைத்தல் புவி வெப்பமாவதைத் தடுக்குமா?' என்ற தமிழ் மணம் விருது பெற்ற பதிவினைப் பாருங்கள்.. சரி நண்பர்களே,, இனி நம்முடைய பயணத்தைத் தொடருவோம்.. இதற்கு முன் வந்த மூன்று பாகங்கள் சற்று மென்மையானவை.ஆனால் இனி வருபவை அப்படி இருக்காது..

www.goodplanet.org இந்த இணையதளத்தை நடத்தும் சமூகத் தொண்டு நிறுவனம் நெறைய விஷயங்கள ஆராய்ஞ்சு வெளியிட்டிருகாங்க. நான் அந்த நிறுவனத்துக்கு ஈ-மெயில் பண்ணி இந்த விஷயங்கள கேட்டேன். அவங்க என் விலாசத்துக்கு "ஹோம்"(home)னு ஒரு டிவிடி அனுபிச்சு வெச்சாங்க.. எல்லாரும் பாக்க வேண்டிய தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். அதுல வர்ற ஒவ்வொரு பிரேம்'ஐயும் நம்ம டெஸ்க்டாப் ஸ்க்ரீன் சேவரா வெக்கலாம். நாம எடுதுக்கிட்டிருக்கிற இந்த விஷயங்கள சூப்பரா காட்டியிருக்காங்க..

உலகத்துல இன்னும் பல நாடுகள்ல குளோபல் வார்மிங் இருக்கிறதையே நம்ப மாடேன்றாணுக. அட ஏம்ப்பா, நம்ம ஊர்லே, பள்ளிக் கூடத்துக்கு வெளியில பொட்டிக்கட வெச்சிருக்கிற குப்பன், டாஸ்மாக் கடையில ஊத்திக் கொடுக்குற சுப்பன் இவங்களை எல்லாம் கேட்டுப் பாருங்க... கெட்ட கெட்ட வார்த்தையா வந்து விழும். பீப் சவுண்டு குடுத்து மறச்சுக்க வேண்டியது தான்..


இத கேளுங்க.. கிளிமஞ்சாரோ'ன்னு ஒரு பெரிய மலை அப்ரிகால இருக்கு.. அத இப்ப அவிங்க ஊர்க்கார பய புள்ளிகளாலயே அடையாளம் கண்டுக்க முடியலியாம். 80% பனிஅடுக்குகள் (க்லாசியர்ஸ்) காணாமப் போச்சாம். அதனால வெய்யக் காலங்கள்ல ஆத்துல தண்ணியே காணமாம். வீட்டுல இருந்து ஒரு பவுனு காணாம போனா வாயிலயும் வவுத்தலயும் அடிச்சுக்கரமே, 80% க்லாசியர்ஸ் நண்பர்களே..அவங்க ஊரா இருந்த என்ன நம்ம ஊரா இருந்த என்ன, நம்ம தாய் பூமி தானே..?

உலகத்துல எங்கயுமே இல்லாத ஒரு அதிசயம் சைபீரியா'ல இருக்கு. அங்க இருக்குற காடுகள்ள தரைப் பகுதி கண்ணுக்கே தெரியாத மாறி, ஒரே பனி மூட்டமா இருக்கும். அத "பெர்மா பிராஸ்ட்" அப்படீன்னு சொல்வாங்க..

அதுக்கு அடியில தான் ஆப்பு ஒளிஞ்சு இருக்கு. அதுக்குள்ள மெதேன் ங்கற கிரீன் ஹௌஸ் வாயு இருக்கு. இந்த மெதேன் பயபுள்ள நம்ம கமிவா'வ விட இருபது மடங்கு கோபக் காரணாம். இந்த வெப்பமயமாதல் விளைவுனால இந்த பெர்மா பிராஸ்ட் உருக ஆரம்பிசிடுச்சுன்னா, என்ன நடக்குமுன்னு கணிக்கவே முடியலியாம்.

இந்த அமைப்ப நாம தான் உருவாக்கனோம். நாம சாப்டற சாப்பாட்டுல இருந்து குடிக்கிற தண்ணி, வாழுற பூமி, நம்ம சுத்தி இருக்குற உயிரினங்கள் இவை எல்லாத்துக்கும் எடையில கண்ணுக்குத் தெரியாத ஒரு பிணைப்பு(அதாம்ப்பா பாண்ட்) இருக்கு. அதத்தான், "ஷஹேலு"ன்னு காமரோன் அவதார்'ல சொன்னாரு.. நம்ம மரமண்டைகளுக்குஒரைக்கிற மாறி.. (மரமண்டைகள் அல்லாதவர்கள் மன்னிக்கவும்)

ஆனா சமீபமா நாம அத ஒடைச்சிட்டோம்..

வாங்க அத ஒட்ட வெப்போம். இனியும் சும்மா வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இருக்குறதுல பயன் இல்லை..

மொதல்ல நமக்குத் தெரிஞ்ச விஷயங்கள நாம நம்பணும்.

நாம இப்ப அனுபவிக்கிற விளைவுகள் எல்லாம் நாம நேத்து செஞ்ச ஆப்புகள் தான்.. நாம நம்ம இஷ்டத்துக்கு நம்ம பூமிய செதுக்கீட்டோம்.. நமக்கு இன்னும் கொஞ்ச அவகாசம் தான் இருக்கு..

நாம செய்யப் போற சிறு சிறு நல்ல காரியங்கள செய்யாம உட்டுட்டா இந்த பூமி வரப்போற நூற்றாண்டுல எப்புடி தொண்ணூறு கோடி மக்களோட சுமையைத் தாங்கப் போகுது, ..?

இத எங்க அம்மா அப்பா அப்புறம் வயசானவங்க கிட்ட சொன்னா என்ன ரியாக்ஷன் இருக்கும்.. நீங்களே சொல்லுங்க.. அதனால தான் சொல்றேன் நமக்கு அடுத்த தலைமுறைகளுக்கு நாம சொல்லித்தரோனும். அட வாழ்ந்து காட்டணும். அதுக்கு நமக்கு பல விஷயங்கள் தெளிவாகணும். கீழ வர்ற விஷயங்கள் மொதல்ல நம்ம புத்திக்கு, அப்புறம் உபதேசம் பண்றதுக்கு.. ஓகே...?!

உலகத்துல இருக்குற 80% வளங்களை எல்லாம் வெறும் 20% மக்கள் தான் உபயோகப் படுத்துறாங்க.. அட பத்து வீட்டு சாப்பாட்ட ஒருத்தன் உக்காந்து சாப்டா மத்தவணுக எங்க போறது..?

உலக நாடுகள் எல்லாம் நான் பெரியவனா, நீ பெரியவான்னு காமிக்கரதுக்காக, தங்களோட நாட்டுக்குச் செலவு பன்றத விட பன்னிரண்டு மடங்கு அதிகமா தங்களோட ராணுவத்துக்கு செலவு பண்றாங்க.. வளங்கள் எப்படி வீணாகுதுன்னு பாருங்க மக்களே..

குடிக்க சுகாதாரமான தண்ணி கெடைக்காம உலகத்துல தெனமும் சாகரவங்க எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் ஐயாயிரம் பேர்..

சுமார் நூறு கோடி மக்களுக்கு சுத்தமான தண்ணி கெடைக்கரதில்லை.

நூறு கோடி மக்கள் பசி பட்டினியால வாடப் போறாங்க .. வாடப் போறோம்.. வெளைச்சல் இல்லாதப்ப பணத்தையா தின்ன முடியும்...?

பூமியில விளைவிக்கிற தனியங்கள்ள 50% ற்கும் மேல பயோ எரிபொருளுக்கும், அப்புறம், மாமிசத்துக்காக வளர்க்குற கால நடைங்களுக்கும் தான் போய்ச் சேருது.. ஆடு மாடுகள், மேய்ச்சல் நிலங்கள் இல்லாத பெரிய பெரிய நகரங்களுக்கும் மாமிசங்கள் டின்'னுல அடைக்கப் பட்டு கொண்டு போகப் படுதே.. அது இப்படித்தான்..

40% க்கும் மேலான விவசாய நிலங்கள் கடுமையா பாதிக்கப் பட்டிருக்கு... மண்ணுல சத்து இல்ல..

ஒவ்வொரு வருஷமும் 13 மில்லியன் ஹெக்டேர் காடுகள் காணாம போய்க்கிட்டிருக்கு.. கேட்டாலே வயிறு எரியுது...

நாலுல ஒரு பங்கு மிருகங்கள், எட்டுல ஒரு பங்கு பறவைகள், மூணுல ஒரு பங்கு பல்லி மாறி சிறு உயிரினங்கள் வாழ முடியாத நிலைமை உருவாகியிருக்கு..

உயிரினங்கள் சாகுற விகிதாச்சாரம், முன் எப்போதும் இல்லாமல் ஆயிரம் மடங்கு அதிகமா இருக்கு..உலகத்துல முக்கால் பங்கு மீன்பிடிப்பு பகுதிகள் ஆல்ரெடி அழிஞ்சாச்சு..

கடந்த 15 வருஷமா கணக்கெடுத்த வெப்ப நிலை தான் பூமியில இதுவரை ரெகார்ட் செஞ்ச வெப்ப நிலையிலியே அதிகமாம்..

40 வருஷத்துக்கு முன்னாடி இருந்தத விட பனிப்பாறைகள் 40% குறைஞ்சிடிச்சாம்..

இதே நிலை நீடிச்சிசுன்னா, 2050ல (பூமி அழியாம இருந்துச்சுன்னா), இருபது கோடி மக்கள் காலநிலை அகதிகளா இருப்போம் (climate refugees).



நாம பண்ற விஷயங்களோட விலை ரொம்ப அதிகம், பாவம் அதனால, உலகத்துல எங்கயோ வாழுற அப்பாவி மக்கள் அந்த விலையைக் குடுத்து அகதிகளா மாறிக்கிட்டு இருக்காங்க.. பாலைவனங்கள்ள உருவாகியிருக்கிற லட்சக் கணக்கான அகதிகள் முகாம்கள் தான் இதற்க்கு சாட்சி..

பேராசை பிடித்த நாடுகள், சரித்திரத்துல இடம் பெறனும்ங்கறதுக்காக செவுத்தக் கட்டி, பிரிவினை செஞ்சு, பல மக்களை துன்பத்துல ஆழ்த்தி, அதன் மூலம் கொஞ்சம் மக்கள் சந்தோஷத்தைப் பாது காக்கறாங்க..

இன்னும் வெட்டிப் பேச்சு பேசிப் பிரயோசனம் இல்ல.. ஒரு தனி மனிதனால அந்த செவுத்த ஒடச்சு சுக்கு நூறா ஆக்க முடியுமா...? முடியும் நண்பர்களே..

இருபதே வருடங்களில் இத்தன களேபரங்கள் பண்ணி வெச்ச நமக்கு இத சரி பண்றது என்ன பெரிய மேட்டர்...?

அதற்க்கு சில உதாரங்கள இப்ப பாப்போம்.. ஒரு பெரு மூச்சு விட்டுகோங்க...

லெசோதோ ங்கற நாடு உலகத்துலேயே மிக மோசமான வறுமை நாடுகள் பட்டியல்ல இருக்கு, அவங்க இப்ப அதிக அளவு பணத்த தங்களோட நாட்டு குழந்தைங்க படிப்புக்காக செலவு பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.. விஷயத்தை எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு..

ச்சே.. கொஞ்சம் எழுத ஆரம்பிச்சாலே பதிவு லெந்த் ஆயிடுது.. அடுத்த பதிவுல கண்டினியு பண்றேன்.. இப்ப கை வலிக்கல..

Sunday, January 24, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 3


வணக்கம்..
கடந்த ரெண்டு பகுதிகள்ல கார்பன் சுவடுகள்'னா என்ன, அது எதனால உருவாகுது அப்படிங்கற சமாச்சாரங்கள் எல்லாம் பார்த்தோம்..இந்த பகுதியில கார்பன் சுவடுகள் ஏற்படுத்துற வெப்ப உயர்வால என்ன நடக்குதுன்னு பாப்போம்..
வேலில போற ஓணான வேட்டிகுள்ள வுட்டுட்டு இப்ப வேணா வேணா'ன்னா வுட்டுடுமா...?

ஆப்பு1:
மொதல்ல இந்த ஓவர் சூட்டுனால நம்ம எல்லாரும் டைரக்டா பாதிக்கப் பாடறோம். குறிப்பா நம்ம பெருசுங்க எல்லாரும் heat stroke அப்படிங்கற வியாதிக்கு ஆளாகிறாங்க. பெருசுங்க தானே போனா போகட்டுமுன்னு நெனைக்கிற இளசுகள் எல்லாரும் நாளைக்கு பெருசுகள் தான்..

ஆப்பு2:
இந்த வெப்ப உயர்வுனால இந்த புயல், சூறாவளி இவங்கெல்லாம் வீடு தேடி வர்றதுக்கு நாமளே வழி பண்ணிட்டோம். சாதாரணமாவே இந்த புயல் சூறாவளி இவங்கெல்லாம் கடல்'ல தாம்ப்பா உருவாகுறாங்க. இவங்க வளர்ரதுக்கு பெருசும் உதவியா இருக்கறது கடல்'ல இருந்து கிடைக்கிற சூரிய வெப்பம் தான். இந்த அதிகப்படியான வெப்பநிலை உயர்வுனால கடல்'ல இருந்து நல்ல சூடு கெடைக்கரதுனால இவங்களுக்கு அதிகப்படியான பலம் கெடைச்சிருது. அதாவது சாதாரண தண்ணி குடிச்சிட்டு இருக்குரவனுக்கு போர்ன்வீடா, காம்ப்ளான், ஹோர்லிக்ஸ் இதெல்லாம் மிக்ஸ் பண்ணி குடுத்தா எப்படியிருக்கும்..? அந்த எபக்ட்.. சாதாரணமாவே இதுங்க ஊருக்குள்ள பண்ற அட்டகாசம் தாங்க முடியல.. (அப்புறம் இந்த ஆப்பு 2 சிறுசுக பெருசுக அப்படின்னு எவனையும் பாக்கரதில்லை. வாரிப் போட்டுகினு போய்க்கிட்டே இருக்கும்.)

ஆப்பு3:
பூமில வெப்பம் அதிகமாகும்போது, கடல் நீர் விரிவடையுது.. அப்ப என்னாகும்? கடல் நீர் மட்டம் உயரும்.. அப்ப என்னாகும்? இது என்ன கேள்வி.. கரையோரமா இருக்குறவங்க எல்லாம் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட வேண்டியது தான்.. ஏற்கனவே பனிப்பாறைகள்(Glaciers) எல்லாம் உருகுதுன்னு எல்லா டிவி'லயும் காட்டுறாங்க.அப்புறம் 2012 படத்துல கடைசியா ஒரு பூமிய காட்டுனான்களே அந்த மாதிரி ஆயிடும்.(இந்த பணக்காரப் பயலுக எல்லாம் இப்பவே செவ்வா கிரகத்துல பட்டா போட ஆரம்பிசிடுவாங்கன்னு நெனைக்கிறேன்.)

S.P.பாலசுப்பிரமணியம் மாதிரி இதையும் மூச்சு விடாம படிங்க.. காலநிலை மாற்றம்,சுற்றுச்சூழல் மாசு,காடுகளை அழிக்கிறது, பசிக்கொடுமை,பொருளாதார சீரழிவு,திருட்டு,கொலை,வன்முறை,வளங்கள் குறைவு, மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் சீர்குலைவு,இயற்கை அழிப்பு,ரசாயண கழிவுகள் சேர்ப்பு இவை எல்லாம் செர்ந்துச்சுன்னா....... மாப்பு வெச்சுட்டாய்ங்கடா ஆப்பு...

பூமில எத்தன வளங்கள் அழிஞ்சு போச்சு, இப்ப எத்தனை நாடுகள் சேர்ந்து இந்த நிலைமையில் இருந்து மீள என்னென்ன பண்ணிகிட்டுருகாங்கன்னு தனியா ஒரு இடுகையே போடறேன்.. (ஒரு சின்ன சாம்பிள்: பூமில இருந்த பனிப்பாறைகளோட தடிமன் கடந்த 40 வருஷங்கள்ள 40 சதவிகிதம் குறைஞ்சிடிசாம்)வாங்க.. எல்லாரும் சேர்ந்து ஒப்பாரி வெக்கலாம்.

ஆனா இப்ப நாம என்ன செய்யாலம்னு ஒரு சின்ன பார்வை.

தனியா ஒரு ஆளா நாம என்ன செய்ய முடியும்?கஷ்டம் தான்.. ஆனா சிறு சிறு துளிகளால் ஆனது தானே கடல். அது மாதிரி நாம எல்லாரும் நம்ம அன்றாட வாழ்கையில கொஞ்சம் கொஞ்சம் திருத்தங்கள செஞ்சுக்கிட்டாலே போதும். வாங்க ஊர் கூடி தேர் இழுப்போம்..

1.இந்த பக்கத்து பங்க் கடைக்கு தம் அடிக்கப் போறதுக்கு, அப்புறம் பாலு மோரு வெண்ணை'ன்னு எது வாங்கப் போனாலும் டர் புர்'ன்னு வண்டியைக் கெளப்புரத விட்டுட்டு நடந்து போகலாமே.. அட் லீஸ்ட் சைக்கிள் யூஸ் பண்ணலாமே. இதுல இன்னொரு பெனிபிட் இருக்கு. அதாம்பா, கொழுப்பு கரையும். 9 மணி ஆபீஸ்க்கு மாருதி'ல வந்து எறங்கரவங்க எல்லாம் காலைல 6 மணிக்கு மாங்கு மாங்கு'ன்னு ஓடிக்கிட்டிருக்காங்க பீச் ஓரத்துல. இந்த வெட்டி பந்தாவ கொஞ்சம் ஓரங்கட்டி வெச்சிட்டு நாமளும் ஆரோக்யமா இருந்து நாட்டையும் ஆரோக்யமா இருக்க வெக்கலாம். அட இப்பவே எங்க ஆபிஸ்ல வேல பாக்கற சில பேர் சைக்கிள்'ல வர ஆரம்பிசிடான்கப்பா. இது ஒரு ட்ரெண்டா மாறிட்டா பரவா இல்ல.. நானும் பைக்ல போறத 70 சதம் கொறைச்சிட்டேன்.

2.முடிஞ்ச வர நம்ம உள்ளூர்ல கெடைக்குற பொருள்கள வெச்சு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள சாப்பிடலாம். ஆன வரைக்கும் இறக்குமதி பொருள்கள தவிர்க்கப் பழகிக்கலாம். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா இப்ப இது ஒரு ஆப்ஷன். நாளைக்கு இது கட்டாயம். அதனால இந்த ட்ரெண்டையும் இப்பவே கொண்டு வந்தாக வேண்டிய கட்டாயம்.

3.சும்மா ஏசி'லேயே இருக்குறவங்க அத குறைச்சிக்கிட்டு பேன் உபயோகிக்கலாம். அட ஒரு கொசு வலைய போட்டுகிட்டு மாடியில படுத்துப் பாருங்கப்பா..எதுக்கு பேன் எதுக்கு ஏசி..?சுருக்கமா சொன்னா எளிமையா இருக்கப் பழகனும்.. இது ரொம்ப ரொம்ப கஷ்டம்.. ஆனா நம்ம சந்ததிகளுக்கு இந்த விஷயங்கள ஈசியாப் பழக்கீரலாம். எளிமை வேற கஷ்டம் வேற.. புரிஞ்சிகிட்டா போதும்.

4.அப்புறம் ஒரு ஈசியான வழி."இதனாலே அனைவருக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால், தாங்கள் தங்கள் வீடுகளில் ஆங்காங்கே மாட்டியிருக்கும் பழைய காலத்து குண்டு பல்பு மற்றும் ட்யுப் லைட்டுகளை உடனே கழற்றிக் கேடாசிவிட்டு உடனே கரண்ட்'டை மிச்சப் படுத்தும் CFL லைட்டுகளை உபயோகப் படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" இப்படீன்னு ஊர் ஊரா பிரச்சாரம் பண்ண தேவையில்லை. அவங்க அவங்க வீடுகள்ல செஞ்சாலே போதும். அட வெல ரொம்ப அதிகமப்பான்னு சொல்றவங்களுக்கு அது ஒரு நாள் வீட்டு செலவை விட கம்மின்னு நான் சொல்லத் தேவையில்லை.

5.மாமிசம் சாப்டரத குறைச்சிக்கிட்டு சத்தான சைவ உணவுகள சாப்பிடலாம். தீவனம் எல்லாம் இப்ப வெளி நாட்டுல இருந்து இருக்குமதி ஆகுதுங்கோ..

6.ஒரு முறை உபயோகப் படுத்தி தூக்கி வீசுற பொருள்கள முடிஞ்ச வர தவிர்க்கலாம். உதாரணமா, கல்யாணத்துல வெப்பான்களே பிளாஸ்டிக் தண்ணி கிளாஸ், அப்புறம் ஷேவ் பண்ற ரேசர், அப்புறம் தட்டுகள், நாப்கின்ஸ் இப்படி நிறைய.திரும்ப உபயோகப் படுத்தக் கூடிய பொருள்கள அதிக அளவு வாங்கனா, இந்த நிறுவனங்கள் இந்த தயாரிப்புகள தானா ,முன்வந்து நிறுத்திடும்.

வளர்ந்த நாடுகளான ஜெர்மனி,அமெரிக்கா போன்ற நாடுகள்ல இத ஏற்கனவே நடை முறைப் படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. மேற்சொன்ன விஷயங்கள் நடைமுறையில ரொம்ப கஷ்டம். ஆனால் சின்ன சின்ன விஷயங்கள நாம மனசு வெச்சா செய்யலாம். உதாரணத்துக்கு, கடையில சாமான் வாங்கும் போது பாலிதின் கவர் தர்றான்.ஒரு கூடையோ இல்ல ஒரு துணிப் பையோ கொண்டு போகலாம். என்ன பெரிய விஷயம்.. அட ஒரு சில கடைல கவருக்கு மேல கவர் போட்டுத்தர்றான். அதையாவது குறைக்கலாம்.ஒரே கவர்ல எல்லாத் தையும் போட்டு வாங்கலாம்.போன வாரம் கடைக்கு வந்த சின்னப் பையன் பாக் கொண்டு வர மறந்துட்டான். ஆனாலும் பிளாஸ்டிக் பாக் வாங்க மாட்டேன்னு அடம் பிடிச்சு நாலு தேங்காய கைலயே பிடிச்சு கொண்டு போனான். இளைய பாரதம் கண் முன் தெரிகிறது. அது தான் நண்பர்களே.. இளைய சமுதாயத்திற்கு நாம் சொல்லித் தர வேண்டியவை இவை தான்.
நான் கூட பஸ்ல டிக்கெட் வாங்கினா இறங்கின உடனே வீசிட்டிருந்தேன். இப்ப அத குப்பத் தொட்டியில போட்டுப் பழகிட்டேன்.
நம்முடைய கடமைகள் பற்றி நெறைய எழுத வேண்டி இருக்கு.. அதை இதே தலைப்பிலயோ இல்ல வேற தலைப்பிலயோ எழுதுவேன்...
நீங்க ஏதாவது சின்னச் சின்ன நல்ல விஷயங்கள் இருந்தா தயவு செஞ்சு பின்னூட்டத்துல பகிர்ந்துக்குங்க.. அப்புறம் ஓட்டு போடாவிட்டாலும் பரவா இல்ல.. உங்க நண்பர்கள் கிட்டயும் சொல்லுங்க.. ஒரு விழிப்புணர்வுக்காகத்தான்.
உங்கள் பின்னூட்டம் தான் என் பலம்.

படித்தால் அறிவு வளரும்..
உணர்ந்தால் தான் மாற்றம் நிகழும்..நன்றி...

Saturday, January 23, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 2


கார்பன் சுவடுகள்'னா என்னன்னு போன பாகத்துல பாத்தோம்.

காலைல எந்திரிச்சதிலிருந்து, தண்ணி சூடு பண்ண வாட்டர் ஹீட்டர்,சவரம் பண்ண, எலெக்ட்ரிக் ரேசர், தலை காய வெக்க ஹீட்டர், துணி அயன் பண்ண அயன் பாக்ஸ், அப்புறம் ஆபீஸ்க்கு போனா, எசி, கம்ப்யுட்டர், காபி மசின்,சாயங்காலம், வீட்டுக்கு வந்தா,பேன், லைட்டு, டிவி, ஆடியோ சிஸ்டம் அப்புறம் வீட்ல யூஸ் பண்ற வாஷிங் மசின், பிரிட்ஜ்,கிரைண்டர், மிக்சி, செல் போன் சார்ஜர் இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் எல்லாமே கரன்ட்ல தான் ஓடுது..(இருங்கப்பா மூச்சு வாங்கிக்கறேன்.)நாம எவ்வளுவுக்கு எவ்வளவு கரண்ட்ட யூஸ் பண்றமோ, அவ்வளவுக்கு அவ்வளவு கமிவா, வெளியாகுங்கறது தான் சேதி.
அட ஆமாங்க...கரண்ட்டு,எங்கிருந்து வருது.., அத எப்படி உற்பத்தி பண்றாங்கன்னு உங்களுக்கு தெரியும்.அப்ப நம்ம எவ்வளவுக்கு எவ்வளவு செலவு பண்றமோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அத மறுபடியும் உற்பத்தி பண்ணியாகணும்..

அடுத்ததா, நாம யூஸ் பண்ற வண்டிக.. இப்பெல்லாம் பக்கத்துல இருக்குற மளிகைக் கடைக்குப் போகனும்னாகூட வண்டிய எடுத்துட்டு தான் போகிறோம். 5000 ரூவா சம்பாரிக்க ஆரம்பிச்ச உடனே பைக்கு.. அதுவே 15000 சம்பாரிச்சா காரு... இதுல கொறஞ்ச வட்டி, ஒரு லட்சத்துக்கு காரு, வீட்டுக்கு வீடு ஒரு வண்டின்னு விளம்பரம் எல்லாம் போடராணுக.. இதெல்லாம் பெட்ரோல், டீஸல்ல, இயற்கை வாயுல தானே ஓடுது..? நம்ம வந்டிகள்ள இருந்த வர்ற புகையில இருக்குற கமிவா வே போதும்.. காத்த வீணாக்கறதுக்கு.

அடுத்ததா நாம வாங்கற பொருட்கள். எனக்குத் தெரிஞ்சு, நாம சாப்பிடற சாப்பாட்டுல இருந்து, நாம போடற துணிமணிகள், வீட்டுல வாங்கி வெச்சிருக்கிற அலங்காரப் பொருட்கள் வரை நம்ம ஊர்ல செய்யறது இல்லை.எல்லாமே வேறொரு இடத்துல இருந்து, நமக்காக கொண்டு வந்தது தான். அந்த காலத்துல வாழறதுக்கு, தண்ணியும் விவசாய பூமியும் இருந்தாப் போதும்னு இருந்துச்சு.. அதனால ஆத்துக்குப் பக்கமா குடி போனாங்க.. ஆனா இப்ப அப்டியில்ல.. தண்ணியில்லா காடா இருந்தாக்கூட குடிக்க கொக்க கோலா கெடைக்குமப்பா.. ஆனா இதெல்லாம் எங்கிருந்து எப்படி வருது.. கப்பல்ல, ப்ளைன்ல, லாரில'ன்னு ஏகப்பட்ட போக்குவரத்துகள். அதுக்கு ஆவுற செலவெல்லாம், நம்ம தலைல தான் வந்து விடியுது.. இத்தன வண்டி கார்களுக்கெல்லாம் எரிபொருள் வேணுமில்ல.. இத்தன வண்டிகளும் ஓடும்போது, எத்தன புகை வருது.. அப்பா தலையே சுத்துது...

இதெல்லாம் கண்ணுக்கு தெரிஞ்ச பெரிய விஷயங்கள். இதில்லாம, பழைய குப்பைய போசுக்குறது, பணிடிகையன்னைக்கு டயர எரிக்கிறது, பந்த் அன்னைக்கு பஸ்ஸ கொளுத்துரதுன்னு நம்மாளுக பண்ற அலம்பல்கள் எக்கச்சக்கம். எல்லாப் புகையும் மறைஞ்சு காத்தோட போகுதுன்னு நினைக்கிறாங்க.. காதோட தான் போகுது.. ஆனா மறைஞ்சு போகல..நமக்கு வெட்டு வெக்க ஒளிஞ்சு இருக்குது..

இப்ப தெரிஞ்சிருக்கும் கார்பன் சுவடுகள நாம எப்படி உருவாக்கரோம்னு.. இந்த ஆடு மாடுக எல்லாம் அது அது எப்படி இருந்துச்சோ அப்படியே தான் இருக்குதுங்க.. இந்த மனுஷப் பயலுகதான் இந்த பூமிய போட்டு டரியல் பண்ணி வெச்சிருக்கோம்.

சரி.. இனி அடுத்த பகுதியில, இந்த கார்பன் சுவடுகளால என்னென்ன களேபரம் நடக்குதுன்னும் அப்புறம் அத எப்படி தடுக்கலாமுன்னும் நாம பாக்கலாம்..(அப்பா ரொம்ப நேரமா டைப் அடிச்சு கை வலிக்குது..)

Friday, January 22, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 1


வணக்கம் ...!!!
பூமி அழியப்போவுது!! பூமி அழியப்போவுது ன்னு!! எல்லாரும் சொல்றாங்களே.. அது தானா அழியாட்டாலும் நாமளே கொஞ்சம் கொஞ்சமா முடிச்சுக்கட்டியிருவோம். ஆனா விஷயம் இன்னும் கையை மீறி போவல.நாம தெரிஞ்சு நடந்துக்க வேண்டிய விஷயம் நெறைய இருக்கு. நம்ம குழந்தைகளுக்கும் இந்த விஷயங்களை சொல்லிக் குடுத்து உணர வெக்கணும்.. சரி.. இந்த உபதேசமேல்லாம் எல்லாத்துக்கும் தெரிஞ்சதுதான்.. அதனால நா நேரா விஷயத்துக்கு வரேன். இந்த பூமிக்கு நேரப் போகும் அபாயத்துக்கு ஒரு முக்கியக் காரணியான "கார்பன் சுவடுகள்" பத்தி எழுதலான்னு இருக்கேன். இது 3 இல்ல 4 பாகங்கள் வரை பிடிக்கும்னு நெனைக்கிறேன். ஆராய்ச்சியாளர்கள்,அப்புறம் சமூக ஆர்வலர்களுக்கு மத்தியில இந்த பெயர் மிகப் பிரசித்தம்.நம்ம ஊரு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுதனுங்கறதுக்காக கொஞ்சம் எளிமையான நடைல விளக்கலாம்னு இருக்கேன். உங்களுடைய ஆலோசனை மற்றும் திருத்தங்கள் மிகவும் தேவை.
சரி.. இந்த பாகத்துல கார்பன் சுவடுகள்'னா என்ன, அது எதனால ஏற்படுதுங்கரதப் பத்திப் பாப்போம்.

நம்ம பூமி இயற்கையாவே பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போல பல எரிபொருட்கள கைவசம் வெச்சிருக்கு (fossil fuels). இதையெல்லாம் போட்டு கொளுத்தரதுனால,கரியமில வாயு(கார்பன் டை ஆக்சைட்) வெளிவருதுன்னு நாம ஸ்கூல்ல படிச்சிருப்போம்(எந்த வகுப்புன்னு ஞாபகம் இல்ல.) நம்ம காற்று மண்டலத்துல ஏற்கனவே கரியமில வாயு இருக்கு. அதோட சேத்து நாம அனுப்புற கமிவா(கமிவா = கரியமில வாயு . அடிக்கடி டைப் பண்ண கஷ்டமா இருக்கு!!!)வும் சேரும் போது தான் வினையே ஆரம்பமாகுது.
நாம பொறந்துதில இருந்து சாகர வரைக்கும் செய்யற ஏகப்பட்ட விஷயங்கள்ளிருந்து கமிவா வெளிப்படுது.. இத நம்மளோட "கார்பன் சுவடுகள்"ன்னு சொல்றோம்.இது தான் நம்ம அடுத்த தலைமுறையினருக்கு நாம் சேத்து வைக்கும் சொத்து!!! அட நெசமா தாம்பா..!
கிரீன் ஹவுஸ் விளைவு பத்தி படிச்சிருப்பீங்க.?!?!? சரி சரி.. அதையும் சுருக்கமா சொல்லிடறேன். நம்ம காத்து மண்டலத்துல இயற்கையாகவே கமிவா,மீதேன், அப்புறம் நைட்ரஸ் ஆக்சைட் எல்லாம் இருக்கு. இதெல்லாம் சரியான அளவுல தான் கடவுள் படைச்சார். அதனாலதான் சூரிய வெளிச்சம் அது வழியா உள்ள வந்து, பூமில பட்டுட்டு, அப்புறம் நல்ல புள்ளையா தெறிச்சு மறுபடியும் வெளியில போய்டுது.இந்த சக்கரம் இப்படியே சுத்துசுன்னா, நம்ம வண்டி நல்லா ஓடுமே. ஆனா விடோவாமா நாம.
நாம என்ன லேசுப்பட்டவன்களா, முடிஞ்ச வரைக்கும் கரண்ட் யூஸ் பண்றது, வண்டிகள் ஓட்றது,குப்பையா எரிக்கறது,அது இதுன்னு தெணறத் தெணற கமிவா'வ உற்பத்தி பண்ணி மேல அனுப்பிச்சு வுட்டோம்.
கமிவா என்ன லேசுப் பட்டவனா.. நம்ம காத்து மண்டலத்தையே, தல மேல துண்டப் போட்ட மாரி போட்டு மூடிடுச்சு. அதனால பூமி மேல படர சூரிய வெளிச்சம் வெளியில போக முடியாம, செவுத்துல பட்ட பந்து மாறி திரும்பி நம்ம கிட்டே வந்துருது.. இப்பத்தெரியுதா? ஏன் நம்ம உச்சி மண்டையெல்லாம் சுர்ருங்குதுன்னு?

இந்த குளோபல் வார்மிங், சுனாமி, நில நடுக்கம் அது இதுன்னு என்னென்னமோ சொல்றாங்கள்ள.. அதுக்கும் இதுக்கும் நெறைய லிங்க் இருக்கு.

அப்பாடா.. ஒரு வழியா, கார்பன் சுவடுகள் பத்தி சொல்லீட்டேன்.. உங்களுக்குத் தெரிஞ்சு இன்னும் ஏதாவது இருந்தா, தயவு செஞ்சு சொல்லீருங்க..
அடுத்த வர்ற பாகங்கள்ள, நாம என்னென்ன செய்யும் போது, எப்டி எப்டியெல்லாம்,கமிவா வெளிப்படுது, நாம கொஞ்சம் மனசு வெச்சா எப்டியெல்லாம் அதா கம்மி பன்னலாம்ங்கற விஷயங்கள கொஞ்சம் வெளக்கமா பார்க்கலாம்..